‘குடி குடியைக் கெடுக்கும்” என்பது பழமொழி. மனிதன் குடிப்பழக்கத்தைக் கைவிடச் செய்திட திருவள்ளுவர் முதல் காந்தியடிகள் வரை சான்றோர் பலரும் முயன்று பாடுபட்டனர். ஆனால் இன்று வரை அம் முயற்சி வெற்றி பெறவில்லை என்பதே உண்மை. மனிதன் குடிப் பழக்கத்தைக் கைக் கொள்ளத் தொடங்கிய காலம் எது என்பது விடைதெரியாத வினாவேயாகும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே மனிதன் அப்பழக்கத்தைக் கைக் கொணடிருத்தல் கூடும். மனிதன் காட்டு மிராண்டி நிலையில் நரமாமிசம் உண்டு வாழ்ந்த காலத்திலேயெ குடிப்பழக்கம் உடையவனாகவும் இருந்தான் என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்றளிக்கின்றன.

தமிழில் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலைகாப்பியத்தில் அதன் ஆசிரியரான மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார். நாகர்கள் என்பவரைப் பற்றிக் கூறியுள்ளார். நாகர் என்போர் கீழைக்கடல் தீவுகளில் ஒன்றான நாகத்தீவில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தவராவர். ஆடை எதுவும் அணியாத நிலையில் நிர்வாணமாகத் திரிந்த அவர்களை நக்க சாரணர் என்று சாத்தனார் குறிப்பிடுகிறார். அவர்கள் நரமாமிசம் உண்ணும் பழக்கம் உடையோராகவும் இருந்தனர். ‘காட்டுமிராண்டி நிலையின் இடைக் கட்டம் வரையிலும் மனிதன் நரமாமிசம் உண்டு வாழ்ந்தான்” என்று தோழர் எங்கல்ஸ் அவர்கள் கூறுவது இங்கு நம் கவனத்துக்கு உரியதாகிறது.

காட்டுமிராண்டிகளான நாகர்களின் தலைவனைப்பற்றிக் கூறும் சாத்தனார், அவன்

கள்ளடு குழிசியும் கழிமுடை நாற்றமும்
வெள்ளென் புணங்கலும் விரவிய இருக்கையில்
எண்கு தன்பிணவோடு இருந்து போல ‘ இருந்ததாகக் கூறுகிறார். நாகர் கூடிக்குழுமியிருந்த இடத்தில் கள்ளைக் காய்ச்சும் பானைகள் இருந்ததாக சாத்தனார் குறிப்பிடுகிறார். இவரது இக்கூற்று, மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலகட்டத்திலேயே கள்ளைக் காய்ச்சத் தெரிந்திருந்தான் என்ற செய்தியை உணர்த்துகிறது. தீயின் உபயோகத்தை மனிதன் தெரிந்து கொண்ட காலமாகிய காட்டுமிராண்டி நிலையின் இடைக்கட்டத்திலேயே அவன் மண்பாண்டங்கள் செய்யத் தெரிந்து வைத்திருந்தான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அங்ஙனம் தெரிந்திருந்ததனால் தான் வரகு தினை முதலிய தானியங்களைக் குற்றிச் சமைக்கவும் வேட்டையாடிய விலங்குகளின் ஊனை வேக வைத்து உண்ணவும் அவனால் இயன்றது. இது பற்றி முன்னர் கூறப்பட்டுள்ளது.

அநாகரிக நிலையில் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த காலத்தில் மனிதன் மதுவைக் காய்ச்சி உண்டது பற்றிச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.

‘அவையா அரிசி அங்களித் துழவை
மலர்வாய்ப் பிழாவில் உலரவாற்றி
பாம்புறை புற்றிற் குரும்பி யேய்க்கும்
பூம்புற நல்லடை அளைஇத் தேம்பட
எல்லையுமிரவும் இருமுறை கழிப்பி
வல்வாய்ச்சாடி வளைச்சற விளைந்த
வெந்நீரரியல் விரலலை நறும்பிழி”

(குற்றாத கொழியலரிசியை அழகினையுடைய களியாகத்துழாவிச் சமைத்த கூழை, அகன்ற வாயையுடைய தட்டுப் பிழாவிலே உலர ஆற்றி, பாம்பு கிடக்கின்ற புற்றிற் கிடக்கும் புற்றாம் பழச்சோற்றையொக்கும் பொலிவுபெற்ற புறத்தினையுடைய நல்ல முளையினை இடித்துச் சேர அதனை அதிலே கலந்து இனிமை பிறக்கும்படி இரண்டு பகலும் இரண்டு இரவும் அரியாமல் வைத்து வலிய வாயினையுடைய சாடியின்கண்ணே இளமையறும் படிமுற்றின, விரலாலே அலைத்து அரிக்கும் தன்மையுடைத்தாகிய வௌ;விய நீhமையையுடைய கள் ) என்று பெரும்பாணாற்றுப்படை (275-81) கள்ளை இல்லிற்சமைத்தது குறித்துக் கூறுகிறது. இல்லிற் சமைத்த இக்கள்ளை, ‘பாப்புக் கடுப்பன்ன தோப்பி”, என்றும்’ தேட்கடுப்பன்ன நாட்படுதேறல்” என்றும் (பாம்புக்கடி போன்றும் தேள்கடி போன்றும் விறுவிறுப்பான போதை) இலக்கியங்கள் கூறுகின்றன.

சங்க காலத்தில் தமிழகத்தில் - ஏன், இந்தியா முழுவதிலும் பரவியிருந்த உலகாயதர்கள் பிறப்பு இறப்பு பற்றிய தங்கள் கொள்கையை மக்களுக்கு எளிமையாக எடுத்துரைப்பதற்குக் கள்ளைக் காய்ச்சும் இத்தொழில் நுட்பத்தையே உதாரணமாகக் காட்டினார்கள்.

சாத்தனார் தம் மணிமேகலை நூலில் உலகாயதம் பற்றியும் உலகாயதர் பற்றியும் தெளிவாகக் கூறியுள்ளார். வஞ்சி மாநகரில் சமயவாதிகள் பலருடன் மணிமேகலையானவள் அவர்தம் சமயக்கருத்துக் களைக் குறித்து வாதம் புரிந்தாள். அப்போது அவள் உலகாயதனாகிய பூதவாதியை அழைத்து அவனது கருத்துக்களைக் கூறுமாறு கேட்டாள். அவனும் தன் கருத்துக்களைக் கூறினான். பூதவாதியின் கூற்று இது:

பூதவாதியைப் புகல் நீ என்ன
தாதகிப்பூவும் கட்டியும் இட்டு
மற்றும் கூட்ட மதுக்களி பிறந்தாங்கு
உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும்
அவ்வுணர்வு அவ்வப்பூதத்து அழிவுகளின்
வௌ;வேறு பிரியும் பறையோசையிற் கெடும்
உயிரோடு கூடிய உணர்வின் பூதமும்
உயிரில்லாத உணர்வு இல் பூதமும்
அவ்வப்பூதவழி யவை யவை பிறக்கும்
மெய்வகை இதுவே, வேறு வேறு விகற்பமும்
உண்மைப் பொருளும் உலகாயதன் உணர்வே,
கண்கூடல்லது கருத்தளவழியும்
இம்மையும் இம்மைப்பயனும் இப்பிறப்பே,
பொய்மை மறுமையுண்டாய் வினைதுய்த்தல்”

என்று பூதவாதி தன் கருத்துக்களை மணிமேகலைக்கு எடுத்துக்கூறியதாகச் சாத்தனார்; கூறுகிறார்.

நிலம், நீர், தீ காற்று என பூதம் நான்கேயாகும். அவற்றின் சேர்க்கையால் உடம்பு தோன்றுகிறது.

ஆத்திப்பூவையும் கருப்புக் கட்டியையும் இட்டு வேறு பொருள்களையும் கலந்து காய்ச்சுவதால் கள் உண்டாகி அக்கள்ளில் களிப்பு (போதை) தோன்றுகிறது. அது போல் பூதங்கள் பொருந்திக்கூடுவதால் உணர்வு பிறக்கும். அப்பூதங்களின் கூட்டம் கலைந்து நீங்கும் போது, பறையோசை தூரத்தே செல்லச் செல்லத் தேய்ந்து கெடுவது போல உணர்வும் வேறு வேறாகப் பிரிந்து தத்தம் முதலோடு ஒன்றி விடும். உண்மைநெறியிதுவேயாகும். என்று உடம்பு, உயிர் ஆகியவற்றின் தோற்றம் அழிவு ஆகியவற்றுக்குக் கள்ளைக் காய்ச்சும் தொழில் நுட்பம் பூதவாதியால் உவமையாகக் கூறப்படுகிறது.

