வெதண நிலை ('தட்ப வெப்ப நிலை', சூழலியல்) மாற்றங்கள் தொடர்பான ஒன்றிய நாடுகளவையின் 25-ஆவது கருத்தரங்கம் (The UN Climate Change Conference COP 25) இம்மாதம் 2-13 தேதிகளில் ஃச்பெயின் (Spain) நாட்டுத் தலைநகர் மெட்ரிட் (Madrid) நகரில் நடைபெறுகிறது.

உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக் கணக்கானோர் கருத்தரங்கில் பங்கேற்கின்றனர்.

un climate change madridபுவியின் இயற்கைச் சூழல் அழிவின் விளிம்பில் இருக்கிறது; அதில் இருந்து மீள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளைப் பற்றிப் பேச்சு வார்த்தை நடத்துவது கருத்தரங்கின் முதன்மை நோக்கம்.

ஆனால், கருத்தரங்கை நடத்துவதற்குத் தேவையான நிதியுதவி யாரிடமிருந்து வருகிறது?

ஃச்பெயின் நாட்டின் பங்குச் சந்தையில் பதிவு செய்துள்ளவற்றில் 35 மிகப் பெரிய நிறுவனங்களிடமிருந்து தான்! அவை ஒவ்வொன்றும் இருபது லட்சம் யூரோ நிதியுதவி அளித்தால் 90 விழுக்காடு வரி விலக்குத் தருவதாக அந்நாட்டு அதிபர் அறிவித்தார். அந்நிறுவனங்களில் பல பெட்ரோலியம், எரி வளி, கழிவுகள், தண்ணீர் வணிகம் உள்ளிட்ட துறைகளில் உலகளவில் பெரியவை. கருத்தரங்குக்குச் செய்யும் 'நிதியுதவி' அந்த நிறுவனங்கள் வரி விலக்குப் பெறுவதற்கு மட்டுமின்றி, நற்பெயர் ஈட்டித் தம் களங்கங்களை மறைப்பதற்கும் பேருதவியாக இருக்கும்.

மேற்படிக் கருத்தரங்கில் ஒன்றிய நாடுகளவையின் செயலகத் தலைவர் (Secretary-General) ஆற்றிய உரையிலிருந்து சில தகவல்களும் கருத்துகளும் வருமாறு:

நம் முன்னர் இரண்டு வழிகள் உள்ளன; அடுத்த பத்தாண்டுகளுக்குள் அவற்றில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்: முதல் வழி உலகிலுள்ள அனைவருடைய வாழ்க்கையையும் கேள்விக்குள்ளாக்குவது. நாம் நம் வாழ்முறையை மாற்றிக் கொள்ளாமல், எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தால் அந்த வழியில் பயணிப்போம்.

நிலைத்த, நீடித்த வாழ்க்கைக்கு அடிகோலுவது இரண்டாவது வழி. அதில் சென்றால் பெட்ரோலியம், நிலக்கரி, இயற்கை எரிவளி ஆகிய புதைபடிவ ஆற்றல்களை நிலத்தடியில் விட்டு வைப்போம். அப்படிச் செய்தால் மட்டும் புவி 1.5 பாகை செல்சியசுக்கு மேல் சூடேறுவதைத் தடுக்கும் வாய்ப்புள்ளது. அதைவிட அதிகமாகச் சூடேறினால் அதன் விளைவுகள் மிக, மிக மோசமாக இருக்கும் என்பதைச் சூழலியல் அறிஞர்கள் ஐயத்துக்கு இடமின்றி நிறுவியுள்ளார்கள்.

கடந்த ஐந்தாண்டுகளில் வெப்பம் மிக அதிகமாக இருந்தது. வளிமண்டலத்தில் பசுங்குடில் வளிகளின் அளவு மிக அதிகமாகிவிட்டது. (சுமார் முப்பது முதல் ஐம்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு இருந்தபோது புவி மேற்பரப்பு வெப்ப நிலை இப்போது இருப்பதைவிடச் சுமார் 2-3 பாகை அதிகமிருந்தது; கடல் மட்டம் இப்போது இருப்பதைவிடப் பத்து முதல் இருபது மீட்டர் அதிகமிருந்தது.)

