Childவிளையும் பயிர் முளையிலே என்பது தமிழ் முதுமொழி. குழந்தைகள் அனைவரும் ஒன்றுபோல் இருப்பதில்லை. முரட்டுத்தனம், அடுத்த குழந்தையை தாக்குதல் ஆகிய குணங்கள் சில குழந்தைகளிடம் இயல்பிலேயே இருப்பது உண்டு. பள்ளிப்பருவத்தை எட்டும் முன்பாகவே குழந்தைகளின் கூட்டுணர்வுத்திறன் வெளிப்பட்டு விடுகிறது என்பது ஆராய்ச்சியின் முடிவு.

பள்ளி செல்லும் வயது அடையாத குழந்தைகளுக்காக முன்பருவ பள்ளிக்கூடங்கள் நடத்தப்படுகின்றன. மற்ற குழந்தைகளுடன் கலந்து பழகும் வாய்ப்பு இந்த பள்ளிகள் மூலம் கிடைக்கிறது. சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நற்பழக்கங்கள் இந்தப் பள்ளிகள் மூலம் விதைக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு அவர்களுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகூட இங்குதான் கிடைக்கிறது. சில குழந்தைகள் இயல்பிலேயே முரட்டுத்தனம் வாய்ந்தவர்களாயும், மற்ற குழந்தைகளைத் தாக்கும் குணமுடையவர்களாயும் இருப்பார்கள். பள்ளியின் செயல்பாடுகளில் ஈடுபாடு இல்லாதவர்களாயும் இருப்பது இயல்பானதுதான். இப்படிப்பட்ட குழந்தைகளின் நட்புவட்டம் சிறியதாக இருக்கும். பிற்காலத்தில் வளர்ந்தபின்னரும் கூட சமூகத்தில் மற்றவர்களிடம் நல்ல உறவை இவர்கள் ஏற்படுத்திக்கொள்வதில்லை.

சிறுவர்களின் கூட்டுணர்வைக் குறித்த ஆய்வு அரிசோனா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஆறு முன்பருவ பள்ளிகளின் வகுப்பறைகளில் இருந்து 97 குழந்தைகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். குழந்தைகளின் நடத்தைகளைப் பற்றிய தகவல்களை அவர்களின் ஆசிரியர்கள் கொடுத்தனர். Q-connectivity முறையில் ஒவ்வொரு குழந்தையும் எத்தனை குழந்தைகளுடன் உறவாடியது, எத்தனை முறைகள் உறவாடியது, அவர்களின் முரட்டுத்தனத்தின் அளவு, வகுப்பில் ஈடுபாடு இவையனைத்தும் சேகரிக்கப்பட்டு அலசி ஆராயப்பட்டது.

முரட்டுத்தனம், கோப உணர்வு, வகுப்பில் ஈடுபாடு காட்டாமை ஆகிய குணங்களைக் கொண்ட குழந்தைகளுக்கு மிகக்குறைவான நண்பர்கள் மட்டுமே இருந்தனர். மாறாக மென்மை, நன்கு பழகும் குணம் இவற்றுடன் வகுப்பில் ஈடுபாடு காட்டும் குழந்தைகளின் நட்புவட்டம் பெரியதாக இருந்தது. இந்த முடிவுகள் முன்பருவபள்ளி வயதினருக்கு மட்டுமல்லாது வளர்ந்த பிள்ளைகளுக்கும் பொருந்துவதாக அமைந்திருந்தன. இந்த முடிவுகள் ஆண் பெண் குழந்தைகளுக்குப் பொதுவாக இருந்தன.

The Child is The Father of The Man என்பார்கள். குழந்தைகளே இப்படியென்றால் சமூகமும் அப்படித்தானே இருக்கும். விதையொன்று போட்டால் சுரையொன்று முளைக்குமா என்ன?

அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி