சூழல் நட்புடைய உலக நாடுகளின் பட்டியலில் முதலில் நிற்பது சுவிட்சர்லாந்து. இங்கு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு விலங்குகளை வேட்டையாடிக் கொல்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 26 மாகாணங்கள் உள்ள இந்நாட்டில் 25 மாகாணங்களிலும் வேட்டையாடுதல் சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ளது.

மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதால் இங்கு வேட்டையாடுதல் நடைபெறவில்லை. வன விலங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி கொல்லப்பட்டவற்றின் இறைச்சியை உணவாக உட்கொள்ள வேட்டையாடுதல் நடைபெறுகிறது. இந்நாட்டில் 30,000 முழுநேர வேட்டைக்காரர்கள் உள்ளனர். இதில் 1500 பேர் பெண்கள்.

2016ல் இங்கு 40,616 ரோ மான்கள், 11,873 சிவப்பு மான்கள், 11,170 சமோய்ஸ் என்னும் காட்டு ஆடுகள் வேட்டையாடப்பட்டன. இவை தவிர ஐபக்ஸ், குள்ளநரிகள், அணில்கள், முயல்களையும் வேட்டையாடுவதுண்டு. இவ்வாறு வேட்டையாடிய பிறகும் அங்கு உணவகங்களுக்குத் தேவையான விலங்கு இறைச்சியில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே கிடைக்கிறது. அதனால் இந்நாடு மீதியை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.

விவசாயத்திற்கும் வளர்ப்பு விலங்குகளுக்கும் தொல்லை தருவதால் பாதுகாக்கப்படும் விலங்கான செந்நாய்களையும் வேட்டையாட சுவிஸ் அரசு தீர்மானித்துள்ளது.huntingபின்லாந்தில் நடப்பதென்ன?

ஸ்கான்டிநேவியன் நாடுகள் என்றால், அங்கு நிலவும் சூழல் நட்புடைய வாழ்க்கைமுறையே நம் நினைவிற்கு வரும். கேரள மாநிலத்தைப் போல எட்டு மடங்கு பெரிய நாடு பின்லாந்து. உலகின் மிகச்சிறந்த வாழ்க்கைத் தரம் உள்ள நாடு என்று பெயர் பெற்ற இங்கு 300 செந்நாய்கள் வாழ்கின்றன. இவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த 2023ல் இவற்றில் 20 செந்நாய்களைக் கொல்ல அரசு முடிவு செய்தது. இங்கு மூன்று இலட்சம் வேட்டைக்காரர்கள் உள்ளனர்.

ஸ்வீடனும் நார்வேயும்

உலகப் புகழ் பெற்ற சூழல் போராலி க்ரெட்டா தன்பெர்க் வாழும் நாடான ஸ்வீடனில் 2023ல் மொத்தமுள்ள 400 செந்நாய்களில் 200 நாய்களைக் கொல்ல அரசு முடிவெடுத்து செயல்படுத்தியது. நோபல் விருதிற்கு புகழ்பெற்ற நார்வேயில் செந்நாய்கள் ஆடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், அங்கு வாழும் 68 விலங்குகளில் 70 சதவிகிதம் விலங்குகளையும் கொல்ல முடிவு செய்தபோது சூழல் போராளிகளின் பலத்த எதிர்ப்பினால் இந்த எண்ணிக்கை பதினைந்தாகக் குறைந்தது.

ஜெர்மனி

இந்நாட்டில் பல விதமான வேட்டையாடல்களுக்கு உரிமம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் தொகை நாட்டிற்கு கணிசமான வருமானத்தை ஈட்டித் தருகிறது. மான்கள், காட்டுப்பன்றிகள், முயல்கள் மற்றும் பலதரப்பட்ட பறவைகள் இங்கு வேட்டையாடப்படும் விலங்குகளில் ஒரு சில.

கொல்லப்படும் தேசிய விலங்கு

ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கான கங்காரு வேட்டையாடப்படும் முக்கிய விலங்கு. ஆண்டுதோறும் இருபது இலட்சம் கங்காருகள் அங்கு சுடப்பட்டு கொல்லப்படுகின்றன. கங்காரு சாது விலங்குதான் என்றாலும், எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவே அவை கொல்லப்படுகின்றன. தலையில் சுட்டு கொல்ல வேண்டும் என்பதே சட்டம். கொல்லப்பட்ட கங்காருவை அவர்கள் எரிப்பதில்லை, குழி தோண்டிப் புதைப்பதில்லை. உணவாக உட்கொள்கின்றனர். இங்கு நடைபெறும் கங்காரு வேட்டையே உலகின் மிகப் பெரிய வன விலங்கு வேட்டை.

நியூசிலாந்தில்

இங்கு விலங்குகளை வேட்டையாடுவது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தேசிய வன விலங்கு சரணாலயங்களில் கூட எந்த விலங்கினை வேண்டுமானாலும் வேட்டையாடலாம். ஆயுதங்களைக் கையில் எடுத்துக் கொண்டு பயணம் செய்வதில் எந்தத் தடையும் இல்லை. வேட்டையாடுதல் ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு.

