இயற்கையின் பல சக்திகள் இந்த பிரபஞ்சத்தில், அழிவையும், ஆனால் அதே சமயம் அதிசயிக்கும் வகையில் ஆக்கத்தையும் கொடுத்திருக்கின்றன. உதாரணத்திற்கு எரிமலைகளை எடுத்துக் கொள்வோம். ‘ எரிமலைகள் ஆக்க சக்தியா?’, என்று ஆச்சரியம் வரத்தான் செய்யும். எரிமலைகள் இந்த பூமியில் இல்லை என்றால் இந்த கட்டுரை எழுத நானும் இருந்திருக்க மாட்டேன், படிப்பதற்கு நீங்களும் இருந்திருக்க மாட்டீர்கள். இப்படிச் சொன்னால் நம்புவதற்கு மிகவும் கடினமாகத்தான் இருக்கும். புவியில் உயிர்கள் வாழ்வதற்கு எரிமலைகள் அந்தளவு பங்களித்திருக்கின்றன.
 
எரிமலைகளின் அழிக்கும் சக்தியை முதலில் பார்ப்போம். எரிமலைகளை நமக்கு அருகிலயே, அமைதியாக இருக்கும். ஆனால், திடீரென்று ஒருநாள் தீவிரவாத தாக்குதல் போல வெடித்து சிதறும். சில எரிமலைகள் எங்கே ஒளிந்திருக்கின்றன என்பதே தெரியாது. கடலுக்கு அடியில் ஒளிந்திருக்கும் எரிமலை ஹவாய் தீவுகளில் அதிகம் காணப்படுகின்றன. அவை லாவா எனப்படும் நெருப்பு குழம்புகளை கடலில் கக்கும் போது, கடலுக்கு உள்ளேயே அந்த நெருப்பு பாறைகள் தீப்பற்றி எரிந்தபடியே விழுவது, கண் கொள்ளா காட்சி.

சமீபத்தில், ஐஸ்லாந்தில் பனிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடித்து, பெரும் புகையைக் கக்கி, ஐரோப்பாவின் அந்தப் பகுதியில் விமானப்போக்குவரத்து பல நாட்கள் தடைபட்டது. பூமியின் வினோதத்தைப் பாருங்கள். எங்கு பார்த்தாலும் பனி படர்ந்த நிலம். ஆனால், அங்கே பூமிக்கு அடியில் தாண்டவமாடிக் கொண்டிருக்கும் எரிமலைக் குழம்புகள். அவை வெடித்து வானில் இருபதுகிலோ மீட்டர் வரை புகை கிளம்பியது.

இந்த ஐஸ்லாந்திலும் பூமியின் வேறு பல பகுதிகளிலும் வெப்ப நீரூற்றுக்களும், வெப்பமான குட்டைகளும் காணப்படுகின்றன. குளிர் பிரதேசமான ஐஸ்லாந்து போன்ற பகுதிகளில் உள்ள வெப்பநீர்க் குட்டைகளில் மக்கள் ஆர்வத்துடன் குளிப்பார்கள். அவர்களுக்கு ஒரு உண்மை தெரியாது. தெரிந்தால் அந்தப் பக்கமே தலை வைத்து படுக்கமாட்டார்கள். என்னவென்றால் அந்த இடங்களிலெல்லாம் பூமிக்கு அடியில் மிக அருகில் 'மாக்மா' எனப்படும் உருகிய பாறைகள் பெருமளவில் இருப்பதுதான். அந்த உருகிய பாறைகளின் வெப்பதினால்தான் நீர் வெப்பமடைகிறது. அவை எப்போது வேண்டுமானாலும் எரிமலையாக வெளியே வந்து, ஆனந்தக் குளியலை அந்திமக் குளியலாக மாற்றிவிடலாம்!

நாம் வாழும் நிலப்பரப்பிற்கு கீழே நடப்பது என்னவென்று தெரிந்தால் ஆச்சரியமாகவும், ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்கும்.

