environment1 350இந்தத் தொடரின் கடந்த இரு பகுதிகளில் நெடுவாசலில் எரிபொருள் உற்பத்தி செய்வதற்கான எதிர்ப்பு என்பது மக்களின் வாழ்வாதாரத்தை தக்கவைப்பதற்கான போராட்டம் என்பதையும், அது உலகமயத்தின் குறிப்பாக அமெரிக்க அரசின் எரிபொருள் மற்றும் டாலர் சார்ந்த கொள்கைகளின் தொடர்ச்சி என்பதையும், தற்போது மாறிவரும் உலக அரசியலில் இந்திய ஆளும் வர்க்கம், இந்திய விவசாயிகளை அடகு வைத்து தனக்கான ஆதாயத்தை பெற காத்திருப்பதையும், எரிபொருளின் அடிப்படை அறிவியல் குறித்தும் விரிவாக கண்டோம்.

அதிக பாய்வுத்திறன் கொண்ட கடினபாறைகளின் கீழ் தேங்கியிருக்கும் எரிபொருட்களை மரபுசார்ந்த முறையில் எடுப்பதை போன்று அல்லாமல், எண்ணெய் மற்றும் எரிவாயு உருவாக காரணமான மூலப்பாறைகளில் சிக்கியிருக்கும் குறைவான பாய்வுத்திறன் கொண்ட எரிபொருட்களை தூண்டப்பட்ட முறையில், புதிய முறையான நீரியல் விரிசல் முறையை பயன்படுத்தி அந்த மூலப்பாறைகளை வெடிக்க செய்து எரிவாயு எடுக்கும் திட்டதை இந்த அரசு முனைப்பாக செயல்படுத்த முனைந்துள்ளது. அதன் ஒருபகுதியே சமீபத்திய தமிழக எரிபொருள் திட்டங்கள் ஆகும். விவசாய உற்பத்தி நடைபெறும் பகுதியை சிதைக்கும் எரிபொருள் திட்டங்கள் விவசாய குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தும் என்றால், இந்த நீரியல் விரிசல் முறையை அந்த பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வாழும் அனைவரையும் அங்கிருந்து விரட்டும். இப்படி பேசினாலே, அறிவியலுக்கு புறம்பாக வளர்ச்சி திட்டங்களை எதிர்ப்பதாக சில அறிவாளிகள் வாதிட்டு வருகிறார்கள். இதனால் அறிவியல் ஆய்வுகள், மற்ற வளர்ந்த நாடுகள் தொழில்நுட்ப வல்லுனர் குழுக்களை அமைத்து கண்டறிந்த முடிவுகளின் அடிப்படையில், இந்த நீரியல் விரிசல் முறையை தங்கள் நாடுகளில் தடை செய்துள்ளனர். இந்த முறையை பயன்படுத்தி பெருமளவு எரிபொருள் உற்பத்தி செய்யும் அமெரிக்காவில் அது ஏற்படுத்தி இருக்கும் நேரடி பாதிப்புகளை பற்றி இங்கே விரிவாக முன்வைக்கிறோம். இது அறிவாளிகளுக்கு பதில் சொல்வது மட்டுமல்லாமல், இது மற்றவர்களின் போராட்டம் என கூடங்குளம் போராட்டத்தில் விலகி  இருந்ததைப் போன்று நாம் ஒதுங்கி நிற்க கூடாது என்ற உண்மையை நம் அனைவருக்கும் உணர்த்தும் என்று நம்புகிறோம்.

நீரியல் விரிசல் முறை செயல்படுத்தப்படும் இடத்தின் தோற்றம். (geology.com)

