musicமூளையின் இடது வலது பாகங்களை ஒருசேர பயன்படுத்தும் ஆற்றல் சாதாரண மனிதர்களைவிட வாத்தியக் கலைஞர்களுக்கு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

சாதாரண மனிதர்களைவிட நன்கு பயிற்சிபெற்ற வாத்தியக் கலைஞர்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார்களாம். திறமையான கலைஞர்கள் தமது சிந்தனைகளை பல முனைகளிலும் ஒருசேர செலுத்துவதிலும் வல்லவர்களாக இருக்கிறார்களாம். வாத்தியக் கலைஞர்கள் தொழில் ரீதியாக படைப்புத் திறனைக் கொண்டிருப்பதால் இது சாத்தியமாகிறது.

வாத்தியக் கலைஞர்கள் இசையை வெளிப்படுத்தும்போது வெவ்வேறு வரிவடிவங்களை ஒரே சமயத்தில் இரண்டு கைகளையும் பயன்படுத்தி வெளிப்படுத்துவதை நாம் கவனித்திருக்கிறோம்.

இசைக்குறியீடுகளை படிப்பது என்பது இடதுபக்க பெருமூளையின் வேலை. இசைக்கலைஞர் தன்னுடைய கற்பனைத்திறனை அத்துடன் இணைத்து வாசிப்பது என்பது வலதுபக்க பெருமூளையின் வேலை.

வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் உளவியல் நிபுணர்கள், இந்த ஆய்வை செய்வதற்கு, எட்டு ஆண்டுகளுக்குக் குறைவில்லாமல் பயிற்சி பெற்ற இருபது மாணவர்களையும், இசைப்பயிற்சி பெறாத இருபது மாணவர்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். பியானோ, காற்றுக்கருவிகள், கம்பிக்கருவிகள், தோல் கருவிகள் ஆகிய வாத்தியங்களில் பயிற்சி பெற்ற மாணவர்களும், அனைத்து வயதுப்பிரிவினர், இருபாலர், வெவ்வேறு கல்வித் தகுதியுடைய மாணவர்களும் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர்.

இரண்டு நிலைகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. முதல் ஆய்வில் பலவகையான வீட்டு உபயோக பொருட்கள் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டன. எழுதப்பட்ட ஒரு சொல்லும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. சொல்லுக்கும் பொருளுக்குமான தொடர்பைக் கூறுவதில் கலைஞர்கள் மற்றவர்களை விட சிறந்து விளங்கினர். அதுமட்டுமில்லாமல் வீட்டு உபயோக பொருட்களுக்கு புதுப்புது உபயோகங்களையும் இசைக்கலைஞர்கள் கூறினர்.

இரண்டாவது ஆய்வில் பொருட்களின் உபயோகம் ஒரு வார்த்தையால் தொடர்பு படுத்தப்படும்போது பெருமூளையின் முன்பகுதி ஸ்கேன் செய்யப்பட்டது. மூளையின் கார்டெக்ஸ் பகுதியில் ஆக்ஸிஜனேற்றத்தின் அளவு அதிகமாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுமட்டுமல்லாமல், இசைக்கலைஞர்களின் அறிவுத்திறன் (IQ) அளவீடு செய்யப்பட்டபோது, மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டது.

அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி