வைக்கம் போராட்டம் ‘ என்பது ஆலய நுழைவுப் போராட்டமல்ல. மாறாக கோயிலைச் சுற்றியிருக்கிற தெருக்களிலேயே தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள், புலையர்கள் நடக்கக்கூடாது என்று இருந்த கொடுமையை எதிர்த்து நடைபெற்ற போராட்டமேயாகும். கேரள மாநிலம் வைக்கத்தில் அரசனின் அரண்மனை உள்ளது. அந்த அரண்மனை வளாகத்திற்குள் ஒரு நீதிமன்றம் அமைந்திருக்கிறது. அன்று அரசனின் பிறந்தநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மக்கள் நெரிசல் மிகுந்திருந்த காரணத்தால் நீதிமன்றத்திற்குச் செல்லும் வழக்கமான பாதை அன்று அடைக்கப்பட்டிருந்தது.

மாதவன் என்ற வழக்கறிஞர் அவசரமாக நீதிமன்றத்திற்குச் சென்றவர், நீதிமன்றத்திற்கான பாதை அடைக்கப்பட்டிருப்பதை அறிகிறார். வழக்கின் முக்கியத்துவமும், அவசரமும் கருதி அரசனின் பிறந்த நாள் வழிபாடு அவ்விடத்தில் தொடங்கிவிட்ட நிலையிலும் அவ்வழியாக நீதிமன்றத்திற்குச் செல்கிறார்

வழக்கறிஞர் மாதவன் ஈழவ சமுதாயத்தைச் சார்ந்தவர். ஈழவர்கள் அவ்வழியாக நடந்துகூடச் செல்லக் கூடாது என்பது அப்போதிருந்த எழுதப்படாத விதி. மற்றவர்கள் மாதவனைத் தடுக்கிறார்கள். வழக்கறிஞர் மாதவன் கோயில் பாதையில் நடப்பதைத் தடுத்த சம்பவம் பலருக்குக் கோபத்தை உருவாக்கியது. சத்தியாகிரகம் நடத்த டி.கே.மாதவன், கேரளக் காங்கிரஸ் தலைவர் கே.பி. கேசவமேனன் மற்றும் பலர் சேர்ந்து முடிவெடுத்தனர்.

வைக்கம் ஊரில் நடுவில் கோயில் இருக்கிறது. அதன் நான்கு வாசலுக்கு எதிரிலும் நான்கு நேர் வீதிகளும் கோயில் மதிற் சுவரைச் சுற்றி பிரகாரத் தெருக்களும் இருந்தன. இந்த வீதிகள் எவற்றிலுமே கீழ்ச் சாதிக்காரர்களும், தீண்டத்தகாதாரும் நடக்கக் கூடாது. ஒரு மைல் தூரம் வேறு பாதையில் சுற்றிக் கொண்டுதான் எதிர்ரோட்டிற்குப் போக வேண்டும். இதை எதிர்த்து சக்தியாக்கிரகப் போராட்டம் தொடங்கியவுடன் வழக்கறிஞர் மாதவன், பாரிஸ்டர் கேசவ மேனன், டிகே மாதவன், ஜார்ஜ் ஜோசப் முதலியவர்கள் உட்பட பலர் அரசின் ஆணைப்படி கைது செய்யப்பட்டனர்.

