இணையத்தில் மட்டும் நாம் பார்த்து வந்த பேஸ்புக் நிறுவனம், கடந்த சில நாட்களாகப் பக்கம் பக்கமாக ஃப்ரீ பேசிக்ஸ் என்னும் திட்டத்தைப் பற்றிப் பெரிய நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து வருகிறது.  அவ்விளம்பரத்தில், இத்திட்டத்தின் மூலம், இந்தியாவே முன்னேறி விடும், இந்தியர்களுக்கு இலவச இணையம் கிடைக்கும் என்னும் கருத்து தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.  ஓர் அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவின் மீதும் இந்தியர்கள் முன்னேற்றம் பற்றியும் இவ்வளவு அக்கறையா?  ‘யாருக்கும் இல்லாத அக்கறை உனக்கேன்?’ என்று பராசக்தி பாணியில் கேட்கத் தோன்றுகிறது.  எங்கள் மீது எங்களுக்கும் எங்கள் அரசுக்குமே இல்லாத கரிசனை உனக்கேன்? என்று பேஸ்புக்கைக் கேட்கலாம் என்று பார்த்தால், இது இந்திய மக்கள் தலையில் மிளகாய் அரைக்கும் திட்டம் என்னும் உண்மை பட்டென்று வெளிவருகிறது.  ஏற்கெனவே, சாதித்தலைவர்களால், மதத் தலைவர்களால், மூட நம்பிக்கைகளால், வெகுமக்கள் ஊடகங்களால், அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்ட சராசரி இந்தியன், இப்போதைய டிஜிட்டல் காலத்தில் இணைய நிறுவனங்களாலும் ஏமாற்றப்பட பேஸ்புக் நிறுவனம், புள்ளி வைக்கத் தொடங்கியிருக்கிறது.  இதை இப்படியே விட்டால், அடுத்து வரும் நிறுவனங்கள், அப்புள்ளியைப் பயன்படுத்திக் கோலம் போட்டு, இந்தியர்கள் கோலத்தை நிர்மூலமாக்கி விடுவார்கள்.  இச்சூழலில் பேஸ்புக்கின் ஃப்ரீ பேசிக்ஸ் திட்டம் பற்றிச் சில அடிப்படை தகவல்களைப் பார்ப்போம். modi mark zuckerberg

பேஸ்புக்: ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்தில் எந்த டெவலப்பரும் இணைந்து பங்களிக்கலாம்.  ஏற்கெனவே ஏறத்தாழ 800 டெவலப்பர்கள் இத்திட்டத்தில் இணைந்திருக்கிறார்கள். 

உண்மை: கூகுள், யாஹூ, ஐஆர்சிடிசி, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, இபே, பேடிஎம், ரெட்பஸ், அமேசான், பிளிப்கார்ட், டிவிட்டர், லிங்கிடுஇன், ஸ்னாப்டீல், குயிக்கர் எனப் பல முன்னணி இணையத்தளங்கள் இத்திட்டத்தில் இணையவேயில்லை.  காரணம் – வெகு எளிதானது – இத்திட்டத்தின் கீழ், இந்த இணையத்தளங்களின் பயனர்கள் அனைவரும் பேஸ்புக்கால் கண்காணிக்கப்படுவார்கள்; அவர்களது தனிப்பட்ட தகவல்களைத் தன்னுடைய சர்வர் மூலம் பேஸ்புக்கால் எளிதாக எடுக்க முடியும் என்பது தான்!  இதெல்லாம் ஏன் - ஐ.டி. நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் அமைப்பே, இத்திட்டத்தை எதிர்க்கிறது. 

பேஸ்புக்:  ஃப்ரீ பேசிக்ஸ் என்பது வளர்ந்து வரும் திட்டமாகும்.  ஏற்கெனவே இத்திட்டம் 36 நாடுகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

உண்மை:  இது வடிகட்டிய பொய்.  தனது தாயகமான அமெரிக்காவில் இணைய சமத்துவம்(நெட் நியுட்ராலிட்டி) பற்றி வாய் கிழியப் பேசும் பேஸ்புக், இந்த நல்ல திட்டத்தை அங்கிருந்தே தொடங்கலாமே?  அதை விட்டு விட்டு, கணக்குக் காட்டுவதற்காக மிகவும் ஏழைநாடுகளாக இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளையும் வளர்ந்து வரும் சில ஆசிய நாடுகளையும் இத்திட்டத்தில் சேர்த்து, இப்படிச் சொல்கிறது பேஸ்புக்.  ஜப்பான், நார்வே, பின்லாந்து, எஸ்டோனியா போன்ற இணையத்தில் முன்னேறிய நாடுகள் பலவற்றில் இத்திட்டம் தடை செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் மட்டும் இதுவரை இத்திட்டத்தை எதிர்த்து, பன்னிரண்டு இலட்சம் மின்னஞ்சல்கள் இணைய ஒழுங்கமைவு அமைப்பான டிராய்க்கு அனுப்பப்பட்டுள்ளன.  இவை எல்லாவற்றையும் விட, இணையத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டிம் பெர்னர்ஸ் லீயே இத்திட்டத்தைக் கண்டித்திருக்கிறார் என்றால் இது எவ்வளவு ஆபத்தான திட்டம் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

பேஸ்புக்: இத்திட்டம் மக்கள் நலனுக்கான திட்டமே தவிர, இலாப நோக்கம் இல்லை.

