death valleyநம் பூமியெங்கும் ஆண்டுதோறும் சுமார் 1°F வெப்பநிலை அதிகரித்து வருகிறது என்பது உண்மை, இதையே புவி வெப்பமடைதல் என்ற கோட்பாட்டின் படி பாரிஸ் ஒப்பந்தம் நிறைவேறியது. வழக்கத்திற்கு மாறாக உயரும் வெப்பநிலையால் பூகோளமே வெப்ப மண்டலமாக உருமாற்றம் பெற்று வருகிறது என்பதை நம் கண்கூடாக பார்க்கிறோம்.

பொதுவாக நமது காலநிலையை நான்கு விதமான பிரிக்கப்படுகிறது. குளிர் காலம், வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம், இதில் கூடுதலாக 'தீ எரியும் காலம்' என்ற ஒன்றை கலிபோர்னியா மாகாணத்தில் சேர்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் அங்கு நிகழும் அதிகபட்சமான வெப்பநிலை ஒருபுறம் பதிவாகி அந்தப் பகுதியை வெப்ப மண்டலமாக மாற்றுகிறது, அதே வேளையில் மறுபுறம் காட்டுத் தீ தீவிரமாக உருவெடுத்தது தீயின் கொடூரம் தலை விரித்தாடுகிறது.

பூமியின் அதிகபட்ச வெப்பம்:

100 ஆண்டுகளுக்கு பின்னர் பூமியில் பதிவாகிய அதிகபட்ச வெப்பநிலையான 130° F ஃபேரன்ஹெய்ட் (54.4°C செல்சியஸ்) கலிபோர்னியாவின் மரண பள்ளத்தாக்கில், கடந்த 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3:41PM மணிக்கு பதிவாகியது. இது நவீன உலகில் பதிவாகிய அதிகபட்ச வெப்பநிலை என்கிறார்கள் வானிலை ஆராய்ச்சி வல்லுனர்கள்.

1913ஆம் ஆண்டு இதே பகுதியில் தான் 134°F வெப்பநிலை பதிவாகியது. எனினும் 100 ஆண்டுகளுக்கு முன்னர் பதியப்பட்ட இந்த வெப்பநிலையில் சந்தேகம் இருப்பதாக கூறுகிறார் வானிலை ஆராய்ச்சியாளர் Christopher Brut. "1913ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பதிவாகியாக கூறப்படுவது எப்படி என்று தெரியவில்லை, அந்த காலகட்டத்தில் வெப்பநிலையை அளவிடும் தெர்மோமீட்டரில் 130°F தான் அதிகபட்சமாக இருந்தது.

அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி 134°F பதிவாகியிருக்கும்?" என்ற கேளிவியை 2016ஆம் ஆண்டே அவர் எழுப்பினார். ஆனால், 2013ஆம் ஆண்டில் பூமியெங்கும் வீசிய வெப்பக் காற்றில் பல இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறிப்பாக இதே மரணப் பள்ளத்தாக்கில் 129°F (54°C) வெப்பநிலையும். 2016 ஆம் ஆண்டில் குவைத் நாட்டின் Mitribah என்றப் பகுதியில் 129°F பதிவாகியுள்ளது.

மரணப் பள்ளத்தாக்கு பகுதியை விட பூமியின் பிற்பகுதியிலும் அதிகபட்ச வெப்பநிலை காணப்படுகின்றது. சஹாரா பாலைவனத்தில் தொலைதூர பகுதியில் கூட அதிகமாக வெப்பம் பதியப்பட்டிருக்கலாம் ஆனால், அங்கு வெப்பத்தை அளவிடும் தெர்மோ மீட்டர் கருவிகளையும் வைத்து அளவிடவது சவாலான காரியமாக உள்ளது. மரணப் பள்ளத்தாக்கில் வெப்பநிலையை அளவிட அங்கு தெர்மிஸ்டர் என்ற கருவியை வைத்திருக்கிறார்கள் அதன் தகவல்களை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் செயற்கைக் கோள்களுக்கு அனுப்பி வைத்து பிறகு வெப்பநிலை கணக்கிடப்படுகிறது.

"மரணப் பள்ளத்தாக்கில் பதியப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை எந்த ஒரு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை" என்கிறார் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள Loyola Marymount University -ன் சுற்றுச்சூழல் பேராசிரியர் Jeremy Pal. மேலும் அவர் கூறுகையில், "நமது பூகோளம் ஏற்கனவே வெப்பமானதாகத் தான் காணப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் இப்போது உள்ள வெப்பநிலையை விட எதிர்காலத்தில் அதிகமாக வெப்பம் பதியப்படவும் வாய்ப்புகள் இருக்கிறது" என்றார்.