இதன் விளைவுகளைக் கண்கூடாகப் பார்க்கிறோம். வறட்சி, புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களின் கடுமை அதிகரித்து விட்டது. புவியின் வட, தென் முனைப் பகுதிகளில் பனி மிக வேகமாக உருகி வருகிறது. க்ரீன்லாந்துப் பகுதியில் சூலை மாதம் மட்டும் 17,900 கோடி டன் உறைபனி உருகிவிட்டது. ஆர்டிக் பகுதியில் எப்போதும் இருந்த உறைபனி எழுபது ஆண்டுகள் முன்கூட்டியே உருகி வருகிறது. அண்டார்டிகா கண்டத்திலுள்ள உறைபனி பத்தாண்டுகளுக்கு முன்னர் உருகியதைவிட மும்மடங்கு வேகமாக உருகி வருகிறது.

கடல் மட்டங்கள் எதிர்பார்த்ததைவிட வேகமாக உயர்கின்றன. உலகின் மிகப் பெரிய நகரங்களில் மூன்றில் இரண்டு பங்கு நகரங்கள் கடற்கரைகளில் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வளிமண்டலத்தில் சேரும் கரி-ஈருயிரகையில் (CO2) கால் பங்குக்கும் மேற்பட்டதைக் கடல்கள் உள்வாங்கிக் கொள்கின்றன; வளிமண்டலத்திலுள்ள உயிர்வளியில் (oxygen) பாதிக்கு மேற்பட்டதைக் கடல்களே உருவாக்கித் தருகின்றன.

அத்தகைய பெரும்பயன் தரும் கடல்கள் நம் தவறான செயல்பாடுகளால் சூடேறுவது மட்டுமன்றி மாசு நிறைந்து வருகின்றன. அவற்றில் கரையும் கரி-ஈருயிரகையின் அளவு கூடுவதால் கடல் நீர் மேலும் புளித்தமாகிறது. அதன் விளைவாகப் பல்லாயிரங் கோடி நீர்வாழ் உயிரினங்கள் அழிகின்றன.

ஆனால், உலக நாடுகள் நிலக்கரி, பெட்ரோல் உள்ளிட்ட புதைபடிவ ஆற்றல் பயன்பாட்டைக் குறைப்பதற்கு பதில் அதிகரித்து வருகின்றன. ஆற்றல் உற்பத்தியில் மட்டுமன்றி வேளாண்மை, போக்குவரத்து, நகர வடிவமைப்பு, கட்டுமானத் துறை (சிமென்ட், எஃகு, உள்ளிட்ட துறைகள்) போன்ற அனைத்துத் துறைகளிலும் நாம் இப்போது பயணிக்கிற வழி ஆபத்தானது.

நம் தொழில்துறைகளில் உடனடியான அடிப்படை மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே நமக்கு எதிர்காலம் உள்ளது.

2100-ஆம் ஆண்டுக்குள் புவியின் வெப்பநிலை 1.5 பாகைக்கு மேல் உயராதிருக்க வேண்டுமானால் 2010-2030 காலக்கட்டத்தில் நாம் வெளியிடும் பசுங்குடில் வளிகளின் அளவை 45 விழுக்காடு குறைக்க வேண்டும்; 2050-க்குள் அவற்றை வெளியிடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும்.

பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்த முயற்சியை அனைத்து நாடுகளும் தொடங்கியிருந்தால் பசுங்குடில் வளி வெளியீட்டை ஆண்டுக்கு 3.3 விழுக்காடு குறைத்தால் போதுமானதாக இருந்திருக்கும். ஆனால், இப்போது ஆண்டுக்கு 7.6 விழுக்காடு குறைக்க வேண்டும்!

பாரிசில் சென்ற ஆண்டு ஒப்புக் கொண்டவாறு அரசுகள் நடக்கவில்லை. குறிப்பாக, பொருளாதாரத்தில் உயர்நிலையிலுள்ள (G20) நாடுகள் தம் பொருளாதார முறையில் பெரும் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

இப்போதைய நிலை நீடித்தால் 2100 வாக்கில் புவியின் வெப்பநிலை 3.4-3.9 பாகை உயர்ந்துவிடும். அதன் விளைவுகள் கற்பனை செய்ய இயலாத அளவு மோசமாக இருக்கும்.

ஆகவே, இயற்கைக்கு எதிரான நம் போரை உடனடியாக நிறுத்துவது இன்றியமையாதது.

1. https://truthout.org/video/police-halt-activist-led-toxic-tour-of-corporate-polluters-sponsoring-cop25/

2. https://www.un.org/sg/en/content/sg/statement/2019-12-02/secretary-generals-remarks-opening-ceremony-of-un-climate-change-conference-cop25-delivered

- பரிதி