பாதிக்கப்பட்ட ஒருவர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்து, அதனை வழக்குப் பதிவு செய்ய வைப்பது என்பது பொதுவாக, அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதனை காவல் நிலையத்திற்குச் சென்ற அனுபவமுள்ள நம்மில் பலர் நிச்சயமாக உணர்ந்திருப்போம். அதிலும், யாருக்கு எதிராக புகார் கொடுக்கப்படுகிறதோ, அந்த குற்றமிழைத்தவர் சமூகத்தில் சிறிது அதிகாரம் மிகுந்தவராக இருப்பாராயின் நிலைமை மேலும் மோசமாகும்.

dalit house fireஇப்படியாக, பக்கத்து வீட்டுக்காரர், அடுத்த தெருவில் வசிப்பவர், பக்கத்து நிலத்துக்காரர் போன்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வைப்பதற்கே பாதிக்கப்பட்ட நபர் உயர்நீதிமன்றம் வரையிலும் செல்ல வேண்டிய அசாதாரணமான சூழல் இங்கே நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் தனக்கு இழைக்கப்பட்ட குற்றத்திற்காக அல்லது குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததற்காக, ஒரு அரசு ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்வதில், எவ்வளவு தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை எவரும் சொல்லி தெரிந்துகொள்ள வேண்டிய தேவையில்லை. அரசு ஊழியரின் மீது வழக்குப்பதிவா?  அது சாத்தியமா? என நமக்கு சாதாரணமாக எழும் கேள்வி நியாயமானதே.

சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ள பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியின மக்கள் தங்களுக்கு எதிராக சாதி ரீதியாக இழைக்கப்படும் வன்கொடுமைகளிலிருந்து தற்காத்துக் கொள்ள, கடந்த 1989ம் ஆண்டில் இயற்றப்பட்டது “பட்டியலின / பட்டியல் பழங்குடியின மக்களுக்கு எதிரான (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம்”.

                அந்த சட்டத்தில், பட்டியலின/பட்டியல் பழங்குடியின மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் சாதி ரீதியான குற்ற நிகழ்வுகளின் போது, அந்த சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட பணிகளை வேண்டுமென்றே செய்யாமல் இருக்கும் மற்றும் அந்த விதிகளுக்கு முரணாக செயல்படும், மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மீது தனியே வழக்குப் பதிவு செய்திட பிரிவு 4ன் கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த சட்டத்தில் “வேண்டுமென்றே கடமையை செய்யாமல் இருத்தல்” என்பதற்கு யாதொரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில், 2016ம் ஆண்டு, இந்த சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்தில், வன்கொடுமை தொடர்பான புகாரை வாங்க மறுத்தல், அதிலுள்ள குற்றங்களுகேற்ப தகுந்த சட்டப்பிரிவுகளைப் பதிவு செய்யாமல் இருத்தல் என்பது போன்ற சூழல்களில், தொடர்புடைய அதிகாரிகள் மீது பிரிவு  4ன் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டு ஏறத்தாழ 27 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகு, இதுநாள் வரையிலும், வேண்டுமென்றே தனது கடமையிலிருந்து தவறிய எத்தனை அரசு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பார்த்தோமானால், பட்டியலின மக்களுக்கெதிராக இழைக்கப்படும் குற்றங்களுக்கும், அதிகாரிகள் மீது பதிவு செய்யப்படும் வழக்கு எண்ணிக்கைக்கும் பெருத்த முரண்பாடு நிலவுவதை காணலாம்.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக ஆந்திரபிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்ட நீதியரசர் புன்னையா ஆணையம், கடந்த 2001ம் ஆண்டில் தாக்கல் செய்த,  தனது 2000 பக்க அறிக்கையில், “இந்த சட்டத்தின் பிரிவு 4 ன் கீழ் சொல்லப்பட்டுள்ள, அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்தல் என்பது ஏட்டுச் சுரைக்காய் போன்றது. அது வெறும் அலங்கார சொற்கள். அப்பிரிவானது  அமலுக்கே வரவில்லை” என்று கூறியுள்ளார்.

