அய்ரோப்பாவில் உருவான பல நவீனக் கண்டுபிடிப்புகளை ஆங்கிலேயர்கள் தம் நலனுக்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தினர். இவ்வாறு அறிமுகமான நவீனத்துவக் கூறுகளில் இரயில் போக்குவரத்தும் ஒன்று. ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட இச்செயலை, “அவர்கள் தங்களை அறியாமலேயே வரலாற்றின் கருவியாக மாறினார்கள்” என்று மார்க்ஸ் குறிப்பிடுவார்.

தமிழ்நாட்டிலும் இரயில் போக்குவரத்து ஆங்கிலேயர்களால் அறிமுகமானது. மதராஸ் கியாரண்டிடு ரயில்வே கம்பெனி என்ற ஆங்கில நிறுவனம் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியுடன் 1852 டிசம்பர் 22 இல் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டது. இதன் அடிப்படையில் சென்னையிலிருந்து ஜோலார் பேட்டைக்கு இரயில் பாதை அமைக்க சர்வே மேற்கொண்டது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக தற்போது வாலாஜாசாலை என்றழைக்கப்படும் ஆற்காடுக்கு, ராயபுரத்திலிருந்து 105கி.மீட்டர் தொலைவிற்கு 1856 இல் இரயில்பாதையை அமைத்தனர். சென்னை ராயபுரத்தில் இருக்கும் பழைமை வாய்ந்த கட்டிடம், தமிழ்நாட்டின் முதல் ரயில் நிலையத்தின் நினைவுச் சின்னமாக இன்றும் காட்சியளிக்கிறது.

இதனையடுத்து 1862 இல் ‘கிரேட் சவுத் இண்டியன் ரயில் கம்பெனி’ என்ற ஆங்கில நிறுவனம் நாகப்பட்டினத்திற்கும் திருச்சிக்கும் இடையே இரயில் பாதையை அமைத்தது. பின்னர் 1868 - இல் இப்பாதை ஈரோடு வரை விரிவுபடுத்தப்பட்டது.

ஜில்லா போர்டு (District Board) என்ற நிர்வாக அமைப்பு ஆங்கில ஆட்சியில் உருவாக்கப்பட்டிருந்தது (பஞ்சாயத்து ஒன்றியங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் இது மறைந்தது) தஞ்சை மாவட்ட ஜில்லா போர்டு 1894 ஏப்ரல் 2 ஆம் நாளிலிருந்து 180 கி.மீ தொலைவிலான ரயில் போக்குவரத்தை நடத்தத் தொடங்கியது. வருவாய் ஈட்டும் வழிமுறையாக இது இருந்தமையால் இம்மாவட்டத்தைப் பின்பற்றி 1915-இல் கோவை மாவட்ட ஜில்லா போர்டும், 1917-இல் சேலம் மாவட்ட ஜில்லா போர்டும் தம் மாவட்ட எல்லைக்குள் ரயில் போக்குவரத்தை நடத்தத் தொடங்கின.

அடித்தள மக்களின் அனுபவமும் வியப்பும்

இவ்வாறு தமிழ்நாட்டில் இரயில் போக்கு வரத்தை அறிமுகம் செய்த போது இரயில் பாதைகளை அமைக்க நம்மவர்களைப் பயன் படுத்திக் கொண்டனர். அப்போது அவர்களைப் பிரம்பால் அடித்து வேலை வாங்கிய கொடுமையைக் கோவை மாவட்டத்து நாட்டார் பாடலொன்று,

“ஒரு தட்டு ஏலேலோ மண்ணெடுத்து ஐலசா

மண்ணெடுத்து ஐலசா

நாம் போட்டே ஏலேலோ

ரயில்ரோடு ஐலசா

ரயில்ரோடு ஐலசா

குடுக்கிறது ஏலேலோ முக்காத்துட்டு ஐலசா

முக்காத்துட்டு ஐலசா

வீசுறது ஏலேலோ மணிப் பெரம்பு ஐலசா

மணிப் பெரம்பு ஐலசா”

என்று குறிப்பிடுகிறது.