படிப்படியாகத் தலைவரக்ள் கைது செய்யப்பட்டவுடன் போராட்டம் தொய்வடையும் நிலையில் ,ஈ.வெ.ரா. பெரியாருக்கு ஜார்ஜ் ஜோசப், கேசவமேனன் ஆகிய இருவரும் இணைந்து ஒரு கடிதம் எழுதினர். “நீங்கள் இங்கு வந்துதான் இந்தப் போராட்டத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் மன்னிப்புக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. அவ்வாறு செய்தால் ஒரு பெரிய காரியம் கெட்டுவிடுமே என்று கவலைப்படுகிறோம்” என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்தக் கடிதத்தின் அடிப்படையில் பெரியார் வைக்கம் விரைந்தார். மன்னனுக்கு ஏற்கெனவே பெரியார் பழக்கமானவர். மன்னன் ஒவ்வொரு முறை சென்னை சென்ற போதும் ஈரோட்டிற்கு வந்து ரயில் மாற வேண்டும். சில சமயங்களில் இதற்கு அக்காலத்தில் ஒரிரு நாட்கள் ஆகும். அந்தச் சமயத்தில் மன்னர் பெரியாரின் விருந்தினராக பெரியார் வீட்டிலேயே தங்குவார்.

இந்தப் பழக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு, வெள்ளைக்கார போலீஸ் கமிஷனர் மற்றும் தாசில்தாரை அனுப்பி பெரியாரை வரவேற்றான் மன்னன். பெரியாருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கச் சொல்லி மன்னன் ஏற்பாடு செய்திருந்தாலும், பெரியார் அவற்றையெல்லாம் மறுத்துவிட்டு களத்தில் இறங்கி சத்தியாக்கிரகம் செய்யத் தொடங்கினார். பெரியார் சூறாவளி போல் சுற்றி வந்து சூடு பறக்கும் சொற்களால் மக்களைத் தீண்டாமைக் கொடுமைக்கெதிராகத் தட்டியெழுப்பினார்.

பத்து நாட்கள் பொறுத்துப் பார்த்த மன்னன் ஆத்திரமடைந்தான். போராட்டத்திற்கு தடையுத்தரவு பிறப்பித்தான். காவல்துறை உயர் அதிகாரிகளை அனுப்பிப பெரியாரைக் கைது செய்தான். போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு மேலும் பெருகியது. பெரியார் சிறையிலடைக்கப்பட்ட பின்னர் பெரியாரின் மனைவி நாகம்மாள், சகோதரி கண்ணம்மாள் ஆகியோர் வைக்கம் விரைந்து சென்று சத்தியாக்கிரகத்தில் குதித்தனர்.

சத்தியாக்கிரகத்தை நிறுத்துவதற்கும், பெரியார் உள்ளிட்ட போராளிகளை அழிப்பதற்கும் அங்குள்ள நம்பூதிரிகளும், சில வைதீகர்களும் சேர்ந்து ‘சத்ரு சம்ஸ்கார யாகம்’ என்ற ஒரு யாகத்தை தடபுடலாக பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவுசெய்து நடத்தினர். பெரியார் சிறைச்சாலைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது இந்த யாகம் நடத்தப்பட்டது. “சிறைச்சாலையிலிருக்கும் ராமசாமி நாயக்கரையும், மற்றவர்களையும், யாகம் நடத்தும்போது புறப்படுகிற பூதம் நேராக சிறைக்குச் சென்று அவர்களின் கழுத்தைப் பிடித்து விடும். உடனே அவர்கள் இறந்து விடுவார்கள்” என்று யாகம் நடத்திய நம்பூதிரிகள் கூறினர்.

ஆனால் எதிர்பாராதவிதமாக மன்னர் இறந்து விட்டார். பெரியாருக்கு நடத்திய யாகம் மன்னரைக் கொன்று விட்டதாக சிறையில் உடனிருந்த போராளிகள் கூறினர். அப்போது பெரியார், நம்மைக் கொல்வதற்கு மன்னர் யாகத்தை நம்பியது எவ்வளவு பெரிய மூடநம்பிக்கையோ, அதைவிட பலமடங்கு முட்டாள்தனம் அந்த யாகத்தினால் தான் மன்னர் இறந்து விட்டார் என்று சொல்வது என்று கூறினார். இவ்வாறு பல கோணங்களிலும், பலவடிவங்களிலும் வைக்கத்தில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் பல எதிர்ப்புகளையும் தாண்டி வெற்றி பெற்றது.