அந்த அறிக்கையை மெய்ப்பிக்கும் விதமாய், தமிழகத்தில் இது வரையிலும் பத்து வழக்குகள் கூட வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் பிரிவு 4 ன் கீழ் அரசு ஊழியர்களுக்கு எதிராக பதிவு செய்யப்படவில்லை. ஆனால் அதே வேளையில், பட்டியலின மக்களுக்கு எதிராக, வன்கொடுமைகள் தொடர்ந்து இன்றளவும் நிகழ்த்தப்பட்ட வண்ணம் உள்ளது. மீண்டும் மீண்டும் அந்த குற்றங்களில் ஈடுபடுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக, பிரிவு 4 உள்ளிட்ட  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை இரத்து செய்யக் கோரியும், அந்த சட்டத்தையே அரசியலமைப்பு சாசனத்திற்கு புறம்பானதென அறிவித்திடக் கோரியும், கடந்த 1994ம் ஆண்டில் இராம கிருஷ்ணா பலோதியா எதிர் இந்திய அரசு எனும் வழக்கு மத்திய பிரதேசம் மாநிலத்திலும் மற்றும் அதுபோல பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்குகளில் இறுதியாக உச்ச நீதிமன்றம், அரசு ஊழியர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்திட  வழிவகுத்திடும் பிரிவு 4 ஐ உறுதி செய்து தீர்ப்பிடப்பட்டது.

பாபுலால் எதிர் இராஜஸ்தான் மாநில அரசு எனும் வழக்கில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4 ன் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, நீதித்துறை நடுவர் முன்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நீதித்துறை நடுவர் உத்தரவு பிறப்பித்திட வேண்டும் என்று இராஜஸ்தான் உயர்நீதிமன்றம் கடந்த 2009ல் உத்தரவிட்டது.

தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில், கடந்த 2007ம் ஆண்டில் ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளராக குப்புராவ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அப்போதைய வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4 ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பட்டியலின் அருந்ததியர் சாதியை சேர்ந்த மாரியப்பன், தனது ஊரான ஈரோடு மாவட்டம் காந்திபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தை கடந்த 2007ம் ஆண்டில் தனது மகனுக்கு காது குத்து விழா நடந்துவதற்காக வாடகைக்கு எடுத்தார். அந்த நிகழ்வுக்கு முன்பாக அப்பகுதியிலுள்ள ஆதிக்க சாதி இந்துக்கள் சாதி ரீதியாக அவரை திட்டி, அந்த மண்டபத்தில் விழா நடத்தக் கூடாது என அவரை மிரட்டியது தொடர்பாக அவர் புகார் செய்தார். அந்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத கோபிசெட்டிபாளையம், நம்பியூர் காவல் நிலைய ஆய்வாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பிரிவு 4ன் கீழ் வழக்கு பதிவு செய்திட சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்தது.

குஜராத் மாநிலத்தில், பட்டியலின பெண் ஒருவர், கூட்டாக பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை கிழித்ததுடன்  அதில் சேர்க்கப்பட்டிருந்த உள்ளூர் பாரதீய ஜனதா தலைவரது பெயரை நீக்கி புதிதாக முதல் அறிக்கை தயாரித்த பஞ்ச்மகால் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் காத்வி, காவலர் அர்ஜூன் கோயபாய் ஆகியோர் மீது கடந்த 2015 ஜனவரியில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு, அவர்கள் பணி இடை நீக்கமும் செய்யப்பட்டார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வசித்து வருபவர் ருக்மணி. 73 வயதான அவர் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர். சொந்தமாக நிலமும் இன்னபிற சொத்துக்களும் வைத்துள்ளார். அவரது 4 மகன்களில் மூன்று பேரை வெளிநாட்டில். விஞ்ஞானியாகவும், பொறியாளராகவும் ஆக்கியுள்ளார்.  அவரது கிராமத்தில் அதிக அளவில் வசித்து வரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சிலருக்கு இது பிடிக்காமல் போகவே, உள்ளூரில் விவசாயம் பார்த்து வந்த அவரது நான்காவது மகன் ஆறுமுகராஜாவை, 7 பேர் அடங்கிய கும்பல் கடந்த 2013ம் ஆண்டு தாக்கியது. அது தொடர்பாக அவர் புகார் கொடுத்து வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. ஆனால் உள்ளூரிலேயே தொடர்ந்து இருந்த போதிலும்,  குற்றம் சுமத்தப்பட்ட 7 பேரில் இருவர் மட்டுமே கைது செய்யப்படுகின்றனர். பின்னர் அவர்கள் ருக்மணியின் வீட்டை தாக்குகின்றனர். இதன் காரணமாக, மதுரை உயர்நீதிமன்றத்தில் தனக்கும், தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்கிடக் கோரி வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றமும் அவருக்கு பாதுகாப்பு வழங்கிட உத்தரவிட்டது.  ஆனால் சரியாக ஒன்றரை ஆண்டுகள் கழித்து அதே 7 பேரும் சேர்ந்து, ருக்மணியின் மகன் ஆறுமுகராஜாவை ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தின் அருகே வைத்து வெட்டி கொலை செய்துவிடுகிறார்கள்.