பேராபத்து ஏற்படுத்தும் நடனம்

நாம் வாழ்வது, பூமியின் மேல் தட்டு (CRUST) என்ற பகுதியில். இந்த மேல் தட்டு, பூமியில் ' மேண்டில் ' ( mantle) என அழைக்கப்படும் பாகு நிலையிலுள்ள (உருகிய) பாறைகளின் மேல் அமர்ந்திருக்கின்றது. அதற்கு கீழே, புவியின் மத்திய பகுதி இருக்கின்றது. இவைகள்தான் புவியின் மூன்று முக்கிய பகுதிகள். புவியின் மத்திய பகுதி இரும்பு -நிக்கல் கலவையினால் ஆனது. இந்தப் பகுதியின் வெப்பம், சூரியனின் வெளிப்புற வெப்பமான சுமார் 5400௦௦ டிகிரி சென்டிக்ரேடுக்கு நிகராகும்.

பூமியின் மத்தியில் உள்ள வெப்பம், பூமி உருவானபோது உண்டான ஆரம்பகால வெப்பமும், கதிரியக்கத்தினால் உண்டாகும் வெப்பமும் சேர்ந்ததே ஆகும். பூமியின் மத்தியில் இருந்து அந்த வெப்பம் வெளியே வரும்போது 'மாண்டில்' எனப்படும் பகுதியிலுள்ள பாறைகளை உருக வைக்கின்றது. உருகிய பாறைகள் அடர்த்தி குறைவானதால் மேலே எழும்புகின்றன. மேலே உள்ள குளிர்ந்த பாறைகள் அடர்த்தி அதிகம் உள்ளதால் கீழே (பூமியின் மத்திய பகுதிக்கு) இறங்குகின்றன. வெப்பமடைந்த பாறைகள் கீழிருந்து மேலாகவும், மேலே உள்ள குளிர்ந்த பாறை மேலிருந்து கீழே நகர்வதுமான மிக மெதுவான ஒரு சுழற்சி மாண்டில் எனப்படும் பகுதியில் நடந்து கொண்டிருக்கின்றது. அதாவது, நாம் ஆனந்தமாக வாழும் பூமியின் மேல் தட்டுக்கு கீழே தான் இந்த உருகிய பாறைகளின் நடனம் நடந்து கொண்டிருக்கின்றது.

மேண்டில் பகுதியில் நடக்கும் அந்த சுழற்சியினால், அதன் மேல் அமர்ந்திருக்கும் நாம் வாழும் மேல்தட்டு மெல்ல நகர்ந்துகொண்டே இருகின்றது. நம் நகம் வளரும் வேகத்தில்தான் தட்டுக்களும் கோடிக்கணக்கான வருடங்களாக (tectonic plate movements) நகர்ந்துகொண்டே இருக்கின்றன. இதனை நாம் உணர்வதில்லை.

ஆபத்து என்னவென்றால், நாம் வாழும் பூமியின் மேல்தட்டு, ஆங்காங்கே பிளவு பட்டுள்ளது. பிளவுபட்டுள்ள தட்டுக்கள், அதற்கு கீழே உள்ள மேற்கூறிய உருகிய பாறைகளின் நகர்வினால், ஒன்றன் மீது ஒன்று மோதுவதும், பக்கவாட்டில் உரசிக்கொள்வதும், ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து செல்வதுமாக இருக்கின்றன. மேல் தட்டின் இந்த அசைவுகளால் அதன் கீழேயுள்ள உருகிய பாறைகள், மேல்தட்டின் பிளவுகளுக்கிடையேயும், மேல்தட்டை பிளந்துகொண்டும் பூமிக்கு வெளியாக லாவா எனப்படும் அக்கினி குழம்பாக வெளிவருகின்றது.

அமைதிப்பூங்கா?

ஒரு காலத்தில் எரிமலைகள் தொடர்ந்து நெருப்பை கக்கிக் கொண்டிருந்தன என்றும், ஆனால் இப்போது அவையெல்லாம் குளிர்ந்து இந்த பூமி, அமைதிப்பூங்காவாக மாறி விட்டது, என்று வழக்கம்போல தப்பு கணக்கு போட்டு கொண்டார்கள் மக்கள். அதனால் தான் உலகம் முழுவதும் பல கோடி மக்கள் அமைதியாக இருக்கும் எரிமலை அருகே வீடுகள் கட்டி வாழ்கின்றனர். அறிவியலாளர்கள் பூமியின் அமைப்பு பற்றியும், எரிமலைகள் எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம் என்று பல வருடங்கள் ஆராய்ந்து முடிவு செய்து கூறினாலும், அதை கேட்காமல் பெரிய நகரங்களை உருவாக்கி, பிறகு அதன் அழிவைக் கண்டு துயரப்படுகிறார்கள்.

கடவுளின் விரோதியான சாத்தான்களும், பேய்களும், பூமிக்குள் புதைக்கப் பட்டிருப்பதாகவும், அவைகள் அவ்வ‌ப்போது பூமியை விட்டு வெளியே வர எத்தனிப்பதனால் தான் எரிமலை வெடிப்புகளும், பூகம்பங்களும் தோன்றுவதாகவும், கடவுளை வேண்டிக்கொண்டால் இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்காது என்றும் வெகுகாலமாக மக்கள் நம்பிக் கொண்டிருந்தனர். அதனால் தான் எரிமலைக்கு அருகில் குடியமர்ந்தனர்.

உலகில் சுமார் 1500 உயிரோட்டமான எரிமலைகள் உள்ளன. பசிபிக் கடலைச் சுற்றி 'நெருப்பு வளையம்' எனப்படும் வளையத்தில்தான் பெரும்பாலான எரிமலைகள் இருக்கின்றன. மேலும் இத்தாலி, இந்தோனேசியா, அமெரிக்கா, சிலி, கொலம்பியா, மெக்ஸிகோ மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் எரிமலைகள் காணப்படுகின்றன.

குறிப்பிடத்தக்க சில வெடிப்புக்கள்

அமெரிக்காவில் செயின்ட் ஹெலென்ஸ் எனப்படும் ஒரு எரிமலை 120 ஆண்டுகளுக்கு முன் வெடித்தது. வெடிப்பின் சக்தி 30,000 அணு குண்டுகளுக்கு நிகராக இருந்தது என்றால் அதன் சக்தியை என்னவென்று சொல்வது! 1980 இல் இது மீண்டும் வெடித்து, மலையின் ஒரு பகுதியையே தூக்கி எரிந்தது. ஒரு எரிமலையின் வெடிப்பு சக்தியை அறிய, இணைய தளத்தில் இந்த வீடியோ காட்சி பதிவு செய்யப்படுள்ளதை பார்க்கலாம்.

1991 ஜூன் மாதத்தில் பிலிப்பின்ஸ் நாட்டில் உள்ள பினாடுபோ என்ற எரிமலை வெடித்ததில் எழுநூறு பேர் பலியாகினர். எரிமலையில் இருந்து வந்த அக்கினிப் பாறை பொடிகள் நானூறு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு எறியப்பட்டன. 70,000 மக்களை ஊரை விட்டு அப்புறப்படுத்த வேண்டியிருந்தது.
 
இந்தோனேசியாவில் உள்ள டம்போரா எரிமலை 1815 இல் வெடித்து, சுமார் ஒரு லட்சம் மனிதர்களைக் கொன்றது. வெடிப்பில் இருந்து வந்த புகையும் தூசும் பூமியின் வடக்கு பாகத்தையே சூரியனிடமிருந்து மறைத்து விட்டது. சூரிய ஒளி இல்லாமல் போனதால் அடுத்த ஆண்டு பயிர்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டது. அந்த பகுதி கடும் குளிரினால் பாதிக்கப்பட்டது.

இந்தோனேசியாவில் 1883 இல் வெடித்த ஒரு எரிமலையின் ஒலி, 2,000 மைல்கள் தொலைவில் உள்ள ஆஸ்த்திரேலியாவில் கேட்டது. அதனால், உண்டான சுனாமி பல ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ள தெற்கு அமெரிக்காவில் தாக்கி 36,000 உயிரை பலி வாங்கியது.

