காலநிலை மாற்றத்தில் பல செயற்கை வழிகளில் குறுக்கிட்டு புவி வெப்ப உயர்வைத் தடுக்க விஞ்ஞானிகள் நீண்ட காலம் முயன்று வருகின்றனர். பல ஆய்வாளர்கள் வளி மண்டலத்தில் ஸ்டேட்டோஸ்பியர் அடுக்கில் சல்பர் போன்ற தனிமங்களின் நுண் துகள்களைத் தூவும் முறையை உடன் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

விஞ்ஞானிகளின் திறந்த கடிதம்

சூரியனின் வெப்பம் மிகுந்த கதிர்களை நுண் துகள்களைத் தூவி தடுத்து நிறுத்துவது பற்றி தீவிரமாக ஆராய வேண்டும் என்று முன்னாள் நாசா நிறுவனத்தின் விஞ்ஞானியும் 1980களில் புவி வெப்ப உயர்வு பற்றி முன்னெச்சரிக்கை செய்தவருமான புகழ்பெற்ற காலநிலை ஆய்வாளர் மூத்த விஞ்ஞானி ஜேம்ஸ் ஹேன்சன் (James Hansen) தலைமையில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடாவைச் சேர்ந்த 60 விஞ்ஞானிகள் எழுதியுள்ள திறந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.

தொழிற்புரட்சிக்கு முன்பிருந்த நிலையில் வெப்ப உயர்வை 2 டிகிரிக்கு கீழ் கட்டுப்படுத்த முடியவில்லை. பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதனால் பூமியைக் குளிர்ச்சியடையச் செய்ய புவிப் பொறியியல் (Geo engineering) அல்லது சூரியக்கதிர் மேலாண்மையை (solar Radiation Management SRM) நடைமுறைப்படுத்துவது பற்றி தீவிரமாக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.sunlight 638வரும் ஒன்றிரண்டு பத்தாண்டுகளில் இந்த முறை பற்றிய முடிவு எடுக்கப்பட வேண்டும். சூரியனின் கதிர்களைத் திசை திருப்பிவிட மேகங்களை அதிக பிரகாசமுடையதாக்கி அதன் மூலம் கூடுதல் வெப்பத்தை சிதறடிக்கும் வழி பற்றியும் சிந்திக்கப்பட வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விஞ்ஞானிகள் வளி மண்டலத்தில் சல்பர் போன்ற துகள்களைத் தூவி பூமியைக் குளிர வைக்கும் முறையே நன்மை பயக்கும் என்று நம்புகின்றனர். இதன் மூலம் சூரிய கதிர்களை சிதறடித்து ஒரு டிகிரி அல்லது அதற்கும் குறைவாக புவி வெப்ப உயர்வைக் கட்டுப்படுத்த முடியும்.

இதனால் ஏற்படும் பலன் தற்காலிகமானது என்பதால் இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். எரிமலை வெடிக்கும்போது ஏற்படும் புகை மூட்டம் பூமியை மங்கச் செய்கிறது. இது போல இத்திட்டம் செயல்படுகிறது. ஆனால் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. எல்லா அரசுகளும் இதை சரியான முறையில் மேற்கொள்வது பற்றி சந்தேகங்கள் உள்ளன. இதனால் இந்த முறை முழுமையாக இன்னும் ஆராயப்படவில்லை.

பல பில்லியன் டாலர் செலவு

என்றாலும் உலக அரசுகள் புவி வெப்ப உயர்வைக் குறைத்து காலநிலைப் பேரழிவு நிகழ்வதைத் தடுக்க இன்னமும் எதுவும் செய்யாமல் இருப்பதால் இந்த முறையைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற வலுவான எண்ணம் பல விஞ்ஞானிகளிடையில் உருவாகியுள்ளது. அமெரிக்க அரசாங்கம் இம்முறையை ஆராய ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆண்டிற்கு பல பில்லியன் டாலர் செலவு பிடிக்கும் இத்திட்டம் பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐநா சூழல் அமைப்பு (UNEP) வலியுறுத்தியுள்ளது.

