ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிடில் நடைபெற்று வரும் 'உலக நாடுகள் காலநிலை மாநாட்டில்' ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்ரஸ் (Antonio gutierrez), புவி வெப்பமடைதலுக்கு எதிராக எடுத்த சபதத்தில் எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம் என்று உறுதியளித்தார்.

உலகத்தில் அறிவியல் பூர்வமாக இருக்கும் ஞானமும், தொழில்நுட்ப அறிவும் புவி வெப்பமடைவதைத் தடுப்பதாக இருக்க வேண்டும். ஆனால் அரசியல் ரீதியாக அதற்கான நடவடிக்கை இல்லை.

un climate meeting 20192019, டிசம்பர் 2-13 வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் 2015-பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தை நிறைவேற்ற எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப் போகிறோம், கடல்நீர் உயர்வதால் பாதிக்கப்படும் நாடுகள் நிலை மற்றும் பிற காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் ஆகியவை குறித்து விவாதிக்க உள்ளார்கள்.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் குளோரோபுளோரோ கார்பன்ஸ் (greenhouse gases) நமது வளிமண்டலத்தில் ஏற்கனவே உள்ளது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட இவைகளால் வெப்பநிலை, துருவ பனிப்பாறைகள் உருகுவது, சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆனால் உலகத்தில் அதிகமாக இந்த வாயுக்களை வெளியேற்றும் நாடுகள் இதற்கு எதிராக எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுத்தாகத் தெரியவில்லை.

தற்போது 70 நாடுகளுக்கு மேல் காலநிலை மாற்றத்திற்கு எதிராக, தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். 2050க்குள் கிரீன்ஹவுஸ் கேஸ் வெளியேறுவதை தடுப்பதற்கான திட்டங்கள் வகுக்கிறார்கள்.

2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையங்களுக்கு அரசு அனுமதி தரக்கூடாது எனவும் உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

இதில் மறைமுகமாக 'பசுமை தொழில்நுட்ப' மின்சாரம் உற்பத்தி செய்து நமது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற சாராம்சம் உள்ளது. அணு உலைகள் சம்பந்தமாக பேசப்படவில்லை. அப்படியென்றால் அணுஉலை மின்சாரம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத ஏற்பாடா?.

ஜெர்மனி நாடு அவர்களுடைய அனைத்து அணு உலைகளையும் 2022க்குள் மூடிவிடப் போகிறார்களாம். இந்த உலைகளில் இருக்கும் 28,000 (Cubic meters) அணுக் கழிவுகளை எங்கே பாதுகாப்பாக புதைத்து வைக்கலாம் என விஞ்ஞானிகள் இடம் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். அதிபயங்கர ரேடியோஆக்டிவ் கதிர்கள் இந்தக் கழிவுகள் மூலம் வெளியேறலாம். இதன் தாக்கம் அடுத்த மில்லியன் ஆண்டுகளுக்கு இருக்கும் என்று சமீபத்தில் ஒரு செய்தியைப் படித்திருக்கிறோம்.

காற்றாலை மின்சாரம், கதிரொளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுவது (சோலார்) போன்றவற்றை முன்னிலைப் படுத்த வேண்டும் எனவும் கருத்துகள் முன்வைக்கப்படுகிறது.

விழிப்புணர்வு யாரிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும் மக்களிடம் இருந்தா... அரசுகளிடமிருந்தா?.

இப்போது உள்ள இளைஞர்கள் மத்தியில் பருவநிலை மாற்றம் பற்றி விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இது நல்ல ஒரு மாற்றம் கூட.

அன்றாடம் நாம் பயன்படுத்தும் தேவைகளைக் குறைத்து புதிய வாழ்வியலைத் தொடங்குவதன் மூலம் புவி வெப்பமடைவதைத் தவிர்க்க முடியும். நாம் வளரும் இதே சூழலில் நமது குழந்தைகளுக்கும் சூழலியல் கற்று கொடுக்க வேண்டும்.

மறுசுழற்சியின் முக்கியத்துவத்தையும் இளைய தலைமுறைக்குக் கற்றுக் கொடுக்கும் பொறுப்பு நாம் எல்லோருக்கும் உள்ளது.

- பாண்டி