மேலும் அளவை நூலார் கூறுகின்ற காட்சியளவை அனுமான அளவை ஆகம அளவை ஆகியவற்றில் காட்சியளவை ஒன்றைத் தவிர, ஏனை அனுமான ஆகம அளவைகளை பூத வாதிகள் ஏற்பதில்லை. அது போலவே இம்மை மறுமை மோட்சம் நரகம் நல்வினை தீவினை வினைப்பயன் முதலியவற்றையும் பூதவாதிகள் ஏற்பதில்;லை. அவற்றைப் பொய் என்றே அவர்கள் கூறுகின்றனர். ஐம்பூதக்கொள்கையை பூதவாதிகள் ஏற்பதில்லை. ஆகாயத்தை ஒரு பூதமாக அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இப்பிறவியும் இப்பிறவியில் பெறும் இன்பமும் துன்பமும் இப்பிறவியோடே கழிவன. மறுபிறப்பு இல்லை. இப்பிறவியில் செய்யும் வினையின் பயனை மறுபிறவியில் நுகர வேண்டும் என்ற கருத்துக்கள் பொய்யுரை யாகும் ‘ என்பது பூதவாதியின் கூற்று.இங்கு கள்ளடும் தொழில் நுட்பம் உடம்பு உயிர் ஆகியவற்றின் தோற்றத்துக்கு உவமையாக பூதவாதியால் காட்டப்பட்டது.

சங்க காலத்தில் அரிசியைக் கொண்டு கள் காய்ச்சி வடிக்கப்பட்டது போல, பனைமரங்களில் இருந்து கள் இறக்கப்பட்டது. இதனை ‘ பிணர் பெண்ணைப் பிழி” (பனiயின் கள்) என்று பட்டினப்பாலை கூறுகிறது.

மதுவின் ஊறலை நிலத்தில் புதைத்து வைத்துப் பல நாட்கள் கழித்து எடுத்துப் பயன்படுத்தும் பழக்கம் பழையகாலத்திலேயே இருந்துள்ளது.

நிலம் புதை பழுனிய மட்டின் தேறல்
புல் வேய்குரம்பை குடி தொறும் பகர்ந்து
- புறநானூறு : 120

(நிலத்தில் புதைக்கப்பட்டு முற்றிய தேறலை, புல்லாலே வேய்ந்தசிறிய மனையின்கண் குடியுள்ள இடந்தோறும் நுகரக் கொடுத்தனர்) என்னும் தொடர் நிலத்தில் புதைத்து வைத்த முற்றிய தேறலைக் கண சமூகமாக வாழ்ந்த கானவர் தம்முள் பகிர்ந்து உண்டதனைக் கூறுகிறது. எயினர் தேறலை மூங்கிற் குழாய்களில் பெய்து நிலத்தில் புதைத்து வைத்து முற்றிய பின் அதனை எடுத்து உண்டு வேங்கை மரத்தினடியில் குரவைக் கூத்து ஆடினர் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

‘குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
வாங்கமை பழுனிய தேறல் மகிழ்ந்து
வேங்கை முன்றிற் குரவையயரும்” – புறநானூறு : 120

(குறிய இறப்பையுடைய சிறிய மனையின் கண் குறவர்கள் வளைந்த மூங்கிற் குழாயின்கண் வார்த்து வைத்து முற்றிய மதுவை நுகர்ந்து வேங்கை மரத்தையுடைய முற்றத்தில் குரவைக் கூத்து ஆடினர்) என்றும்.
‘மன்ற வேங்கை மணநாட் பூத்த
மணியேரரும்பின் பொன்வீ தாஅய்
வியலறை வரிக்கும் முன்றிற் குறவர்
மனைமுதிர் மகளிரோடு குரவையயரும்’ என்றும்
‘பெருமலை
வாங்கமை பழுனிய நறவுண்டு
வேங்கை முன்றிற் குரவையுங்கண்டே” - நற்றிணை ; 276

