தமிழ்த் தென்றல் திரு.வி.. தனது புரட்சிமிகு தொழிற்சங்க இயக்கத் தொண்டு குறித்து இவ்வாறு கூறியுள்ளார்

 “1918 ஆம் ஆண்டு முதல் என்னால் இயன்ற அளவுயான் தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபட்டு சேவை செய்து வருகிறேன். என் வாழ்க்கை எத்தனை கதவடைப்புகளை – வேலை நிறுத்தங்களை – வழக்குகளை – காவல் துறையினரின் தடியடிகளை – துப்பாக்கிச் சூடுகளைக் கண்டது ! நெருக்கடியான நேரங்களில் எனக்கு ஊக்கம் அதிகமாகும். தொண்டின் வேகமே ஊக்கமாகும். அயராத சேவையே களைப்பைப் போக்கும் அருமருந்தாகும் !”

முதலாம் உலகப் போருக்கு முன்பு இந்தியாவில் மும்பை, அகமதாபாத், கல்கத்தா, நாகபுரி, சென்னை ஆகிய பெருநகரங்களில் வாழும் ஆலைத் தொழிலாளர்கள் நலனிலும் அன்றையத் தலைவர்கள் ஈடுபாடுகாட்டினர். தொழிலாளர்களுக்குச் சுகாதார மேம்பாடு அளிப்பது, குடும்ப வறுமையிலிருந்து அவர்களை மீட்பது, வேலை நேரம் குறைப்பது, கூலி உயர்வு பெறுவது அகியவை பற்றிய விழிப்புணர்வை ஊட்டி வந்தனர்.

பிரிட்டிஷ் அரசு திலகரை 1908ஆம் ஆண்டு கைது செய்தது.திலகர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், விடுதலை செய்யக் கோரியும், மும்பையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதுவே, இந்தியாவில் நடந்த புரட்சிமிகு முதலாவது வேலை நிறுத்தப் போராட்டம் என வரலாறு பதிவு செய்துள்ளது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் தாக்கம் மாமேதை லெனின் கவனத்தை ஈர்த்தது. அது குறித்து, அவர், “இந்தியாவிலுங்கூட பாட்டாளி வர்க்கம் ஏற்கனவே அரசியல் ரீதியான போராட்டத்தை துவக்கிவிட்டது.இதன் விளைவாக இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவு, குறிக்கப்பட்டுவிட்டது” என்று எழுதினார்.

முதல் உலகப்போர் மூண்டதையொட்டி பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதையொட்டி, பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளானது. விலைவாசி உயர்ந்தது; தொழிலாளர்களின்உள்ளம்குமுறியது.இவற்றின்விளைவினால்,தொழிலாளர்கள்அணிதிரண்டு சங்கம் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.           

அதுவரை,நாட்டு விடுதலை இயக்கத்தின் போராளியாகவும்,தமிழ் அறிஞராகவும் அறியப்பட்டிருந்த, திரு.வி.க, தொழிலாளர்களின் வறுமைச் சூழலையும், அவர்கள் அதிக நேரம் வேலையில் உழல்வதையும்,அறியாமையில் வாடுவதையும் கண்டு நெஞ்சம் பதறினார்; அவர்களைக் கைதூக்கிவிட முனைந்தார்.

