"ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் டெல்லி சட்டமன்றம் மக்களுக்கு விரோதமான பொதுப் பாதுகாப்பு மசோதா, தொழிற் தகராறு மசோதா போன்றவற்றை நிறைவேற்றுவதற்குக் கூடியது. அப்போது பகத்சிங்கும், பி.கே.தத்தும் சட்டமன்றத்தில் வெடிகுண்டு வீசியதால் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு குலை நடுக்கம் ஏற்பட்டது. அந்த வெடிகுண்டுச் சப்தம் பிரிட்டிஷாரின் செவிகளிலும் இடி போல் முழங்கியது” -என்று இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுப் படையில் புரட்சி வீராங்கனையாகச் செயல்பட்ட துர்கா தேவி கூறியுள்ளார்.

         Durga_Bhabhi   துர்காதேவி அலகாபாத்தில் 07.10.1907 அன்று பிறந்தார். அவரது தந்தை உத்திரப்பிரதேச மாநிலத்தில் மாவட்ட நீதிபதியாக பணிபுரிந்தார். துர்காதேவி ஒரு வயதுக் குழந்தையாக இருந்தபோதே தாயை இழந்துவிட்டார். அவரது அத்தையின் பாதுகாப்பில் வளர்ந்தார்.

            பதினொரு வயதான துர்கா தேவிக்கும், பகவதி சரண் வோராவுக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பயின்று இந்தி மொழியில் தேர்ச்சி பெற்றார்.

            துர்கா தேவியின் கணவர் பகவதி சரண்வோரா, அவரைத் தன்னோடு புரட்சிகர அரசியல் பணியில் ஈடுபடத் தூண்டினார்.

            ‘சாண்டர்ஸ்’ என்னும் வெள்ளை அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். அதில் தேடப்பட்டு வந்த பகத்சிங்கையும், ராஜகுருவையும் கல்கத்தாவுக்கு அழைத்துப் போய்விடுமாறு சுகதேவ் ஆலோசனை கூறியதை துர்காதேவி ஏற்றுக் கொண்டார். மறுநாள் அதிகாலை இரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் பகத்சிங் ஒரு இளம் அதிகாரியைப் போலவும், துர்கா தேவி அவரது மனைவி போலவும், ராஜகுரு வேலைக்காரனாகவும் பயணம் செய்தனர்.

 

            டெல்லி சட்டமன்றத்தில் வெடிகுண்டு வீசச் சென்றபோது பகத்சிங்கையும், பி.கே.தத்தையும் நெற்றியில் இரத்தத்தால் திலகமிட்டு வழி அனுப்பி வைத்தனர் துர்காதேவியும், சுசீலாவும். வெடிகுண்டு வீசியபின் பகத்சிங்கும், பி.கே.தத்தும் தாங்களாகவே முன்வந்து கைதானார்கள். அவர்களைக் காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். துர்காவும், புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த சுசிலாவும் ஒரு குதிரை வண்டியில் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று சிறை வாசலில் சந்தித்து வாழ்த்தினர்.

            துர்காதேவி துணிச்சல் மிக்கவராக விளங்கினார். எதற்கும் அஞ்சாமல் புரட்சிக்காரர்களுக்குப் பல வழிகளில் உதவியாகச் செயல்பட்டார். மார்வாரிப் பெண்ணைப் போல உடை அணிந்து கொண்டு சர்வசாதாரணமாக நவீன துப்பாக்கிகளைப் பிரயோகிப்பார். புரட்சி இயக்கத்துக்காக ஜெய்பூரிலிருந்து கான்பூருக்கு ஆயுதங்களைக் கடத்தினார்.

            துர்கா தேவியை லாகூர் சதிவழக்கு தொடர்பாக 1929 ஆம் ஆண்டு காவல் துறை வலைவீசித் தேடியது. ஆனால் துர்கா தேவி தப்பிச் சென்றுவிட்டார்; தலைமறைவாக இருந்து கொண்டே புரட்சிப் பணிகளில் ஈடுபட்டார்.