1868 - இல் கரூருக்கும் ஈரோடுக்கும் இடை யில் இரயில் பாதை அமைத்து அதில் ரயில் ஓடத் தொடங்கும்போது ரயிலை வரவேற்கும் வகையில் அதை ‘இரயில் சாமி’ என்றழைத்து ரயில்பாதை யில் பொங்கல் வைத்த அப்பகுதி மக்கள் ரயிலின் வருகையைக் கண்டு பதறிப் போய் ஓடிய நிகழ்வைப் பேராசிரியர் நீலகண்டன் பின்வருமாறு பதிவு செய்துள்ளார் :

“கரூர்-ஈரோடு இணைப்பில் முதல் இரயில் சேவை தொடங்கப்படுவதைப் பற்றிக் கிராம அதிகாரிகளுக்கு முன்கூட்டித் தகவல் கொடுக்கப் பட்டது. கிராமத்தின் பெரும்பாலானவர்கள் கிராமத்திலிருந்து குறுக்கு வழியில் 3.கி.மீ சென்று, இப்போதைய மூர்த்திபாளையம் ஸ்டேசனுக்குச் சுமார் 2 கி.மீ முன்னால் பொங்கல் வைத்து இரயில்சாமி கும்பிடக் காத்திருந்திருக்கிறார்கள்.  இரயில்சாமி அவர்கள் பொங்கலை ஏற்றுக் கொள்ளக்  கூட்டமிருக்கு மிடத்திலெல்லாம் நின்று நின்று செல்லும் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள்! ஆனால் வழி நெடுக இப்படிப் பொங்கல் பானை களோடு கூட்டம் காத்திருந்ததால் இரயில் வண்டி, ஸ்டேசன்களில் மாத்திரமே நின்று சென்றிருக்கிறது. அதற்கு முன்பு, மனித அல்லது மிருகச் சக்தி யில்லாமல் ஓடும் எந்த வாகனத்தையும் அவர்கள் கண்டதில்லை. எனவே இரயில் வண்டி நிற்காமல் சென்றபோது அவர்களுக்குப் பயம் வந்துவிட்டது. காத்திருந்தவர்கள் அவசர அவசரமாகத் தண்ட வாளத்திலேயே தேங்காய் உடைத்து, ஓடும் ‘ரத’த்திலிருந்து தூரத்தில் விலகியிருந்து சாமி கும்பிட்டுத் திரும்பி வந்திருக்கிறார்கள்.”

ஒரு ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப் பட்டதும், அடுத்த ரயில் நிலையத்திற்குத் தன் சொந்த தந்திப் போக்குவரத்தின் வாயிலாக அதைத் தெரிவிக்கும் முறை நீண்டகாலம் ரயில் நிர்வாகத் தில் வழக்கிலிருந்தது. ஒன்றன் உருவத்தைக் காணாமல் அதன் வருகையை அறிய உதவும் தந்திச் செய்தி வியப்பை அளித்த நிலையில்,

“வண்டி வருதேடி

வாடிப்பட்டி மந்தையிலே

தந்தி வந்து பேசுதடி

சமயநல்லூர் டேஷனிலே”

என்று பாடி தம் வியப்பை வெளிப் படுத்தியுள்ளனர்.

சிதம்பரம் செல்ல ரெயிலில் பயணம் செய்த தமிழறிஞர் உ.வே.சாமிநாதையர் ரெயில் பயணத்தின் சிறப்புக் குறித்து மூன்று செய்யுள்களை அப்போது எழுதியுள்ளார். அவற்றுள் நினைவில் நின்ற ஒரு வெண்பாவின் முதற் பகுதியை,

‘உண்ணலாம் தூசும் உடுக்கலாம் நித்திரையும்

பண்ணலாம் நூல்கள் படிக்கலாம்’.....

(தூசு - ஆடை)

என்று குறிப்பிட்டுள்ளார். கற்றவரிடமும் ரெயில் பயணம் ஏற்படுத்திய வியப்பை இவ் வெண்பா வெளிப்படுத்தி நிற்கிறது.

இந்திய நவீனத்துவம் நில உடைமைச் சமுகத்தின் அழிவின் மீது கட்டமைக்கப்பட வில்லை.  இதனால்  இந்திய நில உடைமைச் சமுகத்தின் முக்கிய அங்கமான தீண்டாமையும் ஒரு பக்கம் தொடர்ந்தது.

அனைத்துச் சாதியினரும் ஒன்றாகப் பயணம் செய்ய இரயில் பயன்படுவதன் அடிப்படையில் சாதியத்தை அது தகர்க்கும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. ஆனால் பெரியாரின் குடியரசு இதழில் வெளியான செய்தியொன்று இரயில் பயணத்திலும் தீண்டாமைக் கொடுமை தொடர்ந்ததைப் பதிவு செய்துள்ளது. முறையாகப் பயணச் சீட்டு வாங்கிப் பயணம் செய்த தாழ்த்தப்பட்ட சமுகம் சார்ந்த குடும்பமொன்றை பயணச் சீட்டுப் பரிசோதகர் ஒருவர் வழியிலுள்ள இரயில் நிலைய அதிகாரியின் துணையுடன் கீழே இறக்கி விட்டு விட்டாராம்.