envir2 600இந்த நீரியல் விரிசல் முறை எனப்படும் hydraulic fracturing method அமெரிக்காவில் நிலடுக்கத்தையும் அதிக அளவு நீர் பயன்பாட்டின் காரணமாக கடும் வறட்சியையும் ஏற்படுத்தியதோடு, நிலத்தடிநீர் மாசுபடுதல், பயன்படுத்தப்படும் வேதிபோருட்களால் சுற்றுச்சூழல் மாசுபடுதல், மீத்தேன் எரிவாயு கசிவினால் காற்றுமண்டலம் மாசுபடுதல், 60௦௦ மீட்டர்களுக்கு கீழே துளையிடுவதால் கதிரியக்க தனிமமான ரேடான் வெளியேறுதல், இவை அனைத்தின் காரணமாக மனிதர்களுக்கு கொடிய உடல்நல கேடுகளையும் உருவாக்கி இருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்த முறையை பயன்படுத்துவதைப்பற்றி ஆய்வு செய்த அறிவியல் வல்லுநர் குழு, இதுவரை வெளிவந்துள்ள அறிவியல் ஆய்வுகள், செய்திகள் ஆகியவற்றை தொகுத்து ஆய்வு செய்தது. (இதன் முழு பரிமாணத்தையும் புரிந்து கொள்ள இது போதுமானதாக இருக்கும் என்பதால் அனைவரும் தவறாமல் இதனை வாசிக்க கோருகிறோம்- http://publications.jrc.ec.europa.eu/repository/bitstream/111111111/26691/1/lbna25498enn.pdf) இதில் குறிப்பிடும் மிக முக்கிய இரு பிரச்சனைகள் 1. மக்கள் அடர்த்தி 2. அதிக அளவிலான நீர் பயன்பாடு.ஆகியவைப்பற்றியதாகும். இந்திய, தமிழக பகுதிகள் உலகிலேயே மிகஅதிக மக்கள் நெருக்கம் கொண்ட பகுதிகள் (படம் காண்க) என்பதையோ, நீர்தட்டுப்பாடு நிலவும் பகுதிகள் என்பதையோ சொல்லி தெரிய வேண்டிய தேவை இல்லை. மேற்சொன்ன பிரச்சனைகளோடு, இதில் பயன்படுத்தப்படும் வேதிபொருட்கள் குறித்து நிலவும் மர்மமும், இதுவரை செய்யப்பட்டுள்ள அறிவியல் ஆய்வுகள் அனைத்தும், எண்ணெய் நிறுவனங்களின் உதவித்தொகையில் நடைபெற்று உள்ளதால், அதன் நம்பகத்தன்மை ஐயத்திற்கு உரியது என்பதையும், அவற்றின் முடிவுகள் அறிவியலுக்கு எதிரானது என்பதையும், அமெரிக்காவின் நியூயார்க் மாகாண அரசு அமைத்த அறிவியல் வல்லுனர் குழு அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

envir3 600(உலகிலேயே அதிக மக்கள் நெருக்கம் கொண்ட இந்தியா (ஐரோப்பிய அறிவியல் ஆய்வு அறிக்கை))

நியூயார்க் மாகாண அரசு அமைத்த வல்லுநர் குழுவும், இந்த நீரியல் விரிசல் முறை சமூகத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்த ஆய்வுகள் முழுமையற்றதாகவும், இதுவரை இந்த முறையை பயன்படுத்திய பகுதிகளில் கதிரியக்க பொருட்களின் தாக்கத்தால், மக்களுக்கு பெருமளவு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பதாகவும் அறிக்கை அளித்துள்ளது. இதன் அடிப்படையில் அந்த மாகாணம் நீரியல் விரிசல் முறைக்கு தடை விதித்துள்ளது. இதேபோன்று ஸ்காட்லாந்து, பிரான்சு, நெதர்லாந்த், ஜெர்மனி போன்ற நாடுகளும் தனித்தனியாக வல்லுனர் குழுக்களை அமைத்து, அதன் அடிப்படையில் தடை செய்துள்ளன. இனி இந்த நீரியல் விரிசல் முறை நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுப்படுத்தியதால் மனிதர்களின் உடல்நலத்தை எவ்வாறு பாதித்துள்ளது என்பதை பற்றிய அறிவியல் ஆய்வு முடிவுகளை இனி தொகுத்து பார்ப்போம்.

நீரியல் விரிசல் முறையால் நிலத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் தொகுப்பு

enir4 450

Ref: Science Advances 2015.   

envi5 350

நீரியல் விரிசல் முறை நீரில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றிய தொகுப்பு.

envir6 350நீரியல் விரிசல் முறை காற்று மண்டலத்தில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளின் தொகுப்பு.

இப்போது சொல்லுங்கள், நீரியல் விரிசல் முறையில் பயன்படுத்தி எடுக்கப்போகும் எரிபொருள் நம்மை வாழவைக்கவா, அழிக்கவா என்பதை? தற்போது இரண்டாவது கட்டமாக நெடுவாசலில் தொடங்கியுள்ள போராட்டத்தின் முடிவுதான் நெடுவாசலை, மற்றும் நெடுவாசலை சுற்றியுள்ள மக்களின் வாழ்வை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்கால வாழ்வை தீர்மானிக்கப்போகிறது என்பது மிகையல்ல.

References

- சூறாவளி