நாகை எஸ்.எஸ்.பாட்சா பெரியார் இயக்கத்தின் இளம் துருக்கியன். கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த இஸ்லாமிய சமூகத்தில் பிறந்திருந்தாலும் பெரியாரின் கொள்கைக்குத் தன்னால் கிஞ்சிற்றும் குறைவு நேராமல் வாழந்தவர். திராவிடர் இயக்கத்தின் பேச்சாளர்களினுடைய பேச்சு ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாணி. அழகு நடை – அலங்கார அடுக்கு – கவிதைகள் – ஆங்கில மேற்கோள்கள் எதுவும் இல்லாமல் உலக வரலாற்றையே நாகையினுடைய குக்கிராமங்களில் வாழ்கின்ற எழுத்தறிவில்லாத ஏழைக்குப் புரிகிற மாதிரி பெரிய தத்துவங்களைச் சொல்லுகிற அற்புதமான பேச்சாளர் அவர். தமிழ்நாட்டில் நாற்பதாண்டுகளுக்கு மேலாக மேடை பேச்சாளராய் இருக்கின்ற நான் விரும்பிக் கேட்கிற பேச்சாளர்கள் மூத்த தலைமுறையிலேயும் – இளைய தலைமுறையிலேயும் சிலர் இருக்கிறார்கள். பாட்சா என்னை கவர்ந்த மூத்த தலைமுறை பேச்சாளர்களில் ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் இருப்பார்.

பாவா நவநீதகிருஷ்ணனோடு நாகை வட்டாரத்தின் திராவிடர் விவசாய சங்கத்தின் களப்பணியாளராக பணியாற்றியவர் பாட்சா. நாகை வட்டாரத்தில் அனைவருக்கும் தெரிந்த பெயர் பாட்சா. நிறைய படிக்கிறவர். படித்ததை நினைவில் வைத்து கேட்கின்றவர்களுடைய வாங்கும் சக்திகேற்ப அழகாகச் சொல்கிறவர். மிகப் பெரிய சமயப் போராளிகளையும் – வரலாறுகளையும் நடைமுறை அரசியலோடு இணைத்து தீர்வுகளைச் சொல்லுகின்ற ஒரு அருமையான பாணி பாட்சாவினுடையது.

பாட்சா வாய்ச் சொல் வீரரல்ல. இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஆண், நாத்திகனாக – சுயமரியாதைக்காரனாகக் கூட இருக்கலாம். ஆனால், இஸ்லாமிய சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டு தன் வீட்டுப் பெண்களையும் அழைத்து வருவது என்பது எண்ணிப் பார்க்க முடியாத ஒன்று. மிக மாறிவிட்ட இன்றைய சமூகச் சூழலிலேயே அதை செய்ய முடியவில்லை. புரட்சிகர கம்யூனிஸ்டுகளான இஸ்லாமியத் தோழர்கள் கூட தங்கள் மார்க்கக் கட்டுபாடுகளை மீறுவது பெரும் பிரச்சனையாக இருக்கிறது.

வங்கதேசத்தில் ஒரு தீவிர கம்யூனிஸ்டு இருந்தார். அவருடைய பெயர் மோனிசிங். அவர் ஒரு முறை சொன்னார். “நான் ஒரு சரியான கம்யூனிஸ்டு. அல்லாவின் பேரிலேயும் – திருத்தூதுவரின் பேரிலேயும் நம்பிக்கையுள்ள கம்யூனிஸ்டு என்றார்!” உங்களுக்குப் புரியவில்லையா?

இஸ்லாமியர் அல்லாத பெண்கள் தாலி அணிவதை அடிமைத்தனம் என்று பெரியார் சொன்னார். அதனால் பலர் தங்கள் திருமணங்களில் தாலி அணிவிப்பதே இல்லை. முற்காலத்தில் அணிவித்த சிலரும் பின்னர் மேடைகளில் அடிமைச் சின்னத்தை அகற்றுகிறோம் என்று சொல்லி தாலியை கழற்றிப் பெரியாரின் முன்னால் போட்டிருக்கிறார்கள்.

அதைப்போல் இஸ்லாமியப் பெண்கள் தலையோடு உடலை மூடி பாதி முகத்தை மாத்திரம் வெளியே காட்டும் ‘பர்தா’ அணியும் வழக்கமும் அப்போது முற்போக்காளர்களால் ஒப்புக் கொள்ளப்படவில்லை. பாட்சா நாகையில் நடைபெற்ற பிரம்மாண்டமான கூட்டம் ஒன்றில் தன்னுடைய மனைவியை மேடையில் ஏற்றி அவர் அணிந்திருந்த பர்தாவை கழற்றிப் போடச் செய்தார். இது நடந்தது சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன்னால்! ஆழமான மத நம்பிக்கையுள்ள – இஸ்லாமிய சமயக் கோட்பாடுகளை அணு அளவும் பிசகாத – இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற நாகை பகுதியில் இது எண்ணிப் பார்க்க முடியாதது. கற்பனை செய்தாலே பயமாய் இருக்கும். ஆனால் சொலல் வல்லன் – செயல் வல்லன் – பெரியார் தொண்டன் பாட்சா செய்து காட்டினார்.

பாட்சா தன்னுடைய பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதிலேயும் இஸ்லாமிய மரபுகளைத் தாண்டிய உலக பகுத்தறிவாளானாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். அவருடைய முதல் மகனின் பெயர் ரூசோ!