WMO என்று அழைக்கப்படும் World Meteorological Organization இந்த ஆண்டில் பதியப்பட்ட வெப்பநிலையை உறுதி செய்தது. சரி அதிகபட்ச வெப்பநிலை கலிபோர்னியா மரணப் பள்ளத்தாக்கில் மட்டும் எப்படி பதிவாகிறது? இந்த கேள்விக்கு மரணப் பள்ளத்தாக்கு அமைந்திருக்கும் அமைப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 282 அடி ஆழத்தில் அமைந்திருக்கிறது இந்த பள்ளத்தாக்கு. கலிபோர்னியா நெவாடா இரண்டு மாகாணங்களுக்கு இடையே அமைந்திருக்கும் பரந்து விரிந்த பாலைவனம், சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்கும் பகுதி. வெப்பமான காற்று இந்த பள்ளத்தாக்கு பகுதியின் உள்ளேயே சுழற்றி சுழற்றி சுற்றுவதால் மேலும் அது வெப்பத்தை கூட்டுகிறது.

பொதுவாக ஜூலை ஆகஸ்ட் மாதத்தில் இங்கு காற்றின் வேகமும் அதிகமாக இருக்கிறது. இதுவே அதிகப்படியான வெப்பநிலை பதியப்பட காரணமாக இருக்கிறது. இந்தப் பகுதியை ஒரு மிகப்பெரிய சுற்றுலா தளம் கூட. சுற்றுலாக்கு செல்லும் வாகனங்களில் போதிய அளவுக்கு தண்ணீர் இல்லை என்றால், அங்குள்ள அதிகாரிகள் அந்த வாகனத்தை மரணப் பள்ளத்தாக்கின் வழியே பயணம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள்.

அனல் காற்றுக்கு புதிய பெயர்:

காலநிலை மாற்றத்தால் உயர்ந்து வரும் வெப்பநிலை இந்த ஆண்டும் ஜூலை மாதத்தை வெப்பமான மாதமாக மாற்றியுள்ளது. வெப்பநிலை பரவலாக பாக்தாத்தில் இருந்து ஜப்பான் செர்பியா வரை ஒரு அளவில் பதிவாகியுள்ளது. இயற்கைப் பேரிடர்களில் வெப்பக் காற்றும் ஒரு அபாயகரமான பேரிடராகவே கருதப்படுகிறது.

1998ல் இருந்து 2017வரை அதிகபட்ச வெப்ப நிலையால் நிகழும் மரணங்களை கணக்கிட்டுப் பார்த்ததில் இதுவரை சுமார் 1,66,000 மக்கள் இதற்கு பலியாகியுள்ளனர். அனல் வெப்பநிலை உயர்வு குறித்து நம்மிடையே பரவலான விழிப்புணர்வு இல்லை என்பது தான் கசப்பான உண்மை.

கடலில் ஏற்படும் சூறாவளி காற்றுக்கு எப்படி நாம் ஒரு பெயரை சூட்டி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோமோ அதே போல் அனல் காற்று வீசும் சமயத்திலும் அதற்கென தனியாக ஒரு பெயரிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பட்சத்தில், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

கண்களுக்குப் புலப்படாத வைரஸை நாம் 'Invisible killers' என்று எப்படி அழைக்கிறோமோ அதேபோல் வெப்ப அனல் காற்றையும் 'Invisible Killer' என்றே அழைக்க வேண்டும் என்கிறார் Adrienne Arsht-Rockefeller Foundation Resilience Center -ன் இயக்குனர் Kathy Baughman McLeod.

"நம் கண்களால் பார்க்க முடியாத ஒன்றை தீர்த்து வைப்பது மிகவும் சிக்கலான விடயம். இதன் முதன்மையான நோக்கம் என்னவென்றால் மக்களுக்கு வெப்பநிலை அனல் காற்றின் ஆபத்துக்களை குறித்தி எடுத்துக் கூறுவதாகும்" என்றார் அவர். உலக அளவில் ஏற்படும் வெப்பக்காற்று நிகழ்வுகளுக்கு ஒரு பெயரை சூட்ட வேண்டும் என்று இவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இதையே உலக வானிலை ஆராய்ச்சி மையமும் அமெரிக்காவின் கடல்சார் ஆராய்ச்சி மையமும் பரிசீலித்து வருகிறது. The new heat alliance என்ற அமைப்பில் 30 பேர்கள் கொண்ட ஒரு குழுவில் நம் சென்னனை சேர்ந்த கிருஷ்ணன் மோகன் (Chennai's chief Resilience officer) இடம்பெற்று இருக்கிறார்.