மனிதர்கள் இங்கு குடியேறும் முன்புவரை இந்நாட்டில் இரண்டு வகை வௌவால்கள் மற்றும் இரண்டு வகை சீல்கள் மட்டுமே பாலூட்டிகளாக வாழ்ந்து வந்தன. ஐரோப்பிய குடியேறிகள் வேட்டையாட, உணவிற்காக தங்களுடன் விலங்குகளையும் இங்கு கூட்டிக் கொண்டு வந்தனர். இப்போது இங்கு அதிக எண்ணிக்கையில் இருக்கும், வடிவில் பெரிய சிவப்பு மான்கள் வேட்டையாடுபவர்களுக்கு மிகப் பிடித்தமான விலங்கு.

வேட்டையாடிக் கொன்ற மான்களை உண்பதற்கும், மான் தோலை சுவர் அலங்காரமாகப் பயன்படுத்தவும் வேட்டைக்காரர்கள் அவர்கள் வேட்டையாடியதை சொந்த நாடுகளுக்குக் கொண்டு செல்வதில் எந்தத் தடையும் இல்லை.

இந்தியாவில் இருந்து 1903ல் நியூசிலாந்திற்கு அன்பளிப்பாக அனுப்பப்பட்ட மூன்று இணை இமாலயன் தார் என்ற ஆடு வகையைச் சேர்ந்த விலங்குகள் 1970களில் நாற்பதாயிரமாக அதிகரித்தன. அதனால் இவை வேட்டையாடப்பட்டன. 1984ல் எண்ணிக்கை இரண்டாயிரத்திற்கும் குறைவாக ஆனபோது இவற்றை வேட்டையாடுவதில் சட்டதிட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இப்போது இவற்றின் எண்ணிக்கை 1000.

பல இன மான்கள் தவிர பன்றிகள், வாத்துகளும் இங்கு வேட்டையாடப்படுகின்றன. 110 கிலோ வரை எடையுடைய பன்றிகள், நாய்கள் உதவியுடன் வேட்டையாடப்படுகின்றன. இயற்கையாக வளரும் விலங்குகளின் இறைச்சிக்கு சுவை அதிகம் என்பதால் சூழல் நாசத்தை ஏற்படுத்தும் பன்றி வேட்டை இங்கு பிரபலமானது.

வேட்டையாடச் செல்பவர்களுக்கு உதவ, உடன் செல்ல பலவித பாக்கேஜ்கள் உண்டு. ஐந்து நாள் வேட்டை, நான்கு நாள் இரவுத் தங்கல் மற்றும் இரண்டு ஆட்கள் உதவியுடன் டிராபி அல்லது வேட்டைப்பரிசாக பெரிய மான் ஒன்றின் தலையைக் கொண்டு செல்ல ஆகும் செலவு நான்கு இலட்சம் ரூபாய்!

அமெரிக்காவும் கனடாவும்

அமெரிக்காவின் மொத்த நிலப்பரப்பில் 60% இடங்களில் வேட்டைக்கு அனுமதி உண்டு. தேசிய வன விலங்கு சரணாலயங்களிலும் விலங்குகளைக் கொல்லலாம். ஆண்டுதோறும் ஒன்றரை கோடி வேட்டைக்காரர்கள் 20 கோடிக்கும் கூடுதலான வன விலங்குகளை கொல்கின்றனர். இது அங்கு வாழும் மக்கதொகையில் பாதியளவு. கனடாவில் ஆண்டுதோறும் 30 இலட்சம் உயிரினங்கள் 13 இலட்சம் வேட்டைக்காரர்களால் கொல்லப்படுகின்றன.

தீர்வு யார் கையில்?

வாழிடம் சுருங்கிய வன விலங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவற்றை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுதல் மற்றும் இனப்பெருக்க கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள சில நாடுகள் முயல்கின்றன. என்றாலும் இது நடைமுறையில் முழு வெற்றி பெறவில்லை. இந்த இரண்டு செயல்களின்போதும் மனிதன் வன விலங்குகளுடன் நெருங்கிப் பழக நேரிடும்.

இதன் மூலம் இதுவரை அறியப்படாத பல புதிய நோய்கள் வனப்பகுதிகளில் வாழும் மற்ற விலங்குகளுக்குப் பரவலாம். வன விலங்குகளைப் பிடிக்கும்போது காயம் படும் விலங்குகள் பிறகு காடுகளில் வாழ இயலாமல் போகலாம். ஒரு இடத்தில் பிடிக்கப்படுபவை மற்றொரு இடத்தில் வாழ்வது சாத்தியமற்றதாகலாம். ஆப்பிரிக்காவில் யானைகளுக்கு இனப்பெருக்கத் தடை ஏற்படுத்த முயற்சிகள் நடந்தன.

திறந்தவெளிப் பரப்பாக இருக்கும் காடுகளில் யானை போன்ற விலங்குகளுக்கு இனப்பெருக்கத் தடை ஏற்படுத்துவது சுலபமானதில்லை. இதற்கு மாற்றாக மக்கட்தொகைப் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். காடுகளை மனிதன் ஆக்ரமிப்பதை நிறுத்த வேண்டும். வன விலங்குகளின் இயல்பான வாழிடங்களை அழிக்காமல் அவற்றின் போக்கில் அவற்றை வாழ விடுவதே சிறந்த தீர்வு என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/columns/eco-story-column-by-vinay-raj-speaks-about-culling-and-it-s-implementation-in-eco-friendly-countries-1.8228451