அபுல் முஸப்பர் சிராஜூதின் முஹம்மது பஹதூர்ஷா என்பது இவரது இயற்பெயர். 1775 ஆம் ஆண்டு அக்டோபர் 24 செவ்வாய்க்கிழமை அக்பர்ஷாவுக்கும்-லால்பாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். 1837 ஆம்ஆண்டு பகதூர் ஷா டில்லி அரியணையில் ஏறினார்.

   "இருளுக்கு மத்தியில் மருள் உற்ற நெஞ்சுடன்
   எங்கும் குவிந்திடும் இங்கிலீஷ் சேனையை
   வெருள் உற்று முற்றிலும் வீறுற்றுத் தாக்கிட
   வெருள் உற்று முற்றிலும் வீறுற்றத் தாக்கிட
   வேங்கை போல் கொடியினைத்தாங்கிட்ட
   தோளோடு திரண்ட நீர் வருக இன்றே"

என்ற உறங்கிக் கிடந்த தேச விடுதலைப்போரில் பங்குகொள்ள அழைத்தவர் பஹதூர் ஷா.

 ஆங்கிலேயர்களை விரட்டுவதற்கு சுதேசி மன்னர்கள் யாவரும் முன்வருவாயிர்களாயின் என் ராஜ்ஜியத்தின் அதிகாரம் முழுவதையும் அந்த மன்னர்கள் அடங்கிய சபையிடம் தரத்தயாராக உள்ளேன் என வீர வேண்டுகோள் விடுத்தார். ஆனால் சுதேசி மன்னர்கள் பெரும்பாலும் ஆங்கிலேயருக்கு விசுவாசிகளாகவே இருந்தனர். அப்போது வெகுண்ட பஹதூர்ஷா தேசமக்களின் மனதில் நம்பிக்கை துளியளவாவது இருக்கும்வரை இந்தியாவின் வாள் லண்டனின் இருதயத்தைப் பிளந்து ஊடுருவிச்செல்லும் " என்று ச+ளுரைத்தார். ஆனாலும் மனம் தளராமல் இந்துக்களையும், முஸ்லீம்களையும் ஒருங்கிணைத்தார். இந்நிலையில் இந்து, முஸ்லீம் ஒற்றுமையை குலைக்கவேண்டும் என்று எண்ணி ஆங்கிலேயர்கள் ச+ழ்ச்சி செய்தனர். அச்ச+ழ்ச்சியில் அதிகாரி கெய்த் என்பவன் 1847 தன்னுடைய மனைவிக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறான். நாளை ஈத்பெருநாள், முஸ்லிம்கள் மாடுகளை குர்பான் கொடுப்பர். இந்துக்களின் புனித வழிபாட்டுக்குரிய மாடுகளை முஸ்லிம்கள் குர்பான் கொடுப்பதா? என்று இந்துக்கள் கொதித்து எழுந்து கலவரம் நடக்கும். அதுவே நல்ல செய்தியாக இருக்கும் என்று எழுதியுள்ளான். இதனைத்தெரிந்து கொண்ட மன்னர் பகதூர்ஷா உடனடியாக தன்னுடைய படைவீரர்களுக்கு நாளை பெருநாள் பண்டிகையின்போது ஆடுமட்டுமே வெட்ட வேண்டும். மாட்டை பலியிடக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பினார். அதன் பின்னர் மாடு அறுப்பது தவிர்க்கப்பட்டது. இதனால் இந்து-முஸ்லிம் கலவரம் நடக்கவில்லை.

 அதன் பின்னர் ராஜாக்கம், நவாப்க்கள், குறுநில மன்னர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஆங்கிலேயனுக்கு எதிராக போர்தொடுப்பது என முடிவு எடுக்கப்பட்டு நாளும் குறிக்கப்பட்டது. 1857 ஆம் ஆண்டு மே மாதம் 31ந்தேதி நாள் குறிக்கப்பட்டது. இம்முயற்சியில் பேகம் ஹஜ்ரத் மஹல், ஜான்சிராணி லட்சுமிபாய், மௌலவி அஹமதுல்லா, பேகம் ஹஜ்ரத் மஹல் ஆகியோர் ஈடுபட்டனர். ஆனால் துரதிருஷ்டவசமாக மே 10ந்தேதி ஆங்கிலேயர்களின் ச+ழ்ச்சியால் சிப்பாய் புரட்சி வெடித்தது. அதன் பின்னர் மன்னர் பகதூர்ஷாவை ஆங்கிலேய அரசு கைது செய்து ஜீனத் மாளிகையில் சிறைவைத்தார்கள். அப்போது பசிஏற்பட்ட போது ஆங்கிலேய அரசு இரண்டு மூடப்பட்ட பாத்திரங்களில் உணவை கொண்டு வந்தது. அதை திறந்து பார்த்தால் மன்னரின் இரண்டு பிள்ளைகளான மிர்ஜாமொஹல் மற்றொருவர் எகிலுருசுல்தான் தலைகள்.

