‘எமிலி கிரினி பால்ச்’ – அமெரிக்க நாட்டின் மனிதநேயம் மிக்க பெண்மணி; பொதுவுடைமைவாதி; அரசியல் விஞ்ஞானி; பொருளாதார நிபுணர்; மற்றும், உலக சமாதானத்திற்காகப் பாடுபட்டவர்! இவர் பெண்களுக்கான சர்வதேச கமிஷன் உருவாகப் பாடுபட்டவர்! மேலும், உலக சமாதானத்திற்கு உழைத்ததற்காக உலகின் மிக உயர்ந்த நோபல் பரிசை, தமது எழுபத்தொன்பதாவது வயதில் 1946 ஆம் ஆண்டு பெற்றார்.

              EmilyGreeneBalch ‘எமிலி கிரினி பால்ச்’ – 1867 ஆம் ஆண்டு சனவரி 8 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் பிறந்தார். இவரது தந்தை பெயர் பிரான்சிஸ் வி.எலின் பால்ச். இவரது தந்தை புகழ்மிக்க வழக்கறிஞர். எமிலி தனியார் பள்ளியில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். பின்பு, பிரைன் மாவர் கல்லூரியில் சேர்ந்து பயின்று பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். மேலும், இவர் பாரிசில் உள்ள கல்லூரியில் சேர்ந்து பயின்று சமூகவியல், பொருளாதரப் பாடங்களில் பட்டம் பெற்றார்.

               ‘பிரான்ஸ் நாட்டு ஏழைகளுக்கான பொது உதவி’ (Public Assistance of the poor in France) என்ற தலைப்பில் ஆய்வு நூல் எழுதி 1893 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

               ஹார்வேர்டு மற்றும் கிக்காகோ பல்கலைக் கழகங்களில் பயின்று பல பட்டங்களைப் பெற்றார். பெர்லினில் இரண்டு ஆண்டுகள் பொருளாதாரத் துறையில் பணியாற்றினார்.

               வெல்லஸ்லி கல்லூரியில் கலைத் துறையில் 1896ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். பின்பு, பதவி உயர்வு பெற்றுப், பொருளாதாரம் மற்றும் சமூகவியல் துறையில் பேராசிரியரானார். இவருடைய சிந்தனை, ஆய்வு மனப்பான்மை, கற்பிக்கும் திறன், அனுபவம், பகுத்தறியும் தன்மை, முதலியவற்றால் மாணவர்களைக் கவர்ந்தார்! “மாணவர்கள் சுயமாகச் சிந்திக்க வேண்டும், பிரச்சனைகளுக்குத் தாங்களே தீர்வு காண வேண்டும். நூலகங்களுக்குச் சென்று படிக்க வேண்டும். பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் எழுத வேண்டும்” – என்பனவற்றை மாணவர்களுக்கு உணர்த்தி, சிறந்த வழிகாட்டியாக விளங்கினார்.

               எமிலி, நகராட்சிக் கழகத்தில் உறுப்பினராகச் செயல்பட்டு, குழந்தைகள் நலம் மற்றும் நகரமைப்புப் பணிகளைச் சிறப்புற நிறைவேற்றினார். மேலும், மாநில நிர்வாகத்திலும் உறுப்பினராக இருந்து தொழில் சார்ந்த கல்வி முறை மற்றும் வெளிநாடுகளிலிருந்து இடம் பெயர்ந்து குடியேறியவர்கள் சம்பந்தப்பட்ட பணிகளையும் கவனித்து வந்தார்.

               இன வேற்றுமை, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, தொழிலாளர் தம் உழைப்புக்கேற்ற ஊதியம், பெண் உரிமை முதலியவற்றுக்காகப் போராடினார்.

               தமது ஆராய்ச்சிகளைத் தொகுத்து, ‘நமது கொத்தடிமை குடிமக்கள்’ (Our Slavic fellow citizens) என்ற பெயரில் 1910 ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டார். அமெரிக்காவில் நிலவிய கொத்தடிமைகள் பற்றியும், ஆஸ்ட்ரியா மற்றும் ஹங்கேரி முதலிய நாடுகளிலிருந்து வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறியவர்கள் பற்றியும் இந்த நூலில் விரிவாக ஆய்வு செய்துள்ளார்.

               எமிலி தமது முழு கவனத்தையும், சிந்தனையையும் அமைதிக்கானப் பணியில் ஈடுபடுத்தினார். இவரது தீவிர முயற்சியால் அமைதிக்கான இரண்டு மாநாடுகளை 1899 மற்றும் 1907 ஆம் ஆண்டுகளில் ஹாகுவில் நடத்தினார். முதல் உலகப்போர் 1914 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போரில் பொதுமக்களும், பெண்களும், குழந்தைகளும் அதிக அளவில் உயிரிழந்தனர். இதைக் கண்டு மனம் வருந்தினார். அமைதிக்காகத் தீவிரமாக போராட உறுதி பூண்டார்.

               எமிலி, 1915 ஆண்டு ஹாகுவில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாட்டில் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். அமைதி ஏற்படுத்த பல புதிய திட்டங்களை உருவாக்கினார். சர்வதேசியப் பெண்கள் அமைப்பு உருவாக உழைத்தார். இந்த அமைப்பின் மூலம் உலக அமைதி மற்றும் சுதந்திரத்திற்காகப் போராட அறை கூவல் விடுத்தார்.

               போரில் ஈடுபடும் நாடுகளில் அமைதியை ஏற்படுத்தப் பாடுபட்டார். ஜேன் ஆடம்ஸ் என்பவருடன் இணைந்து அமைதிக்கான பல பணிகளை மேற்கொண்டார்.

               இவர் பூஸ்டனில் குடியிருப்புப் பகுதிகளை உருவாக்கினார். மசாசூசெட்டிஸ் கமிஷணுக்காகவும், தொழிற்சார்ந்தவர்களுக்காகவும், குடியேறியவர்களுக்காகவும் மற்றும் பூஸ்டன் அபிவிருத்திக் கழகத்திற்காகவும் 1908 முதல் 1917 வரை உழைத்தார்.

               ‘பால்ச்’ – அமெரிக்காவின் போர்குறித்த முரண்பாடான கொள்கைகளைக் கடுமையாக விமர்சனம் செய்தார். அதனால் இவரை 1918 ஆம் ஆண்டு வெல்லீஸ் கல்லூரியிலிருந்து பதவி நீக்கம் செய்தனர். இவர் உலக சமாதானத்தை வலியுறுத்தி எழுதிய நூல் உலக அளவில் பிரபலமானது. மேலும், ‘தேசம்’ (Nation) என்ற வார இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இந்த இதழில் உலக சமாதானம் குறித்தும் கருத்தாழமிக்க, பல கட்டுரைகள் வரைந்தார்.

               அமைதி மற்றம் சுதந்திரத்திற்கான சர்வதேச பெண்களின் மாநாடு (The women’s International league for peace and Freedom) 1919 ஆம் ஆண்டு ஜூரிச்சில் (Zurich) நடைபெற்றது. இவரை அம்மாநாட்டில் செயலாளராகத் தேர்ந்தெடுத்தனர். அப்பதவியில் மூன்று ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றினார். இந்த அமைப்பு, பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது தான் பெற்ற நோபல் பரிசப் பணத்திலிருந்து உதவி அளித்தார்.

               போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் பல புரிந்தார். அதற்காக பல திட்டங்களைத் தீட்டி, சர்வதேச அளவில் அமைப்புகளையும், குழுக்களையும் அமைத்தார். ஆயுதக் குறைப்பு, போதை ஒழிப்பு போன்ற நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

               ஹைட்டி (Haiti) நாட்டின் மீது அமெரிக்கா ஆயுத நடவடிக்கை மேற்கொண்டபோது, சர்வதேசப் பெண்கள் அமைப்பு (WICPF) சார்பில் உண்மை நிலையை அறிந்து வர இவர் நியமிக்கப்பட்டார். தமது அறிக்கையில் அமெரிக்காவின் தவறான நடவடிக்கைகளைச் சுட்டிக் காட்டினார்.

               ஜெர்மனி நாட்டு ஹிட்லரின் நாஜிப்படைகள் செய்த நாசகார ஆக்கிரமிப்புகளைக் கண்டு மிகவும் கொதிப்படைந்தார். அடிப்படை உரிமைகளுக்காக மக்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும் என வலியுறுத்தினார். நாஜிப்படைகளை எதிர்த்து முறியடிக்க அமெரிக்கா போரில் பங்கு கொள்வதில் தவறில்லை என்றார். ஆனால் ஜப்பான் நாட்டின் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியதை ஆவேசத்துடன் கண்டித்தார்.

               உலக அமைதிக்காக எண்ணத்தாலும், எழுத்தாலும் அயராது பாடுபட்டார். இவர் உலக சமாதானத்திற்கான நோபல் பரிசைத் தமது எழுபதாவது வயதில் 1946 ஆம் ஆண்டு பெற்றார். இவர் இப்பரிசை ஜான் ரேலஸ் மூட் என்பவருடன் பகிர்ந்து கொண்டார். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், சர்வதேச பெண்கள் சங்கத்திற்காக இறுதிவரை செயல்பட்டார். இந்த அமைப்பின் கௌரவத் தலைவராக இருந்தும் பணியாற்றினார்.

               தமது வாழ்நாள் முழுவதும் மனித சமூகத்தின் அமைதிக்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் உழைத்தார். இவர் ‘வாழ்தலின் அற்புதம்’ (The miracle of Living) என்ற நூலை எழுதி வெளியிட்டார்.

               ‘பால்ச்’ – தமது தொன்னூற்று நான்காவது வயதில் 1961 ஆம் ஆண்டு சனவரி 9 அன்று அமெரிக்காவில் கேம்பிரிட்ஜ் நகரத்தில் இயற்கை எய்தினார். இவர் மறைந்தாலும் உலக அமைதிக்காக அவர் புரிந்த தொண்டு என்றும் நிலைத்து நிற்கும்!

- பி.தயாளன்