பன்மொழிப் புலமையாளர், சொல்லாய்வில் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத அளவில் திகழ்ந்தவர். தமிழின் விடுதலைக்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர். மொழியியற் சிந்தனையாளர், உலகத் தமிழ்க் கழகம் கண்டவர். அவர்தான் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆவார்.

 தேவநேயன் என்ற இயற்பெயர் கொண்ட பாவாணர் சங்கரன்கோயில் அருகில் உள்ள பனைவடலி என்னும் சிற்றூரில் ஞானமுத்து, பரிபூரணம் தம்பதியருக்கு பத்தாவது குழந்தையாக 1902ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் நாள் பிறந்தார். பாவாணர் ஆம்பூரில் எட்டாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். பாளையங்கோட்டைத் திருச்சபை விடையூழியக் கழக உயர்நிலைப்பள்ளியில் இறுதி வகுப்பு வரை பயின்றார்.

 பள்ளியில் படிக்கும்போது படிப்பில் சிறந்த மாணவராக விளங்கினார். மேலும் பாளையங்கோட்டையில் மேல்வகுப்புக் கல்வி பெற்றார். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முறம்பு என்னும் சியோன் மலையில் உயர்தரப்பள்ளியில் முதன் முதலாக ஆசிரியராக பணிபுரிந்தார். பின்பு ஆம்பூர் பள்ளியில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

 1924-ல் பண்டிதத் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதியவர்களில் பாவாணர் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 சென்னையில் பெரம்பூர் கலவல கண்ணனார் உயர்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி கெல்லற்று உயர்நிலைப்பள்ளி, தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரி உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் உதவித் தமிழாசிரியராகவும், தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

 “ஒப்பியன் மொழி நூல் முதன்மடலம் திராவிடம் முதற்பாகம்” என்ற நூலை 1940-ல் பாவாணர் படைத்தார். திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச்சங்கம் நடத்திய தனித்தமிழ் புலவர் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். பின்பு சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் தேர்வும், பி.ஓ.எல் என்னும் கீழ்க்கலைத் தேர்வும் எழுதி வெற்றி பெற்றார்.

 மன்னார்குடி பின்லேக் கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் ஆறாண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். மன்னார்குடியில் பணிபுரிந்து கொண்டிருந்த போதுதான் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக தொடர்பும் பாவாணருக்கு ஏற்பட்டது. மொழியாராய்ச்சி என்ற கட்டுரை நூல் வெளியிடப்பட்டது. மன்னார்குடியிலிருக்கும்போது இசைத்தமிழ் மீது ஈடுபாடு ஏற்பட்டு இசைப்பா இயற்றுவதிலும் இசைக்கருவி இயக்குவதிலும் தேர்ச்சி பெற்றார்.

 மன்னார்குடியிலிருந்து வெளியேறிய பாவாணர் திருச்சிராப்பள்ளி பிசப்பு ஈபர் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார். திருச்சியில் பாவாணர் பணியாற்றியபோதுதான் பன்மொழிகள் பயிலுவதற்கும், நூல்கள் எழுதவதற்கும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

 1937-ல் இந்தி கட்டாயப் பாடமாக புகுத்தப்பட்டபோது பாவாணர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பெரும்பங்கு கொண்டார்.

 மாணவர்களுக்குப் பயன்படும் கட்டுரை நூல்களும், இலக்கண நூல்களும் எழுதி வெளியிட்டார். வேர்ச்சொற் சுவடி என்ற நூலையும் எழுதி வெளியிட்டார்.

 பணியாற்றிக் கொண்டே திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே என்ற இடுநூலை (thesis) எழுதிப் பல்கலைக் கழகத்தில் எம்.ஓ.எல். பட்டத்திற்காக ஒப்படைத்தார். ஆனால், அந்நூல் பல்கலைக்கழகத்தால் தள்ளப்பட்டது. அப்போது பாவாணர் இனிமேல் இந்தியாவிற்குள் எனக்கு ஒரு தேர்வும் இல்லை ஆகையால் எனது நூல்களையெல்லாம் ஒவ்வொன்றாய் வெளியிடப் போகிறேன் என முடிவெடுத்து செயல்பட்டார்.

 பின்பு சேலம் நகராண்மைக் கல்லூரியில் பாவாணர் பணியில் சேர்ந்தார். சேலத்தில் பாவாணரிடம் பயின்ற மாணவர் தான் பின்னாளைய தென்மொழியாசிரியரும், உலகத் தமிழினக் கழக செயலாளருமான பெருஞ்சித்தரனார். சேலத்தில் பணி செய்த காலத்தில் பாவாணர் தாமே பயின்று தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

 அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் திராவிட மொழியாராய்ச்சித் துறையில் துணைப் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பாவாணர் பணிபுரியும்போது மொழி நூற் கல்வியும் ஆராய்ச்சியும் எனக்கு இன்பமான பாடத்துறைகள். அதனால் நான் இன்று பெறும் சம்பளம் கரும்பு தின்னக் கூலியாகும். ஆதலால் வேலை செய்யாது காலத்தைச் கழிக்கவோ வேற வேலை செய்யவோ இயலவே இயலாது என்று கூறினார்.

