கட்டிடக் கலை

நாம் முன்பே பார்த்ததைப் போல இந்த காலகட்டத்தில் சுமேரிய சமூகத்தில் மிகப் பெரிய சிந்தனைப் புரட்சி நடந்திருக்க வேண்டும். இதன் தாக்கம் அனைத்து கலைகளின் வழியும் எதிரொலித்தது. அனைத்திலும் புதுமையை நோக்கிய தேடல். கட்டிடக் கலையைப் பொருத்தவரையில், அடிப்படை கட்டுமானப் பொருளான சுட்ட செங்கற்களின் தோற்றத்திலேயே மாற்றம் கண்ணைப் பறிக்கும்படி இருக்கிறது. பிளானோ கான்வெக்ஸ் செங்கற்கள் கட்டிடங்களைக் கட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தொடக்க காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட உருளை வடிவ செங்கற்களும், பாட்ஷன் வகை செங்கற்களும் முற்றிலுமாக கைவிடப்பட்டுவிட்டது. கோயில் கட்டிடங்களின் சுவர்கள் பாதி பூமிக்கு அடியிலும், பாதி பூமிக்கு மேலும் இருக்கும்படியான அமைப்பில் கோயில்கள் கட்டப்பட்டன. கோயில் கட்டிட வளாகத்தை சுற்றி இரண்டாவதாக ஒரு சுற்றுச் சுவரும் சேர்த்துக் கட்டப்பட்டது. திடீரென்று முளைத்த இந்த இரண்டாவது சுற்றுச் சுவர் எழுப்பும் வழக்கம், சுமேரிய மத நிறுவனங்கள் வெகு மக்களை விட்டு தன்னை தனிமைப் படுத்திக் கொண்டதைக் குறிப்பிடும் செயல்பாடு என்று கருதப்படுகிறது.

தொடக்க காலத்தில் கடவுளர்களின் புனிதத் தன்மையை மனிதனும் பங்கு போட்டுக் கொள்ள முடியும் என்கிற மதக் கோட்பாடு இப்போது மாற்றமடைந்து, கடவுளர்களின் புனித தன்மையிலிருந்து மனிதர்கள் விலக்கி வைக்கப்பட்டுவிட்டார்கள் என்பதை வெளிப்படுத்துவதே இரண்டாவது சுற்றுச்சுவர் அமைப்பு. முதன் முறையாக கிஷ் என்று அழைக்கப்படும் அரண்மனைக் கட்டிடங்களும் இந்த காலகட்டத்தில் தோன்றுகின்றன. இந்த அரண்மனை கட்டிடத்தின் ஆளை மிரட்டும் அங்கம் அதன் நுழைவாயில். இரட்டைக் கதவுகள் கொண்ட பிரம்மாண்டமான நுழைவாயிலுக்கு இருபக்கமும் சதுர வடிவ காவற்கோபுரங்களுடன் பார்ப்பவர்களுக்கு மிரட்சியை உண்டாக்கக் கூடியது இந்த நுழைவாயில். மிகப் பழைய சுமேரிய கவிதை ஒன்று இந்த நுழைவாயிலைக் கட்டியது கில்காமேஷ் என்கிறது. கில்காமேஷ் சுமேரிய நாகரீகத்தின் காவிய வீரன். இவனுக்கு பாதி மனிதத் தன்மையும், மீதி அமானுஷ்யத் தன்மையையும் தருகின்றன சுமேரிய இலக்கியங்கள். இவன் மீது இனானாவிற்கு ‘ஒரு கண்’ இருந்ததாகவும், ஆனால் அவன் இனானாவை கண்டு கொள்ளவேயில்லை என்றும் சொல்கின்றன அந்த இலக்கியங்கள்.

