சென்னை எஸ்.பி.ஜி. உயர்நிலைப் பள்ளியில் பேட்ஸ் என்ற தமிழறிந்த ஆங்கிலேயர் தலைமையாசிரியராக இருந்தார். அப்பள்ளியில் தமிழாசிரியராக கா.நமச்சிவ முதலியார் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒரு நாள் தலைமையாசிரியரைச் சந்தித்து, “தமிழ் கற்கும் மாணவர்களுக்கு முறையான பாட நூல்கள் வெளிவரவில்லை. இல்லையெனக் கூறிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை. எனவே, பாடநூல்களை நாமே உருவாக்கினால் என்னவென மனத்துள் எழுந்தது ஓர் எண்ணம். ஆசிரியப்பணி புரிவோர் பாட நூல்கள் எழுதக்கூடாது எனத் தடையொன்று உள்ளது. எனவே, ஆசிரியப் பணியை விட்டு விடலாமா? பாட நூல்கள் எழுதிடலாமா? என எனது மனம் குழப்பத்தில் உள்ளது” எனத் தமிழாசிரியர் நமச்சிவாய முதலியார் தெரிவித்தார்.

“நீங்கள் ஆசிரியப் பணியிலும் இருக்கலாம், பாட நூல்களும் எழுதலாம், நிர்வாகத்திடம் உங்களுக்காக சிறப்பு அனுமதி பெற்றுத் தருகிறேன்” என்று தலைமையாசிரியர் பேட்ஸ் கூறினார். தாம் கூறியது போல் நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதி பெற்று பாடநூல்கள் எழுத நமச்சிவாய முதலியாரை ஊக்கப்படுத்தினார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில், தமிழ் கற்பிக்க கீழ் வகுப்பு முதல் மேல் வகுப்பு வரை படிமுறையாகப் பாட நூல்களை எழுதி வெளியிட்டார். அவரது பாட நூல்கள் ஒப்பற்றவை எனப் பாராட்டைப் பெற்றன. உயர்நிலைப் பாட நூல்கள் வரை எழுதியளித்தார்.

உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி, சென்னை ‘சிங்கிலர்’ கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர், ராணி மேரிக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, 1917 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்க் குழுவில் தலைமைத் தேர்வாளராக நியமனம் செய்யப்பட்டார். பின்னர் 1920 ஆம் ஆண்டு முதல் 1934 ஆம் ஆண்டுவரை மாநிலக் கல்விக் கழகத்தின் தலைவராகச் செயல்பட்டார். அப்போது, ‘தமிழ் வித்துவான்’ தேர்வை முதன் முதலாக ஏற்படுத்தி, தமிழ் கற்றோர் பல்கலைக் கழகப் பட்டம் பெறுகிற வாய்ப்பை ஏற்படுத்தினார். அதற்கு முன், வடமொழி பயில்வோருக்கு மட்டுமே பல்கலைக் கழகத் தேர்வு இருந்தது. மதுரைத் தமிழ்ச் சங்கமும், திருவையாற்றுக் கல்லூரியும் தமிழ்த் தேர்வுகளை நடத்தினாலும், தமிழ் கற்றுத் தேர்வெழுதிப் பல்கலைக் கழகப் பட்டம் பெற வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது. அந்த அவல நிலையை மாற்றியமைத்து, தமிழ் கற்றுத் தேர்வெழுதியவர்களும் ‘வித்துவான்’ பட்டம் பெறவும், பல்கலைக் கழகப் பட்டம் பெறவும் வாய்ப்பை ஏற்படுத்தினார். மேலும், பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமனம் பெறவும், ஊதிய உயர்வு வழங்கிடவும் பாடுபட்டார் நமச்சிவாய முதலியார்.

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் என்னும் ஊரில் இராமசாமி முதலியார் அகிலாண்டவல்லி வாழ்விணையருக்கு 1876 ஆம் ஆண்டு பிறந்தார்.

தமது தந்தையாரிடம் தொடக்கக் கல்வியைப் பயின்றார். பின்னர் பள்ளிக் கல்வியை முடித்து, சென்னை சென்று, கிறித்துவ தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். தமிழ்க் கல்வியில் நாட்டம் கொண்டு, அப்போது சென்னையில் தமிழ்ப் பெரும் புலவராக விளங்கிய சண்முகம்பிள்ளையிடம் தமிழ்ப் பாடம் கற்றுத் தேர்ந்தார். மாணவர்கள் தமிழ் இலக்கணத்தை விரும்பி கற்கும் வகையில் ‘தமிழ்ச் சிற்றிலக்கணம்’ எனும் அரிய நூலை எழுதி வெளியிட்டார்.

‘ஆத்திசூடி’ ‘நல்வழி’, ‘வாக்குண்டாம்’ முதலாகப் பல நூல்களுக்கு உரையெழுதி வெளியிட்டார். தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தையும், சொல்லதிகாரத்தையும் இளம்பூரணர் உரையுடன் பதிப்பித்தார். ‘தணிகைப் புராணம்’ ‘தஞ்சை வாணன் கோவை’, ‘இறையனார் களவியல்’ முதலிய நூல்களைத் திருத்தப் பதிப்பாக வெளியிட்டார்.

‘ஜனகன்’, ‘தேசிங்குராசன்’ என்னும் உரைநடை நூல்களையும், ‘கீசகன்’, ‘பிருதிவிராசன்’ முதலிய நாடகங்களையும் இயற்றித் தமிழுலகுக்கு அளித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கென ‘நல்லாசிரியன்’ என்னும் திங்கள் இதழைத் தொடங்கி பதினைந்து ஆண்டுகள் பயனுற நடத்தினார்.

“பொங்குக பொங்கல் பொங்குக எங்கணும்!
பொங்குக பொங்கல்! இன்பமே எய்துக!”

எனக் கவிதை பாடி, பொங்கல் விழாவின் சிறப்பை கீழ்க்கண்டவாறு எடுத்தியம்புகிறார்.

“தமிழ் மக்களிடையே பல்வேறு விழாக்கள் சமயச் சார்பானவை, வடமொழி வழி எழுந்த நம்பிக்கைகளையும் வழக்குகளையும் ஒட்டியே நடைபெற்று வந்தன. தமிழர் மரபோடும், இயற்கை நெறியோடும், உழவுத் தொழிலோடும், வேளாண்மைப் பண்போடும் விழாக்கள் நடத்தப்பெறவில்லை. வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவரும் தாய் மொழிப் பற்றும் தமிழ்மொழித் தெளிவும் கொள்ளுதற்கு ‘பொங்கல் விழா’ ஏற்ற விழா” என்றார்.

மேலும், “பொங்கல் விழாவில் தமிழரின் பெருவாழ்வை, சங்கத் தமிழ் இலக்கிய மாட்சியை, தமிழர்களிடையே வழிவழி வந்த தமிழிசையை, தமிழர்கள் பயின்ற கூத்தை விளக்கியுரைத்தும், பாடிக்கேட்டும், ஆடிக் கண்டும் மக்கள் அறிந்து மகிழ வேண்டும்” என வலியுறுத்தினார்.

அவரது முயற்சியால், பழந்தமிழ்ப் பொங்கல் விழா, உழவரும் பிறரும் மகிழ்ந்திடும் கொண்டாட்டமாக, முத்தமிழ் முழங்கும் தமிழர் விழாவாக வண்ணங்கொண்டது. நமச்சிவாய முதலியார் துவக்கி வைத்த தமிழர் திருநாளே, தமிழர் எழுச்சிக்கு உரமூட்டும் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

‘தமிழ்ப் புலவர் சங்கம்’ என்ற அமைப்பை தோற்றுவித்து அதன் வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.

தமிழுக்குத் தொண்டு செய்து வாழ்ந்தார். அதனால், ‘தமிழ்ப் பேராசான்’ எனத் தமிழகம் போற்றிப் பாராட்டியது. நமச்சிவாய முதலியார் தமது அறுபத்தொன்றாம் வயதில் 1937 ஆம் ஆண்டு மறைந்தார். அவர் மறைந்தாலும் அவரது தமிழ்ப் பணி தமிழர்களின் நெஞ்சத்தில் நிலைத்து நிற்கும்.