 பாவாணரின் சம காலத்தவர்கள் மாவட்ட ஆட்சியர்களாக, வங்கி அரிகாரிகளாக, அரசியல் கட்சித் தலைவர்களாக உயர்ந்தார்கள். ஆனால் பாவாணர் எப்படியும் வாழலாம் என்பதற்கு மாறாக இப்படித்தான் வாழவேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்தவர். “எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு” என்ற கொள்கையுடன் வாழ்ந்தவர்.

  பாவாணர் அவர்கள் எசுத்தர் என்ற பெண்மணியை மணந்தார். அவர்களுக்கு மணவாளதாசன் என்ற மகன் பிறந்தார். குழந்தைக்கு ஒரு வயதாகும் முன்னரே எசுத்தர் இயற்கை எய்திவிட்டார். பின்பு தமது அக்கா மகள் நேசமணி என்ற பெண்மணியை துணைவியராக ஏற்றார். பாவாணருக்கு நச்சனார்க்கினிய நம்பி, சிலுவையை வென்ற செல்வராயன், அருங்கலை வல்லான், அடியார்க்கு நல்லான், மடந்தவிர்த்த மங்கையர்கரசி, மணிமன்றவாணன் ஆகிய குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் படித்து பல நிலைகளில் பணியாற்றி வருகின்றனர். 27-10-1963-ல் நேசமணி அம்மையார் இயற்கை எய்தினார்.

 பாவாணர் தனித் தமிழ்க் கழகம், தென்மொழி, உலகத் தமிழ்க் கழகம், பாவாணர் நூல் வெளியீட்டுக் குழு, செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி முயற்சி – ஆகியவைகளைத் தோற்றுவித்தார்.

 தென்மொழி இதழின் சிறப்பாசிரியராகப் பணியாற்றினார். 1965-ல் இந்தி எதிர்ப்புப் போர் நடைபெற்ற போது தென்மொழி இதழில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் அரசினால் ஊன்றி கவனிக்கப்பட்டது. அதனால் அரசின் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இந்தியப் பாதுகாப்பு சட்டப்படி வழக்கு தொடரப்பட்டது. பாவாணர் மீதும் வழக்கு போடப்பட்டது. ஆனால் பெருஞ்சித்தனார் எழுதப்பட்ட கட்டுரைகளுக்கு பொறுப்பேற்றதால் பாவாணர் பெயர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது.

 பாவாணர் அவர்கள் அரசியல் கட்சித்தலைவர்கள் தமிழர்களிடம் ஏற்பட்ட தமிழ்ப்பற்றைத் தங்கள் கட்சியின் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். உண்மையில் தமிழை வளர்க்கும் பணியில் அவர்கள் ஈடுபடவில்லை என்று கருதினார். உலகத் தமிழ்ச் கழகத்தினை உருவாக்கி செயல்படுத்தினார். தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்டார்.

 பாவாணர் அவர்கள்

 தமிழ் வரலாறு
 வடமொழி வரலாறு
 பண்டைத்தமிழ் நாகரிகமும் பண்பாடும்
 The  Primary Classical Language of the works என்ற ஆங்கில நூல்
 திருக்குறன் தமிழ் மரபுரை
 இந்தியாவில் தமிழ் எவ்வாறு கெடும்
 தமிழர் மதம்
 மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை
 தமிழ் வரலாறு

 ஆகிய நூல்களைப் படைத்துள்ளார். சுமார் 50-க்கும் மேற்பட்ட தமிழ் ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார் பாவாணர் அவர்கள். மேலும் பழமொழிகள் பதிமூன்றாயிரம் தொகுத்துள்ளார் பாவாணர். இலக்கணத்தில் இணை மொழிகள், கட்டுரை வரையல், தமிழ்நாட்டு விளையாட்டுகள் ஆகியவைகள் குறித்தும் நூல்கள் எழுதியுள்ளார்.

 அகரமுதலித்திட்டம் தொடங்கினார். அரசு பாவாணரைப் புரிந்துகொண்டு அவரது அறிவை பயன்படுத்திக்கொள்ள முன்வரவில்லை. இருப்பினும் தமிழ் அறிஞர் பெருமக்களின் முயற்சியினால் 8-5-74-ல் தமிழ்நாடு அரசால் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநராக பாவாணர் அமர்த்தப்பட்டார்.

 சேலம் தமிழ்ப் பேரவை பாவாணரின் தமிழ்த் தொண்டினைப் பாராட்டி “திராவிட மொழி நூல் ஞாயிறு” என்று பட்டமும் வெள்ளித்தட்டும் வழங்கிப் பாராட்டியது.

