கடந்த 09.02.12 அன்று தனது கணவன் ஜோதிபாசு குடிபோதையில், பெற்ற மகளிடமே முறைகேடாகவும், வன்புணர்ச்சி செய்யவும் முயற்சித்தபோது அவரைத் தடுக்க முயற்சித்தும் முடியாமல் போகவே அருகில் கிடந்த கிரிக்கெட் மட்டையால், தனது தாய் மற்றும் மகளுடன் சேர்ந்து அவரை அடித்துக் கொன்றார் மதுரையைச் சேர்ந்த உஷாராணி. கொலை செய்ததாக ஒப்புக்கொண்ட அவரை கைதுசெய்து விசாரித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இது முழுக்க முழுக்க தற்காப்புக்காக செய்யப்பட ஒரு செயல் என்று கூறினார். மேலும், உஷாராணியை நீதிமன்றத்தில் சமர்பிக்காமல், இந்திய தண்டனை சட்டத்தின் 100 மற்றும் 102 ஆகிய பிரிவுகளின் படி, தனக்குள்ள சட்டப்பூர்வமான அதிகாரத்தின் அடிப்படையில், கொலைசெய்த அன்றைய தினமே அவரை விடுதலை செய்வதாகவும் அறிவித்தார். இந்த நிகழ்வு மாநில குற்றவியல் சரித்திரத்தில் தமிழக காவல்துறை புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று ஒரு சாரரால் கொண்டாடப்பட்டாலும், சட்டத்துறை சார்ந்தவர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

எது சட்டப்படி குற்றம்? எது குற்றமாகாது?

தனக்கோ, பிறரது உடலுக்கோ காயம் விளைவிக்க அல்லது சொத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை உண்டாக்க ஒருவர் முயற்சிப்பாரானால், அவரிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்தில் தற்காப்புக்காக சில காரியங்களைச் செய்யவேண்டிய அத்தியாவசியத் தேவை ஏற்படுகிறது. அதனால் அந்தத் தீங்கை செய்ய முற்பட்டவருக்கு பாதிப்பு ஏற்படலாம். அந்த பாதிப்பானது தவிர்க்க முடியாததாகவும் அமைந்து விடுகிறது. ஆனால், எதிரியால் எந்த அளவுக்கு பலப்பிரயோகம் செய்யப்படுகிறதோ அந்த அளவுக்கு மட்டுமே தற்காப்பு நோக்கில் எதிர்வினை ஆற்றிட சட்டம் அனுமதிக்கிறது. சான்றாக, கட்டையால் தாக்க வருபவரை அவரது கையிலுள்ள கட்டையைப் பிடுங்கவோ அல்லது அவரை கட்டையால் தாக்கி அவரிடமுள்ள கட்டையைப் பிடுங்கவோ முயற்சி செய்யலாம். அப்போது அவருக்கு காயம் விளைந்தாலும் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு அவ்வாறு செய்வதால் அது சட்டப்படி குற்றமாகாது.

ஆனால், அப்படியாக கட்டையால் தாக்க வருபவரை எதிர்த்து, தற்காப்பு என்ற பெயரில் இரும்புக் கம்பியால் குத்துவது சட்டப்படி குற்றமான செயலாகும். தாங்கிக்கொள்ளவே முடியாத அளவுக்குக் கொடுமையான துன்பத்தை எதிரியானவர் விளைவிக்க முற்படுகிறார். அப்போது அதிலிருந்து தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ தற்காத்துக் கொள்ளும் பொருட்டு, அவரைக் கொலை செய்தாலும் அது குற்றமாக கருதப்படாது. மாறாக தற்காப்பின் நிமித்தம் செய்யப்பட்ட செயலாகவே அந்தக் கொலையானது கருதப்படும்.

இந்திய தண்டனைச் சட்டத்தில் தற்காப்புரிமை:

இந்திய தண்டனைச் சட்டத்தில் உடலையும், சொத்தையும் பொறுத்த தற்காப்புரிமை குறித்து 96 முதல் 106 வரையிலான பிரிவுகள் விவரிக்கின்றன.

பிரிவு: 96 தற்காப்புக்காகச் செய்யப்படுபவை:

தற்காப்புரிமையைப் பயன்படுத்த்தும்போது செய்யப்படுகிற எதுவும் குற்றமன்று.

பிரிவு: 97 ; உடலையும் சொத்தையும் பொறுத்த தற்காப்புரிமை:

முதலாவதாக – மனித உடலைப் பாதிக்கிற வகையில் செய்யப்படும் குற்றம் எதிலிருந்தும் தம் உடலையும், வேறு எவரது உடலையும்;

........... காத்துக் கொள்வதற்கு ஒருவர் உரிமையுடையவராவார்.

பிரிவு 100 : உடலைப் பொறுத்த தற்காப்புரிமையானது

உடலைத் தற்காத்து கொள்ளும் உரிமை, மரணம் விளைவிக்கும் அளவுக்கு எப்போது நீடிக்கிறது:

உரிமையைப் பயன்படுத்த வாய்ப்பளிக்கும் குற்றம், இதற்குப்பின் விவரிக்கப்பட்ட வகைகளில் ஏதாவதொன்றாக இருக்குமேயானால், தாக்குபவருக்கு தன்னிச்சையாக மரணத்தை அல்லது வேறு தீங்கு எதனையும் விளைவிக்கும் அளவுக்கு முந்தைய பிரிவில் சொல்லப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நீடிக்கும்.

