திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறப்பட்டாலும், திருமணம் செய்து கொண்டவர்கள் வாழ்வதென்னவோ இந்த பூவுலகில்தான். திருமண வாழ்வும் சொர்க்கமாகவோ, நரகமாகவோ மாறுவதும் அவரவர் கைகளிலும், சுற்றுப்புறத்தில் உள்ளவர்களின் கைககளிலும்தான் இருக்கிறது. சமூகரீதியில் திருமணம் என்ற நிகழ்வு பல்வேறு பெயர்களில் புனிதமாக கருதப்பட்டாலும், உரிய வயதடைந்த இரு எதிர்பாலினர் இணைந்து வாழ்வதற்கான ஒரு ஒப்பந்தமாகவே திருமணம் விளங்குகிறது.

Marriage திருமணம் என்பது இருவேறு மனம் மற்றும் உடல்களில் சங்கமமாக மட்டும் அல்லாமல் இருவேறு சமூகங்களின் பிணைப்பாகவும் மாறுகிறது. மேலும் இந்த நிகழ்வு புதிய உயிர்களை, உறவுகளை, உடைமைகளை தோற்றுவித்தல் போன்ற வேறுபல நிகழ்வுகளுக்கும் காரணமாகிறது. எனவே திருமணம் என்ற நிகழ்வை சட்டரீதியாக புரிந்து கொள்வது அவசியம். திருமணத்தின் முக்கிய நிர்பந்தமாக மணம் செய்துகொள்ளும் இருவரின் வயது, மணவுறவுக்கான உடல்நிலை, மனநிலை, மணநிலை ஆகியவை முக்கிய இடம் வகிக்கின்றன.

திருமணம் செய்துகொள்ளும் நபர்கள் எந்த சமூகம் சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்களின் திருமணத்தை சட்டரீதியாக பதிவு செய்வது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. குடியுரிமை, சொத்துரிமை, குழந்தைகளின் வாரிசுரிமை போன்ற பல்வேறு சட்டம் தொடர்பான விவகாரங்களுக்கும் திருமணத்தை பதிவு செய்தல் என்பது அவசியமாகிறது. இந்த திருமணப்பதிவு, மதப்பழக்க-வழக்கங்களுக்கேற்ப அமைக்கப்பட்டுள்ளது.

மதநம்பிக்கை இல்லாதவர்கள், மதங்களைப் பற்றிய அக்கறை இல்லாதவர்களுக்கான திருமணப்பதிவு “சிறப்பு திருமணச் சட்டம்” (Special Marriages Act) என்ற பிரிவில் விளக்கப்பட்டுள்ளது.

சாதிகளாலும், மதங்களாலும் பிரிக்கப்பட்டிருந்தாலும், மனங்களால் ஒன்றுபட்டவர்களின் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதே இந்த சிறப்புத் திருமண சட்டத்தின் நோக்கம். இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சட்டங்கள் மதம் கடந்த திருமணங்களை ஏற்பதில்லை. குறிப்பாக (பழைய) இந்துச் சட்டம் சாதிகள் கடந்த திருமணங்களை ஏற்பதில்லை. எனவே சாதிகளையும், மதத்தினையும் கடந்து திருமணம் செய்ய விரும்புபவர்கள் இந்த சட்டத்தின்கீழ்தான் திருமணம் செய்ய முடியும்.

திருமணம் செய்வதற்கான நிபந்தனைகள்-தகுதிகள்:

1. திருமணம் ஆகாத ஆண்/பெண்களும், கணவனை/மனைவியை இழந்தோரும், சட்டரீதியான மணவிலக்கு செய்தோரும் இந்த சட்டத்தின்கீழ் திருமணம் செய்ய தகுதி படைத்தவர்கள். திருமணம் செய்யவிருக்கும் ஆணுக்கோ, பெண்ணுக்கோ உயிருடன் வாழும் வாழ்க்கைத்துணைவர் இருக்கக்கூடாது.

2. திருமணம் செய்து கொள்ளவிருக்கும் இரண்டு பேரும் மண வாழ்வுக்குத் தேவையான ஆரோக்கியமான மனநிலையோடு இருக்க வேண்டும். உரிய மூளை வளர்ச்சி அடையாதோரும், மனநிலை குன்றியவர்களும் திருமணம் செய்ய முடியாது.

