தேனி மாவட்டம், கம்பம் குளக்காரன் தெருவைச் சேர்ந்த கம்பம் நைனார் முஹமது (எ) வெள்ளையத்தா சுதந்திரப் போராட்ட தியாகி ஆவார். 1900 ஆம் ஆண்டு மீரான்லெப்பை-குட்டியம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவடைய துணைவியார் ஹாஜி காதர் பீவி. இவர்களுக்கு 16 குழந்தைகளில் ஏழு பேர் மட்டும் உயிருடன் இருந்தனர். எம்.அப்துல் ஹக்(காதிரி) எம்.அப்துல் ஜப்பார், பாசித்;, ஹாஜி. அப்துல் கபார்கான், பாத்திமா பீவி, உம்மு ஹபீபா, ஹாஜியா ஷர்புனிஷா என்று உம்குலுதும் ஆகியோர்கள். பெரும் செல்வந்தரான இவர் காந்தியடிகள் மீது பற்றுகொண்டு பலவித போராட்டங்களில் பங்கு கொண்டார். 1921 ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட இவருக்கு 1941 ஆம் ஆண்டு 2 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டார்.

"ஆங்கிலேயரின் யுத்த ஏற்பாடுகளுக்கு உதவியோ, மனித சகாயமோ கிடைக்கும்படி செய்வது தவறு. எல்லாவித யுத்தங்களையும், அஹிம்சா முறையில் எதிர்ப்பது தான் நியாயமான வேலை. சட்டமறுப்பை தனித்தனி நபராக செய்யவேண்டும். யுத்த எதிர்ப்பு வாக்கியங்களை எதிரே வருபவர்களிடம் சொல்லிக்கொண்டே கைது செய்யப்படும் வரை முன்னோக்கிச் செல்லவேண்டும்."

இவ்விதம் தனி நபர் சத்தியாகிரகம் சம்பந்தமாக அனுஷ்டிக்க வேண்டியதற்கான முக்கிய விதிகளும், முறைகளும் என்று காந்தியடிகள் அனுப்பிய சுற்றறிக்கையினைப் பெற்ற தொண்டர்களில் தியாகி எம்.முகமது நைனாரும் ஒருவர்.

பத்தாம் வகுப்பு வரை படித்த முகமது நைனாரின் பெற்றோர்கள் அரசாங்க வேலையில் சேர்ந்து விடு என நிர்பந்தம் செய்தனர். ஆனால் ஆங்கிலேயரிடம் வேலை பார்;ப்பதை விட வறுமையில் எதிர்த்துப்போராடி மடிவது எவ்வளவோ மேல்" என்று கூறி பெரியகுளத்தை விட்டு கம்பத்திற்கு புறப்பட்டார்.

கம்பம் சென்று பீர்முகமது பாவலர், திம்மையா போன்றோருடன் நட்பு கொண்டு கம்பத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு பிரச்சாரத்தை மேற்கொண்டார். இளைஞர்களை சுதந்திரப் போராட்டத்தில் இணைந்து விடுமாறு தூண்டி அவர்களையும் இணைத்துள்ளார்.

அந்நிய துணி புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகப் போராட்டம், கள்ளுக்கடை மறியல் என பலவித போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்குச் சென்ற குடும்பங்களின் உதவிக்காக நிதி வசூல் செய்து உதவியும் செய்து வந்தார் நைனார்.

1941 ஆம் ஆண்டு நடைபெற்ற தனி நபர் சத்தியாகிரகப் போராட்டத்தில் தானும் கலந்து கொள்ள விரும்பி தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகத்திற்கு கடிதம் அனுப்பினார். அதன் பின்னர் காந்திஜியிடம் இருந்து கடிதம் வந்தது. அக்கடிதத்தில் ~நைனார் அவர்களும் தனிநபர் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொள்ளலாம்" என்று அனுமதி கிடைத்தது. இந்த அனுமதி கிடைத்தவுடன் காந்திஜியைப் போன்று உடையும், இடுப்பில் தொங்கும் கடிகாரத்துடன் கால்நடையாக சென்னை சென்றார்.

சென்னை செல்கின்ற வழியில் உள்ள ஊர்களில் எல்லாம் தங்கி சுதந்திரத்தைப் பற்றியும், அந்நிய ஆட்சிகளின் அவலங்களை கூறிக்கொண்டே சென்றார். சென்னை சென்றவுடன் ஆங்கிலேயருக்கு இரண்டாவது உலகப்போருக்கு பண உதவி செய்யாதே. இந்தியர்கள் ஆங்கிலேய ராணுவத்தில் சேராதே என்று கோஷங்களை எழுப்பினார். இதனால் காவல்துறையினர் கடுமையாக தாக்கி சென்னை சிறைச்சாலையில் 2 மாதம் அடைத்தனர். அதன் பின்னர் விடுதலையாகி மீண்டும் ~வெள்ளையனே வெளியேறு~ இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். அதற்கான ஆட்களையும் சேர்த்தார்.

அதன் பின்னர் 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தது. சுதந்திரம் அடைந்தபோது கம்பத்தில் கலவரம் ஏற்பட்டது. அக்கலவரத்தில் முகமது நைனார் கடுமையாக தாக்குதலுக்கு உள்ளானார். இதனையறிந்த முன்னாள் எம்.பி.க்கள் பாரதிநாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி, பாண்டிராஜ் ஆகியோர் ஆறுதல் கூறினார்கள்.

நடக்கும் ஒவ்வொரு குறிப்புகளையும், நடந்த நிகழ்வுகளையும் டைரி மூலம் எழுதும் பழக்கம் உள்ளவர். ராஜாஜி, காமராஜர், ஜெயப்பிரகாஷ் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். 1986 ஆம் ஆண்டு இறந்தார். அவருடைய உடல் கம்பம் வாவேர் பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது.

- அனீஷ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)