கண்ணுக்குத் தெரியாத, சிறியதிலும் சிறியதான, நுண்மையிலும் நுண்மையான ஒரு துகள். அந்தத் துகளுக் குள்ளும் துகளாக இருப்பது அணுக்கரு. இந்த அணுக்கரு பிளக்கப்படும்போது இவ்வளவு ஆற்றல் வெளிப்படுகிறதா என்று நமக்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இல்லையா? இருக்கட்டும்.

இந்த ஆற்றலைப் புரிந்துகொள்ள நாம் ஏற்கெனவே படித்த சில விஷயங்களை மீண்டும் நினைவுகூர்வோம்.

அணுக்கருவில் என்னென்ன துகள்கள் இருக்கின்றன? நேர்மின்னூட்டமுடைய புரோட்டான்களும் மின் நடுநிலைத் தன்மையுடைய அல்லது மின்னூட்டமற்ற நியூட்ரான்களும், இல்லையா?

சரி. நாம் ஏற்கெனவே எதிர்மின்னூட்டமுடைய துகள்கள் ஒன்றையொன்று ஈர்க்கும், ஒரே மின்னூட்டமுடைய துகள்கள் ஒன்றையொன்று விலக்கும் என்றுதானே படித்தோம்?

அப்படியிருக்க, ஒரே மின்னூட்டமுடைய இந்தப் புரோட்டான்கள் ஒன்றையொன்று விலக்கிக் கொள்ளாமல் எப்படி ஒரே நெருக்கமாக அணுக்கருவில் பிணைந்துள்ளன? இது மேற்கண்ட கோட்பாட்டுக்கு முரண்பாடானது இல்லையா? அல்லது அந்தக் கோட்பாட்டின்படி பார்த்தால் இது விசித் திரமானது இல்லையா?

இதற்கு ஒரு காரணம் சொல்லலாம். அதாவது அணுக்கருவில் வெறும் புரோட்டான்கள் மட்டும் இல்லை. நியூட்ரான்களும் இருக்கின்றன. இவை மின்னூட்டமற்ற, அல்லது மின் நடுநிலைத் தன்மையுடைய துகள்கள். எனவே, இவை புரோட்டான் களுக்கு நடுவில் நெருக்கமாக அமைந்து இடம் பெற்றுள்ளன. ஆகவே, புரோட்டான் துகள்கள் ஒன்றோடொன்று விலக்கம் பெற்றேதான் அமைந்துள்ளன என்று சொல்லலாம்.

சரி. ஆனால் இப்படி விலக்கம் பெற்றுள்ள இந்தப் புரோட்டான்கள் எப்படிச் சிதறுண்டு போகாமல் ஓர் அணுக்கருவில் மொத்தமாக இறுக்கமாக ஒன்றாகப் பிணைந்துள்ளன? ஏதோ ஒரு சக்திதான் அந்தப் புரோட்டான் களைச் சிதறவிடாமல் ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கிறது இல்லையா? இதைத்தான் அணுக்கருவின் பிணைப்பு ஆற்றல் என்கிறார்கள்.

இந்தச் சக்தி தொடக்கத்தில் விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராயிருந்தது. இந்தப் புதிரை விடுவித்து அணுவின் இப் பிணைப்பு ஆற்றலை வெளிப்படுத்தினார் ஐன்ஸ்டின். முன்னதாக ஹிடேகியுசனாயா என்கிற ஜப்பானியரும் இச்சக்தி பற்றிக் கூறியிருக்கிறார்.

அணு என்பது முக்கியமான மூன்று துகள்களால் ஆனது எனவும், இத்துகள்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே அணுவின் அணு எண்ணையும், நிறை எண்ணையும் கணக்கிடுகிறார்கள் என்பதும் நமக்குத் தெரியும்.

இத்துகள்களை வைத்து அணுவின் நிறையை அளக்க அணுநிறை அலகு (Atomic Mass Unit - amu) என்கிற ஓர் அளவை விஞ்ஞானிகள் பயன்படுத்துகிறார்கள். ஒரு AMU என்பது 931 மில்லியன் எலக்ட்ரான் வோல்ட் - MeV. 1 AMU = 931 x 106 x 1.6 x 10 -19  J

இதன்படி ஓர் அணுவில் உள்ள மூன்று வகைத் துகள்களின் மொத்த நிறையையும் கூட்டினால், கூட்டி வரும் விடை குறிப்பிட்ட அந்த அணுவின் மொத்த நிறைக்குச் சமமாக இருக்க வேண்டும் இல்லையா..? ஆனால் அப்படி வரவில்லை. வித்தியாசம் வந்தது. அதாவது அணுவின் நிறை குறைவாக வந்தது.

உதாரணமாக, ஆக்ஸிஜன் அணுவில் 8 புரோட்டான், 8 நியூட்ரான் இல்லையா..? இவற்றைக் கூட்டிவரும் நிறை அணுவின் நிறைக்கு 0.13709 M.BGH.M வித்தியாசமாக இருந்தது. அதே போல இரும்பு அணுவில் 26 புரோட்டான், 30 நியூட்ரான் இல்லையா? அதைக் கூட்டி வரும் நிறைக்கு இரும்பு அணுவின் நிறை 0.5288 M.BGH.M வித்தியாசம் வந்தது.

இதற்கு என்ன காரணம்? இந்த நிறை எங்கு வீணாகிறது? என்று விஞ்ஞானிகளுக்குப் புரியவில்லை. குழம்பினார்கள்.

