ஷெல் பெட்ரோல் நிறுவனத்தை எதிர்த்த கென்ய கவிஞர் கென் சரோ விவா போல் உலகெங்கும் சூழலுக்காக போராடுபவர்கள் கொல்லப்படுகிறார்கள் அல்லது அரசின் உதவியுடன் நசுக்கி ஒடுக்கப்படுகிறார்கள். இந்தியாவிலும் அதுதான் நடக்கிறது. பொதுவாகவே சூழல் விழிப்புணர்வு அதிகமுள்ள கர்நாடகத்தில் சமீபத்தில் ஒரு கொடூரக் கொலை நடந்துள்ளது. வடிகால் தொழிற்சாலை, மணல் குவாரிகளை எதிர்த்த விவசாயி செல்ல கிருஷ்ணமூர்த்தி (57) அந்நிறுவன முதலாளிகளால் கொல்லப்பட்டிருக்கிறார். இயற்கை வேளாண் முறையில் வாழை பயிரிட்டு வந்த விவசாயி அவர்.

சிக்பல்லாபூர் கிராமப் பகுதியில் விவசாய நிலங்கள், பாசனக் குளங்கள், பினாகினி நதியில் உள்ளூர் வடிகால் தொழிற்சாலை தொடர்ந்து கழிவு நீரை வெளியேற்றி வந்துள்ளது. அந்த நிறுவனத்தின் அத்துமீறல் தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி வீடியோ பதிவு செய்துள்ளார். அந்த நிறுவனத்துக்கு எதிராக புகார் பதிவு செய்துள்ளார்.

இப்படிச் சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கைக்கு கடந்த நவம்பர் 10ந் தேதி திடீரென்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கௌரி டிஸ்டிலரி நிறுவனத்தின் அத்துமீறல்கள் பற்றி செய்தியாளர் கூட்டத்தில் பேட்டியளிக்க கிருஷ்ணமூர்த்தி தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், கௌரிபித்தனூக் தாலுகாவில் அவர் கொல்லப்பட்டார்.

அவரது தொடர் போராட்டத்தால், கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து தண்ணீர் மாதிரிகளை சோதனைக்காக எடுத்துச் சென்றிருந்தனர். வாரியத்தின் விதிமுறைகளை மீறியதன் காரணமாக டிசம்பர் 19ந் தேதி அந்த வடிகால் தொழிற்சாலை மூடப்பட்டிருக்கிறது. ஆனால் அரசு உரிய காலத்தில் செயல்படாததால், ஒரு சுற்றுச்சூழல் போராளியின் வாழ்க்கை வலிந்து முடிக்கப்பட்டிருக்கிறது.

- ஆதி வள்ளியப்பன், பூவுலகின் நண்பர்கள்