sumeria art 480

தொடக்க காலகட்டத்தில் நகரின் காவல் தெய்வம் இனானா. ஆனால் இப்போது ஊருக் நகரில் கிஷ் அரண்மனையைக் கட்டி அந்த நகரைப் பாதுகாத்தவன் கில்காமேஷ். இதுவும் கடவுளர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே விரிசல் விழுந்துவிட்டதற்கான அடையாளம். கோயில்கள் அதன் பெயருக்கு ஏற்றபடி கடவுளர்கள் மட்டுமே வசிக்கும் இடமாக மாறிப்போனது. வெகு சனங்களோடு கலந்து உறவாடிய நிலைபோய் கோயில்கள் நகருக்குள்ளேயே தனித் தீவு மடங்களானது. அதே சமயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒழுங்கற்ற கோயில் கட்டிட அமைப்பு மாற்றமடைந்து மிகத் தெளிவான அமைப்புகளும் உருவானது. நீள் சதுர கருவறையும் அதைச் சுற்றி இரண்டு துணை அறைகளும் கொண்டதே சுமேரியக் கோயில்களின் அடிப்படை அமைப்பு என்பது மிகத் தெளிவாக புலனாவது இந்த காலகட்டம் தொடங்கிதான். இந்த அடிப்படை அமைப்பில் மேலும் பல அறைகளையும், நூழைவாயில் மண்டபங்களையும், மதக் குருமார்களுக்கான தங்கும் அறைகளையும், கோயில் நிர்வாக அறைகளையும் சேர்த்துக்கொண்டே போனார்கள் சுமேரிய கட்டிடக் கலைஞர்கள். இது கிட்டத்தட்ட அரண்மனை கட்டிட அமைப்பை ஒத்த அமைப்பாக வளர்ச்சியடைந்தது.

சிற்பக் கலை

ஜம்தத் நசுர் காலகட்டத்தின் முடிவிலும் மெசிலிம் காலக்கட்டம் தொடங்குவதற்கு சற்று முன்பாகவும், சிற்பக் கலை நேச்சுரலிசத்திலிருந்து முற்றிலுமாக விலகி, அப்ஸ்டிராக்ட் சிம்பாலிசம் ஒன்றையே பிரதிபலிக்கின்றன. மிருக மற்றும் தாவரங்களின் உருவங்கள் வெறும் கோடுகளாகவும் புள்ளிகளாகவும் மாற்றமடைந்து சதுர வட்ட கோட்டோவியத்தின் (அப்ஸ்டிராக்ட்) அலங்கார உறுப்புகளாக காட்சியளிக்கின்றன. சில சமயங்களில் இந்த உருவங்களுக்கும் கோட்டோவியத்திற்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத நிலைகள் கூட ஏற்படுகின்றன. போதாததற்கு சுமேரியர்களின் எழுத்து வடிவான குனிபார்ம் வடிவங்களும் ஓவிய அலங்காரமாக பல இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கட்டிடக் கலையைப் போலவே மெசிலிம் காலகட்டத்தில் சிற்பக் கலையும் புரட்சிகர மாற்றங்களை நோக்கி நகர்ந்தது. சிற்பத்தின் பேசு பொருள் (subject), ரூபம் (form), வடிவம் (shape) என்று அனைத்திலும் புதுமைகளைக் கொண்டு வந்தார்கள் இந்த காலகட்ட சிற்பக் கலைஞர்கள். மனித வாழ்வும் கடவுளர்களின் வாழ்வும் ஒன்றுக்கொன்று சங்கமித்திருந்த காட்சிகளை வெளிப்படுத்திய பேசு பொருள் கைவிடப்பட்டு, கடவுளர்களின் புனிதத் தன்மைகளை மற்றும் அரசனின் புனிதத் தன்மைகளை, மேன்மைகளை பேசும் இடமானது சிற்பக் கலை.