சென்னையில் 1918 ஆம் ஆண்டு மார்ச்த் திங்கள் இரண்டாம் நாள் நடைபெற்ற, ‘குணமிந்த வர்ஷினி சபை’க் கூட்டத்தில் திரு.வி.க. கலந்து கொண்டு தொழிலாளர்களின் அவல நிலை குறித்து உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து, சென்னைத் தொழிலாளர் சங்கம் 1918 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் நாள் அமைக்கப்பட்டது. இதன் மூலவர்கள் திரு.வி.க. வும் - செல்வபதி செட்டியாரும் - இராமானுஜீலு நாயடுவும் ஆவர்! பி.பி. வாடியா சங்கத் தலைவராகவும், திரு.வி.க. உதவித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 பி & சி மில் தொழிலாளர் சங்கம் உட்பட, எம்.எஸ்.எம். ஆலை, டிராம்வே, மின்சாரம், மண்ணெண்ணெய், அச்சகம், அலுமினியம், நகரசுத்தி, ரிக்ஷா, போலீஸ் அகிய பல்வேறு தொழில் புரிவோரிடையேயும் அமைத்தார். மேலும் தென்னிந்திய இரயில்வேத் தொழிலாளர் சங்கம், மதுரை நெசவுத் தொழிலாளர் சங்கம், கோவை நெசவுத் தொழிலாளர் சங்கம் ஆகிய சங்கங்கள் தோற்றுவிக்கப் பாடுபட்டார்.தொழிற் சங்கங்கள் அமைப்பதில் சர்க்கரைச் செட்டியார், வ.உ.சி., டாக்டர் நடேச முதலியார்,செல்வபதிச் செட்டியார் போன்ற தலைவர்கள் அயராது உழைத்தனர்.அக்காலகட்டத்தில் தொழிலாளர்களை அணிதிரட்டுவதும்,சங்கம் அமைப்பதும் எளிதானதல்ல.வெள்ளையர் ஆட்சியின் கொடூரமான அடக்குமுறை – அடியாட்கள் தொல்லை –முதலாளிகளின் தாக்குதல்கள் இவைகளையெல்லாம் முறியடித்து தொழிற்சங்கங்கள் அமைக்கப்பட்டன.

சென்னை பி &சி மில்லில் 1920ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெள்ளைக்கார அதிகாரி ஒருவன் கைத்துப்பாக்கியுடன் வந்தான்.அவன் கையில் துப்பாக்கியைக் கண்ட தொழிலாளர்கள் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தனர். அவனிடமிருந்த கைத்துப்பாக்கியைப் பிடுங்கிக் கொண்டு, மில்லை விட்டு வெளியேற்றினர். இப்படி தன்னெழுச்சியாக நடைபெற்ற நிகழ்வும்கூடப் போராட்டமாக வெடித்தது.நிர்வாகம் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் மில்லை இழுத்து மூடியது.மில்லைத் திறக்கக் கோரி போராட்டம் உருவானது. போராட்டத்தை வழி நடத்த பதினோரு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.அந்தப் குழுவில் பி.பி. வாடியா, இராமானுஜலு நாயுடு, வரதராஜ் நாயகர், நமச்சிவாயம் பிள்ளை உட்பட பல தொழிற்சங்கத் தலைவர்களுடன் திரு.வி.க. வும் அங்கம் வகித்தார்.

மில் நிர்வாகம் போராட்டம் குறித்து வழக்குத் தொடர்ந்தது.தொழிலாளர்களின் போராட்டத்தினால் மில்லுக்கு எழுபதினாயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது எனவும், அத்தொகையை தொழிலாளர்கள் செலுத்த வேண்டும் எனவும் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. மேலும், வேலை நிறுத்தம் முடியும் வரை, பி & சி மில் தொழிலாளர்களின் கூட்டங்களில்,போராட்டக் குழுவைச் சேர்ந்த பதினொரு பேரும் பேசக்கூடாது எனத் தடைவிதித்தது. ஆனால்,அத்தடையை மீறி தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் அணிதிரண்டு கூட்டங்களை நடத்தினர். மில் முதலாளிகளின் குண்டர்படையும், அரசின் காவல் படையும், கருங்காலிப் படையும் தொழிலாளர்களைத் தாக்கின.தாக்குதல்களையெல்லாம் மீறி தொழிலாளர்கள் பதிமூன்றாயிரம் பேர் 09.12.1920அன்று ஊர்வலம் சென்றனர்.அந்த ஊர்வலத்தின் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.அத்துப்பாக்கிச் சூட்டில் பாபுராவ், முருகன் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். தமிழகத்தில் தொழிலாளர்கள் திரண்டு எழுந்த புரட்சி இயக்கத்தில் முதன் முதல் தியாகியானவர்கள் அவ்விருவரே என்பது வரலாறு.

துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையான தோழர்களின் இறுதி ஊர்வலம் 10.12.1920ல் நடைபெற்றது. அதில் சிந்தனைச் சிற்பி. ம.சிங்காரவேலர் கலந்து கொண்டு பலியான அத்தியாகிகளின் உடவைச் சுமந்து சென்ற பாடைக்குத் தானும் தோள் கொடுத்துச் சென்றார். பி & சி மில் தொழிலாளர்கள் வசித்தப் பகுதி முழுவதும் போராட்டக்கனமானது. அரசின் அடக்குமுறைகளும் தீவிரமானது.

