உணர்வுகளின் அடிப்படையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உயிரினங்களை ஆறு வகைகளாகக் தொல்காப்பியர் வகைப்படுத்தியுள்ளார். ஓரறிவினை

“ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே” (தொல். பொருள். மரபியல், 27)

என்றும் அதற்கு உதாரணமாகப்

“புல்லும் மரனு மோரறி வினவே

பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே” (தொல். பொருள். மரபியல், 28)

என்னும் அடிகள் மூலம் புல், மரங்களை ஓரறிவு உயிர்களாக வகைப்படுத்தியுள்ளதை அறியமுடிகிறது.

இங்கே அறிவியலார் புலன்களின் அடிப்படையில் உயிரினங்களை வகைப்படுத்தியுள்ளதை நாம் நோக்க வேண்டும். அறிவியல் கூறும் ஐம்புலம்கள் மெய், வாய், மூக்கு, கண், காது ஆகியனவாகும். இவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில் தொடுவுணர்வு கொண்ட தாவரங்களும் மரங்களும் ஓரறிவு உள்ள உயிரிகளாக முன்னரே வகைப்படுத்தப்பட்டுள்ளது வியப்புக்குரியதன்றோ!

தாவரங்களுக்கும் இசை கேட்கும் ஆற்றல் உண்டு என்று கூறுவோரும் உள்ளனர், ஒரு சில அறிவியல் ஆய்வுகளும் இதனை வலியுறுத்தியபோதிலும், இக்கருத்தினை அறிவியல் உலகம் இன்னும் ஏற்கவில்லை. இருந்தபோதிலும் அறிவியல் உலகம் தாவரங்களுக்குத் தொடுவுணர்வு உண்டு என்பதனை ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்குச் சான்றாகத் தொட்டாற் சிணுங்கிச் (Touch me not plant- Mimosa pudica) செடியினையும் பூச்சிகளை உண்ணும் தாவரத்தினையும் (Venus fly trap - Dionaea muscipula) கூறலாம்.

கடுகு குடும்பத்தினைச் சார்ந்த தாவரமான குதிரைப்புல்லில் (Arabidopsis thaliana) அண்மையில் நிகழ்த்தப்பட்ட ஆய்வின் மூலமாக தாவரங்கள் மழை, காற்று முதலானவை ஏற்படுத்தும் அதிர்வுகளையும் உணர்ந்து செயல்படுகின்றன எனக் கண்டறியப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.