ஒரு வருடத்தில் புதிதாக உண்டான எரிமலை

1943 இல் மெக்ஸிகோ நாட்டில் ஒரு வயலிலிருந்து சாம்பல் வெளியே வர ஆரம்பித்தது. அதுவே ஒரு வருடத்தில் 1200 அடி உயரமுள்ள ஒரு எரிமலை ஆனது. அருகிலுள்ள ஒரு நகரை நாசப்படுத்தியது. அங்கு ஒரு எரிமலை புதிதாக உருவானதைப் பார்க்க முடிந்தது. முதலில் சாம்பல் வெளியே வந்து, பிறகு ஒரு மலை தோன்றிய நிகழ்ச்சி நம் நாட்டில் நடந்திருக்குமேயானால், இங்கு பல கதைகள் புனையப்பட்டிருக்கும். (நமது நெல்லை மாவட்டத்தில் பூமிக்குள்ளிருந்து நெருப்புக் குழம்பு வெளியேறும் சம்பவங்கள், புவியோட்டின் அருகே மேக்மா இருப்பதைக் காட்டுகின்றன. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் எரிமலை உருவெடுத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை)

கொலம்பியா நாட்டில் 1985 இல் ஒரு எரிமலை வெடித்தது. அது ஒரு பெரிய வெடி இல்லையென்றாலும், வெடிப்பால் ஏற்பட்ட மண் சரிவால், ஐஸ் உருகி 23000 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். எரிமலை வெடிக்கும் சமயம் அவர்கள் உயரமான பகுதிக்கு சென்றிருப்பர்களேயானால் உயிர் பிழைத்திருப்பார். எரிமலைகள் வெடிக்கும்போது அருகிலுள்ள மக்களை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்வதன் அவசியம் இந்த பெரும் உயிரிழப்பு சம்பவத்திற்குப் பிறகு ஒரு பாடமாக அமைந்தது.

அறிவியலாளர்கள் பூமியின் உள்ளமைப்பையும், எரிமலைகளின் அடிப்படை உண்மைகளையும் கண்டறிந்து, எரிமலைகளின் வெடிப்பைத் துல்லியமாக கணக்கிட முடியாவிட்டாலும், அதனால் எப்போது ஆபத்து வரும் என்று ஓரளவு அனுமானித்து பல உயிர்களைக் காத்துள்ளனர்.

ஒரு எரிமலையின் அடுத்த வெடிப்பை கண்டுபிடித்து அருகிலுள்ள மக்களை காப்பாற்றும் முயற்சியில், கொலம்பியாவில் ஒன்பது அறிவியலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த எரிமலை மிகவும் உயிரோட்டமானதாக இருக்கின்றது என்று அவர்களுக்குத் தெரியும். இருந்தாலும் உயிரைப் பணயம் வைத்து, அடுத்த வெடிப்பை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, எரிமலை சற்றும் எதிர்பாராத வகையில் நெருப்பைக் கக்கியதில் அந்த ஒன்பது அறிவியலாளர்களும் நெருப்புக்கு இரையானார்கள்.
இதுபோல இன்னும் பல அழிவுகளை எரிமலைகள் ஏற்படுத்தியுள்ளன.

சூப்பர் எரிமலைகள்

இதுவரை நாம் பார்த்தது சாதாரண எரிமலைகள். ஆனால் சூப்பர் எரிமலை என்று பூமியில் ஆங்காங்கே இருக்கின்றன. அவை சாதாரண எரிமலைகளை விட ஆயிரம் மடங்கு அபாயகரமானவை. அவைகள் கக்கும் நெருப்புக் குழம்புகள் பெருத்த சேதத்தை ஏற்படுத்துவதுடன் அதனுடைய புகை பூமி முழுவதும் சுற்றி, சூரிய ஒளியை பல ஆண்டுகளுக்கு மறைத்து ஒரு சிறிய பனியுகத்தையே உண்டாக்கி, பூமியில் உயிர்வாழ்தலை கடினமாக்கிவிடும். பூமியை அழிக்கும் வல்லமையுள்ள இந்த எரிமலைகள் சில கடலுக்கு அடியிலும் மற்ற இடங்களிலும் ஒளிந்திருக்கின்றன. அவைகளை கண்டுபிடிக்க அறிவியலாளர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

எரிமலைகளின் அழிவு சக்தியைக் கண்டோம். அதன் ஆக்க சக்தியையும் காணலாமா?