என்றும் சங்க இலக்கியங்கள், நறவுண்ட குறமாக்கள் தம் குடிசையின் முற்றத்தில் வேங்கை மரத்தின் நிழலில் மகளிரொடு குரவைக் கூத்து ஆடிய செய்தியைக் கூறுகின்றன. மேலும் மூங்கில் குழாயினுள் தேறலைப் பெய்து பல நாள் நிலத்தில் புதைத்து வைத்;திருந்து முற்றிய பின் எடுத்து உண்டு மகிழ்ந்ததையும் கூறுகின்றன. மக்கள் கணசமூகமாக வாழ்ந்த கால கட்டத்தில் மண்டை கோய் கலயம் முதலான மட்கலங்களும் பனையோலை முதலியனவும் கள்ளுண்ணும் கலங்களாகப் பயன்படுத்தப்பட்டன. கள்ளுண்ணும் எளிய மக்கள் இன்றும் பனை யோலையையும் மொந்தை எனப்படும் மட்கலத்தையுமே கள் உண்ணப் பயன்படுத்துகின்றனர்.

சமூக மாற்றம் நிகழ்ந்தபின் அடிமைச் சமூகத்திலும் நிலப்பிரபுத்துவ சமூகத்திலும் செல்வர்களின் உண்கலங்களைப் போலவே, கட்கலயங்களும் வெள்ளியாலும் பொன்னாலும் செய்யப்பட்டு அழகிய வேலைப்பாடுகளுடன் விளங்கின. அக்கலங்களில் உயர்தரமான மது வகைளைப் பெய்து இளமகளிர் எடுத்து ஊட்டிட செல்வர்கள் உண்டு மகிழ்ந்தனர் என்ற செய்தியைச் சங்க நூல்கள் அறிவிக்கின்றன.

உழைக்கும் மக்களை அடிமையாக்கிச் சுரண்டிய செல்வர்கள் உண்;ட உணவைப் போலவே மதுவும் உயர்தரமானதாக இருந்தது. அம்மதுவைச் செல்வர்களோடு சேர்ந்து சுவைத்து மகிழ்ந்த புலவர்கள் அதனை’தண்கமழ் தேறல், மணங்கமழ் தேறல், பூக்கமழ்தேறல்” என்றெல்லாம் பாராட்டிப்புழ்ந்தனர். அப்பாராட்டுக்கு ஏற்ப, போதையுடன் மணமும் ஊட்டுவதற்காக குங்குமப்பூ முதலிய பொருட்களையும் சேர்த்து மது வடிக்கப்பட்டது.

மது காமபானம், வீரபானம் என இருவகைப்படும். கள் வீரபானம் எனப்பட்டது. போருக்குச் செல்லும் வீரர்களுக்கு அரசர்கள் வீரபானமாகிய கள் வழங்கியது குறித்துச் சங்க இலக்கியங்கள் சுவைபடக் கூறுகின்றன. அது குறித்த செய்தி முன்னர்க் கூறப்பட்டுள்ளது.

புணர்ச்சியின் போது நுகரப்படும் மது காமபானம் எனப்பட்டது. ‘பட்டு நீக்கித்துகிலுடுத்தும் மட்டு நீக்கி மது அருந்தியும்” என்று இரவில் புணர்ச்சியின் போது மகளிர் மது அருந்தியது குறித்துப் பட்டினப்பாலை ( 107-8 ) பேசுகிறது. இலக்கியங்களில் மணங்கமழ்தேறல் பூக்கமழ்தேறல் என்று கூறப்படும் மது காமபானம் ஆகும். செல்வர்கள் புணர்ச்சியின் போது காம பானம் உண்டு மகிழ்;ச்சி மிக்கு விளங்கினர். உயர்வகை மதுவான காமபானத்தைப் பொற்கலங்களிற்பெய்து அழகிய இளமகளிர் எடுத்து உண்பிக்க, அரசர்களும் ஆண்டைகளும் உண்டு மகிழ்ந்த செய்தியை இலக்கியங்கள் சுவைபடக் கூறுகின்றன.

பூக்கமழ் தேறல் என்ற தொடரில் உள்ள பூ என்பது பஞ்சவாசத்துள் ஒன்றாகிய குங்குமப்பூ என்று நச்சினார்க்கினியர் இதற்கு விளக்கம் கூறுகிறார். இவ்வாறு தேனுடன் மணம்மிக்க பூக்களும் மா.பலா, வாழை முதலிய சுவை மிகு கனிகளும் சேர்த்து மதுவகைகள் செல்வர் மனைகளில் தயாரிக்கப்பட்டன. அங்ஙனம் மணமும் சுவையும் மிக்கதாக தயாரிக்கப்பட்ட மதுவே புலவர்களால் பூக்கமழ் தேறல் மணங்கமழ் தேறல் என்று புகழப்பட்டது. அதுவே காம பானம் எனப்பட்டது.