சென்னை தொழிற்சங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்டு வெள்ளையராட்சி அஞ்சி நடுங்கியது. அப்போது, சென்னை ஆளுநராக இருந்த வெலிங்டன் பிரபு, திரு.வி.க. வை நாடு கடத்திட முடிவு செய்தார். ஆனால், நீதிக் கட்சியின் தலைவரான தியாகராயர் ஆளுநரைச் சந்தித்து, “திரு.வி.க. வை நாடு கடத்தினால் ஏற்படும் கொந்தளிப்புக்கு அரசு தாக்குபிடிக்காது; மீறி நாடு கடத்தினால், நீதிக்கட்சி அமைச்சரவையிலிருந்து பதவி விலகும்-என்றும் எச்சரித்தார். அதனால், திரு.வி.க.வை நாடு கடத்தும் எண்ணத்தை ஆளுநர் வெலிங்டன் பிரபு கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

மில்லைத்திறக்கும்படியும்,தொழிலாளர்களின்அடிப்படையானகோரிக்கைகளைவலியுறுத்தியும், போனஸ் வழங்கக் கேட்டும்,மீண்டும் போராட்டம் வெடித்தது.அப்போராட்டங்களுக்கு சிந்தனைச் சிற்பி. ம. சிங்காரவேலர், திரு.வி.க., சர்க்கரைச் செட்டியார், இ.எல். அய்யர் ஆகியோர் தலைமையேற்று நடத்தினர்.சென்னையில் 29.08.1921ஆம் நாள் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்ட ஊர்வலம் தடையை மீறி நடைபெற்றது. வெள்ளையராட்சி, காவல்துறையை ஏவி துப்பாக்கியால் சுட்டது. அதில் ஒரு பெண் உட்பட ஏழு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

சென்னை நகரமே அதிர்ச்சியுற்றது.தொழிலாளர்களும்,மக்களும் தியாகியான தொழிலாளர்களின் இறுதி ஊர்வலத்தில் தடையை மீறி கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளிப்படுத்தினர். சென்னையில் 19.09.1921 மற்றும் 18.10.1921 ஆகிய நாட்களில் நடைபெற்ற தொழிலாளர்களின் ஊர்வலத்திலும், துப்பாக்கிச் சூடுகள் நடந்தன.அதைக் கண்டித்து 1921ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை சட்டமன்றத்தில்,நீதிக்கட்சி உறுப்பினரான ஓ.தணிகாசலம் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான காவல்துறையினரையும்அரசு அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும் என வற்புறுத்தினார்.

திரு.வி.க. தொழிலாளர்கள் நன்கொடையானத் திரடடித் தந்த நிதியைக் கொண்டு 22.10.1920 ஆம் நாள் ‘நவசக்தி’எனும் வரா இதழைத் துவக்கனார்.அவ்விதழ் தொழிலாளர்களின் உரிமை முழக்கமாக விளங்கியது.

•தொழிலாளர்களுக்கு உண்மையான பொருளாதார விடுதலையும், அரசியல் விடுதலையும் வேண்டும்.

•இரயில், டிராம், வங்கிகள், தொழிற்சாலைகள் அரசுடைமை ஆக்கப்பட வேண்டும்.

•தொழிலாளர்களுக்கு லாபத்தில் பங்கு தரப்பட வேண்டும்.

போன்ற கருத்துக்களை முன்வைத்து திரு.வி.க.தொழிலாளர்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டார்.

