keeranur muthu

கீரனூர் முத்து (15.1.1943 – 27.1.1965)

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் நஞ்சுண்டு மாண்ட முதல் வீரர்

இந்தித் திணிப்பை இனியாவது நிறுத்துங்கள்" என முதலமைச்சர் எம். பக்தவச்சலத்திற்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு, நஞ்சுண்டு உயிர் துறந்தார் கீரனூர் முத்து.

அறந்தாங்கி சிம்மச்சுனையக்காடு இவர் பிறந்த ஊர்! 15.1.1943இல் பிறந்தவர். உயிர் துறந்தபோது இருபத்திரண்டு வயது.

புதுக்கோட்டை கீரனூரில் உள்ள உணவு விடுதியில் பணியாற்றி வந்தார். அதனால் "கீரனூர்- முத்து" ஆனார்.

சின்னச்சாமி, சிவலிங்கம், அரங்கநாதன் எனத் தமிழுக்காக உயிரிழப்போர் செய்தி இவரைக் கவலைக்குள்ளாக்கியது. அவர்களின் ஈக வாழ்வை இவர் வாய் ஓயாமல் பேசியபடி இருந்துள்ளார்.

தமிழுக்காகத் தானும் ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணியவர், இப்படியொரு முடிவை எடுத்துவிட்டார்.

உயிர் நீங்கிய அவர் உடலில், பாதுகாப்பாய் இரு கடிதங்கள் இருந்தன. இந்தியைத் திணிப்பதைக் கண்டித்து முதலமைச்சருக்கு எழுதிய கடிதம் ஒன்று. "தமிழ் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பாடுபடுங்கள்" என வலியுறுத்தி அறிஞர் அண்ணாவுக்கு எழுதிய கடிதம் இன்னொன்று!

கீரனூர் முத்து மனத்தில் சுமந்த துயரத்தை, அவர் மடியில் சுமந்த கடிதங்கள் காட்டின.  

1938 - ஊர்வலப் பாட்டு

செந்தமிழைக் காப்பதற்குச்

  சேனை ஒன்று தேவை - பெருஞ்

  சேனை ஒன்று தேவை.

திரள்திரளாய்ச் சேர்ந்திடுவீர்

  புரிவம் நல்ல சேவை.

இந்திதனைத் தமிழரிடம்

   ஏன் புகுத்த வேண்டும்? - இவர்

   ஏன் புகுத்த வேண்டும்?

எம்முயிரில் நஞ்சுதனை

   ஏன்கலக்க வேண்டும்?

பைந்தமிழை மாய்ப்பதற்க்கே

  பகைமுளைத்த திங்கே! - கொடும்

  பகைமுளைத்த திங்கே!

பாதகரை விட்டுவைத்தால்

  தமிழர்திறம் எங்கே?

சந் தத்தமிழ் மொழியிழந்தால்

   தமிழர் நிலை தளரும் - நல்ல

   தமிழர் நிலை தளரும்

தமிழர்திறம் காட்டிடுவோம்

   முழங்கிடுவீர் முரசம்!

- பாவேந்தர் பாரதிதாசன்

- புலவர் செந்தலை ந. கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை

         (தொடரும்...)