‘ஒண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்நிய
தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்கினிது ஒழுகு மதி’ – புறநானூறு : 24

( ஒளி பொருந்திய வளையல் அணிந்த இளமகளிர் பொற்கலத்தில் ஏந்திய குளிர்ந்த நறுநாற்றத்தையுடைய மதுவை மடுப்ப அதனை உண்டு மகிழ்வாயாக ) என்று, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ் செழியனை மாங்குடி மருதனார் வாழ்த்துகிறார்.

அரசர்களும் செல்வர்களும் தம் வளமனைகளில் வடிக்கப்பட்ட மணமும் சுவையும் மிக்க மதுவகைகளேயல்லாது. யவனர் நல்ல குப்பிகளில் கொண்டு வந்த மதுவையும் உண்டு களித்தனர். இது குறித்து

யவனர்
நன்கலந் தந்த தண்கமழ் தேறல்
பொன் செய் புனைகலத் தேந்தி நாளும்
ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்கினிது ஒழுகுமதி ‘ புறானூறு : 56

( யவனர் குப்பியிற்கொண்டு வரப்பட்ட குளிர்ந்த நறுநாற்றத்தையுடைய தேறலைப் பொன்னாற் செய்யப்பட்ட புனைகலத்தின் கண் ஏந்தி நாடோறும் ஒள்ளிய வளையணிந்த மகளிர் ஊட்டிட உண்டு மகிழ்ச்சி மிக்கு இனிதாக நடப்பாயாக) என்று, நன்மாறன் என்பானை நக்கீரர் வாழ்த்துகிறார்.

‘இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய
மணங்கமழ் தேறல் மடுப்ப மகிழ்ந்து”
- மதுரைக் காஞ்சி : 779 – 80

(விளங்குகின்ற பூண் அணிந்த பொன்னாற் செய்த வட்டில்களிலே யெடுத்த மணம் நாறுகின்றன காமபானத்தைத் தர அதனை யுண்டு மகிழ்ச்சியெய்தி மகளிர் தோள்புணர்க) என்றும்

‘செங்கண்மகளிரொடு சிறுதுனியளைஇ
அங்கட்டேறலாய்கலத்துகுப்பக்
கெடலருந் திருவ வுண்மோ” – புறநானூறு 366

(கெடாத செல்வத்தையுடையவனே, சிவந்த கண்களையுடைய மகளிருடனே, சிறிதாகிய துனிகலந்து அழகிய கள்ளினது தெளிவினை, ஆராய்ந்த கலத்திற் பெய்து தர உண்பாயாக) என்றும்

பாசிமழை பொலங்கலத்தேந்திய
நாரரி தேறல் மாந்தி மகிழ் சிறந்து – புறநானூறு: 367

(பசிய இழையணிந்த மகளிர் பொன்வள்ளங்களில் எடுத்துக் கொடுத்த நாரால் வடிக்கப்பட்ட கட்டெளிவையுண்டுகளித்திடுக) என்றும்

‘வில்லென விலங்கிய புருவத்து வல்லென
நல்கின் நாவஞ்சு முள்ளெயிற்று மகளிர்
அல்குல் தாங்கா அசைஇ மெல்லெனக்
கலங் கலந் தேறல் பொலங் கலத்தேந்தி
அமிழ்தென மடுப்ப மாந்தி”

(வில் போன்ற வளைந்த புருவத்தையும் வல்லென வொரு சொல் வழங்கின் நா அஞ்சுதற்கேது வாகிய முள்போன்ற பற்களையும் உடைய மகளிர் அல்குலில் அணிந்த மேகலையைத் தாங்கமாட்டாது. தளர்ந்து மென்மையாக, கலங்கலாகிய கள்ளைப் பொன்வள்ளத்தில் ஏந்தி அமிழ்தம் உண்பிப்பாரைப் போல உண்பிக்க உண்டு மகிழ்ந்தனர்) என்றும் ஆண்டைகளான செல்வர்கள் மற்றும் அரசர்களின் காமக் களியாட்டங்கள் குறித்துச் சங்க இலக்கியங்கள் விரிவாகவே பேசுகின்றன.

