கடந்த வாரத்தில் ஒருநாள் தொலைக்காட்சியில், சில ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு தமிழ் திரைப்படத்தில் நீதிமன்றத்தில் வைத்து படமாக்கப்பட்ட சில காட்சிகளை எதார்த்தமாக காண நேர்ந்தது. விசாரணையின்போது, உணர்ச்சிவசப்பட்டார் என்பதற்காக அந்த படத்தின் கதாநாயகனுக்கு நீதிமன்றத்தில் வைத்தே கை விலங்கு போடப்படும். நீதிபதியும் அதனைக் கண்டும் காணாமல் இருப்பார். பல திரைப்படங்களில் இதே போன்ற காட்சிகளைக் காணலாம். மிகவும் சாதாரணமாக எப்போது வேண்டுமானாலும், எவர் ஒருவருக்கும் காவல்துறை அதிகாரிகளால் கை விலங்கைப் போட முடியும் என்ற தவறான எண்ணம் சமூகத்தில் பரவலாக உள்ளதையே அது வெளிப்படுத்தியது.

handcuffsகடந்த ஆண்டு, அமெரிக்காவுக்கான இந்தியாவின் துணைத் தூதராகயிருந்த தேவயானி கோபர்கடே என்பவரை நுழைவாணை மோசடி, தனது வீட்டு பணிப்பெண்ணான சங்கீதா ரிச்சர்ட் என்பவரை அமெரிக்காவுக்குள் நுழையவைக்க பொய்க்கூற்றுக்கள் கூறியது போன்றவை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டு 2013 டிசம்பர் 12 அன்று அமெரிக்க காவல் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டதுடன், கை விலங்கு போட்டு அழைத்துச் செல்லப்பட்டார் என்ற நிகழ்வானது நாடு முழுவதும் பெரும் விவாதத்திற்குள்ளானது. கை விலங்கு போடப்பட்டதன் காரணமாக, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் சிக்கல் வரும் அளவிற்குப் போனது. ஆனால், இங்கே நம் சமூகத்தில், அதே போல கை விலங்கு போடுதல் நிகழ்வானது, காவல்துறை அதிகாரிகளால் அனுதினமும் எளிய மக்களுக்கு எதிராக எவ்வித எதிர்ப்புமின்றி நிகழ்த்தப்பட்டு வருகிறது.

கை விலங்கை பயன்படுத்துதல் தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்புகளும், சட்ட விதிகளும் தெளிவாக சில நிபந்தனைகளை விதித்துள்ளன. கடந்த 1980 ம் ஆண்டில், இந்திய உச்சநீதிமன்றம், பிரேம் சங்கர் சுக்லா எதிர் டில்லி நிர்வாகம் எனும் வழக்கில், “கை விலங்கிடுவது நியாயமற்ற, கடுமையான, மனிதத் தன்மையற்ற செயல்" என்றும், "ஒரு கைதியை தப்பிக்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேறு வழியே இல்லை எனும் சூழலில் மட்டும் கைவிலங்கிடலாமே தவிர, மற்ற நேரங்களில் கை விலங்கை பயன்படுத்தக்கூடாது” என்றும் கூறியது. 1988ம் ஆண்டில், ஏல்டமேஷ் ரெய்ன் எதிர் இந்திய அரசு எனும் வழக்கில், எந்தெந்த சூழல்களில் கை விலங்கு போடலாம் என்பது குறித்து, வழிகாட்டுதல்களையும், விதிமுறைகளையும் ஏற்படுத்துமாறு நடுவணரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 1995ம் ஆண்டு, சிட்டிசன்ஸ் ஃபார் டெமாக்ரசி எனும் வழக்கில், விசாரணை மற்றும் தண்டனை கைதிகளுக்கு, கை விலங்கு போடுவதும், காலில் சங்கிலி போடுவதும் அனுமதிக்கத்தல்ல என்றும், அதனை மீறும் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பிட்டது.

கை விலங்கு பயன்படுத்துதல் தொடர்பாக, தமிழக காவல் நிலை ஆணைகள் 491 ஆனது, நீதிமன்ற அனுமதி இல்லாமல் கை விலங்கு போடக்கூடாது என்றும், அப்படி போடும்போது அதற்கான காரணத்தை காவல்துறையினர் பதிவு செய்ய வேண்டும் என்றும், நியாயமான முன்னெச்சரிக்கை இன்றி, விசாரணை கைதிகளுக்கு, கைவிலங்கு போடக்கூடாது; இயன்றவையிலும், கைதிகள் தப்பித்து போதலிருந்து தடுக்க போதிய அளவு பலமுள்ள காவல்படையை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.
இப்படியாக, குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன் அனுமதியின்றி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் கைதிகள் உள்ளிட்ட எவருக்கும் கைவிலங்கோ, கால்களில் சங்கிலியோ போடக்கூடாது என்று இந்திய உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது. இதனைப் பின்பற்றி பல்வேறு உயர்நீதிமன்றங்களும் காவல்துறையினருக்கு இதே உத்தரவை பிறப்பித்துள்ளன. நாடு முழுவதுமுள்ள மனித உரிமை அமைப்புகளின் தொடர்ந்த பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகே, நீதிமன்றங்கள் இந்த உத்தரவைப் பிறப்பித்தன; தொடர்ந்து பிறப்பித்தும் வருகின்றன.