பயணிகளின் நலனுக்காக பெரிய இரயில் நிலையங்களில் இரயில்வே நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட உணவு விடுதிகளிலும் சாதியம் நிலை பெற்றிருந்தது. தஞ்சை இரயில் நிலையத்தில் இருந்த உணவு விடுதி குறித்துப் பெரியாரின்குடியரசு இதழில் (06.06.1926) பின்வரும் விமர்சனக் கட்டுரை வெளியாகியுள்ளது:

“தஞ்சாவூர் இரயில்வே ஸ்டேஷனில் உள்ள இந்தியர் சாப் பாட்டு விடுதியை நாம் இவ்வாரம் பார்க்க நேர்ந்தது. அங்கு மாடியின் மேல் கட்டப் பட்டுள்ள இடத்தில் சமையல் செய்யும் பாகம் போக பாக்கியிடத்தில் நாலில் மூன்று பாகத்தைத் தட்டி கட்டி மறைத்து பிராமணர்களுக்கென்று ஒதுக்கி வைத்து விட்டு, நாலில் ஒரு பாகத்தை ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’, ‘மகமதியர்’, ‘கிறிஸ்தவர்’, ‘ஆங்கிலோ இந்தியர்’ என்கின்ற பிராமணரல்லாத வருக்கென்று ஒதுக்கி வைத்து அதிலேயே எச்சிலை போடுவதற்கும், கை  கழுவுவதற்கும், வாய் கொப் பளிப்பதற்கும், விளக்குமாறு, சாணிச்சட்டி மற்றும் கூடை முறம் வைப்பதற்கும் எச்சில் பாத்திரம், சமையல் பாத்திரம் கழுவுவதற்குமாக ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்வளவு அசிங்கங் களுக்கும் இந்த இடமே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இவைகளைப் பற்றி யாராவது கேட்டால், கேட்பவர்களை வகுப்பு துவேஷத்தைக் கிளப்பு கிறார்கள், இது மிகவும் அற்பத்தனமானது என்று நமது பிராமணர்கள் சொல்லுகிறார்கள்; எழுகிறார்கள். அத்தோடு மாத்திரமல்ல; அவர்கள் தயவில் பிழைக்கும் பிராமணரல்லாத பத்திராதி பர்களும் கூட ஒத்துப்பாடுகிறார்கள்.

ரயிலில் பிரயாணம் செய்து ரயில்வே கம்பெனிக்குப் பணம் கொடுக்கும் ஜனங்கள் பெரும்பாலும் எந்த வகுப்பார் ? அவர்களின் எண்ணிக்கையென்ன?

நூற்றுக்கு தொண்ணூற்றேழு பேர் பிராமணரல்லாதாராயும் நூற்றுக்கு மூன்று பேர் பிராமணர் களாயிருந்தும், உள்ள இடத்தில் நூற்றுக்கு எழுபத்தைந்து பாகத்தை அவர்களுக்கு எடுத்துக் கொண்டு நூற்றுக்கு இருபத்தைந்து பாகத்தை நமக்குக் கொடுத்திருப்பதோடு அதிலேயே எச்சியிலை, சாணிச்சட்டி, விளக்குமாறு முதலிய வைகளையும் வைத்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் கைக்கு ராஜீயபாரம் வந்து விட்டால் இந்தப் பிராமணர்கள் பிராமணரல்லாதாருக்கு எங்கு இடம் ஒதுக்கி வைப்பார்கள்? கக்கூசுக்கு பக்கத்திலாவது ஒதுக்கி வைப்பார்களா?”

இந்நிலைக்கு எதிராகப் போராடிப் பெரியார் வெற்றி பெற்ற பின், தம்மை உயர்சாதியாகப் பாவித்துக் கொண்டோர் இரயில் நிலைய உணவு விடுதிக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டனர் என்ற செய்தியும் பின்னர் வெளியாகியுள்ளது.

இதுகாறும் இரயிலை மையமாகக் கொண்டு பாடல் வடிவிலான குறுநூல்கள் சிலவும் வெளியாயின. இது குறித்து அடுத்த இதழில் காண்போம்.

(செம்மலர் ஜூலை 2010 இதழில் வெளியானது)