இயற்பியல் துறையில் ஆராய்ச்சி செய்து முதன் முதலில் நோபல் பரிசு பெற்றவர் மேரி கியூரி. இவருக்குப் பின்னர் இயற்பியல் துறையில் ஆராய்ச்சி செய்து நோபல் பரிசை பெற்றவர் மரியா கோப்பெர்ட் மேயர்.

               இவர் ஜெர்மன் நாட்டில் உள்ள காட்டோவிட்ச் என்னும் இடத்தில், பிரடெரிக் கோப்பெர்ட் - மரியா இணையருக்கு 28.06.1906 ஆம் நாள் பிறந்தார்.              

maria goeppert mayerஇவரது பெற்றோர் இருவரும் பல்கலைக் கழத்தில் பேராசிரியர்களாகப் பணியாற்றினர். தமது தந்தை பணி புரிந்த கோட்டின்ஜென் என்னும் நகரில் தமது பள்ளிப் படிப்பை முடித்தார்.

               மரியா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து மேல்படிப்பு படிக்க விரும்பினார். அவரது பெற்றோரும் அவரைப் பல்கலைக்கழகத்தில் சேர்த்து, படிக்க வைக்க வேண்டுமென மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். ஆனால், அந்த காலத்தில் ஒரு பெண் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பது என்பது அவ்வளவு எளிது அல்ல. பெண்களை பல்கலைக் கழகத்தில் சேர்த்துக் கொள்ள பல கடுமையான நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேறிய பின்னரே சேர்த்துக் கொள்ளப்படுவர்.

               மரியா, 1924 ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றார். பல்கலைக் கழக ஆசிரியர்கள் கேட்ட பல கடுமையான கேள்விகளுக்குப் பதிலளித்தார். இப்படி, பல சோதனைகளுக்குப் பின்னரே மரியா பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்.

               இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஆங்கில மொழி பயின்றார். கோட்டின்ஜென் பல்கலைக் கழகத்தில் தனது மேல்படிப்பை முடித்தார். இவருக்கு, அறிவியல் மீது ஆர்வம் ஏற்படச் செய்தவர் பேராசிரியர் மார்க்ஸ்பார்ன் என்பவர்.

               மரியா 1930 ஆம் ஆண்டு இயற்பியல் துறையில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார்.

               அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசப் எட்வர்டு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் தன் கணவருடன் பால்டிக் நாட்டிற்குச் சென்று அங்குள்ள ஜான்ஹோப்கின்ஸ் பல்கலைக் கழகத்தில், இயற்பியல் துறை பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். மாணவர்களுக்கு இயற்பியல் பாடத்தை எளிய முறையில் விளையாட்டுப் போல் கற்றுக் கொடுத்தார். இதனால், மாணவர்கள் விரும்பி இவரது பாடங்களைக் கேட்டனர்.

               மரியா வேதி-இயற்பியல் துறையில் தமது ஆய்வை மேற்கொண்டு, பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். இதனால் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார்.

               தமது கணவருடன் 1939 ஆம் ஆண்டு கொலம்பியா சென்றார். மரியா, அங்குள்ள பல்கலைக் கழகத்தில் ஐசோடோப்புகளைத் தனியாக பிரித்தலில் ஈடுபட்டார். இது அணுகுண்டு தயாரித்தல் சம்பந்தப்பட்ட திட்டத்திற்கு உட்பட்டதாகும். இவர் யுரேனியத்திலிருந்து ஐசோடோப்புகளை போட்டோ இரசாயன முறையில் பிரிப்பது சாத்தியமானது என்பதைக் கண்டறிந்தார்.

               சிக்காகோவுக்கு 1945 ஆம் ஆண்டு சென்றார். அங்கு இயற்பியல் துறை பேராசிரியராகப் பணியாற்றினார். அங்கு அவர் அணுவியல் கழத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும், ஆர்கோனி தேசிய கூடத்திலும் பணி புரிந்தார்.

               மரியா, அணு உட்கரு இயற்பியல் துறையில் தனித் திறமை பெற்று விளங்கினார். பின்னர் 1948 ஆம் ஆண்டு அணுவின் உட்கரு குறித்த ஆய்வை மேற்கொண்டார். அணு அமைப்பில், நியூக்ளியஸ் அமைப்பில் அதன் உள்ளே உள்ளவற்றைப் பற்றி பல காலம் ஆராய்ச்சி செய்தார். நியூக்ளியஸ் ஓட்டின் உள்ளே சில குறிப்பிட்ட எண்ணிக்கையில் நியூட்ரான் உள்ளது என்பதைக் கண்டறிந்தார். அவை, 50, 82 மற்றும் 120 என்கிற எண்ணிக்கையில் உள்ளது எனவும், அதே எண்ணிக்கையில் புரோட்டானும் உள்ளது என்பதையும் விளக்கினார். இவற்றை அடிப்படையாகக் கொண்டு அணு உட்கரு கோட்பாட்டை உருவாக்கினார்.

               மரியா, ஜென்சன் என்பவருடன் இணைந்து 1953 ஆம் ஆண்டு ‘அணுவின் உட்கரு கட்டமைப்பு’ பற்றிய நூலை எழுதி வெளியிட்டார்.

               அணு உட்கருவின் அமைப்புப் பற்றிய நவீன கோட்பாடு உருவாவதற்கும், அணு உட்கரு அமைப்பு மற்றும் உட்கருவின் உள்ளே உள்ள புரோட்டான், நியூட்ரான் ஆகியவற்றிற்கு இடையே உள்ள செயல்பாடுகள் பற்றிய ஆய்வுகளுக்காக, மரியா கோப்பெர்ட் மேயருக்கு 1963 ஆம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது. இந்த நோபல் பரிசை இவருடன் ஜெர்மன் நாட்டு விஞ்ஞானி ஹான்ஸ் டேனியல் ஜென்சன் என்பவரும், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த யூஜின் பால் விக்னர் ஆகிய இருவரும் சேர்ந்து பகிர்ந்து கொண்டனர்.

               மரியாவுக்கு ரூசல் சேகி கல்லூரி, மவுண்ட் ஹோலியோக், ஸ்மித் முதலிய கல்லூரிகள் கௌரவ டாக்டர் பட்டம் அளித்துச் சிறப்பித்தன.

               ஜெர்மன் நாட்டு இயற்பியல் விஞ்ஞானியான மரியா கோப்பெர்ட் மேயர் 20.02.1972 ஆம் நாள் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும், அணு உட்கரு குறித்த அவரது ஆய்வு அறிவியல் உலகில் என்றும் நிலைத்து நிற்கும்.

- பி.தயாளன்