‘கலை, கலைக்காக அல்ல; மக்களுக்காக; மக்களின் வாழ்விலே மணம் பரப்புவதற்காக; வாழ்க்கையைச் செம்மைப்பட வைப்பதற்காக’ – என்ற கொள்கையைத் தனது இலட்சியமாகக் கொண்டவர் அவர் - வி.சா.காண்டேகர்! கொடுமைகளைக் கண்டு புரட்சி வீரர்கள் வாளை ஏந்திப் போராடுவார்கள்; மாறாக, எழுத்தாளர்கள் தங்கள் எழுதுகோலை ஏந்தி நாட்டு விடுதலைக்காக நாளும் போராட வேண்டும்’- என அறைகூவல் விடுத்தவர்! “இலக்கியம் என்பது மனிதத் தன்மையின் மேன்மையை உயர்த்த வேண்டும்; சமூகத்தில் நசுக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும், மிதிக்கப்பட்டும் அடிமையாகக் கிடக்கும் அடித்தட்டு மக்களை விழிப்படையச் செய்ய வேண்டும். இதுவே, எழுத்தாளர்களின் கடமை”- என்று அறிவித்தவர். வாழ்க்கையில், ‘தொண்டு’ ‘அன்பு’ முதலியவற்றைத் தமது நியதியாகக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியவர். சமூகத்திலுள்ள இடர்ப்பாடுகளைக் களையவும், கொடுமைகளைப் போக்கிடவும், நீதி கிடைக்கவும், சமூகம் முன்னேற்றமடைந்திடவும் தனது எழுதுகோலைச் சுழற்றியவர் வி.சா. காண்டேகர்.

வி.சா.காண்டேகர் மராத்திய மாநிலம் சங்கிலி என்னும் சிற்றூரில் 19.01.1898 ஆம் நாள் பிறந்தார். தனது ஊரில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். பள்ளியில் படிக்கும்போதே நாடகங்களிலும், விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு விளங்கினார். பள்ளிக் கல்வியை முடித்த பின்னர் பூனாவிலுள்ள பர்கூஸன் கல்லூரியில் சேர்ந்து படித்தார். தனது கல்விச் செலவுகளை ஈடுசெய்வதற்காகப் பிற மாணவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்தார்.

சிரோட்டு என்னும் சிற்றூரில் உள்ள பள்ளியில் 1920 ஆம் ஆண்டு ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அர்ப்பணிப்பு உணர்வுடன் மாணவர்களுக்குக் கல்வி புகட்டினார். ஆசிரியர் பணியை சமூகத் தொண்டாகக் கருதி பணிபுரிந்தார்.

 பெல்காம் மாவட்டத்தில் உள்ள ‘அசோகே’ என்னும் கிராமத்தைச் சேர்ந்த மனுதாய் என்பவரைத் தமது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார்.

 முதலில், நூல்விமர்சனம், அரசியல் திறனாய்வு, சமூக மாற்றம் குறித்த கட்டுரைகளை ‘வைனதேயே’ என்னும் வார இதழில் எழுதினார். மேலும், ‘கீரத்னாகர்’, ‘யஷ்வந்த்’, ‘மனோரஞ்சன்’ முதலிய இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். வி.சா. காண்டேகர் இருநூற்றுக்கும் அதிகமான சிறுகதைகள் எழுதியுள்ளார். அச்சிறுகதைகளைத் தொகுத்து இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிட்டு உள்ளார். அவரது சிறுகதைகள் அன்றைய சமூக நிலைமைகளையும், வாழ்க்கைப் பிரச்சனைகளையும் மையமாகக் கொண்டு, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தின. பொருளாதார ஏற்றத் தாழ்வு, - தீண்டாமை, - மூடநம்பிக்கைகள்- அகல வேண்டும் என்பதையும் தனது சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

பதினைந்து நாவல்களைப் படைத்துள்ளார். இவருடைய நாவல்கள் இலட்சியக் கொள்கை கொண்டவை; கற்பனை வளம் மிகுந்தவை, சொல்லழகுடன் ஏழைகளின் பால் அன்பும், இயற்கையிடம் நேசமும் காட்டுபவை.

வி.சா.காண்டேகரின் நூல்கள் குஜராத்தி, தமிழ், இந்தி, சிந்து, கன்னடம், மலையாளம் மற்றும் வங்காளம் போன்ற பிற இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. இந்தியப் பிறமொழிகளிலும், நன்றாக அறியப்பட்ட, ஒரே மராத்தி எழுத்தாளராக ஆரம்பம் முதல் சிறப்புற்று விளங்கினார்.

 நீதிக்கதைகள், நாடகம், இலக்கியத் திறனாய்வுகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், வரலாறு மற்றும் சுய சரிதை, கட்டுரைத் தொகுப்புகள் என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்து உள்ளார்.

 இவரது, ‘யயாதி’ என்ற நூலுக்கு ‘ஞானபீட’ விருதையும், (1974) ‘சாகித்திய அக்காதெமி’- விருதையும் (1960), ‘பத்ம பூஷன்’ விருது (1968)-யும் பெற்றுள்ளார்.

 வி.சா. காண்டேகர் திரைப்படங்களுக்குக் கதை எழுதி உள்ளார். அவர் கதை எழுதிய ‘சாயா’ என்ற திரைப்படத்திற்கு 1936 ஆம் ஆண்டு ‘கோகர் பரிசு’ வழங்கப்பட்டது. அவரது திரைக்கதைகள் ஏழை – பண‌க்காரர்களிடையே உள்ள ஏற்றத் தாழ்வு, மதுவினால் ஏற்படும் தீமைகள், கந்துவட்டிக்காரர்களின் கொடுமை முதலிய சமூகப் பிரச்சனைகளைச் சித்தரிக்கின்றன. இவரது இலக்கியத் தொண்டிற்காக கொல்ஹாப்பூரில் உள்ள சிவாஜி பல்கலைக் கழகம் `டாக்டர் பட்டம்’ அளித்துச் சிறப்பித்தது.

 வங்கத்தின் சிறந்த எழுத்தாளரான ‘சரத்சந்திர சட்டர்ஜி’யின் புதினங்களையும், ‘செஸ்டர்ன்’, ‘மில்னே’ மற்றும் ‘ரிச்சர்ட்கிஸ்’- ஆகியவர்களின் கட்டுரைகளையும் மாராத்திய மொழியில் பெயர்த்தார்.

 மராத்திய இலக்கியத்தில் காண்டேகரைப் போல, வேறு எந்த எழுத்தாளரும் நீதிக் கதைகள் பல எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 மராத்திய இலக்கியத்தின் நட்சத்திரமாக விளங்கிய வி.சா. காண்டேகர் 02.09.1976 ஆம் நாள் தமது எழுபத்து எட்டாவது வயதில் இயற்கை எய்தினார்.

 வி.சா. காண்டேகர் தனது நூல்களில் கீழ்க்கண்ட கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார்.

• “எழுத்தாளன், சமூக நோக்கில் படைக்கும் இலக்கியம் மட்டுமே சிறந்த இடத்தைப் பெற முடியும். இலக்கியத்திற்கு வழிகாட்டும் நெறிகளாக உண்மை, அழகு, நற்பண்பு, சமூக மேம்பாடு மற்றும் மனித நேயம் முதலியவை அமைய வேண்டும்”.

• “இந்த உலகில் மாளிகையிலுள்ள மனிதர்கள், தங்களின் நாய்களுக்கு உயர்தரமான உணவைப் பரிமாறுகிறார்கள். ஆனால், கிராமங்களில் குடிசைகளில் வாழும் கோடிக் கணக்கான மக்கள், பசியைப் போக்கிட, பாழுங் கஞ்சிக்குக் கூட வழி இல்லை. இந்தக், கேடுகெட்ட சமூகத்தில் நாய்களின் கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், குடிசைகளில் வாழும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதமில்லை. யாரும் அவர்கள் மீது அக்கறை கொள்வதும் இல்லை”.

• “கடந்த காலத்தை நினைத்து அழுவதைவிட, நிகழ்காலத்துடன் போராடுவதிலும், வருங்காலமாகிய மலையுச்சியில் ஏறுவதிலுந்தான் மனிதனுடைய உண்மையான வீரம் இருக்கிறது”.

• நமது சமூகத்தில், பெண் கடவுள்களைத் ‘தெய்வமாக’- வழிவடுகிறோம். ஆனால், நடைமுறையில் பெண்களைப் பலியிடுகிறோம், குருட்டு நம்பிக்கையுடன், இரக்கமற்ற சமூகக் கட்டுப்பாடுகளின் கீழே தள்ளி, பெண்களை நசுக்குகிறோம். வாழ்வதற்கான, உரிமை கூட பெண்களுக்கு மறுக்கப்படுகின்றது.”

• “ஒருவன் உழைத்து விளைவித்து, மற்றொருவன் சாப்பிடும் நிலை இப்பூமியில் இருக்கும் வரைக்கும் - கேளிக்கைக்காரர்களுக்கு மிகுதியாகவும், கூலிக்காரர்களுக்குக் குறைவாகவும் பணப்பங்கீடும், தானியப் பங்கீடும் நடைபெறும் வரைக்கும் - பெரிய மனிதர்கள், பாமர மக்களின் வயிற்றைவிடத் தங்கள் ‘பகாசுர நலனில்’ அக்கறை கொள்ளும் வரைக்கும் - வானத்துக் கருமுகில்கள் மழையாக மாறி எவ்வளவு ஒழுங்காக மண்ணில் பெய்தாலும், அதனால் இச்சமூகத்திற்கு எவ்விதப் பயனும் ஏற்படாது.”

• “பத்திரிக்கைகள், வாசகர்களிடம் மனிதத் தன்மையை வளர்க்க வேண்டும். ஆனால், ராசிபலன்களையும் சோதிடத்தையும் அச்சிட்டு மக்களை மூட நம்பிக்கையில் மூழ்கடிக்கின்றன. திரைப்பட நடிகைகள், நடிகர்களின் புகழ்பாடுகின்றன; இளைஞர்களின் சிந்தனையைச் சீரழித்து அவர்களின் தூய மனதைக் கெடுக்கின்றன. வேதாந்தங்களையும், போலிச் சாமியார்களின் அற்புதங்களையும் அன்றாடம் வெளியிட்டு, மக்களை அறிவிழக்கச் செய்கின்றன”.

• மது, மனிதனை மட்டுமல்ல, நீதி, நெறி, கடமை பற்றிய எல்லாக் கொள்கைகளையும், கொன்று அழிக்கின்றன.

 வி.சா. காண்டேகரின், இவ்வாறான எழுத்துக்கள் சமூக விடுதலையை நோக்கிப் பயணப்படுபவை! அவரது நூல்கள், மக்களை அறியாமை இருளிளிலிருந்து, வெளியேற்றிட வழிகாட்டும் வெளிச்ச விளக்குகள்! உண்மையான சுதந்திரம் பெற உதவுகிற, ‘விடுதலை’ தீபங்கள்! விடுதலையை வேண்டும் மனிதர்கள் பூமியில் உள்ளவரை, வி.சா. காண்டேகரின் பெயரும் அவர் படைத்த இலக்கியங்களும் அவர்களுக்குத் தேவைப்படும்! நிச்சயமாய் அதுவரை நிலைத்திருக்கும்!