அடிமைச் சமூகத்தில் ஆண்டைகள் ஆடம்பரம் மிக்க சுகபோகத்தில் மூழ்கிக் கிடந்தனர். தம்மைப் புகழ்ந்து பாடிய புலவர்களுக்கும் பாணர்களுக்கும் உணவும் கள்ளும் உடையும் பிறவும் தந்து மகிழ்ந்தனர். இதனை

‘முதுநீர்ப்பாசியன்ன வுடை களைந்து
திருமலரன்ன புதுமடி கொளீஇ
மகிழ்தரன் மரபின் மட்டேயன்றியும்
அமிழ்தன்ன மரபின் ஊன்றுவை யடிசில்
வெள்ளி வெண்கலத்தூட்டலன்றி
முன்னூர்ப் பொதியிற் சேர்ந்த மென்னடை
இரும்பேரொக்கல் பெரும்புலம்பகன்ற
அகடுநனை வேங்கை வீ கண்டன்ன
பகடுதரு செந்நெல் போரொடு நல்கி”.

(பழையவான நீர்ப்பாசிபோல் சிதர்ந்திருந்த ஆடையை நீக்கி அழகிய பகன்றை மலர் போன்ற புத்தாடை கொடுத்து உடுப்பித்துக் களிப்பினைத் தரும் முறைமையினையுடைய கள்ளோடு அமிழ்;து போற்சுவையுடைய ஊன் துவையலோடு கூடிய சோற்றை வெள்ளியாலாகிய கலத்தே பெய்து உண்பித்ததோடு, ஊர்க்கு முன்னிடமான மன்றத்தில் தங்கியிருந்த தளர்ந்த நடையினையுடைய பெரிய சுற்றத்தார் என் பிரிவால் உண்டாகிய தனிமைப் பெருந்துயரைப் போக்க, தேனால் உள்ளிடம் நனைந்த வேங்கைப் பூவைப் போன்ற செந்நெற்குவியலை நெற் போரோடுங்கொடுத்தான் ) என்று புறநானூறு (390) பேசுகிறது.

ஆனால் உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தி அவர்களின் உழைப்பைச் சுரண்டி, ஆண்டைகள் அவர்களை வறுமையில் ஆழ்த்தினர். உற்பத்திக் கருவிகளில் ஏற்பட்ட வளர்ச்சியாலும் முன்னேற்றத்தாலும் களமரின் கடினமான உழைப்பாலும் சமூகத்தில் ஏற்பட்ட நெல்லும் கால்நடைகளுமாகிய செல்வத்தின் பெருக்கம் உழைக்கும் மக்களைச் சென்றடையவில்லை. அவர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்த ஆண்டைகளால் உறிஞ்சப்பட்டது. வேட்டைச் சமூகமாகவும் மேய்ச்சல் சமூகமாகவும் வாழ்ந்த காலகட்;டத்தில் மக்கள் வாழ்வில் நிலவிய வறுமையும் பற்றாக்குறையும், வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டிருந்த அடிமைச் சமூகத்திலும் நீடிக்கவே செய்தது. உழைக்கும் மக்கள் வறுமையில் ஆழ்த்தப்பட்டனர். அடிமைகளான களமரின் அவலவாழ்வையும் ஆண்டைகளின் ஆடம்பரமான சுகபோகம் மிக்க சொகுசு வாழ்வையும் சங்க இலக்கியங்கள் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன.

மூவன்

மூவன் என்றொரு தலைவன், அடிமை எஜமானன். அவனது ஊர் மருதவளஞ்சான்ற பகுதியைச் சார்ந்தது. அடிமைகளான தொழுவரும் களமரும் அவனது வயல்களில் விளைந்த நெல்லையறுத்துப் போரடுக்கிக் கடாவிட்டுப் பொலி தூற்றும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். வேலையின் இடையில் அத்தொழுவரும் களமரும் வேலைக்களைப்பை உணராதிருத்தற்பொருட்டுக் கள் உண்டனர். கள் மட்டும் தான். கள்ளுக்குத் தொடு கறியாக ஊன்துண்டங்களோ மீன் துண்டங்களோ இல்லை. கள்ளையும் அவர்கள் மண்கலயங்களில் வாங்கி உண்ணவில்லை. அதற்குரிய வசதியும் வாய்ப்பும் அவர்களுக்கு வாய்க்கவில்லை, எனவே அவர்கள், ஆம்பல் இலைகளில் தான் அதனை வாங்கி உண்டனர்.

