“இந்தியா ஒன்றென்னும் இயற்கைக்கே புறம்பான மந்திரத்தை மாய்க்க வந்த தந்தை பெரியார் தமையும் தேசக் கயிற்றினிலே சிக்க வைக்க முடியாமல் பாசக் கயிற்றினிலே பம்பரம் போல் ஆட வைத்தாய்.”

நூறாண்டு கால இந்தியத் துணைக் கண்டத்தின் அரசியலை இந்த ஆறே வரிகளுக்குள் புகுத்தியவன் யார்? காற்றோடு கலந்து காலமாக ஆகிவிட்ட கவிஞர் கண்ணதாசன்! இது அரசியல் பாடல் அல்ல; தாலாட்டுப் பாடல். தலைவர் காமராசருக்கு பிள்ளைத் தமிழ் பாணியில் கண்ணதாசன் சொல்லால் எழுப்பிய நினைவுச் சின்னம்!

இந்தப் பாடலுக்கு அற்புதமாக இசை அமைத்து – மாபெரும் கர்நாடக இசை மேதைகள் என்று சொல்லுகிறவர்களிடம் இல்லாத கமகங்கள் – பிருகாக்கள் – மேலிடத்து சஞ்சாரத்திலும் சங்கதிகள் என் பூவாணமாய் – பொங்கும் அருவியாய் – புதுப் புனலாய் நனைய வைத்த கலைஞன், “அவர்களுக்கே” உரியது என்று பெருமை கொண்டாடும் அக்ரகார வாசியின் மகனல்ல.     ஹார்பர் சண்முகம் என்கின்ற பெரியார் தொண்டனின் மகன் இராவணன். ஏராள மான ஆற்றல்களும் எவரிடமும் பணிவாக நடக்கின்ற பண்பும் – தலைவணக்கம் கொண்ட அந்த மகா கலைஞன் – பல கலைஞர்களுக்கே உரிய பலவீனமான மதுவுக்கு அடிமையாகி இளம் வயதிலேயே மரித்துப் போனான். முதலில் அவன் மதுவைக் குடித்தான். பின்னர் மது மதுவைக் குடித்தது. பின்னர் மது மனிதனையே குடித்து விட்டது.

ஹார்மோனியம் என்பது தமிழ்நாட்டு இசைக் கருவி அல்ல. அது வட இந்திய இசைக் கலைஞர்களிடமிருந்து இங்கு வந்தது என்று சொல்கிறார்கள். பழங்காலத்தில் அந்தக் கருவியை அற்புதமாகக் கையாண்டு பெயர் பெற்றவர்கள் தேவுடு அய்யர் – ஜி.ராமநாதன் போன்றவர்கள். தேவுடு அய்யர் நாடக உலகில் பிரபலமாகப் பேசப்படுகின்ற எஸ்.டி.கிட்டப்பாவினுடைய சகோதரர். ஜி.ராமநாதன் திருச்சி மலைக்கோட்டக்காரர். புகழ் பெற்ற திரை இசை அமைப்பாளர், பாடகர். காலத்தால் அழியாத ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ என்ற இன்றும் சிரஞ்சீவியாய் இருக்கின்ற பாடலுக்கு மெட்டு அமைத்தவர் அந்த ராமநாதன் தான்.

தியாகராஜ பாகவதர் திரை நட்சத்திரமாக நடித்ததற்குப் பிறகும் நாடகங்களில் நடித்தார். அப்போதெல்லாம் அவர் நாடகங்களுக்கு ஹார்மோனியம் ராமநாதன் தான். இந்த இணைக்கு அப்போது தமிழ்நாட்டில் மிகப்பெரிய வசூலும் வரவேற்பும் இருக்குமாம்.