3. திருமணம் செய்து கொள்ளவிருக்கும் இருவரும் திருமண வாழ்வுக்குத் தேவையான உடல்நிலையை பெற்றிருக்க வேண்டும். மகப்பேறுக்கான தகுதியும் அவர்களுக்கு இருக்க வேண்டும். இதற்கான தகுதி பெறாதவர்கள் திருமணம் செய்ய இயலாது.

4. திருமணம் செய்யவிருக்கும் மணமகனுக்கு குறைந்தது 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் நிறைந்திருக்க வேண்டும்.

5. திருமணம் செய்யவிருக்கும் மணமக்கள் இருவரும் தடுக்கப்பட்ட உறவுமுறையினராக இருக்கக்கூடாது. எனினும், அவ்வாறான உறவுமுறை திருமணம் அவர்களின் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டால் சட்டமும் அங்கீகரித்ததாகவே கொள்ளப்படும்.

திருமண அறிவிப்பு:

திருமணம் செய்வதற்கான உரிய தகுதிகளை கொண்ட மணமக்கள், அவர்கள் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளவிருப்பது குறித்து அவர்களில் எவரேனும் ஒருவர் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள திருமணப் பதிவு அதிகாரிக்கு எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும்.

அதனைப் பெற்றுக் கொண்ட திருமண அதிகாரி, திருமணம் செய்துகொள்ள இருப்பவர்களின் தகுதிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு அதில் திருப்தி அடைந்தால், அவர்களின் திருமண அறிவிப்பை உரிய பதிவேட்டில் எழுதுவார். மேலும் அந்த அறிவிப்பின் நகல் ஒன்று அந்த அலுவலகத்தில் அனைவரின் பார்வையிலும் இடம் ஒன்றிலும் வைக்கப்படும்.

இந்த திருமணத்திற்கு சட்டரீதியான மறுப்பு கொண்டுள்ள எவரும், இந்த அறிவிப்பு வெளியான 30 நாட்களில் மறுப்பை தெரிவிக்கலாம். அந்த மறுப்பு ஏற்கப்படாத நிலையிலும், மறுப்புகள் ஏதும் பதிவு செய்யப்படாத நிலையிலும், அறிவிப்பு வெளியிடப்பட்டு 30 நாட்களுக்குப்பின் அந்த திருமணம் பதிவு செய்யப்படும். தவறான காரணங்களுக்காக எவரேனும் மறுப்பு தெரிவிக்கப்பட்டு அது விசாரணையில் தெரியவந்தால், அந்த மறுப்பை தெரிவித்தவருக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேற்படாத வகையில் அபராதம் விதித்து, அந்த தொகையை முழுமையாகவோ மணமக்களுக்கு திருமண அன்பளிப்பாக அளிக்க உத்தரவிடப்படும்.

திருமண நிகழ்வு:

திருமண அறிவிப்பு வெளியிடப்பட்டு 30 நாட்கள் நிறைவடைந்தபின் எந்த ஒரு நாளிலும் திருமணம் நடைபெறலாம். அன்றைய தினத்தில் மணமக்கள் விரும்பும் முறையில் திருமணத்தை நடத்திக்கொண்டு, திருமண பதிவு அலுவலகத்தில் அதற்காக வைக்கப்பட்டுள்ள படிவத்தில் கையெழுத்திட வேண்டும். இரு தரப்பிலும் சாட்சியங்கள் கையொப்பம் இட்டதும், திருமணப்பதிவாளர் அந்த திருமணத்தை அங்கீகரித்து கையொப்பம் இடுவார். இதையடுத்து அந்த திருமணம் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும். இதற்கான சான்றிதழும் வழங்கப்படும்.

இந்த சட்டத்தின் கீழ் திருமணம் செய்யாமல் மதம் சார்ந்த வேறு முறைகளில் திருமணம் செய்துகொண்டோரும், இந்த சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் தங்கள் திருமணத்தைப்பதிவு செய்யலாம்.

- சுந்தரராஜன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)';document.getElementById('cloake4e66b466627090330428b8437511a8b').innerHTML += ''+addy_texte4e66b466627090330428b8437511a8b+'<\/a>';

(நன்றி: மக்கள் சட்டம்)