“ நெய்தலங்கழனி நெல்லரி தொழுவர்
கூம்புவிடு மென்பிணி அவிழ்ந்த ஆம்பல்
அகலடை அரியல் மாந்தி” –புறநானூறு : 209

(நெய்தலையுடைய அழகிய வயற்கண் நெல்லையறுக்கும் உழவர் முகையவிழ்கின்ற மெல்லிய இதழ்கள் நெகிழ்ந்த ஆம்பலினது அகன்ற இலையதனாலே மதுவையுண்டனர்) என்று அடிமைகளான களமர் ஆம்பல் இலையில் கள்ளுண்ட காட்சியைப் புலவர் சாத்தனார் நமக்குக் காட்டினார்.

அடிமை எஜமனான் ஆன மூவன் தன் வளமனையில் அழகுமிக்க இளம் பெண்கள் பலருடன் காமக்களியாட்டத்தில் அப்போது திளைத்துக் கொண்டிருந்தான் . அந்த நேரத்தில் புலவர் பெருந்தலைச் சாத்தனார் அவனைக்காண அங்கு சென்றார். இளமகளிர் புடைசூழச் சிற்றின்பச் சேற்றில் புதைந்திருந்த மூவன், புலவரது பெருமையையும் புலமைச் சிறப்பையும் மதியாது அவரைப் பெரிதும் அவமதித்து அலட்சியப்படுத்தினான். மூவன் ‘சிற்றிடைமகளிர் தற்புறஞ்சூழச் சிற்றின்பத்தில் மூழ்கிக் கிடந்த காட்சியையும் புலவர் நமக்குக் காட்டுகிறார்.

‘நறும்பலொலி வரும் கதுப்பிற்றே மொழி
தெரியிழை மகளிர் பாணிபார்க்கும்
பெருவரையன்ன மார்பிற்
செருவெஞ்சேய்” – புறநானூறு : 209

(நாள்தோறும் நறிய பலவாகிய தழைத்த மயிரையும் தேன் போலும் சொல்லையும் ஆராய்ந்த ஆபரணத்தையும் உடைய மகளிர் ஒருவரினொருவர் புணர்தற்குக் காலம்பார்க்கும் பெரிய மலை போலும் மார்பையுடையோன்) என்று அவன் தன் வளமனையில் பெண்டிர் பலருடன் சிற்றின்பத்தில் மூழ்கித்திளைத்திருந்த காட்சியையும் நமக்குக் காட்டினார்.

இவ்வாறு அடிமைகளின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்த ஆண்டைகள் உல்லாசமான சுகபோகவாழ்க்கையை மேற்கொண்டிருந்ததனை இலக்கியங்கள் கூறுகின்றன. அடிமை எஜமானர்களான செல்வர்கள் பெண்களை அடிமைகளாக்கித் தம் காமக்களியாட்டங்களுக்கு ஈடு கொடுத்து இணங்கிப் போகுமாறு செய்தனர். இதற்கு அவர்கள் அடிமைகளைச் சுரண்டிச் சேர்;த்த செல்வம் பெரிதும்; துணையாயிருந்தது. ஆண்டைகள், தண்கமழ் தேறலாகிய காமபானத்தைப் பொற்கலங்களில் பெய்து தரப்பணித்தனர், ‘ஒண்டொடிமகளிர் பொலங்கத் தேந்திய தண்கமழ்தேறல் மடுப்ப’ உண்டு மகிழ்ந்தனர்.

ஆனால் அடிமைகளான களமர்’ நெல்விளைகழனிப் படுபுள்ளோப்பி ஒழிமடல் விறகிற் கழிமீன் சுட்டு வெங்கட்டொலைச்சினர். (வயல்களில் விளைந்து முற்றிய நெல்லிற்படியும் பறவைகளை ஓட்டும் பணிகளைச் செய்த உழவர்கள் பனங்கருக்காகிய விறகால், உப்பங்கழிகளில் பிடித்த மீனைச் சுட்டடுத்தின்று ஆம்பல் இலையில்கள்ளை உண்டனர்) என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

- வெ.பெருமாள்சாமி