நமது பேச்சு வழக்கில் ஒரு சிலரை நாம் நன்றாக கதை அளக்கிறான் என்று சொல்வதுண்டு. ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்றும் கூட ஒரு பழமொழி உண்டு. அளவை என்பது நம் அன்றாட வாழ்வில் முக்கியமான அறிவியல் சொல் ஆகும்.

அளவுகள், அளக்கும் முறைகள், அளவீட்டுக் கோட்பாடுகள் போன்ற அளவையுடன் தொடர்புடைய விஷயங்களை அளவீட்டு அறிவியல் அதாவது அளவீட்டியல் என்கிறோம்.

வணிகம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் அளவீட்டியல் முக்கிய பங்காற்றுகிறது.

one kilogramஒரு கிராம் தங்கம் துவங்கி, இத்தனை மில்லிகிராம் அளவுள்ள மாத்திரை, எத்தனை கிலோ மீட்டர் நீளம் என பல கேள்விகளை எழுப்பி ஒரு டன் நிலக்கரி வரையில் அதன் அளவின் துல்லியத் தன்மையை தீர்மானிப்பதில் அளவீட்டியல் முக்கியப் பங்காற்றுகிறது.

எடை மற்றும் அளவுகளுக்கான பொது மாநாடு ஆனது உலகளாவிய அளவில் எடை மற்றும் நீளம், காலம், வெப்பநிலை போன்றவற்றின் அளவுகளுக்கான முடிவுகளை எடுக்கும் முதன்மை அதிகாரம் பெற்ற இடமாக உள்ளது.

இந்த மாநாட்டு அமைப்பானது 1875 -ல் துவங்கப்பட்டது. அளவீட்டு அறிவியல் மற்றும் அளவீட்டின் தரம் தொடர்பாக உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல் புரிதல் இம்மாநாட்டு அமைப்பின் நோக்கம் ஆகும். மே -20 1875 ஆம் ஆண்டில் மீட்டர் அலகினைப் பயன்படுத்துதல் தொடர்பான உலகளாவிய நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம் 17 நாடுகளுக்கிடையே ஏற்பட்டது.

தற்போது 2019-ல் இந்தியா உட்பட 60 நாடுகளும் இம்மாநாட்டு அமைப்பில் உள்ளன. 2018 ஆம் ஆண்டில் நவம்பர் 13 முதல் 16 வரை பிரான்ஸ் நாட்டின் வெர்செய்ல்ஸ் நகரத்தில் நடைபெற்ற 26-வது எடை மற்றும் அளவுகளுக்கான பொது மாநாட்டின்போது, எடை மற்றும் அளவுகள் தொடர்பாக முடிவு செய்யப்பட்ட அறிவியல் ரீதியிலான வரையறைகள் 2019 -ல் மே மாதம் 20 ஆம் நாள் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மே -20 ஆம் நாள் உலக அளவில் அளவீட்டு அறிவியல் தினமாக நடைமுறையில் உள்ளது.

இம்மாநாட்டில் 130 வருட பழைமையான கிலோகிராம் அலகிற்கு உலகத் தர வரையறை அளிக்கும் பொருட்டு, அடிப்படை இயற்பியல் மாறிலியான 'பிளாங்க் மாறிலியின்படி' எடையின் அலகு மாற்றி வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜூலை 1, 2017 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி இந்தியா முழுமைக்கும் பயன் தரும் என்று முதலில் விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், தவறான வரிவிதிப்பு முறைகளால் இந்தியா முழுமைக்கும் தொழில் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டு உழைக்கும் மக்கள் பாதிக்கப்பட்டனர். இத்தகைய அரசின் நடவடிக்கை போல் அல்லாமல், அலகுகளின் வரையறை மாற்றம் அறிவியல் பூர்வமானது என்பதால், உலகம் முழுமைக்கும் மக்களுக்கு பயன் தரக்கூடிய ஒன்றாக அமைந்துள்ளது.

2018 -ல் நடைபெற்ற மாநாட்டில், இந்தியாவிலிருந்து மத்திய நுகர்வோர் துறை அலுவலர், தேசிய பௌதிக ஆய்வுக்கூட இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

7 அடிப்படை அலகுகளான நீளத்தை அளக்கப் பயன்படும் மீட்டர், நேரத்தை அளக்கப் பயன்படும் வினாடி, கிலோகிராம், மின்னோட்டத்தை அளவைக் குறிக்கும் ஆம்பியர், வெப்பநிலையின் அளவைக் குறிக்கும் கெல்வின், வேதிப்பொருளின் அளவைக் குறிக்கும் மோல் மற்றும் ஒளிச்செறிவின் அளவைக் குறிக்கும் கேண்டிலா ஆகியவற்றை இயற்கையில் உள்ள அடிப்படை மாறிலிகளைக் கொண்டு வரையறுத்தல் இம்மாநாட்டின் முக்கிய நோக்கம்.