உயிர் உண்டாவதற்கு வேண்டிய அடிப்படைத் தேவைகள்

பூமியில் உயிர்கள் உண்டாவதற்கு, புவியைத் தாக்கிய வால் நட்சத்திரங்களும், வின்வெளிப் பாறைகள் மட்டுமல்லாமல், இந்த எரிமலைகளும் காரணமாயிருந்திருக்கின்றன என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். ஓர் உயிர் உண்டாவதற்குத் தேவையான ரசாயன மூலக்கூறுகள், வெப்பம், மற்றும் நீர் போன்றவற்றை எரிமலைகள் கொடுத்தன.

பூமிக்கு அடியில் உள்ள, உயிர் உருவாக தேவையான ரசாயனப் பொருட்கள், எரிமலையினால்தான் பூமியின் மேல் பரப்பிற்கு வந்தன. எரிமலைகள் தான் பூமிக்கு அடியில் உள்ள நீராவியையும் வெளியே கொண்டு வந்தன. இந்த நீராவி மழையாகப் பொழிந்து புவிக்கு தண்ணீர் கொடுத்தது.

பூமியில் தண்ணீர் இருப்பதற்கு, பூமியின் மேல் மோதிய சில வால் நட்சச்திரங்களும், எரிமலைகள் வெளிக்கொணர்ந்த நீராவியும் தான் காரணம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். (வால் நட்சத்திரங்கள் என்பது பனிக்கட்டியும், பாறைகளாலும் ஆனவைதான். சாதாரணமாக சூரியனை விட்டு வெகு தொலைவில் இருக்கும் இவைகள் பாதை மாறி, சூரியனை நெருங்கும் போது சூரியனின் வெப்பத்தினால் இந்த பனிக்கட்டிகள் உருகி நீராவியாகி, அந்த நீராவியும் தூசுக்களும் வால் போல நீண்டு காட்சி தரும்.)

பனியுகம்

பூமியை சில ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை பனியுகம் ஆட்கொள்ளும். பூமியின் பெரும் பகுதி பனியினால் மூடி மறைக்கப்படும். இப்போது புவியின் வட துருவமும், தென் துருவமும் பனியினால் மூடப்பட்டிருப்பதுபோல, புவி முற்றிலும் பனி படர்ந்திருக்கும். இப்போது நம் காணும் வட-தென் துருவ பனி பிரதேசங்கள், கடந்த பனியுகத்தின் தொடர்ச்சியே.

பனியுகத்தின் போது கடுங்குளிரினால் பயிர் வளர்ச்சி தடைப்படும். அதனால் உயிர்கள் வாழ்வதற்கும், பரிணாம வளர்ச்சி அடைவதற்கும் மிகப்பெரிய தடங்கல் ஏற்படும். இம்மாதிரியான ஒரு பனியுகத்தில் பூமி சிக்கி, உயிர்கள் எல்லாம் அழியும் நிலை வந்தபோது, எரிமலைகள் தான் அந்த சிக்கலை முடிவுக்கு கொண்டு வந்து பூமியை காப்பாற்றியிருக்கின்றன. எரிமலைகள் குமுறும்போது, கார்பன் டை ஆக்சைடு என்ற கரியமில வாயு வெளிவரும். இந்த வாயுவிற்கு சூரியனின் வெப்பத்தை பிடித்து வைக்கக் கூடிய குணம் உண்டு. புவி மீண்டும் வெப்பமடைவதற்கு, இந்த வாயுவே காரணம். எரிமலைகள் இந்த வாயுவை அதிகமாக வெளியிட்டதனால் புவி அந்த கடுமையான பனி யுகத்திலிருந்து மீண்டது.