குற்றம் சுமத்தப்பட்ட 7 பேர் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கத்தவறிய அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய் துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4 ன் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கடந்த 1999ம் ஆண்டில் ஜல்லிகட்டு மாட்டை எங்கு கட்டிவைப்பது தொடர்பான பிரச்சனையில், பட்டியலினத்தை சார்ந்த பன்னீர் செல்வம், மகாமணி ஆகியோரை, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் சாதி ரீதியாக இழிவுபடுத்தி தாக்கியது தொடர்பான,  ஆறுமுகம் சேர்வை எதிர் தமிழக அரசு எனும் வழக்கில், 2011ம் ஆண்டில் உச்சநீதிமன்றம், “வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்திட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி, நிர்வாக மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுத்துகிறோம். இது போன்ற வன்கொடுமைகள் நிகழின், அது நிகழக் காரணமானோருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்வது மட்டுமன்றி, (1)சம்பவம் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைக்கப்பெற்று, அச்சம்பவம் அதுவரையில் நடந்தேராமல் இருக்கும் பட்சத்திலும், அதனைத் தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை அல்லது (2)சம்பவம் நடந்து முடிந்திருப்பின், குற்றம் புரிந்தவர்களையும், ஏனைய சம்மந்தப்பட்ட நபர்களையும் கைதுசெய்து, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பின், மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், ஏனைய பொறுப்புடைய அதிகாரிகள் போன்றவர்களை மாநில அரசு உடனடியாக பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறோம். ஏனெனில் எங்களது கருத்தில் அவர்களே நேரடியாகவோ, மறைமுகமாகவோ பொறுப்புடையவர்களாகக் கருதப்படுவார்கள்”  என்று தீர்ப்பிட்டுள்ளது.

இப்படியாக நாடு முழுவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக, அரிதினும் அரிதான வழக்குகளிலேயே, தனது பணிகளிலிருந்து விலகிய, பட்டியலின மக்களுக்கெதிரான வன்கொடுமை நிகழ்வுகளில் வேண்டுமென்றே சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களால் பல்வேறு காரணங்களால் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நான்கில் ஒரு பங்கு எண்ணிக்கையில் வாழும் பட்டியலின மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்கொடுமைகளை தடுத்திட வேண்டி 27 ஆண்டுகளுக்கு முன்பாக சட்டம் இயற்றப்பட்ட போதிலும், வன்கொடுமைகளும், மீறல்களும் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆகவே, அந்த சட்டத்தின் விதிகளுக்கு முரணாக செயல்படும், அரசு அதிகாரிகள் மீது பிரிவு 4ன் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களுக்கு தண்டனை கிடைக்க வழி செய்யும் போதுதான், பட்டியலின மக்களுக்கெதிரான வன்கொடுமைகள் பெருவாரியாக குறையும்.

- இ.இ.இராபர்ட் சந்திரகுமார்