அதாவது

முதலாவதாக - அவ்வாறு செய்யவில்லை என்றால் அத்தகைய தாக்குதல் மரணத்தை விளைவிக்கும் என்ற நியாயமான அச்சத்தை உண்டாக்குவதற்கான ஒரு தாக்குதல்,

இரண்டாவதாக – அவ்வாறு செய்யவில்லை என்றால், அத்தகைய தாக்குதல் கொடுங்காயத்தை விளைவிக்கும் என்னும் நியாயமான அச்சத்தை உண்டாக்கும் தன்மையானதான தாக்குதல்,

மூன்றாவதாக – வன்புணர்ச்சி செய்யும் உட்கருத்துடன் தாக்குதல்,

நான்காவதாக- இயற்கைக்கு மாறான காம இச்சையைத் திருப்தி செய்து கொள்ளும் உட்கருத்துடன் தாக்குதல், ..........

பிரிவு 102 : உடலைப் பொறுத்த தற்காப்பு உரிமையின் தொடக்கமும் தொடர்ச்சியும்;

குற்றமொன்று செய்யப்பட்டிருக்காவிட்டாலும் கூட அத்தகைய குற்றத்தை செய்வதற்கான ஒரு முயற்சியிலிருந்தோ அல்லது செய்யப்போவதாக சொல்லும் அச்சுறுத்துதலில் இருந்தோ உடலுக்கு அபாயம் ஏற்படுமென்னும் நியாயமான அச்சம் எழுகின்ற உடனே, உடலைப் பொறுத்த தற்காப்பு உரிமை தொடங்குகிறது. மற்றும் உடலுக்கு அபாயம் ஏற்படுமென்னும் அத்தகைய அச்சம் தொடர்ந்து இருந்து வரும்வரை அது தொடர்ந்திருக்கும்.

மோதல் சாவுகளும் தற்காப்புரிமையும்:

நடப்பிலுள்ள சட்டங்களின் படி எந்த ஒரு தனி மனிதனின் உயிரையும் அழிக்க காவல்துறையினருக்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை. காவல்துறையைச் சேர்ந்த ஒருவர், ஒருவரைக் கொலை செய்தால், அவர் கொலைக் குற்றம் சாட்டப்பட வேண்டிய குற்றத்துக்குள்ளாகிறார். அது கொலையாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அவர் ஏற்படுத்திய மரணம் சட்டப்படி குற்றமல்ல என அவர் நிரூபித்தாக வேண்டும். ஆனால் சமீபத்தில் சென்னையில் நிகழ்த்தப்பட்ட ஐந்து பேரை சுட்டுக் கொன்ற மோதல் சாவு உட்பட, ஒவ்வொரு மோதல் சாவு நிகழ்வுகளின் போதும் காவல்துறையினர் தற்காப்பு உரிமையையே தங்களுக்கு சாதகமாக எடுக்கின்றார்கள். இப்படியாக இது வரையிலும் காவல்துறையினருக்கு மட்டுமே பயன்பட்டு வந்த இந்த தற்காப்புரிமை தற்போது பொதுமக்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்காப்புரிமை குறித்த வழக்குகள்:

இந்திய உச்ச நீதிமன்றம், 1996 ஆம் ஆண்டில் வாசன்சிங் எதிர் பஞ்சாப் மாநில அரசு மற்றும் 2010ம் ஆண்டில் ஒரு வழக்கிலும், சென்னை உயர்நீதி மன்றமானது கடந்த 2008ம் ஆண்டில் பெருமாயி எதிர் காவல் துறை ஆய்வாளர் என்பது உள்ளிட்ட பல்வேறு கொலை வழக்குகளில், கீழமை நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்ட பிறகும், மேல்முறையீட்டு விசாரணையின் முடிவில் அது தற்காப்புக்காக நிகழ்த்தப்பட்டவையே என்று தீர்ப்பிட்டுள்ளன. ஆனால் அந்த அனைத்து வழக்குகளிலும் கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் முதலில் கைது செய்யப்பட்டு இறுதியில் நீதிமன்றத்தாலேயே விடுதலை செய்யப்பட்டார்கள்.

முதல் நிலையிலேயே விடுவிப்பு:

சட்டப்படி குற்றம் செய்ததாகக் கருதப்படும் ஒருவரை கைதுசெய்து, நீதிமன்றத்தின் முன்பாக அவரை சமர்ப்பித்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து நீதிமன்றமானது அந்த வழக்கினை விசாரித்து, ஆவணங்களைப் பரிசீலித்து அதனடிப்படையில் தண்டனை வழங்கியோ அல்லது விடுதலை செய்தோ தீர்ப்பிடுதலுமே பொதுவான நியதி. அப்படியாக பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு வழங்கப்படும் தீர்ப்புகளில் பல, அவ்வப்போது கடும் விவாதத்திற்கு உள்ளாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆனால், காவல்துறை அதிகாரி, ஒரு வழக்கின் முதல்கட்ட விசாரணையின் போதே, அது தற்காப்புக்கான செயல் என்று முடிவுசெய்து, வழக்கு தொடர்பானவர்களை விடுவிப்பது ஆரோக்கியமான செயல் அல்ல. இது நிச்சயமாக முழுக்க முழுக்க ஒரு தவறான முன்னுதாரணமாகவே அமையும். விரிவான விசாரணைகளின் அடிப்படையில், நியாயமாக அமையும் நீதிமன்றம் வாயிலான தீர்ப்பே இறுதியானதும், சரியானதுமாகும்.

- இ.இ.இராபர்ட் சந்திரகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)