இந்த ஹார்மோனியம் என்ற கருவியை இராவணன் தானே பாடிக் கொண்டு இசைத்ததைப் போல் அற்புதமாக வேறொருவர் செய்து நான் கேட்டதே இல்லை. கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த ஹார்மோனிய கலைஞர்கள் என்று ஒரு பத்துப் பேரைத் தேர்ந்தெடுத்தால் இராவணன் முதல் மூன்று இடத்தில் இருப்பார். பாட்டில் கவனம் செலுத்திக் கொண்டு ஹார்மோனியத்தில் விளையாடும் இந்த விரல்களுக்கு மூளையின் எந்தப் பகுதியில் இருந்து தான் உத்தரவு வருமோ என்று தெரியவில்லை. ஆனால் அதை சாதித்துக் காட்டிய ஒரு பெரும் கலைஞன்.

கலைஞனால் சோறு இல்லாமல் இருக்க முடியும். புகழும் – மக்களும் பாராட்டுமில்லாமல் இருக்க முடியாது. பகுதி நேர விளையாட்டாய் துவங்கிய மதுப் பழக்கம் முழு நேரமாகி மூழ்கி அழிந்து போனான்.

இராவணனுடைய இசை நிகழ்ச்சி என்றால் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரைக்கும் பெரும் கூட்டம் கூடும். ஆனால் இது திராவிட இயக்க நிகழ்ச்சிகளில் இருந்து சற்று வேறுபட்டதாக இருக்கும். வழக்கமாக திராவிடர் கழகத் தோழர்கள் மாத்திரம் தான் இந்த கலை நிகழ்ச்சிக்கு வருவார்கள். ஆனால் இராவணனுடைய நிகழ்ச்சிக்கு பலதரப்பட்டவர்களும் – பல்வேறு காரணங்களுக்காக வருவதை நான் பார்த்திருக்கிறேன்.

வருகிறவர்கள் சிலர் அவருடைய பாடலை ரசிப்பதற்காக மட்டும். வேறு சிலர் கட்டுரையின் துவக்கத்திலே இருப்பது போல் ஆழமான பொருட்செறிவு மிக்க அந்த கவிதைகளை ரசிப்பதற்காக வருவார்கள். காரணம் கண்ணதாசன் கவிதையைப் போலவே வேறு அருமையான கவிதைகளை இராவணன் அற்புதமான மெட்டுகளில் பாடுவார். முறையாக இசை பயின்றவர்களையும் – பாமர மக்களையும் ஒரு சேர ஈர்த்த அந்தக் கவர்ச்சிகரமான மெட்டுக்களை யார் அமைத்தார்கள் என்பது கடைசி வரைக்கும் தெரியவில்லை. ஆனால் எல்லாம் நானே என்று இராவணன் பொய் சொல்லவும் மாட்டான். என் பேரில் மிகுந்த அன்பும் – மரியாதையும் வைத்திருந்த தோழன்.

ஏராளமான கழகத் தோழர்களுக்கு ஒரே நேரத்தில் இராவணன் அறிமுகமானது ஒரு புதுமையான நிகழ்ச்சி. பெரியார் பிறந்த நாள் விழா நிகழ்வு ஒன்று. அப்போதெல்லாம் இன்று போல் யாரோ ஏற்பாடு செய்த வேனில் கட்சிக்காரர்கள் இலவசமாக ஏறிக் கொண்டு வருகிற பழக்கம் கிடையாது. அவரவர்களே வசூலித்து பேருந்து அல்லது சீருந்து ஏற்பாடு செய்து கொண்டு வருவார்கள். ஊர்வலத்தின் போது அவற்றின் மேலே உட்கார்ந்து கொண்டு வந்து கழகப் பிரச்சார முழக்கங்களை எழுப்பிக் கொண்டே போவார்கள். சில பேர் வேடமணிந்து வருவார்கள். பெரியாரினுடைய அலங்கார வண்டி தொலைவில் அதற்குப் பின்னால் வரும்.

அப்படி மேற்சொன்ன நிகழ்ச்சி ஒன்றில் அவருக்கு சம்மந்தமில்லா வேறொரு மாவட்டக்காரர்கள் ஏற்பாடு செய்திருந்த பேருந்தில் ஹார்மோனியத்துடன் இராவணன் அவருடைய தபேலாக்காரர் இருவர் மட்டுமே வந்தார்கள். அந்த கம்பீரமான குரல் – பாடல் வரிகள் எல்லோரையும் நின்ற இடத்திலேயே நிலைகொள்ள வைத்தன.....