ஆனால், பல்வேறு தீர்ப்புகளுக்குப் பிறகும், கைதிகள் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்படும் செயலானது மாறவில்லை. அது சிந்துபாத் கதையைப்போல நெடுந்தொடர்கதையாக முடிவே இல்லாமல் நீண்டுகொண்டே செல்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான காவல்துறையினர், கை விலங்கு தொடர்பான நீதிமன்றங்களின் உத்தரவுகளை மதிப்பதில்லை. தங்கள் விருப்பப்படி நடந்து கொள்கின்றனர். இதனை தமிழகத்தின் பல குற்றவியல் நீதிமன்றங்களில் இன்றளவும் மிக சாதாரணமாக நாம் காணலாம்.

சிறைக் கைதிகளை விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது, பேருந்துகளிலோ அல்லது காவல் வாகனங்களிலோ கைதிகள் கொண்டு செல்லப்படும்போது, கைவிலங்கால் இரண்டிரண்டு கைதிகளாக பிணைக்கப்பட்டு, மறுமுனை அந்த வாகனத்தின் ஜன்னல் கம்பிகளுடன் இணைத்து கட்டப்பட்டு அழைத்து வருவதை நாம் சாதாரணமாக காணலாம்.

தேனி மாவட்டம், கே.கே.பட்டியை சேர்ந்த சிவனாண்டி என்பவர், தனது மகன் மனோகரன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்றும், விசாரணைக்காக உத்தமபாளையம் நீதிமன்றத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் செல்லும் போது, அவருக்கு கை விலங்கு அணிவிக்கின்றனர்; இயற்கை உபாதைகளை கழிக்கக்கூட கை விலங்கை கழற்ற அனுமதிப்பதில்லை; எனவே, அவருக்கு கை விலங்கு அணிவிக்க கூடாது என உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவில், நீதிமன்ற அனுமதியின்றி அவருக்கு கை விலங்கு போடக்கூடாது என காவல் துறையினருக்கு கடந்த 2010 ஆகஸ்ட் 8 அன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.

2006ம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயிலைச் சேர்ந்த குமார் என்பவரை, விசாரணை என்ற பெயரில் கை விலங்கும் காலில் செயினும் வைத்து கட்டி வைத்த முருகானந்தம் மற்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு அபராதம் விதித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவினை 2010ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

26.4.2011 அன்று தனது கணவர் முத்துப்பாண்டியை மதுரை நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது, அவருக்கு கை விலங்கு போட்டு அழைத்துச் சென்ற காவல்துறையினர் மீது நீதிமன்ற அவமதிப்பிற்காக நடவடிக்கை எடுக்கக் கோரியும் அதற்கு இழப்பீடு கோரியும் மதுரை உயர்நீதிமன்றத்தில் நிர்மலா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், தொடர்புடைய காவல்துறையினர், பாதிக்கப்பட்ட நபருக்கு, தலா ரூபாய்.10,000/- கொடுக்க நீதிமன்றம் 29.07.2013ல் உத்தரவிட்டது.

ஆடிட்டர் ரமேஷ் என்பவர் கொலை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள "போலீஸ்' பக்ருதீன், ஃபன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் மூவருக்கும் கை விலங்கு போட்டும், கால்களில் சங்கிலி கட்டியும் சேலம் நீதிமன்றத்துக்கு கடந்த 2014 ஜுன் மாதம் 14 ம் நாள் அழைத்து வரப்பட்டனர். நீதிமன்றத்திற்கு வெளியே, அவர்கள் மூவருக்கும் கட்டப்பட்டிருந்த கை விலங்கையும், சங்கிலியையும் காவல் துறையினர் அகற்ற முயன்றபோது, ஃபன்னா இஸ்மாயில் தனக்கு அணிவிக்கப்பட்ட விலங்கை அகற்றக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததுடன், வேலூர் சிறையில் இருந்து வெளியே வந்தபோதே தனக்கு கை விலங்கு போட வேண்டாம் என்று நான் கூறினேன். இருப்பினும், கட்டாயப்படுத்தி அணிவித்து, வழியில் இயற்கை உபாதையைக் கழிக்கக் கூட என்னை அனுமதிக்காமல் அழைத்து வந்து கொடுமைப்படுத்தினீர்கள். இப்போது நீதிபதி கண்டனம் தெரிவிப்பார் என்பதால் எனக்கு அணிவிக்கப்பட்டுள்ள கை விலங்கு, கால் சங்கிலியை அகற்றச் சொல்வதில் நியாயம் இல்லை என்று அவர் எதிர்ப்பு தெரிவித்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின.

கடந்த 2014 அக்டோபர் 15ம் நாள், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த பிரபு என்பவரை, வழக்கு விசாரணைக்காக பாப்பிரெட்டிப்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, சேலம் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்கள். அப்போது, தனது கை விலங்கை அவிழ்த்து விடுமாறு பாதுகாப்பு காவலர்களிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அது மறுக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக காவலரைத் தாக்கியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆகவே, சட்டமும், தீர்ப்புகளும் இங்கே சரியாக மதிக்கப்படுவதில்லை என்பதை மேலே கண்ட நிகழ்வுகளின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே, உறுதி செய்யப்பட்ட, கை விலங்கு போடுதல் எனும் மனிதத் தன்மையற்ற செயலுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம். தொடர்புடைய அதிகாரிகளுக்கு, தண்டனையை முழுமையாக அமல்படுத்துவதன் மூலமாக மட்டுமே அது சாத்தியப்படும்.