            துர்கா தேவியின் கணவர் புரட்சியாளர்களுக்காக வெடிகுண்டு தயாரித்துச் சோதிக்கும்போது திடீரென குண்டு வெடித்து தியாகியானார். அவரது இளம் மனைவி, புரட்சிப் பெண்ணாய்த் திகழ்ந்த துர்காதேவிக்கும் விவரம் தெரியாத இரண்டு வயது சின்னக் குழந்தை சாச்சிக்கும், விடுதலைப் புரட்சிக்கும் கூட பகவதி சரணின் அகால மரணம் பேரிழப்பானது. குருபிரசாத் என்பவரின் உதவியினால் துர்கா தேவியும், சுசீலாவும் 1930 ஆம் ஆண்டு அலகாபாத் கல்லூரி ஒன்றில் சேர்ந்து படித்தனர். ஆனால் கட்சியின் கட்டளையை ஏற்று மீண்டும் புரட்சிப் பணிகளில் ஈடுபட்டனர்.

லாகூர் சதி வழக்கிற்காகவும், டெல்லி மத்திய சட்டமன்றத்தில் வெடிகுண்டு வீசிய வழக்கிற்காகவும் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. துர்கா தேவி மகாத்மா காந்தியைச் சந்தித்து மூவரின் மரணத் தண்டனையை நீக்கம் செய்யத் தலையிடுமாறு கோரினார். ‘காந்தி - இர்வின் ஒப்பந்தம்’ - ஏற்பட்ட சூழலைப் பயன்படுத்தி காந்தி மனது வைத்தால் தூக்குத் தண்டனையைக் குறைக்க முடியுமென்று துர்கா தேவி நினைத்தார். துர்காவுடனான நீண்ட விவாதத்துக்குப் பிறகு புரட்சியாளர்கள் அனைவரும் வன்முறை வழிகளைக் கைவிட்டு காவல் துறையிடம் சரணடையுமாறு காந்தி ஆலோசனை கூறினார். ஆனால், அத்தகைய தற்கொலைப் பாதையில் செல்ல முடியாதென துர்கா தேவி காந்தியிடம் மறுத்துவிட்டார். இந்தச் சந்திப்பின்போது டெல்லி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரகுஹனந்தன் சரண் உடனிருந்தார்.

            மக்களுக்குக் கொடுமைகள் பல புரிந்த பஞ்சாப் மாநில கவர்னர் லார்டு ரூய்லியை சுட்டுக் கொல்ல புரட்சி இயக்கம் முடிவு செய்தது. கவர்னரைக் கொலை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவுக்கு பிருதிவிசிங் என்ற புரட்சியாளர் தலைவராக்கப்பட்டார். துர்கா தேவி ஒரு பார்சிப் பெண் வேடத்தில் கவர்னரை சந்திக்க வேண்டும். அவருடன் செல்லும் மற்றொருவர் கவர்னரைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்பது திட்டம். ஆனால் பிருதிவிசிங் கவர்னரைச் சுட்டுக் கொலை செய்ய ஏற்பாடுகள் எதையும் முறையாகச் செய்யவில்லை. கவர்னரை சுடுவதற்கு எந்த வாய்ப்புமில்லை. பிருதிவிசிங் துர்கா தேவியிடம் கவர்னரின் வெள்ளைக்கார சார்ஜென்ட்டையும், அவனது மனைவியையும் சுட்டுக் கொல்லுமாறு உத்தரவிட்டார்.