சென்னையில் 21.01.1944ஆம் நாள் நடைபெற்ற மாமேதை லெனின் நினைவு தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு திரு.வி.க. பேசியதாவது:- “லெனின் உன்னதமான தலைவர் அவர் நடத்தி வெற்றி பெற்ற சோசலிசப் புரட்சியின் தூண்டுதலால் நான் உற்சாகமும், உணர்வும் கொண்டு தொழிலாளர் இயக்கத்தில் இறங்கி வேலை செய்ய முன் வந்தேன். அவர் காட்டிய வழியில் தொழிலாளர்கள் முன்செல்ல வேண்டும்”. மேலும், “ தொழிலாளர்கள் பெருங்கிளர்ச்சி செய்து பொருளுடைமை பெறுவதோடு, அரசையும் தங்கள் வழி திருப்பிட வேண்டும்.தொழிலாளர் அரசாட்சியில் மனித தருமத்துக்கு அழிவு நேராது என்பது திண்ணம்” என்றார்.

பி & சி மில் தொழிலாளர்கள் 1947 ஆம் ஆண்டு, தங்களின் கோரிக்கைகளுக்காக திரு.வி. க. தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர்.அப்போராட்டத்தின் போது அறுபது வயதைக் கடந்து விட்ட திரு. வி. க. வைக் காங்கிரஸ் ஆட்சி வீட்டுக் காவலில் வைத்தது. ஆம், நாட்டு விடுதலைக்காகப் காடுபட்ட தலைவருக்கு வீட்டுச் சிறை!

திரு. வி.கவுக்கு 1943 ஆம் ஆண்டு மணிவிழா நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு தொழிலாளர் இயக்கம் பற்றி கீழ்க்ண்டவாறு பேசினார்.

“பதினாராயிரம் முறை தொழிலாளர் இயக்கம் தடுக்கி விழுந்திருக்கிறது. மீண்டும் எழுந்துள்ளது. குரல்வளை நெரிக்கப்பட்டு மூச்சு திணறடிக்கப்பட்டுள்ளது. நீதி மன்றங்களால் கட்டுண்டது. போர்ப்படையால் அடக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கைகளால் பழிக்கப்பட்டு உள்ளது. மதவாதிகளால் அச்சுறுத்தல்பட்டுள்ளது. ஓடுகாலிகளால் கைவிடப்பட்டுள்ளது. ஓட்டுண்ணிகளால் இரையாக்கப்பட்டுள்ளது. தலைர்களால் துரோகமிழைக்கப்பட்டுள்ளது. இவை அத்தனையும் இருந்த போதிலும், இன்று இநதப் புவிக்கோளம் என்றமே கண்டிராத வகையில் உயிர்த்துடிப்போடு, எதிர்கால வாய்ப்புடைய சக்தியாக விளங்கி வருகிறது. அதன் இலட்சியப் பணி அடிமைத் தனத்திலிருந்து உலகத் தொழிலாளர்களை விடுதலை செய்வதேயாகும்.இந்த இலட்சியத்தின் நிறைவேற்றம் சூரிய உதயம் போன்று சர்வ நிச்சயம்,” – என்று அமெரிக்கத் தொழிற்சங்கத் தலைவர் யூஜின்டெப்ஸ் கூறியதை திரு.வி..க. எடுத்துரைத்தார். மேலும், “தொழிலாளர் இயக்கம் நம் நாட்டைச் சூழ்ந்துள்ள இருளைப் போக்க வல்ல ஒளியாகும்.” – என்று அறிவித்தார்.

தொழிலாளர் இயக்கத்திற்காக தனது இறுதி மூச்சுவரை பாடுபட்ட திரு.வி.க, தான் இறந்த பின்பு தன் உடலை சூளைப் பகுதி தொழிலாளர்களிடம் ஒப்படைத்திட வேண்டும் என்றார். அவரது வேண்டுகோளின்படி,அவரது உடலின் இறுதி ஊர்வலம் வட சென்னைச் சூளையிலிருந்து புறப்பட்டு தென்சென்னை மையிலாப்பூர் இடுகாட்டில் முடிந்தது. அங்கு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இன்று நமது இந்திய நாடு உலகமயம், தனியார் மயம், தாராளமையம் ஆகிய தீமைகளால் தாக்குண்டுதவிக்கிறது.தொழிலாளர்களும்,உழைக்கும்மக்களும்தொடர்ந்துசுரண்டப்படுகிறார்கள். இக்கொடுமைகளை எதிர்த்துப் போராடுவதே ‘தமிழ்த் தென்றால்’

திரு. வி.க. வுக்கு நாம் செலுத்தும் புரட்சிகர வீரவணக்கமாகும்!