தீவிற்குள் பாம்புகள் நுழைந்ததால் அழிந்துபோன ஓர் அபூர்வப் பறவையை மீட்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இப்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா கேன்சஸில் (Kansas) 3,000 விலங்குகளைக் கொண்ட புகழ் பெற்ற செட்விக் கவுண்டி விலங்குகாட்சி சாலையில் (Sedgwick County Zoo) கப்பல் சரக்குப் பெட்டகத்தில் பார்வைக்கு வித்தியாசமான வாகனத்தைப் போல தோற்றமளிக்கும் பேழைகள் காட்சி தருகின்றன. இப்பேழைகளே விஞ்ஞானிகளுக்கு இந்தப் பறவையினத்தைக் காக்கும் முயற்சியில் உதவும் முக்கிய பொருட்கள்.

பசுபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள குவாம் (Guam) தீவில் தற்செயலாக இரண்டாம் உலகப் போரின் இறுதியில் நுழைந்த பழுப்பு நிற மரப் பாம்புகள் (Brown tree snakes) காலப்போக்கில் அங்கு வாழ்ந்து வந்த எண்ணற்ற பறவையினங்கள், பாலூட்டிகள் மற்றும் பல்லியினங்களை முற்றிலுமாக அழித்தன. அழிந்த பறவையினங்களில் குவாம் மீன்கொத்தி (Guam King fisher), குவாம் ரயில் (Guam rail) மற்றும் குவாம் ஈ பிடிப்பான் (Guam fly catcher) ஆகியவை அடங்கும்.

நான்கிலிருந்து ஒன்பது

பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் குவாம் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளுடன் இணைந்து சிஹெக் (Sihek) என்றும் அழைக்கப்படும் வண்ணமயமான குவாம் மீன்கொத்தியினத்தைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குஞ்சுகளை ஆரோக்கியமாகப் பாதுகாக்க பேழைகள் பயன்படுகின்றன. அமெரிக்காவின் மற்ற விலங்குகாட்சி சாலைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட முட்டைகள் பொரிந்து உருவான நான்கு பறவைகள் இங்கு இப்போது பாதுகாக்கப்பட்டு வருகின்றன.guam kingfisherஇவற்றின் எண்ணிக்கை விரைவில் ஒன்பதாக உயரும் என்று இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள செட்க்விக் கவுண்டி விலங்குகாட்சிசாலை மற்றும் ஸ்மித்சோனியன் உயிரியல் கழக ஆய்வாளர்களுடன் இணைந்து பணியாற்றும் விப்ஸ்னேட் (Whidsnade) விலங்குகாட்சி சாலையின் ஆய்வாளர் க்ளேர் மக்ஸ்வீனி (Claire McSweeney) கூறுகிறார்.

வரும் ஒரு சில ஆண்டுகளுக்கு இத்தகைய செயல்பாடுகள் தொடரும். பறவைகளின் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகமானவுடன் அவை காட்டில் அவற்றின் இயற்கையான வாழிடத்திற்கு அனுப்பி வைக்கப்படும். 1970, 1980கள் வரை பழுப்பு நிறப் பாம்புகள் தீவின் உயிரினங்களை அழிக்கும் வேகம் மெதுவாகவே இருந்தது. பிறகே இந்த ஆக்ரமிப்பு உயிரினங்கள் இங்கு மட்டுமே வாழ்ந்த பல உயிரினங்களைக் கொல்ல ஆரம்பித்தது.

அப்போதே இதன் தீவிரம் உணரப்பட்டது. இந்த உயிரினங்களின் எண்ணிக்கை ஆபத்தான அளவிற்கு குறைவது சூழலியலாளர்களை விழிப்படையச் செய்தது. இந்தப் பாம்புகள் மரமேறுவதில் நிபுணர்கள். நாளின் பெரும்பாலான நேரமும் இவை மரக்கிளைகளின் உச்சியிலேயே குடியிருக்கும். இவை பறவைகள், அவற்றின் முட்டைகள், சிறிய பாலூட்டிகளை உண்டே அழித்தன. இது தீவின் உயிர்ப் பன்மயத்தன்மையை மோசமாகப் பாதித்தது.

மிஞ்சியிருந்தவை

குவாம் தீவின் மீன்கொத்தியினமே கிட்டத்தட்ட அழிந்து போய்விட்ட நிலையில் மிஞ்சியிருந்த 29 பறவைகள் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு பாதுகாக்கப்பட்டன. இதன் பலனாக பாதுகாக்கப்பட்ட நிலையில் இவற்றின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்தது. இதன் மூலம் கிடைத்த முட்டைகள் செட்விக் காட்சிசாலைக்கு அனுப்பப்பட்டு பொரிக்கப்பட்டு இளம் குஞ்சுகள் வரும் ஆண்டில் காட்டில் விடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று இதில் பணிபுரியும் லண்டன் விலங்கியல் சங்க காட்சிசாலையின் (ZSL) சூழலியலாளர் மற்றும் மீன்கொத்தி மீட்புக் குழு உறுப்பினர் ஜான் யூவன் (John Ewen)கூறுகிறார்.

மக்ஸ்வினி மற்றும் அவரது குழுவினரே முட்டைகள் பொரித்து குஞ்சுகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யும் பணிக்குப் பொறுப்பானவர்கள். இந்த இன மீன்கொத்தியின் முட்டை பெரிதாக இருப்பதில்லை என்பது இதில் ஒரு சிக்கல். குஞ்சுகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன. அவற்றின் ஆரோக்கிய நிலை கவனிக்கப்படுகிறது. நோய்களற்ற நிலையில் உள்ளது உறுதி செய்யப்படுகிறது. வனத்திற்கு செல்வதற்குரிய தயார் நிலையை அடையும்வரை இவை பராமரிக்கப்படுகின்றன. வளர்ச்சி அடைந்தவுடன் இவை குவாமிற்கு அனுப்பப்படாது.

பமைரா

குவாமில் இன்னமும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாம்புகள் வாழ்கின்றன. இதனால் ஆய்வாளர்கள் இப்பறவைகளை ஒரு புது வீட்டுக்கு குவாமில் இருந்து 6,000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பமைரா (Palmiera) தீவிற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளனர். இப்பசுபிக் தீவு இப்பறவைகளுக்கு பாதுகாப்பான இடம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடம் மீன்கொத்திகளுக்கு எதிரிகள் இல்லாத பகுதி. இங்குள்ள மழைக்காடுகள் பறவைகள் கூடு கட்டத் தேவையான பொருட்களை அளிக்கும். உணவும் உள்ளது.

மீன் உண்ணாத மீன்கொத்திப் பறவை

குவாமில் வாழும் இந்த இனப்பறவைகள் இவற்றின் பிரிட்டிஷ் சொந்தக்காரரைப் போல மீன்களை உண்பதில்லை. பூச்சிகள், பல்லிகளையே உண்கின்றன. அதனால் இப்பறவைகள் பமைரா தீவில் பாதுகாப்புடன் வாழும். இனப்பெருக்கம் செய்ய அவசியமான இணைகளை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. பாம்புகளின் ஆக்ரமிப்புப் பிரச்சனை தீர்க்கப்பட்ட பின் இவற்றின் எண்ணிக்கை போதுமான அளவு உயரும்போது இவற்றின் தாயகமான குவாமிற்கு இவற்றைத் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

வண்ணமயமான இந்தப் பறவைகள் குவாம் தீவின் நீல நிற வானில் சுதந்திரமாக மகிழ்ச்சியுடன் முன்பு போல மீண்டும் பறக்கும் நாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கையுடன் ஆய்வாளர்கள் காத்திருக்கின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2023/jul/23/scientists-battle-to-save-guam-kingfisher-after-snakes-introduced?

- சிதம்பரம் இரவிச்சந்திரன்