பறவைகளுக்குப் பற்கள் கிடையாது !! ஆனால் எப்படி உண்கின்றன என்று யாராவது யோசித்தீர்களா? அனேகமாக அனைவர்க்கும், குழந்தைகள் உட்பட, பறவைகளுக்குப் பற்கள் இல்லை என்பது தெரிந்திருக்கும். கோழி, புறா,. குருவி, வாத்து, வான்கோழி, ஈமு போன்ற பறவைகள்  விதைகள், தானியங்கள் போன்ற கடினமான ஆகாரத்தைச் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறோம். அவைகள் பற்கள் உதவிகொண்டு கூழாக்கிச் சாப்பிடாமல், கடினமான உணவுகளை  எப்படி ஜீரணிக்கிறது ?

இதற்கான பதில், உடற்கூறின்படி, பறவைகளின் வயிற்றின் (Stomoch) கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள விஷேச அமைப்பான Gizzard என்னும் பகுதியாகும். மனிதர்களின் வாயில் பற்களின் உதவியால் கடித்து, அரைத்து கூழாக்கி விழுங்குவதற்கு இணையான, உணவைக் கூழாக்கி செரிமானத்துக்கு தயார் செய்வது Gizzard ன் வேலையாகும்.

கடைவாய்ப் பற்களின் பணியைச் செய்ய Gizzard பறவைகள் விழுங்கும் சிறுசிறு கூழாங்கற்களையும் (Gizzard stones or Gastroliths), மணற்துகள்களையும் (bits of gravel) பயன்படுத்தி கடினமான உணவுகளை உடைத்து செரிமானத்திற்கு தயார்ப்படுத்துகிறது. சில நாட்களுக்கு ஒருமுறை தேய்மானமான கற்களைக் கழிவாக கழித்துவிட்டு, புதிதாக கற்களையும், மணலையும் உணவுடன் எடுத்துக் கொள்கிறது.

சிலவகையான முதலை வகையான ஊர்வன, Dinosaurs, மீன்கள், மண்புழுக்களுக்கு இருப்பது போல Gizzard அனைத்து வகையான பறவைகளுக்கும் இருப்பதாகத் தெரிகிறது. இதன் Gizzard தடிமனான தசைகளால் ஆனது. இதன் உட்புறத்தைப் பாதுகாக்கவும், செரிமானத்திற்கும் நொதியப்பூச்சு (Enzymes) இருக்கும். ஒரு சில பூச்சியினங்களில் Gizzard பகுதியில் கடினமான செதில்களும், சிறு சிறு பற்கள் போன்ற அமைப்பும் இருப்பதுண்டு. 

எனவே பறவைகளுக்கு Gizzard என்பது பல் மருத்துவச் செலவில்லாத உபரிப் பற்கள் நிரம்பிய மேசை இழுப்பறைக்கு ஒப்பாகும்.

- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)