            தனக்கு இடப்பட்ட உத்தரவின்படி துர்கா தேவி சார்ஜென்டையும், அவனது மனைவியையும் துப்பாக்கியால் சுட்டார். இந்த நிகழ்ச்சி 09.10.1930 அன்று நடந்தது. கான்பூர் சென்று புரட்சித் தளபதி சந்திரசேகர் ஆசாத்தைச் சந்தித்தார். கவர்னரைக் கொல்லாமல் சம்பந்தமில்லாத சார்ஜென்ட்டையும், அவனது மனைவியையும் சுட்டதற்கு ஆசாத் மிகவும் கோபமடைந்தார். அவரது கோபம் துர்கா தேவி மீது அல்ல. சரியாக‌ திட்டமிடாத பிருதிவிசிங் மீது தான். துர்கா தேவி உறுதிமிக்க, தீரமிக்க புரட்சிப் போராளி என்பது ஆசாத்தின் கருத்தாகும்.

            சார்ஜென்ட் குடும்பம் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து காவல்துறைக்கு துர்கா தேவி மீது சந்தேகம் ஏற்பட்டது. துர்கா மற்றும் பதினான்கு பேர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதில் பன்னிரண்டு பேர் உடனே கைது செய்யப்பட்டனர். துர்கா தேவி, பிருதிவிசிங், சுகதேவ்ராஜ் ஆகிய மூவரும் தலைமறைவாகிவிட்டனர்.

            துர்கா தேவி 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லாகூரில் பகிரங்கமாக பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “காவலர்கள் என்னைத் தேடிக் கொண்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவசியமானால் என்னை இப்போது கூடக் கைது செய்து கொள்ளட்டும்”-என்று அறிவித்தார். 14.09.1932 அன்று கைது செய்யப்பட்டு பதினைந்து நாட்கள் சிறையிலடைக்கப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார். காவல் துறையினருக்கு துர்கா தேவியை வெளியே சுதந்திரமாக விட்டுவைக்க அச்சம். ஆகவே பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் நீதிமன்றத்தின் வாசலில் கைது செய்து லாகூர் சிறையில் அடைத்தனர். ஒரு ஆண்டு கழித்து துர்கா தேவி விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானதும் காசியாபாத் சென்று பியாரிலால் பெண்கள் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

            பகத்சிங்கின் புரட்சிப் படையில் துர்கா தேவி முன்னணி வீராங்கனையாகத் திகழ்ந்தார். அவரும் அவரது கணவரும் தங்கள் செல்வம் முழுவதையும் இந்திய விடுதலைக்கான புரட்சிப் போருக்குச் செலவிட்டனர். தன்னலமற்ற தியாகிகளாக விளங்கினர்.

            பின்னர் துர்கா தேவி காங்கிரஸ் கட்சியோடு தொடர்பு கொண்டு பணியாற்றினார். தனது கணவரும், சகதோழர்களும் மரணம் அடைந்த பிறகு தனிமை அவரை வாட்டியது. காங்கிரஸ் கட்சிப் பணியில் ஈடுபட்டு 1937 ஆம் ஆண்டு டெல்லி மாநிலத் தலைவரானார். 1938 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கியதற்காக கைது செய்யப்பட்டார். பின்பு தனது அரசியல் பணிகளை உத்திரப்பிரதேசத்திற்கு மாற்றினார்.

            சென்னை அடையார் மாண்டிசோரி கல்வி நிலையத்தில் 1939 ஆம் ஆண்டு பயிற்சி பெற்றார். லக்னோ நகரில் 1940 ஆம் ஆண்டு மாண்டிசோரி ஆரம்பப் பள்ளியை வெறும் நான்கு மாணவர்களைக் கொண்டு தொடங்கினார். சில ஆண்டுகளிலேயே அது பெரிய கல்லூரியாக வளர்ச்சியடைந்தது.

துர்கா தேவி த‌ன‌து 92வ‌து வ‌ய‌தில் 1999 அக்டோப‌ர் 15ம் தேதி இய‌ற்கை எய்தினார்.

 இந்திய விடுதலைப் புரட்சியின் வீர வரலாற்றில் துர்கா தேவியும் அவரது கணவர் பகவதி சரண்வோராவும் வானத்து வெள்ளி நட்சத்திரங்களைப் போல மின்னிப் பிரகாசிக்கின்றனர்.

- பி.தயாளன்