கிலோகிராமின் வரையறை ஒரு உருவ மாதிரி நிறையின் அலகு என்பதிலிருந்து, பிளாங்க் மாறிலி எனப்படும் இயற்கை பௌதிக மாறிலியின்படி, இம்மாநாட்டில் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த வரையறை 1889 ஆம் ஆண்டிற்குப் பின்னர் 130 வருடம் கழித்து 2019 -ல் தற்போதுதான் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் ஒரு இடத்தில் பயன்படுத்தும் அளவீட்டு முறையை உலகெங்கும் பயன்படுத்தும் பொருளின் அளவில் குழப்பம் தீர்க்கப்படுகிறது. இத்தகைய முறையில் அந்த அளவீட்டு முறையின் துல்லியத் தன்மையை மேம்படுத்துவது பொதுமக்கள் உட்பட அனைவருக்கும் பயன் தரும் ஒன்றாக அமைகின்றது.

வரையறைகளின் மாற்றமானது ஒருமித்த உலகளாவிய பயன்பாட்டு அமைப்புகளான உலகளாவிய வர்த்தகம், உயர் தொழில்நுட்ப தயாரிப்புகள், மனித உடல்நலம் மற்றும் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உலகளாவிய வானிலை ஆய்வுகளுக்கும், அதற்கு உறுதுணையாக உள்ள அடிப்படை அறிவியலுக்கும் ஆதாரமாக உள்ளது. மாற்றியமைக்கப்பட்ட அளவுகளின் அலகுகளின் வரையறை நடைமுறை நம்பகத் தன்மை உடையதாக உள்ளது.

இம்மாநாட்டுக்கு முன்புவரை எடையின் அலகான கிலோகிராம் ஆனது உலகளாவிய உருவ மாதிரியின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டிருந்தது. இவ்வுருவ மாதிரி 90 சதவீதம் பிளாட்டினம் மற்றும் 10 சதவீதம் இரிடியத்தால் ஆனது. 39 மில்லிமீட்டர் விட்டம், 39 மில்லிமீட்டர் உயரம் கொண்ட உருளை வடிவம் உடையது.

துல்லியமான அளவீடுகள் உலகத் தரத்திலான தயாரிப்புகள் மற்றும் வணிகத்தில் உள்ள தொழில்நுட்ப ரீதியிலான தடைகளை நீக்கவும் நம் நாட்டிற்குப் பயன்படுகின்றன.

கிலோகிராமின் வரையறை பிளாங்க் மாறிலியின் மூலம் மறுவரையறை செய்யப்பட்டுள்ளதால், எடைகளின் துல்லியத் தன்மை உலகெங்கும் சீராக அமையும்.

அளவீடுகள் நம் தினசரி வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் தன்மையது. ஆம், நமது மருத்துவ பராமரிப்பானது வேதிப்பொருள்கள் கலந்துள்ள மருந்துகளின் அளவை சார்ந்தும், எக்ஸ்ரே எடுக்கும்போது அக்கதிர்களின் அளவைச் சார்ந்தும் உள்ளது.

செயற்கைக்கோள் வழித்தட அமைப்பு வழிகாட்டி நேரத்தின் அலகான வினாடியைச் சார்ந்தும் உள்ளது. இதுபோன்ற தருணங்களில் நாம் உலகளாவிய அளவீட்டு முறையின் பலனை அனுபவிக்கிறோம்.

ஒரு கார் மணிக்கு இத்தனை கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது என்பதில் மீட்டர் X வினாடி அலகின் துல்லியத்தன்மை முக்கியப் பங்காற்றுகிறது.

மே - 20ந்தேதி முதல் உலக நாடுகளில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ள கிலோகிராம் என்ற அலகின் வரையறை மாற்றத்தால், ஏற்பட்டுள்ள மாறுதல்களையும் அளவீட்டின் துல்லியத் தன்மையையும் நம்மால் நடைமுறையில் உணர முடியாமல் போகலாம். காராணம் வரையறை மாற்றத்திற்கு முன்பும், பின்பும் ஒரு கிலோ என்பது ஒரு கிலோவாகத்தான் இருக்கும், இருக்கின்றது. அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் உலகளாவிய எடை அளவீட்டு முறையில் அதன் துல்லியத் தன்மை பன்மடங்கு மேம்பட்டதாய் மாறியுள்ளது.

1 டன் எடையில் உள்ள துல்லியம் 1 கிராம் தங்கம் வாங்கும்போது அதன் எடையிலும் இருப்பதே மக்களுக்கு அறிவியலும், அளவீட்டியலும் தரும் பயனாகும் என்பதே இந்த வரையறை மாற்றத்தின் நோக்கமாகும்.

- பவித்ரா பாலகணேஷ், மாதவன்குறிச்சி -628206.