இந்த காலகட்டத்தில் மேலிருந்து கீழ் நோக்கிய அதிகார அடுக்கு மிகத் தெளிவாக சுமேரிய சமூகத்தில் கட்டமைக்கப்பட்டு, மக்கள் அதற்கு பழக்கப்பட்டுவிட்டார்கள் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. தொடக்க கால கட்டத்திலிருந்த ஒருவித சமூக பொதுவுடமைத் தன்மை முற்றிலும் ஓழிக்கப்பட்டுவிட்டதற்கான அடையளம். மனித சமூகம் (ஹோமோ சேப்பியன்கள்) முற்றிலுமாக தனது வேட்டை நாகரீக பொதுவுடமை தன்மைகளிலிருந்து விடுபட்டு விவசாய நாகரீக தனிவுடமைப் பண்புகளுக்கு தன்னை தகவமைத்துக் கொண்டது. தொடக்க காலகட்டத்தின் முடிவில் வழக்கிலிருந்த அப்ஸ்டிராக்ட் சிம்பாலிசத்தையே இந்த காலகட்ட சிற்பக் கலைஞர்கள் அடுத்த நிலைக்கு கொண்டு சென்றார்கள். சுமேரியாவின் அப்ஸ்டிராக்ட் சிம்பாலிச வகை சிற்பங்களின் உச்சம் இங்கிருந்தே தொடங்குகிறது. இவைகளின் கலை நேர்த்தியும், வெளிப்பாட்டுத்தன்மையும் சுமேரிய கலை வரலாற்றில் தனித்து நிற்கின்றன. பார்த்த மாத்திரத்தில் இவைகள் சுமேரிய மெசிலிம் காலகட்ட சிற்பங்கள் என்று அடையாளப்படுத்திவிடக் கூடிய அளவிற்கு தனித்துவமானவைகள். கற்களில் செதுக்கப்பட்ட சிலைகள், மணி கற்களில் செதுக்கப்பட்ட புடைப்பு சிற்பங்கள், களி மண் முத்திரைகளில் செதுக்கப்பட்ட புடைப்பு சிற்பங்கள், வெண்கலத்தை உருக்கி வாரக்கப்பட்ட வெண்கல சிலைகள் என்று பல நிலைகளில் சிற்பக் கலை இந்த காலகட்டத்தில் வழக்கிலிருந்தன.

வெண்கல சிற்பங்களைத் தவிர மற்ற அனைத்து சிற்பங்களும் அப்ஸ்டிராக்ட் வடிவங்களைக் கொண்டவைகளே. புடைப்பு சிற்பங்களைப் பொருத்தவரையில் இந்த காலகட்டத்தின் தனித்துவமாக ஐஸோசிபாலி என்கிற உத்தி பரவலாக கடைபிடிக்கப்பட்டிருக்கிறது (உட்கார்ந்திருக்கும், நின்றிருக்கும் அனைத்து உருவங்களின் தலைகளும் கண்களும் ஒரே உயரத்தில் இருக்கும்படி கம்போஸ் செய்வதை ஐஸோசிபாலி என்பார்கள்). மணி கல் புடைப்பு சிற்பங்களில் பிகர்டு பேண்ட் (மனித மற்றும் மிருக உருவங்களை ஒன்றுக்கு ஒன்று மேலேழுந்து வரும்படி செதுக்குவது) இந்த காலகட்டத்தின் கண்டுபிடிப்பு என்று சொல்லலாம். சிற்பக் கலை பொதுவாக அதிகதிகமாக அப்ஸ்டிராக்ட் அலங்காரத்தின் உச்சம் நோக்கி நகர்ந்தபடி இருந்தது. மனித உருவத்தின் இயற்கை ரூபத்தை தவிர்த்துவிட்டு அப்ஸ்டிராக்ட் வடிவங்களான சதுரம், வட்டம், முக்கோணம் ஆகியவைகளை கலந்து உருவங்களுக்கு தெய்வத்தன்மையை கொடுப்பதில் கவனம் செலுத்தினார்கள் இந்த காலக்கட்ட சிற்பக் கலைஞர்கள்.

இம்டுகட் – சுக்குரு காலகட்டம் (இரண்டாம் நிலைமாற்ற காலகட்டம்)

ஊர் நகரின் முதல் அரச பரம்பரை இந்த காலக்கட்டத்திலிருந்துதான் தொடங்குகிறது. ஊர் நகரமும் ஊர்க் நகரமும் அரசியல் அதிகாரத்திலும், கலை கலாச்சார நடவடிக்கைகளிலும் முக்கியத்துவமும் முதன்மையும் பெறுகின்றன. இந்த காலகட்டத்தில் கலை வெளிப்பாட்டுத் தன்மைகளில் எத்தகைய பெரிய மாற்றங்களும் ஏற்படவில்லை. மெசிலிம் காலக்கட்ட கலை சித்தாந்தங்களே இந்த காலகட்டத்திலும் தொடர்ந்தன.

(தொடரும்)

- நவீனா அலெக்சாண்டர்