கப்பல் உடைப்பது இன்று ஒரு மிகப் பெரிய தொழில். ஆனால் இது கடுமையான சூழல், ஆரோக்கியப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. கப்பலின் அடிப்பகுதியில் உடைப்பதற்குரிய அறைகளில் நச்சு வாயுக்கள் இருப்பதைக் கண்டறிய உயிருடன் இருக்கும் ஒரு கோழியின் காலில் கயிற்றைக் கட்டி கீழ்நோக்கி இறக்கி பார்க்கப்படுகிறது. கோழி சாகவில்லை என்றால் ஆபத்தில்லை என்று பொருள். உலகம் முழுவதும் ஒரு இலட்சம் அளவு கப்பல்கள் உள்ளன. ஒரு கப்பலின் ஆயுள் 20-25 ஆண்டுகள்.

ஒவ்வொரு ஆண்டும் 500 முதல் 700 கப்பல்கள் உடைக்கப்படுகின்றன. பலவகை கப்பல்களைக் கருத்தில் கொண்டால் இந்த எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டும். இதில் 90% கப்பல்கள் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளில் உடைக்கப்படுகின்றன. பாகிஸ்தானில் உள்ள கப்பல் உடைக்கும் மையம் உலகில் மூன்றாவது பெரிய மையம்.

சுற்றுச்சூழல் நாசம்

இத்தொழிலில் வேலை செய்பவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன் இது கடுமையான சூழல் நாசத்தை ஏற்படுத்துகிறது. புற்றுநோய் போன்ற மோசமான பாதிப்புகளுக்குக் காரணமாகும் பாதரசம், சல்புரிக் அமிலம், ஆஸ்பெட்டாஸ் போன்றவை உள்ளிட்ட நச்சு வேதிப்பொருட்கள் ஒவ்வொரு கப்பல் உடைக்கப்படும்போதும் அதில் வேலை செய்யும் தொழிலாளர்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது.

ஒரு நடுத்தர கப்பல் உடைக்கப்படும்போது அதனால் 7 டன் ஆஸ்பெஸ்டாஸ் மாசு ஏற்படுகிறது. இது பிராந்திய சந்தைகளைச் சென்றடைகிறது. பெரும்பாலான மையங்களில் மாசு மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதில்லை. இதனால் இந்த மாசுக்கள் விவசாயம் மற்றும் மீன் வளத்தை அழித்து எல்லா இடங்களிலும் பரவுகிறது. பயிற்சி வழங்கப்படாத தொழிலாளிகளே இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர்.ship breakingபாதுகாப்பு நடவடிக்கைகள்

நச்சுத்தன்மை அதிகமுள்ள வேதிப்பொருட்கள் கையாளப்பட வேண்டிய இத்தொழிலில் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. உரிய பயிற்சி வழங்கப்படாததால் தொழிலாளர்கள் எளிதில் நோய்வாய்ப்படுகின்றனர்.

உடைக்கப்படும் கப்பலில் இருந்து அதிக அளவில் கிடைக்கும் எஃகு, தொழிற்சாலைகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எஃகில் 10% கப்பல் உடைக்கும் தொழிலில் இருந்தே பெறப்படுகிறது. பங்களாதேஷில் இது 20%. 1930களில் கப்பல் உடைக்கப் பயன்படுத்தப்பட்ட அதே தொழில்நுட்பங்களே இன்றும் ஆசிய நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.

அக்காலத்தில் ஐரோப்பாவிலேயே கப்பல்கள் அதிகமாக உடைக்கப்பட்டன. 1960ல் வீசிய ஒரு புயற்காற்றில் பங்களாதேஷ் சிட்டகாங் துறைமுகத்திற்கு கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு கப்பல் அடித்து வரப்பட்டது. கரை தட்டிய கப்பலை பலமுறை முயற்சி செய்தும் கடலில் இறக்க முடியவில்லை. இவ்வாறு நான்கைந்து ஆண்டுகள் கரையில் கிடந்த கப்பலை அங்கு இருந்த ஒரு எஃகு நிறுவனம் விலைக்கு வாங்கியது; உடைத்தது.

