உலகில் உள்ள ஆயிரக்கணக்கான பிரம்மாண்டமான அணைக்கட்டுகளில் மண் படிதல் பிரச்சினையால், வரும் 2050ல் நீர் சேமிக்கும் ஆற்றலில் 25 சதவிகிதத்திற்கும் அதிகமாக அந்த அணைக்கட்டுகள் இழந்துவிடும் என்று ஐநாவின் புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. ஐ நா பல்கலைக்கழகத்தின் நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்திற்கான ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வு இந்த நூற்றாண்டின் பாதியில் உலகின் மிகப் பெரிய அணைக்கட்டுகள் மற்றும் நீர்த் தேக்கங்கள் 1.65 டிரில்லியன் க்யூபிக் மீட்டர் நீர் சேமித்து வைக்கும் ஆற்றலை இழந்து விடும் என்று கூறுகிறது.

ஆபத்தான அளவில் நீர் சேமிப்பும் கையிருப்பும்

நீரைத் தேக்கி வைப்பதில் ஏற்படப் போகும் இந்த இழப்பு இந்தியா, சீனா, இந்தோனேஷியா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகள் பயன்படுத்தும் நீரின் அளவிற்கு சமமானது. இந்த அணைக்கட்டுகள் உலகம் முழுவதும் நீர் மின் உற்பத்தி, வெள்ளக் கட்டுப்பாடு, நீர்ப் பாசனம் மற்றும் குடிநீர் ஆகியவற்றின் ஆதாரம் என்பதால் இந்த நீரிழப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலகின் நீர் சேமிப்பு நாளுக்கு நாள் குறைகிறது. இது உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சனை என்று ஆய்வு மையத்தின் இயக்குனர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியர் லாடிமி ஸ்மாக்ட்டின் (Vladimir Smakhtin) கூறுகிறார்.kallanai kollidamமண் மேடாகும் அணைக்கட்டுகள்

150 நாடுகளில் இருக்கும் 50,000 பெரிய அணைக்கட்டுகள் ஆராயப்பட்டபோது அவற்றின் நீர் சேமிப்பில் 16% ஆற்றலை அவை ஏற்கனவே இழந்து விட்டன என்பது தெரியவந்தது. இந்நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் பாதியில் இந்த இழப்பு விகிதம் 26% ஆக அதிகரிக்கும். இயற்கையில் நதி நீர், சேறு, சகதி மண்ணை சதுப்பு நிலங்கள், கடல்களில் கொண்டு போய் சேர்க்கும். ஆனால் இந்நீரோட்டத்தை அணைக்கட்டுகள் தடுத்து நிறுத்துகின்றன. இதனால் காலப்போக்கில் இங்கு வந்து படியும் மண் சேகரித்து வைக்கப்படும் நீரின் அளவை வெகுவாகப் பாதிக்கிறது.

வயதாகும் அணைக்கட்டுகள்

வருங்காலத்தில் இது மின் உற்பத்தி, நீர்ப்பாசனம், நீர் விநியோகம் போன்றவற்றிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும். இதனால் வெள்ளப் பெருக்குகள் அதிகரித்து அணைக்கட்டுகளின் கீழ்ப்பகுதியில் வாழும் வன உயிரிகளையும், மில்லியன் கணக்கான மக்களையும் பாதிக்கும். 2050 ஆகும்போது ஆயிரக்கணக்கான அணைக்கட்டுகள் அவற்றின் ஆயுட்காலத்தின் பாதியை முடித்து விடும் அல்லது முழு ஆயுட்காலத்தையும் முழுமை செய்திருக்கும்.

ஆபத்தை ஏற்படுத்தும் வயதான அணைக்கட்டுகள்

பெரிய அணைக்கட்டுகள் மற்றும் நீர்த் தேக்கங்கள் தரைமட்டத்தில் இருந்து 15 மீட்டர் உயரத்தில் இருக்குமாறு வடிவமைத்துக் கட்டப்படுகின்றன. இவற்றின் அகலம் 5 மீட்டர். மூன்று மில்லியன் க்யூபிக் மீட்டருக்கும் குறையாத அளவில் நீரை சேமிக்கும் ஆற்றல் உடையவையாக இவை உள்ளன. உலகில் இன்றுள்ள அறுபதாயிரம் பெரிய அணைக்கட்டுகளில் பெரும்பாலானவையும் 1960, 1970களில் ஐம்பது முதல் நூறாண்டு ஆயுட்காலத்துடன் வாழும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. இதன் பிறகு இவை ஆபத்தானவையாக மாறிவிடும். இந்த அணைக்கட்டுகளின் கீழ்ப்பகுதியில் வாழும் பாதி மக்களை இது பாதிக்கும்.

காலநிலை மாற்றத்தின் அதிதீவிரப் போக்கினால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, வறட்சி போன்ற பேரிடர்கள் மலைப்பகுதிகளில் உள்ள அணைக்கட்டுகளில் மண் அரிப்பை அதிகரிக்கும். இதனால் அணைகள் நிரம்பி வழிந்து நிலைமையை இன்னும் மோசமாக்கும். இது அணையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி விடும், நீர் சேமிப்பைப் பாதிக்கும். இதனால் ஆற்றல் உற்பத்தி குறையும்.

தீர்வு

பெரிய அணைக்கட்டுகளில் மண் படிதலைத் தடுக்க ஆய்வாளர்கள் பல வழிகளைக் கூறியுள்ளனர். அணைக்கு வரும் நீரை மாற்றுப் பாதை வழியாக கொண்டு வருவதால் படியும் மண்ணை வேறு இடத்திற்கு மாற்ற வழி ஏற்படும். அணையில் இருந்து கீழிறங்கிச் செல்லும் நீரின் பாதையை மாற்று வழியில் திருப்பி விடலாம்.

அணையை இடித்து படிந்த மண்ணை மீண்டும் நதிக்கே செல்லும்படி செய்யலாம். அணைக்கட்டு இருக்கும் இடத்திற்கேற்ப தீர்வுகளைக் கண்டுபிடித்து செயல்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இல்லையெனில் நதிகள் மரணமடைவது போல அணைக்கட்டுகளும் மண் மேடுகளாகி மனிதகுலத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும்.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்