பாதிப்புகள்

புவி வெப்ப உயர்வை 1 டிகிரிக்கு கட்டுப்படுத்துவது என்பது இன்னமும் எட்டாக்கனியாகவே உள்ள நிலையில் நுண் துகள்கள் தூவப்படுவதால் ஓசோன் அடுக்கு பாதிக்கப்படலாம். சூரியனின் மூலம் கிடைக்கும் புவி ஆற்றலில் வேறுபாடுகள் ஏற்படலாம். நாடுகளுக்கு இடையில் சண்டைகள் வரலாம். திட்டம் திடீரென்று நிறுத்தப்பட்டால் பூமியின் வெப்பம் பல மடங்கு உயரலாம்.

குறுக்குவழிகள் எதுவுமில்லை

காலநிலைச் சீரழிவுகளைத் தடுக்க மனிதன் நினைப்பது போல குறுக்கு வழிகள் எதுவுமில்லை என்று ஐ நா சூழல் அமைப்பின் செயல் இயக்குனர் இங்கர் ஆண்டர்சென் (Inger Andersen) கூறுகிறார். வெப்பத்தைக் குறைக்க இப்போது உள்ள செயல்பாடுகள் எவையும் போதுமானதாக இல்லை. அதனால் மீள முடியாத வெப்ப உயர்வில் வெந்துருக ஆரம்பிப்பதற்கு முன் பூமியைக் குளிரச் செய்ய அவசரமாக எதையேனும் செய்தேயாக வேண்டும் என்று ஜேம்ஸ் ஹேன்சன் கூறுகிறார்.

மாற்று வழியில்லை

இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டாலும் காற்று மண்டலத்தில் இருந்து கார்பனை அகற்ற இது எந்த விதத்திலும் உதவாது. இதன் விளைவுகள் பற்றி அறியப்படாத நிலையில் இத்திட்டம் தார்மீகப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். பசுமைக்குடில் வாயுக்களை உருவாக்கும் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதை நிறுத்துவது மட்டுமே இதற்கு ஒரே தீர்வு. சமீபத்தில் இதுபோன்ற தொழில்நுட்பங்களைப் பரிசோதிப்பதை மெக்சிகோ தடை செய்தது.

இத்திட்டத்திற்கு எதிராக நானூறிற்க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் உலகளவிலான சூரிய புவிப் பொறியியல் தடுப்பு சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் இத்திட்டம் சூழலைக் காக்க நல்ல மாற்றத்தை ஏற்படுத்த விரும்பாமல் பூமியை மிகப்பெரிய அளவில் மாசுபடுத்தும் பணக்கார நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு கவர்ச்சிகரமான ஒண்று. உலகின் வெப்பநிலையை நம் விருப்பப்படி கட்டுப்படுத்தலாம் என்பது சர்ச்சைக்குரிய ஒன்றே என்று சர்வதேச சூழல் சட்ட மையத்தின் (CIEL) காலநிலை மற்றும் ஆற்றல் பிரிவின் துணை இயக்குனர் லில்லி ஃப்யுயர் (Lili Fuhr) கூறுகிறார்.

நன்மை செய்யும் இயற்கையின் மீது மனிதன் தொடுக்கும் தாக்குதல் நிறுத்தப்படவில்லை என்றால் நாளை பூமியின் நிலை என்னவாகும்? வெய்யிலுக்கு நிழல் தரும் குடை போல சூரியனை மறைத்து அதன் கதிர்களைத் திசை திருப்பி விடுவது சுலபமானதில்லை. சூழலை சீரழிப்பதை மனிதன் உடனடியாக நிறுத்தாவிட்டால் அழியும் பூமியில் மனிதன் இது போன்ற தொழில்நுட்பங்களைத் தேடியே ஓட வேண்டும்.

நன்றிhttps://www.theguardian.com/environment/2023/mar/01/sun-rays-cool-overheating-earth-james-hansen-scientists-letter

- சிதம்பரம் இரவிச்சந்திரன்