பாட்சா கல்லூரியில் படித்தவர் அல்ல. ஆனால் சிவில் கிரிமினல் சட்டங்களுடைய பிரிவுகள் – உட்பிரிவுகள், அது குறித்த அண்மைக் காலத் திருத்தங்கள், உயர்நீதிமன்ற – உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இவைகள் எல்லாம் விரல் நுனியில் வைத்திருப்பார். அவைகளை ஆங்கிலத்தில் படித்து மனதில் வாங்கிக் கொண்டு பாட்சா தமிழில் விளக்குகிற முறை தேர்ந்த வழக்கறிஞர்களுக்கே வராது. வக்காலத்து இல்லாமல் வாழாவெட்டியாய் இருந்த வக்கீல் தலைவர்களுக்கு பாட்சாவின் பேரிலே இருந்த எரிச்சலுக்கு இதுவும் ஒரு காரணம்.

பாட்சா வெளியூர் கூட்டங்களுக்கு வந்தால் தங்கும் விடுதிகளை எதிர்பார்க்க மாட்டார். போட்டிருக்கிற கருப்புச் சட்டை வேட்டியோடே திருநெல்வேலி வரை வருவார். கூட்டங்களில் பேசுவார். தோழர்கள் சொல்லுகிற இடங்களில் படுத்துக் கொள்வார். வழிச்செலவுக்கு பணம் வாங்குகிறபோது கூட கண்டிப்பாக இருக்க மாட்டார். அதே கருப்பு சட்டை வேட்டியோடு ஊருக்குப் போவார்.

பெரியார் இயக்கத்திலேயும் – பெரியார் வாழ்க்கையிலேயும் நடைபெற்ற சம்பவங்களை (இது வரை அச்சில் வெளிவராத) நானே பலவற்றை அவரிடம் கேட்டிருக்கிறேன். அவைகள் எல்லாம் பதிவு செய்யப்பட வேண்டியவை. காரணம் பாட்சா யாரிடத்திலேயும் கையேந்தி நின்றவர் அல்ல. “அலுவல் போனால் போகட்டும். சலுகை போனால் போகட்டும். என் தன்மானம் நிலையாய் வாழட்டும்” என்று இருந்தவர்.

தொழிற்சங்க இயக்கத்தில் பெரியார் இயக்கத்தின் பங்கு மறக்க முடியாதது. கம்யூனிஸ்டுகளுக்கும் முந்தையது. சோதனையான தலைமறைவு இயக்க காலங்களில் கம்யூனிஸ்டு இயக்கத் தலைவர்களை கோழி முட்டையை அடைகாப்பதைப் போல் காத்தவர்கள் பெரியார் இயக்கத் தோழர்கள். கம்யூனிஸ்டுகள் பட்ட துயரங்களை கம்யூனிஸ்டுகளே வெளியில் சொல்ல முடியாமல் வாயிருந்தும் ஊமையாக இருந்தபோதும் அவர்களுக்காகப் பேசியவர்கள் திராவிடர் இயக்கத்துக்காரர்கள். அப்படிப்பட்ட பல்லாயிரக்கணக்கான திராவிடர் இயக்கத் தொண்டர்களில் பாட்சா ஒருவர் என்பதை கம்யூனிஸ்டுகள் மறந்திருக்கலாம்; கருஞ்சட்டைக்காரர்கள் சிலர் மறைத்திருக்கலாம். ஆனால் பாட்சா என்கின்ற தொண்டன் காற்றாலும் – கரையாத கலங்கரை விளக்காக நிற்கிறவன்.

பாட்சா பேசுவதிலேயும் – பழகுவதிலேயும் மென்மையானவர். கடுமையாக வாதம் செய்கிறபோது கூட கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டார்; மென்மையாக பேசுவார். ஆனால் சமரசங்களுக்கு ஒருபோதும் ஒத்துப் போகமாட்டார். திராவிடர் கழகத்தின் பிளவுக் காலங்களில் பாட்சாவை மணியம்மை அணியோடு ஈர்த்துக் கொள்வதற்காகவும் – இறுத்திக் கொள்வதற்காகவும் நான் செய்த முயற்சிகள் தோற்றுப் போயின். “என் பாச்சா – பாட்சாவிடம் பலிக்கவில்லை.” அதற்காக நாகையில் நான் தங்கியிருந்த இரண்டு நாட்களும் பாட்சா தான் எனக்கு மூன்று நேரமும் உடன் இருந்து உணவளிப்பார். மாலையில் பீச்சுக்குப் போவோம். ஆனால் அவரை இழுக்கும் முயற்சி தோற்றுப் போனது. தோல்வியோடு திரும்பிய எனக்கு அப்போதெல்லாம் அபூர்வமாகக் கிடைக்கும் – எனக்குப் பிடித்த வெளிநாட்டு யார்ட்டிலி பவுடர் டப்பா ஒன்றை கையில் கொடுத்து வழியனுப்பி வைத்தார். இன்றைக்கும் அந்த நட்பை நினைத்தால் கண் கலங்குகிறது. அவருடைய கொள்கை உறுதிப்பாட்டை நினைத்தால் மனம் கலங்குகிறது.

(‘மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு’ நூலிலிருந்து)

சுயமரியாதை பதிப்பகம், உடுமலைப்பேட்டை