“பெரியார் வரார் பெரியார் வரார் பெரும் படையோடு

எத்தர்களே – பித்தர்களே விலகி ஓடுங்கடா.....”

பெரியார் அலங்கார ஊர்தியில் பின்னே வர – ஆர்ப்பரிக்கும் கூட்டம் அவர் முன்னே வர அதற்கு கட்டியம் கூறுவதைப் போல் அமைந்த இந்த பாடல் எல்லோரையும் எழுச்சி கொள்ள வைத்தது. அதன் பின்னர் நாடெங்கும் இராவணனுடைய இசை நிகழ்ச்சிகள். திராவிடர் கழகம் அப்போது காமராசரை ஆதரித்துக் கொண்டிருந்த காலம். கவிஞர் கண்ணதாசன் மேலே சொன்ன புகழ் பெற்ற தன்னுடைய காமராசர் தாலாட்டை ஏடு ஒன்றில் எழுதியிருந்தார்.

தங்க மணி மாளிகையில் தனி வயிர பந்தலிட்டு

திங்களென்றும் – தென்றலென்றும்

சீராட்டிப் பேருரைத்து...........

என்று துவங்கும் இந்தப் பாடலுக்கு இராவணன் என்றும் இளமையான இசையை அமைத்துப் பாடினார். பெரியாரின் ஆணைப்படி காமராசரைப் போற்றித் திராவிடர் கழகத் தொண்டர்கள் இந்த பாடலைப் பாடச் சொல்லி வேண்டுகோள் கடிதத்தோடு ரூபாய் நோட்டுக்களை இணைத்து அனுப்புவார்கள். அப்போதும் காங்கிரஸ்காரர்கள் இது போன்ற நல்ல காரியங்களில் கலந்து கொண்டதை நான் பார்த்ததில்லை.

இராவணனுடைய இசை நிகழ்ச்சி என்.ஜி.ராஜன், பொன்னம்மாள் சேதுராமன் – அணைக்கரை டேப் தங்கராசு போன்றவர்களினுடைய நிகழ்ச்சியைப் போல் பேச்சு – உரையாடல் அதிகம் இருக்காது. இடையே சில சில நிமிடங்கள் பத்திரிகை செய்திகளைச் சொல்வார். உடனே சிறிது நேரம் ஹார்மோனியம் இசைப்பு – பாட்டு துவங்கி விடும். அவருடைய பாடலின் ஒவ்வொரு வரியும் ஆழமான கொள்கை நயமும் – வலிவும் உடையதாக இருக்கும். அவற்றிலும் ஒன்று – இரண்டினைத் தவிர மற்ற பலவற்றை எழுதியவர்கள் யார் என்று நாங்களும் தெரிந்து கொள்ள முயன்றதில்லை. அவரும் சொன்னதில்லை.

இராவணனுடைய நிகழ்ச்சிக்கு வந்த பெரும் கூட்டமும் கூட்டங்களில் அவருக்கு கிடைத்த அன்பளிப்புகளுமே அவருக்கு எதிராகி விட்டன. காலஞ்சென்ற அவருடைய தந்தை சென்னை ஆர்பர் சண்முகம், எம்.கே.டி.சுப்ரமணியம் – மயிலை லோகநாதன் போன்ற திராவிடர் கழகப் பரப்புரையாளர்கள் – களப் பணியாளர்களுக்கு நெருக்கமாக இருந்தவர். ஆனால் எம்.கே.டி.சுப்ரமணியமும் – லோகநாதனும் பெரியாருக்கு எதிரானவராக அடையாளம் காட்டப்பட்ட குத்தூசி குருசாமிக்கு நெருக்கமானவர்கள். இந்த பின்னணியும் இராவணனுக்கு எதிராக அமைய அவர் குழு சாயம் பூசப்பட்டு முடிந்து போனார்.

(‘மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு’ நூலிலிருந்து)

சுயமரியாதை பதிப்பகம், உடுமலைப்பேட்டை