mindஐம்புலன்களில் இருந்து வரும் உணர்வுகள் மூளையை அடைகின்றன. மூளை அவற்றை வகைப்படுத்தி உணர்ந்து கொள்கிறது. இந்த உணர்வுகள் மூளையிலேயே தங்கி இருந்தால் அவை நினைவுகளாக மாறிவிடுகின்றன. தேவை ஏற்படும்போது இந்த நினைவுகளை மீட்டெடுக்கமுடியும்.

நினைவாற்றலை குறுகிய கால நினைவாற்றல், நீண்டகால நினைவாற்றல் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். நமது மூளை அன்றாடம் ஆயிரக்கணக்கான தகவல்களைப் பெறுகிறது. அத்தனை தகவல்களையும் மூளையிலேயே சேமித்து வைக்கவேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. அவசியமான காலத்திற்கு மட்டுமே அந்த தகவல்கள் மூளையில் சேமித்துவைக்கப்படுகின்றன. பணி முடிந்ததும் அந்த தகவல்கள் மறக்கப்பட்டு விடுகின்றன. இதுவே குறுகியகால நினைவாற்றல் என்று வகைப்படுத்தப்படுகிறது.

நாம் செய்யும் தொழிலுக்குத்தேவையானவை, நம்முடைய மனதை மிகவும் கவர்ந்தவை அல்லது பாதித்தவை, மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்தவை ஆகிய தகவல்கள் நம்முடைய மூளையில் நீண்டகால நினைவுகளாக தங்கிவிடுகின்றன. நீண்டகால நினைவுகளில் இருந்து தகவல்களை மீட்டெடுப்பதற்கு மூளை சிலநேரங்களில் சிரமப்படுவதை நாம் உணரமுடியும்.

மூளை பலசெய்திகளை ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட தகவல்களுடன், புதிய தகவல்களையும் சேர்த்து பாதுகாக்கிறது. பலவருடங்கள் அந்த தகவல்களை வெளிக்கொணராமல் போனால் கோடிக்கணக்கான தகவல்களுக்கிடையில் அவை புதைந்து போகின்றன. இதனால்தான் நாம் சந்திக்கும் சிறுவயதுத் தோழரிடம், “உங்களுடைய பெயர் நாக்கில் இருக்கிறது; வரமாட்டேன் என்கிறது” என்று சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது.

குழந்தை பிறந்து மூன்று வயது வரையில் தான் பார்ப்பது, கேட்பது அனைத்தையும் புகைப்படங்களாக தனித்தனியே மூளையில் பதிவு செய்துகொள்கிறது. அவற்றின் முழுப் பொருளும் குழந்தைகளுக்குப் புரிவதில்லை. மூன்றுவயதிற்கு மேல்தான் நீண்டகால நினைவுகள் படிப்படியாக உருவாகின்றன.

நன்றி: கலைக்கதிர்
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி