Vivekananda

பசு பாதுகாப்பு பிராச்சாரகர் ஒருவரிடம், “மனிதர்கள் பசியாலும், பட்டினியாலும் செத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்களின் உயிரைக் காப்பாற்ற ஒரு பிடி சோறுகூடத் தராமல் விலங்குகளையும், பறவைகளையும் காப்பாற்றுவதற்காக உணவை வாரி வாரித் தரும் சங்கங்களிடம் எனக்கு சிறிதுகூட அனுதாபம் கிடையாது. மனிதன் பட்டினியால் சாவதற்கு அவனது கருமங்கள் காரணம் என்று கரும நியதிக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதாக இருந்தால் இந்த உலகத்தில் எதற்காகவும் முயற்சி செய்வதோ, போராடுவதோ பயனற்ற வேலை. பசுக்களைக் காப்பாற்றும் உங்கள் வேலையும் அப்படிப்பட்டதுதான்” என்றார் விவேகானந்தர்.

இதைக் கேட்ட பசு பாதுகாப்பு பிராச்சாரகர் கொஞ்சம் வெட்கம் அடைந்தவராகத் தடுமாறினார். பிறகு சமாளித்துக் கொண்டு “நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், பசு நமது தாய் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றனவே” என்றார். சுவாமிஜி லேசாகச் சிரித்தபடி “ஆமாம். பசு நம் தாய்தான். எனக்குப் புரிகிறது. வேறு யாருதான் நம்மைப் போன்ற இவ்வளவு புத்திசாலிகளான பிள்ளைகளைப் பெற முடியும்” என்றார்.

(ஆதாரம்: ‘எனது சிந்தனைகள் - விவேகானந்தர்')