மிருகங்கள் நாலு பக்கம் ஓடியாடி பெட்டையைத் தேடிச் சென்று குடும்பம் நடத்தும். பூக்களால் அப்படி ஒன்றை ஒன்று நாடிச் சென்று இனப்பெருக்கம் செய்ய முடியாது. இருந்தாலும் காரியத்தை சாதித்துக் கொள்ள பூக்கள் நிறைய தந்திரங்களைக் கையாளுகின்றன.

flowerஆண் பூக்கள் மகரந்தங்களை காற்றில் கலந்து விடுகின்றன. காற்றில் கலந்து மிதக்கும் மகரந்தம் பெண் பூவை அடைந்து அதைக் கருத்தரிக்க வைக்கும். இந்த முறையில் மகரந்தங்களின் சேதாரம் அதிகமாக இருக்கும். சில பூக்கள் பூச்சிகளை தபால்காரர்களைப் போல பயன்படுத்துகின்றன. பூச்சிகளுக்குப் பிடித்தமான தேனை வழங்கிக் கவருகின்றன. தேன் பருகும் வண்டுகள் கூடவே மகரந்தங்களையும் சுமந்து கொண்டு பெண் பூவை தேன் குடிக்கச் செல்லும்போது அதனிடம் வழங்கி விடுகின்றன.

ஆர்க்கிட் வகையைச் சேர்ந்த செடிகளின் பூக்கள் வினோதமான உத்தியைக் கையாளுகின்றன. ஒரு பூ குறிப்பிட்ட பூச்சி இனத்தின் பெண் பூச்சியைப் போல வாசனையை வெளியிடுகிறது. மோப்பம் பிடித்துக்கொண்டு வரும் ஆண்பூச்சி, பூவை பூச்சி என நினைத்து செயல்படும்போது உடலெங்கும் மகரந்தத்தைப் பூசிச்கொண்டதுதான் மிச்சமாகிறது. அதே தவறை திரும்ப இன்னொரு பூவில் செய்யும்போது அந்தப் பூவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது

இந்த தந்திரம் ஆபத்தானதாயிற்றே என்று பயிரியல் அறிஞர்கள் கருதுவதுண்டு. காரணம், குறிப்பிட்ட பூச்சியின் உறவை நம்பி வாழ்வதைக் காட்டிலும் பலவகை பூச்சிகளின் நட்பு பலமடங்கு இலாபமாக இருக்குமே என்பது அவர்கள் நினைப்பு. ஆனால் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் பூக்கள் தமக்கென்று பிரத்யேகமான தபால்காரப் பூச்சியை மகரந்தத்தை பார்சல் செய்து டெலிவரி செய்வதன் மூலம் மகரந்த சேதாரத்தைத் தவிர்க்கின்றன. அதே சமயம் நிச்சயமான பலனை அடைகின்றன என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.

படத்தில் காண்பது ஓப்ஃபிரிஸ் ஆக்சிரிங்க்கஸ் என்ற ஆர்க்கிட் மலர், இத்தாலியில் பூப்பது.

-     முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)