அவர் கூறுகையில் "வெப்பக் காற்று வீசும் என தெரிந்தவுடன் அதற்கென ஒரு பெயரை சூட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். மக்கள் முன்னேற்பாடுடன் வீடுகளில் இருப்பது அதிகம் தண்ணீர் அருந்துவது மேலும் அவர்கள் அதைப்பற்றி பேசுவதை நாம் ஏற்படுத்தாலாம்" என்றார்.

விரைவிலேயே அனல் காற்றுக்கும் ஒரு பெயரை சூட்டி விழிப்புணர்வு ஏற்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. அப்படி ஏற்படும் பட்சத்தில் நமக்கும் அது புவி வெப்பமடைதல் குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வாக இருக்கும். இந்தியாவில் சென்னையும் ஒரு வெப்ப மண்டல பகுதி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கலிபோர்னியாவின் காட்டுத்தீ காலம்:

கலிபோர்னியா மாகாணத்தில் கோடைகாலம் வந்தாலே அம்மக்களுக்கு காட்டுத்தீயின் அச்சமும் கூடவே வந்துவிடும். கடந்த ஒரு வார காலமாக வடக்கு கலிபோர்னியாவில் உள்ள காட்டுப் பகுதிகளில் பற்றி எரிந்துக் கொண்டிருக்கும் தீ, இதுவரை சுமார் 1.4 மில்லியன் ஏக்கர் பரப்பளவில் காடுகளை சேதப்படுத்தியது. முறையே இது வெவ்வேறு பகுதிகளில் 7002 தீ (Wildfire) எரியும் சம்பவங்களால் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

தீயணைப்பு வானிலை ஆராய்ச்சி மையத்தின் கணக்கின்படி 1,100 மின்னல்கள் (dry lightings) தாக்கியதால் இந்த தீ விபத்துகள் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 300 மின்னல்கள் தாக்கியதால் மேலும் பல பகுதிகளில் தீ பரவிக் கொண்டிருக்கிறது.

மாகாணத்தின் ஆளுநர் கேவின் நீயூசம் (California Gov. Gavin Newsom) கூறுகையில் கடந்த நூறு ஆண்டுகளில் காணப்படாத சம்பவமாக இது மாறிவருகிறது. மாகாணத்தில் நிகழும் தீ சம்பவங்கள் புவி வெப்பமடைதலுக்கு சான்று என்றார். ஏற்கனவே கலிபோர்னியா மாகாணம் என்பது வெவ்வேறு கால நிலைகளை கொண்ட பகுதியாகும்.

சான்டா குரூஸ் மலைப் பகுதிகளில் ஏற்பட்ட தீயினால் ஏழு மனித உயிர்கள் பலியாகியிருக்கிறது‌. காட்டு விலங்குகளை பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை. தீயை கட்டுப்படுத்தும் வகையில் 14000 தீயணைப்பு வீரர்கள் களத்தில் இருக்கிறார்கள். எனினும் அருகில் உள்ள மாகாணங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்களும் வந்து சேர்த்திருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக இதே போல தீவிபத்து ஏற்பட்டு பல காடுகள் சேதம் அடைந்தது. பல மக்கள் அவ்விடங்களை விட்டு வேறு இடங்களுக்குக் குடிப் பெயர்ந்து விட்டனர். காலநிலை மாற்றம் உள் நாட்டு மக்களையே வெவ்வேறு இடங்களுக்கு குடிபெயர வைக்கிறது என்கிறதை நாம் அறிந்திருக்கிறோம். புவி வெப்பமடைந்து வருகிறது என்பதற்கு இதுவே சான்றுகள் ஆகும்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்து குறித்த விசாரணை அறிக்கையை நேற்று வெளிவந்தது. அடுத்த ஆண்டும் இதே போன்ற ஒரு சம்பவம் ஏற்பட்டு நீயூ சவுத் வேல்ஸ் பகுதியை சேதப்படுத்தலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதில் குறிப்பிடும்படியாக அவர்கள் மேற்கோள் காட்டியது 'கடுமையான வறண்ட நிலம், வெப்பம், வேகமாக அனல் காற்று மற்றும் பருவநிலை மாற்றம் புவி எறிவதற்கு காரணமாக கருதப்படுகிறது' என்றது அந்த அறிக்கை. ஆஸ்திரேலியா காட்டுத்தீ சம்பவத்தை நினைத்துப் பார்க்கும் போதே மனம் படபடத்தது போகிறது, இனிமேலும் அது போன்ற ஒரு சம்பவம் நிகழாமல் இருக்க வேண்டும்.

நன்றி; https://www.npr.org/2020/08/17/903192396/130-degrees-death-valley-sees-what-could-be-record-heat

- பாண்டி