இந்தியாவில், மரத்தில் விளையும் முக்கியமான நறுமணப் பொருள்களில் ஒன்று இலவங்கப்பட்டை என்னும் பட்டை. சின்னமோமம் வேறம் (Cinnamomum verum) என்ற பட்டை மரம், வெப்ப மண்டல பசுமை மாறா மரமாகும். இது 10 -15 மீட்டர் உயரம்வரை வளரும். இது லாரேசியா என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. சின்னமோமம் வேறம்(Cinnamomum verum) மற்றும் சின்னமோமம் சைலானிகம் (cinnamomum zeylanicum) என்ற முக்கியமான இரு வகைகளும் இலங்கை, இந்தியா, ஜாவா, சுமத்திரா, போர்னியோ, மடகாஸ்கர், வியட்நாம், பிரேசில் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் பயிரிடப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 250 வகை இலவங்க மரங்கள் காணப்படுகின்றன. இதில் மிக உயர்ந்த தரம் இலங்கையின் இலவங்கமே..! சீன பட்டை கொஞ்சம் தரம் தாழ்ந்தது, தடிமனானது. இலவங்கப் பட்டை மரம் ரொம்ப சுகவாசி. இதற்கு ரொம்ப வெப்பமோ அதிக குளிரோ ஆகவே ஆகாது. மிதமான வெப்பம், ஈரப் பதமான சீதோஷ்ணநிலை பட்டை மரம் வளமாக வளர அவசியம் தேவை.

பட்டை மரம்அறுவடை செய்யப்படாத நிலையில் இலவங்கமரத்தின் அடிமரம் 30 -60 செ.மீ அகலத்தில் இருக்கும்; மேல் பட்டை கனமாக சாம்பல் படர்ந்த நிறத்தில் இருக்கும்; கிளைகள் தாழவே தொங்கும். இலைகள் எதிரெதிரே காணப்படும். இலையின் துளிர் சிவந்த வண்ணத்தில் துளிர்க்கும். இலவங்கத்தின் மலர்களும் பச்சையாகவே இருக்கும். ஆனால் அற்புத மணத்தைக் கொண்டிருக்கும். பழம் கருப்பாக, 1.5 -2 செ.மீ நீளத்தில், நீள்வட்டமாக அமைந்திருக்கும். இலவங்கப் பட்டை இலவங்க மரத்தின் உள்பகுதி பட்டையிலிருந்தே பெறப்படுகிறது. நன்கு முதிர்ந்த மரத்தின் பட்டையை உரித்து வெயிலில் உலர வைப்பார்கள். பட்டை மெலிதாக சூரிய வெப்பத்தில் காயும்போதே சுருள் சுருளாக மெல்லிய குழல் போல சுருண்டுவிடும். இதனை 5 -10 செ.மீ நீளமுள்ள சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிவிடுவார்கள். இதுவே இலவங்கப் பட்டை/குச்சி எனப்படும். இதுவே விற்பனைக்கு வரும் லவங்கப் பட்டை..!

பட்டையை மென்பானங்களிலும், மருந்துப் பொருளிலும், அழகு சாதனப் பொருள்களிலும், ஏன் கழிப்பறைப் பொருள்களிலும் இதன் வாசனைக்காவே கலக்கின்றனர். உணவுப் பொருளில், மசாலாவின் நாயகன் இலவங்கப் பட்டைதான். குஜராத் மற்றும் வட மாநிலங்களில் காதி (Khadi) எனப்படும் தயிர் பானத்தில் பட்டையைக் கலப்பது மிகவும் பிரசித்தம். இலவங்கத்தை தேநீரிலும் கலப்பது உண்டு.

 பட்டை உணவுப் பொருள்களை, பதப்படுத்தும் குணம் கொண்டது. பட்டையிலுள்ள பினால் (Phenol) என்னும் வேதிப்பொருள் உணவின் மீது பாக்டீரியா வளர்ந்து பொருள் கெட்டுப் போவதைத் தடுக்கிறது. அதனால் இதனை முக்கியமாக மாமிசத்தைப் பதப்படுத்த பயன்படுத்துகின்றனர். மேலும் பட்டை, உணவுக்கு ரம்மியமான மணத்தையும் கொடுக்கின்றது. பட்டை பரவலாக, நறுமணத்திற்காக சின்ன துண்டுகளாக/ பொடியாகவே கலக்கப்படுகிறது. இனிப்பின் சுவையை அதிகரித்துக் காண்பிக்க, இலவங்கப்பட்டை, இனிப்பில் கலக்கப்படுகிறது. மதுவிலும், மருந்திலும், சோப் மற்றும் பல்லுக்குத் தயாரிக்கும் பசை மற்றும் மருந்து, தைலம் போன்றவற்றிலும் இலவங்கம் கலக்கப்படுகிறது. இது மிட்டாய், சூயிங்கம் மற்றும் உடலுக்குத் தெளிக்கும் வாசனை திரவியங்களிலும் சேர்க்கப்படுகிறது. அது மட்டுமல்ல, கேக், ரொட்டி, பிஸ்கட், சாக்லேட் போன்ற பொருள்களிலும் பட்டை மணம் மற்றும் சுவைக்காக கலக்கப்படுகிறது.

- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)