உண்மை: அடேயப்பா!  இலாப நோக்கம் இல்லாமலா, பெரிய பெரிய நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்தார்கள்?  எங்கோ இடிக்கிறதே!  விவரம் தெரிந்தவரை, பேஸ்புக், கூகுள் ஆகிய இரு நிறுவனங்களுக்குமே ஏறத்தாழ 150 கோடிக்கும் அதிகமான பேர் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்.  இவர்களை வைத்து கூகுள் 70000 கோடி சம்பாதிக்கிறது; பேஸ்புக் 14000 கோடி தான்(!) சம்பாதிக்கிறது.  அதாவது, கூகுள் ஒரு வாடிக்கையாளரை வைத்து 48 ரூபாய் சம்பாதிக்கிறது; ஆனால் பேஸ்புக்கிற்கோ 8 ரூபாய் தான் கிடைக்கிறது.  இதை அதிகப்படுத்த வேண்டும்.  கூகுளைப் பின்தள்ள வேண்டும் என்னும் வணிகப் போட்டி தான் இப்படி ஃப்ரீ பேசிக்ஸ் என்னும் வடிவம் எடுத்திருக்கிறது. 

கருத்து: ஃப்ரீ பேசிக்ஸ் என்பது புதிய, இளம் வணிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் போல் கருத்து கட்டமைக்கப்படுகிறது. 

உண்மை: பேஸ்புக் தான் எந்தெந்தத் தளங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்பதைத் தீர்மானிக்கும் என்பதால், எவ்வளவு பெரிய வணிகராக இருந்தாலும், அவர்களை பேஸ்புக்கில் பணம் கட்ட வைத்து விளம்பரம் வாங்குவது தான் இத்திட்டமாக இருக்குமே தவிர, வேறெந்தப் பயனும் இருக்காது. 

பேஸ்புக்: இணையத்தை இலவசமாக்கி இந்தியர்கள் பலரை இணையத்திற்குக் கொண்டு வந்து பலன் கொடுக்கப் போகிறது ஃப்ரீ பேசிக்ஸ் திட்டம். 

உண்மை:  இணையத்தை இலவசமாக எல்லா மக்களுக்கும் கொடுக்க ஃப்ரீ பேசிக்சை விட ஏர்செல்லின் திட்டம்(http://www.medianama.com/2015/10/223-aircel-free-internet/ ), மொசில்லாவின் சம மதிப்பீட்டுத் திட்டம்(http://www.thehindubusinessline.com/info-tech/net-neutrality-mozilla-suggests-equal-rating/article7177532.ece ), ஜிகாட்டோவின் சுங்கமில்லா இணையத் திட்டம் (http://www.digit.in/general/gigatos-toll-free-internet-28094.html ) எனச் சிறந்த பல திட்டங்கள் இருக்கின்றன.  ப்ரீ பேசிக்ஸ் திட்டம் என்பது பேஸ்புக்கை முன்னிறுத்தும் திட்டமே தவிர, இலவச இணையத்தை முன்னிறுத்தும் திட்டமாக இல்லை.

இது தவிர்த்து முதலில் சொன்னது போல, இத்திட்டத்தில் சேரும் எல்லாருடைய தகவல்களும் பேஸ்புக் நிறுவனம் வசம் இருக்கும்.  ஏற்கெனவே அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு அமைப்பிற்குத் தன்னுடைய பயனர்கள்ச் பற்றிய தகவல்களைக் கொடுத்து உலகத்தையே உளவு பார்க்க அமெரிக்காவிற்கு பேஸ்புக் உதவி வரும் வேளையில் (பார்க்க: http://www.globalresearch.ca/nsa-and-facebook-work-together/5439110 ), இந்தியர்களின் தகவல்கள் இப்படிப் பெறப்படுவது, இந்தியாவின் பாதுகாப்பிற்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமைய வாய்ப்புள்ளது. 

இவ்வளவு சிக்கல்கள் நிரம்பிய இத்திட்டத்தைத் தான், ‘டிஜிட்டல் இந்தியா’வைக் கட்டமைக்க உதவுங்கள் என்னும் பெயரில் பேஸ்புக் மூலமாகவும், தவறிய அழைப்பு (‘மிஸ்டு கால்’)கள் மூலமாகவும், பல கோடி செலவழித்து பெரிய பெரிய விளம்பரங்கள் மூலமும் பேஸ்புக் கொண்டுவரத் துடிக்கிறது.  உண்மை நிலவரம் என்னவோ, இந்தியர்கள் என்னும் ஆடுகள் நனைகிறதே என்று பேஸ்புக் என்னும் ஓநாய் அழுகிறது என்பது தான்! 

- முத்துக்குட்டி