இதற்கு பல ஆண்டுகள் ஆயின என்றாலும் அந்நாட்டில் கப்பல் உடைக்கும் தொழிலிற்கு இந்த சம்பவம் காரணமாக அமைந்தது. சூழல் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டபோது உடைக்கப்பட வேண்டிய கப்பல்கள் ஐரோப்பாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு வரத் தொடங்கின. கடுமையான சூழல் சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் நாடுகளில் உடைந்த கப்பலுக்கு குறைந்த விலையே கிடைக்கிறது. பங்களாதேஷில் இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 69% புதிய கப்பல் வாங்கவே செலவிடப்படுகிறது.

ஆனால் அந்நாட்டில் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் வருமானத்தில் வெறும் 2 சதவிகிதம் மட்டுமே. வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படும் முறைகள் ஆசிய நாடுகளில் கடைபிடிக்கப்படுவது இல்லை. வளர்ந்த நாடுகளில் 2003ல் உருவாக்கப்பட்ட பேசில் உடன்படிக்கைபடி இத்தொழில் நடைபெறுகிறது. உடைக்கும்போது கிடைக்கும் 98% பொருட்கள் அங்கு மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

உடைக்கப்படுவதற்கு முன்

ஆபத்தான பொருட்களின் பட்டியல் உருவாக்கப்பட்ட பிறகே அங்கு கப்பல் உடைக்கும் வேலை ஆரம்பிக்கிறது. வாயுக்கள் வெளியேற கப்பலில் இருக்கும் எல்லா துளைகளும் திறந்து வைக்கப்பட வேண்டும். சில வேலைகள் பொருளாதார ரீதியாக நஷ்டத்தை ஏற்படுத்துபவை என்றாலும் கப்பலை முழுமையாக உடைக்க வேண்டும். தீங்கு விளைவிக்கக் கூடிய மற்றும் தீங்கற்ற பொருட்களை தனித்தனியாகப் பிரிக்க வேண்டும்.

ஆஸ்பெஸ்டாஸை பிளாஸ்டிக்கில் பொதிந்து எஃகால் ஆன பெட்டகங்களில் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட வேண்டும். ஒவ்வொரு பகுதியும் சரியான முறையில் முழுமையாக மறுசுழற்சி செய்யப்பட வேண்டும். ஐரோப்பாவில் கப்பல்கள் இந்த முறையில் உடைக்கப்படுகின்றன. ஆனால் கப்பல் உடைக்கும் தலைநகரங்கள் என்று வர்ணிக்கப்படும் இந்தியா மற்றும் பங்களாதேஷில் இதற்கு முற்றிலும் மாறான விதத்தில் இது நடைபெறுகிறது.

உடைக்கப்படும் கப்பலில் இருந்து கிடைக்கும் மின் கம்பிகள், இருக்கைகள், இயந்திரங்கள் உள்ளூர் சந்தைகளுக்குக் கொண்டு சென்று விற்கப்படுகின்றன. மின் கம்பிகள் எரிக்கப்பட்டு அதில் இருந்து செம்பு எடுக்கப்படுகிறது. தொழிலாளர்கள் பாதுகாப்பு ஆடைகள், முகக் கவசங்கள் மற்றும் காலணிகள் அணிவதில்லை. செலவு அதிகமாகும் என்று மின் தூக்கிகள் பயன்படுத்தப்படுவதில்லை.

கடற்கரையில் குவிக்கப்படும் கழிவுகள்

பிளாஸ்டிக் அடங்கிய வண்ணப்பூச்சு பூசப்பட்ட எஃகு பலகைகள், லாபம் தராத கழிவுகள் கடற்கரையில் போட்டு எரிக்கப்படுகின்றன. பங்களாதேஷில் கப்பல் உடைக்கும் மையங்களில் 79,000 டன் ஆஸ்பெஸ்டாஸ், மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 240,000 பாலி குளோரினேட்டட் பை பீனைல், ஓசோன் அடுக்கைப் பாதிக்கும் 210,000 மற்ற கழிவுகள் குவிக்கப்பட்டிருக்கின்றன.