 இத்தகைய போராளியை 49 பிரிட்டிஷ் பிரஜைகளைக் கொல்ல உடந்தையாக இருந்தார் என்று குற்றம் சாட்டி 1858 மார்ச் மாதம் நாடு கடத்தி பர்மா தலைநகர் ரங்கூன் சிறையில் பிரிட்டிஷார் காவலில் வைத்தனர். அப்போது மன்னர்களாக இருந்தவர்களுக்கு 600 உபகாரச்சம்பளம் வழங்கப்படும். என்னுடைய நாட்டிலிருந்துகொண்டு எனக்கே பிச்சை அளிக்கிறாயா எனக்கேட்டு அதனை வாங்க மறுத்துவிட்டார். சிறைச்சாலையில் எழுத பேனாவும், காகிதமும் கொடுக்க மறுக்கப்பட்டது. கவிஞரான பகதூர்ஷா மனம் நொந்தவாறு அங்கே கிடந்த கரிக்கொட்டையில் சிறையின் அறையில் கவிதை ஒன்று வடித்தார். அந்தக் கவிதை

  கண்ணொளியாய் யாருமெனை எண்ணவில்லை
  காதலனாய் ஓரிதயம் கருதவில்லை
  மண்ணிலோரு பிடியாக மாறிப்போனேன்.
  மாநிலத்தில் பயனில்லாப் பாவியானேன்

என்றும், பழைய தலைநகரம் கேட்பாரற்றுக்கிடந்தது. அதனைப்பற்றி பகதூர்ஷா பாடிய கவிதை

  நாடு கடத்தப்பட்ட சமயத்தில்
  அன்றொரு காலத்திலே-போகம்
  அத்தனையும் ஊறிப்பொங்கிடும் சொர்க்கமாய்
  நின்று தழைத்தது தில்லி
  இன்று குலைத்துவிட்டார்-அந்த
  இன்பக்குமாரியை சாந்தியின் தேவியை
  இன்று குலைத்து விட்டார்
  ஒன்றுமே இல்லையடா-அழிந்
  தொழிந்தன் சின்னங்கள் குமுறல்கள் அன்றியங்
  கொன்றுமே இல்லையடா

என இந்தியாவை நினைத்து கதறியழுதவறாக நாடு கடத்தப்பட்டார். இனிமேல் இந்தியாவில் மண்ணறையில் நமக்கு இடம் கிடைக்காது என்று எண்ணிய பகதூர்ஷா ஒரு பிடி மண்ணை தன்னுடைய கபன் துணியில் வைப்பதற்கு எடுத்துச்சென்று இறுதியில் 1862 நவம்பர் 7ந்தேதி ரங்கூனில் 92வது வயதில் காலமானார். இதனை கேள்விப்பட்ட நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் 1943 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ந்தேதி ரங்கூன் சென்று பகதூர்ஷா சமாதியில் இருந்த ஒரு பிடி மண்ணை எடுத்து, தமக்கு மக்கள் அளித்த தங்கவாளின் பிடியில் அடைத்து ஓங்கிப்பிடித்தவராக,

  நம் வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும் இம்மகானிடம் இருந்தது போல் தேசபக்தியும் அணுவளவாவது இருக்கும் வரையில், இந்துஸ்தான் மிகக் கூர்மையாக இருப்பதுடன். ஒரு நாள் லண்டனின் வாசற்படியையும் தட்டும் என பகதூர்ஷாவின் பொன்மொழியை வழிமொழிந்தார். மொகலாய சாம்ராஜ்யம் இவரோடு சமாதியுடன் சமாதியானது. இந்தியாவின் கடைசி மன்னர் சமாதி பர்மாவிலும், பர்மாவின் கடைசி மன்னர் சமாதி இந்தியாவிலும் அமைந்தது வியப்பின் சரித்திக்குறியீடுதான்.

 லெப்டினென்ட் ராபர்ட்-பிற்காலத்தில் பீல்டு மார்ஷல் ராபர்ட் பிரபு என்பவன் தாயாருக்கு எழுதிய கடிதத்தில் எவ்வளவு சுதேசிகளைப் பீரங்கி வாயில் வைத்து சுட்டுக்கொன்றான் என்பதை எழுதியிருக்கிறான். ஒருமனிதன், ஜனங்களை பல வழிகளில் கொன்றதற்காகப் பெருமையடித்துக்கொண்டான். சிலருடைய தாடிகளையும், சிலருடைய குடுமிகளையும் மாமரங்களில் அவர்கள் சாகும் வரை கட்டித் தொங்கவிட்டிருக்கிறான் என பெருமையோடு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளான்.

 1858 ஆம் ஆண்டு பிரிட்டீஷ் பார்லிமெண்டில் கொண்டு வரப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் மொகலாய ஆட்சி முடிவுக்குவர, இந்தியா பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் போனது. பாபர் சக்ரவர்த்தியின் முகலாய அரசு பகதூர் ஷாவுடன் முற்றுப்பெறுகிறது.

ஆதார நூல்கள்:

1.இந்திய சுதந்திரப்போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு, சேக்தாவூத், தஞ்சாவூர்

2.விடுதலைப்போரில் முஸ்லிம்கள், வி.என்.சாமி, மதுரை

3.மக்கள் தாரகை, மறைக்கப்பட்ட வரலாறுகளும், மறைக்கப்படும் உண்மைகளும், ஆகஸ்ட் மாத இதழ், சென்னை

4.இந்திய வரலாறும், மறைக்கப்பட்ட உண்மைகளும், பிலாலியா பதிப்பகம், சென்னை.

- வைகை அனிஷ்