அரங்கசாமி 1884-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி பிறந்தார். அப்போதைய பிரெஞ்சியப் பகுதியான காரைக்காலைச் சேர்ந்த திருநள்ளாறு வட்டம், இளையான்குடி என்னும் சிற்றூரில் வாழ்ந்தார்.

இந்திய விடுதலைப் போராட்டத்திலும், பிரெஞ்சு இந்திய விடுதலைப் போராட்டத்திலும் பெரும் பங்கு கொண்டார். பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்து பல போராட்டங்களை தலைமையேற்று நடத்தினார்.

அரங்கசாமி திருநள்ளாறு நகர்மன்றத் தலைவராக பல ஆண்டுகள் பதவி வகித்து சிறப்பாக நிர்வாகம் செய்தார். தந்தை பெரியாரின் சாதி ஒழிப்புக் கருத்துக்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டு தமது இல்லத்திலேயே தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கு சமபந்தி உணவளித்தார்.

மணியாச்சி இரயில் நிலையத்தில் ஆஷ்துரையைச் சுட்டுக்கொன்ற வீரவாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கி அனுப்பி உதவியவர் இப்பெருமகனாரே என்ற செவிவழிச் செய்தியும் உண்டு.

அரங்கசாமி, விடுதலைப் போராட்ட வீர்களுடன் இணைந்து ‘பிரெஞ்சிந்தியர் குடியரசுப் பத்திரிக்கை’ என்ற பெயரில் இதழ் ஒன்றை நடத்தினார். அந்த இதழில் விடுதலைப் போராட்டம் குறித்த செய்திகளோடு, தமிழ்மொழி பற்றிய கட்டுரைகளையும் வெளியிட்டார். குறிப்பாக தமிழ்மொழி பற்றியும், தமிழிலக்கணம் பற்றியும் அரங்கசாமி பல அரிய கட்டுரைகளை எழுதினார். இக்கட்டுரைகளை ‘குடியரசு தமிழ் ஆரம்ப இலக்கணம்’ என்னும் பெயரில் நூலாக்கி 1944-ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்நூலின் முகவுரையில் தமிழ்மொழியில் வடமொழிக் கலப்புப் பற்றிய கருத்தினைப் பதிவு செய்துள்ளார். தொல்காப்பியர் காலத்திலேயே வட சொற் கலப்பு ஏற்பட்டுவிட்டது எனக் கூறுகிறார்.

‘பிழைகளைத் திருத்தி அமைப்பதுவே நமது இவ்வாரம்ப இலக்கணத்தின் நோக்கம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழின் ஒலிப்புமுறை நகர, னகர பேதங்கள், லகர, ளகர பேதங்கள், ழகர, னகர பேதங்கள், மயக்கம் (மெய்ம் மயக்கம்), முதலிடை, கடையிடை நிலை எழுத்துகள், புணர்ச்சி என்ற தலைப்புகளில் எடுத்துக்காட்டுகளுடன் தமது நூலில் பல செய்திகளை விளக்கிக் கூறியுள்ளார். இந்நூல் சிறிதாயினும், முறையாக மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுமானால் மொழிப் பிழைகள் குறைந்து பிழையின்றி எழுதும் நிலை உருவாகும் என்பது திண்ணம்.

அரங்கசாமி , தமது வாழ்நாள் முழுவதும் விடுதலைப் போராட்டத்திலும், சமுதாயப் பணிகளிலும் ஈடுபட்டு உழைத்தார். மேலும், தமிழ்மொழி மீது கொண்டிருந்த நீங்காத அன்பினாலும், பற்றினாலும் தாம் நடத்திய இதழில் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கான கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.

அரங்கசாமி எழுதி வெளியிட்ட ‘குடியரசு தமிழ் ஆரம்ப இலக்கணம்’ என்னும் நூல் தற்போது தமிழகத்தில் கிடைத்தற்கரியதாய் இருப்பதால், தமிழக அரசும், தமிழ்ப் பல்கலைக் கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும், இதுபோன்று மறைந்து கிடக்கும் தமிழ் நூல்களை வெளியிடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

விடுதலைக்காகவும், தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும் அயராமல் உழைத்த அரங்கசாமி 1943-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ஆம் தேதி மறைந்தார்.