1980களில் கப்பல்களில் ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்படுவது பல வளர்ந்த நாடுகளில் தடை செய்யப்பட்டது. இப்பொருளைக் கையாள அங்கு கடுமையான சட்டதிட்டங்கள் உள்ளன. இதனால் அங்கு லாபகரமாக கப்பல்களை உடைக்க முடிவதில்லை. அதனால் முன்பு கட்டப்பட்ட பழைய கப்பல்கள் ஆசியாவிற்குக் கொண்டு வரப்பட்டு உடைக்கப்படுகின்றன.

ஆபத்தான நச்சுப்பொருட்களைக் கையாளுதல், காயங்கள், வெட்டுக்காயங்கள், ஆபத்தான வாயுக்களை சுவாசிப்பது, தீக்காயங்கள், மூச்சுத்திணறல், புற்றுநோய் உட்பட பல பாதிப்புகள் ஆசியா கப்பல் உடைக்கும் மையங்களில் காணப்படுகின்றன. ஆனால் ஐரோப்பாவில் தொழிலில் ஈடுபடும்போது ஏற்படும் விபத்துகளுக்கு மிகப்பெரிய அளவில் நஷ்ட ஈடு கொடுக்கப்பட வேண்டும். இது இத்தொழிலை அங்கு லாபம் இல்லாத ஒரு தொழிலாக மாற்றியது.

அங்கு கப்பலை உடைத்து விற்றால் கிடைக்கும் தொகையைவிட அதை உடைப்பதற்கு ஆகும் செலவு அதிகம். பங்களாதேஷில் ஒரு வாரத்தில் ஒரு தொழிலாளியேனும் இதில் ஈடுபடும்போது மரணமடைகிறார். ஏற்படும் காயங்கள் இதைவிட மிக அதிகம். அங்கு இதில் ஈடுபட்டுள்ளவர்களில் 20 சதவிகிதத்திற்கும் கூடுதலானவர்கள் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களே.

அலாங்

குஜராத் அலாங் துறைமுகமே உலகில் மிகப்பெரிய கப்பல் உடைக்கும் மையம். இதன் மூலம் 15,000 முதல் 20,000 தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், பல லட்சக்கணக்கானவர்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஒரிசா, உத்தரப் பிரதேசத்தில் இருந்து வரும் வந்த தொழிலாளர்களே அதிகமாக வேலை செய்கின்றனர். இவர்கள் பரிதாபகரமான சூழலில் வாழ்கின்றனர். மருத்துவமனை வசதி பாவ்நகர் என்ற இடத்தில் 50 கி மீ தூரத்திலேயே உள்ளது.

அலையாத்திக் காடுகளின் அழிவு

பங்களாதேஷில் 2009ல் கப்பல்களை உடைக்கும் மையங்களில் கடலில் இருந்து கப்பல்களை கரைக்கு அருகில் கொண்டு வர வசதியாக அங்கிருந்த 40,000 அலையாத்திக் காடுகள் அழிக்கப்பட்டன. இந்தக் காடுகளே கடல் பேரிடர்களில் இருந்து இப்பகுதியை காப்பாற்றி வந்தன. கடலில் கலக்கும் நச்சுப்பொருட்கள் 21 வகை மீனினங்களை அழித்துள்ளன. ஆசியாவில் இந்த நச்சு மாசினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எந்த ஆய்வும் இதுவரை நடத்தப்படவில்லை.

தங்கள் சூழல் மற்றும் குடிமக்களை பாதுகாக்க வளர்ந்த நாடுகள் கப்பல்களை ஆசியாவிற்கு கொண்டு வருகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் இதற்கு ஆகும் செலவு மிகக் குறைவு. இது இங்கு உள்ள தொழிலாளர்கள் மற்றும் சூழலை அழிக்கிறது. இதையெல்லாம் ஆள்பவர்கள் எவ்வளவு காலம் கண்டு கொள்ளாமல் இருப்பார்கள்?

மேற்கோள்கள்: https://www.mathrubhumi.com/environment/columns/all-you-need-to-know-about-ship-breaking-and-its-environmental-aspect-eco-story-1.8584101

&

https://en.wikipedia.org/wiki/Alang_Ship_Breaking_Yard

சிதம்பரம் இரவிச்சந்திரன்