 மதுரை தமிழ் வளர்ச்சிக் கழகம் பாவாணருக்கு “தமிழ்ப் பெருங்காவலர்” என்னும் விருது வழங்கி சிறப்பித்து பறம்புமலைப் பாரதி விழாவில் பாவாணருக்கு “செந்தமிழ் ஞாயிறு” என்னும் சிறப்பு விருது வழங்கப்பெற்றது.

 தமிழக அரசு 1979-ம் ஆண்டு பாவாணருக்கு “செந்தமிழ்ச் செல்வர்” என்னும் பட்டம் அளித்து சிறப்பித்தது.

 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பாவாணர் அறக்கட்டளை, பெங்களூர் பாவாணர் பதிப்பகம், பாவாணர் ஆராய்ச்சி நூலகம் மதுரை, பாவாணர் பதிப்பகம், பாவாணர் மைய நூலகம் சென்னை முதலியவைகள் பாவாணர் கருத்துக்களையும், புகழையும் வெளிப்படுத்தும் மையங்களாக விளங்குகின்றன.

 ஆண்டில் ஒரு நாளைப் பெயர் மாற்றத் திருநாள் என்று ஆண்டுதோறும் கொண்டாடி, பிறமொழிப் பெற்றவரெல்லாம் அந்நாளில் தம் பெயரைத் தனித் தமிழ்ப் பெயராக மாற்றிக்கொள்ள வேண்டும். அதை இல்லத்தில் விழாவாகக் கொண்டாடிடவேண்டும் எனத் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் பாவாணர் அவர்கள்.

 விளம்பரம் தேடி அலையும் இந்த உலகில், என்னைப் பற்றி விளம்பரம் ஒன்றும் வேண்டேன். இது எனக்கு மிக மிக வெறுப்பானது. மலர் வெளியிடுதல் வேண்டா, பிறந்த நாள் கொண்டாடும் வழக்கம் இல்லை என புகழும் வேண்டாப் புகழாளராக பாவாணர் விளங்கினார்.

    பரிசச் சீட்டின் தீமைகள்

1) உழைப்பின்றி ஒருவன் திடுமெனச் செல்வனாதல்
2) மக்கட்குப் பேராசை உண்டாதல்.
3) செல்வரும் பிற நாட்டாரும் பரிசு பெறல்
4) பரிசு பெற்றவன் மீது அக்கம் பக்கத்தார்க்கு பொறாமை ஏற்படுதல்.
5) பெரும்பாலும் ஏழை மக்கள் வாழ்நாள் முழுவதும் பரிசு பெறாமை.
6) ஒரு சிலர் சம்பளம் முழுவதையும் இழந்துவிடுகின்றனர்.
7) ஒருவர் பிறர் உழைப்பின் பலனை அவர் விருப்பத்திற்கு மாறாக நுகர்தல்
8) சீட்டுத் தொலைந்தால் பரிசு பெற வழியின்மை
9) வீணாக ஏக்கம் கொள்பாரின் வினை கெடுதல்
10) ஒழுக்கங்கெட்டவரையும் ஊக்குதல்.

“பரிசச் சீட்டு வருமானத்தைக் கொண்டு அறப்பணி செய்யப்பட்டதெனின் கொள்ளையடித்த பொருளைக் கொண்டும் அது செய்யலாம் என்க” என வலியுறுத்தினார்.

 மக்கள் தொகை பெருக்கத்தைப் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார்.

 சாதிப்பட்டம் நீக்கப்படவேண்டும், கலப்பு மணம் ஊக்குவிக்கப்படவேண்டும், வீண் சடங்குகளை விலக்க வேண்டும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு கட்டிக் கொடுக்கும் குடியிருப்புகளும் ஊரினின்று நீங்கியிராது ஏனைய வகுப்பார் குடியிருப்புகளோடு சேர்ந்தே இருத்தல் வேண்டும். வர்ண வேறுபாட்டை ஒழித்திடவேண்டும் ஆகிய கொள்கைகளை தமிழக மக்கள் பின்பற்றிட வேண்டுமென வலியுறுத்தினார்.

 வேலை இன்மையிலும், விளைவு இன்மையாலும் நேர்ந்த உணவின்மையே களவிற்கும், கொள்ளைக்கும் காரணமாகிறது என்றார்.

 சொல்பவரைப் பாராமல் சொல்லும் செய்தியைப் பார்த்து நடக்கும் நிலை உண்டானால் உலகம் எத்தனை எத்தனை நலங்களை எய்திருக்கும். தீமைகளை விட்டு ஒழித்திருக்கும் என்றார் பாவாணர்.

 15-1-1981 நள்ளிரவு பாவாணர் அவர்கள் இயற்கை எய்தினார்.

 பாவாணரின் அடிச்சுவட்டில் தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் பாடு படுவதே நாம் அவருக்கு செய்யும் மரியாதையாகும்.