உயிர்கள் உண்ண உணவு

கார்பன் டை ஆக்சைடு என்ற வாயுவிலிருந்துதான், கார்பன் என்ற தனிமத்தை எடுத்துக் கொண்டு, 'கார்போஹைட்ரேட்' என்ற மாவுச்சத்தை பயிர்கள் தயாரிக்கின்றன. அதைத் தின்றுதான் மிருகங்களும், மனிதர்களும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கார்பன் டை ஆக்சைடு வாயுவை எடுத்துக்கொண்ட மரங்கள், அதிலிருந்து பிராணவாயுவை பிரித்தெடுத்து கொடுத்து, நாம் உயிர்வாழ்வதை உறுதி செய்கின்றன. பூமியின் மேற்பரப்புக்கு/ வளிமண்டலத்திற்கு கார்பன் டை ஆக்சைடை வழங்கியதில் எரிமலைகளின் பங்கு பெரியது.

எரிமலைகளிலிருந்து வெளி வரும் லாவா எனப்படும் எரிமலைக் குழம்புகள் காலப்போக்கில் பயிர் நன்கு வளர்வதற்கு வேண்டிய எல்லா வளமும் கொண்ட செழிப்பான மண்ணை வழங்குகிறது. விவசாயிகள் நிலத்திற்கு உரம் இடுவது போல பயிர்கள் நன்கு வளர புதிதாக வளங்களை எரிமலைகள் கொடுத்து வந்திருக்கின்றன.

வசிக்க இடம்

ஹவாய் தீவுகள் ஒரு வளர்ந்து கொண்டிருக்கும் தீவுக்கூட்டம் என்று அறியப்படுகிறது. காரணம், அந்தத் தீவுகளில் உள்ள எரிமலைகள் இருந்து லாவா எனப்படும் எரிமலைக் குழம்புகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக பூமியின் உள்ளிருந்து வெளியே வந்து கடலில் வீழ்ந்து கொண்டே இருக்கின்றன. இவ்வாறு கடலில் விழும் குழம்புகள் குளிர்ந்து புதிய நிலப்பரப்பாகிறது. பூமியின் நிலப்பரப்பில் பெரும் பகுதி இவ்வாறு எரிமலைகளால் உண்டாக்கப்பட்டது என் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

எங்கே எரிமலை?

இந்த புவியை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால் போதாது, இதற்கு ஆபத்து எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று மனித இனத்திற்கு வேறொரு இடத்தை தேடிக் கொண்டிருக்கும் அறிவியலாளர்கள், வேறொரு கோளை கண்டால் அதில் எரிமலைகள் இருக்கின்றனவா என்று முதலில் தேடுகின்றனர். எரிமலைகள் இல்லையென்றால் அந்தக் கோளை ஒரு இறந்துபோன கோளாகவே கருதுகின்றனர்.

செவ்வாயில் எரிமலைகளை முதலில் கண்டவுடன் மகிழ்ச்சியடைந்த அறிவியலாளர்கள், பின்னர் அது வெகு நாட்களாக செயல் இழந்திருப்பதைக் கண்டவுடன், அங்கு உயிர்கள் பரிணாம வளர்ச்சி அடைய வாய்புக்கள் குறைவு என்று முடிவுக்கு வந்தனர். உயிர்களின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் எரிமலைகள் எவ்வளவு இன்றியமையாதவை என்பதை இது காட்டுகிறது.

எரிமலைகளை அழிவு சக்தியாய் இருந்த போதும், அது ஒரு பெரும் ஆக்க சக்தியாக இருந்திருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. அதே போன்று இயற்கையின் அழிவு சக்திகளான நட்சத்திரங்களின் வெடிப்பு, புவியின் மேல் வால் நட்சத்திரத் தாக்குதல், வின்வெளிப் பாறைகளின் தாக்குதல் போன்ற பல இயற்கை நிகழ்வுகள் அழிவைக் கொடுத்தாலும், புவிக்கு ஆக்கத்தையும் கொடுத்திருக்கின்றன.

ஜாக்கிரதை நண்பர்களே! எரிமலைகளை ஓர் அழிவுசக்தி மட்டும் தான் என்றால், 'எரிமலை எப்படி பொறுக்கும்'

- ஜெயச்சந்திரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)