அந்தக் குழப்பத்தைத் தீர்த்து வைத்தவர்தான் ஐன்ஸ்டீன். அவர் சொன்னார், “நிறையும் ஆற்றலும் ஒரே பண்புடைய வெவ்வேறு வடிவங்கள். எனவே நிறையை ஆற்றலாகவும், ஆற்றலை நிறையாகவும் மாற்ற முடியும். எனவே அணுவின் நிறையில் குறைவுபடும் இந்த இழப்பிற்குக் காரணம், அந்த இழப்பு வேறு எங்கேயும் வீணாகிவிடவில்லை. மாறாக இது, அதாவது குறைவுபடும் அந்த நிறைதான் அணுக்கருவில் உள்ள ஒரே மின்சுமையுடைய புரோட்டான்களைப் பிணைத்து நிற்கும் ஆற்றலாக இருக்கிறது” என்றார் அவர். இதையே அணுவின் பிணைப்பு ஆற்றல் (Binding ENERGY) என்கின்றனர்.

அணுக்கருவில் பொதிந்துள்ள இந்த ஆற்றல்தான் அணுக்கருப் பிளப்பினால் பூதாகாரமான அளவில் வெளிப் படுகிறது. இதுவே அணு ஆற்றலை மற்ற ஆற்றல்களிலிருந்தும் வேறு படுத்துகிறது. இப்போது அணுக்கரு ஆற்றல் (NUCLEAR ENERGY) மற்ற சாதாரண ஆற்றல்களிலிருந்து எவ்வகையில் வேறுபடுகிறது என்பதை ஓரளவுக்கு நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது இல்லையா?

அதாவது, அணுவின் இயற்பியல் பண்புகளில் அணு நிலைப்புத் தன்மை பெறுவதற்கும், அயனியாக மாறு வதற்குமான நிகழ்வு அணுவின் எலக்ட்ரான் மட்டத்திலேயே நிகழ்ந்து விடுகிறதே தவிர, இம்மாற்றத்தால் அணுக்கரு எந்த வகையிலும் பாதிக்கப்படுவதில்லை. அதாவது அணுக்கரு இந்த மாற்றத்தில் எந்த வகையிலும் பங்குபெறுவதில்லை.

அதேபோல், ஓர் ஆற்றல் இன்னோர் ஆற்றலாக மாறும் கட்டத்திலும், இம்மாற்றம் வேதிவினை மாற்றங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவே உள்ளது. அதாவது நாம் ஏற்கெனவே பார்த்த ஆற்றலின் அழியாமை விதி மற்றும் நிறையின் அழியாமை விதியின் (Law of Conservation of Mass& Energy) அடிப்படையில் “ஒரு வேதிவினை மாற்றம் நிகழும் போது உருவாகும் வினைப் பொருள்களின் மொத்தநிறை, வேதிமாற்றத்தில் ஈடுபடும் வினைபடு பொருள்களின் மொத்த நிறைக்குச் சமம். அதாவது ஒரு வேதிவினை மாற்றம் நிகழும்போது நிறை கூடுவதும் இல்லை, நிறை அழிவதும் இல்லை” என்கிற விதிப்படி பொருளின் வடிவம் மறைந்து அப்பொருளில் அடங்கியுள்ள நிறைதான் வேறொரு பொருளுக்கு மாற்றப்படுகிறதே தவிர பொருளோ நிறையோ அழிந்து விடுவதில்லை.

எடுத்துக்காட்டாக விறகை எரிக்கிறோம். அது எரிந்து சாம்பலாகி விடுகிறது. உடனே விறகு மறைந்து விட்டதே என நாம் நினைப்போம். ஆனால் விறகு மறைந்ததே தவிர விறகின் நிறையும் அதில் அடங்கியுள்ள ஈரம் மற்றும் கார்பன் அது எரிய எடுத்துக்கொண்ட ஆக்ஸிஜன் ஆகியவற்றின் நிறை, அந்த விறகு எரிவதால் உருவாக்கப்பட்ட வெப்பம் மற்றும் எஞ்சியுள்ள சாம்பல் இவற்றின் நிறைக்குச் சமமாகவே இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

எனவே, இந்நிகழ்ச்சிகளில் ஓர் பொருளின் வடிவம் மறைந்து அது இன்னோர் பொருளாக, ஓர் ஆற்றல் மறைந்து இன்னோர் ஆற்றலாக மாறுகிறதே தவிர, அதாவது இந்த மாற்றங்களில் அணுவின் செயல் நிகழ்வு பெரும்பாலும் மாறாமல் அல்லது மாறினாலும் மாற்றம் எலக்ட்ரான் மட்டங்களிலேயே நிகழ்ந்துவிடுகிறதே தவிர இம்மாற்றங்களில் அணுக்கரு எவ்வகையிலும் பங்குபெறுவதில்லை அதாவது அணுக்கரு எந்த மாற்றமும் அடைவதில்லை.

ஆனால், “அணுக்கரு ஆற்றல்” ஒன்று மட்டும்தான் அணுக்கருவைப் பிளப்பதன் மூலம் வெளிப்படுகிறது. அதாவது அணுக்கரு ஆற்றலைப் பெறும் நிகழ்வு ஒன்றில் மட்டுமே அணுக்கரு செயல்படுகிறது. அணுக்கருவில் மாற்றம் ஏற் படுகிறது. அதாவது பொருள் அழிந்து ஆற்றலாக வெளிப்படுகிறது. எனவே, இதுவரை அறியப்பட்ட விஞ்ஞானங்களிலிருந்து, முற்றிலும் பல புதிய கோட்பாடுகளை உருவாக்கும் விஞ் ஞானமாக, அதிநவீன விஞ்ஞானமாக அணுக்கரு விஞ்ஞானம் இருந்து வருகிறது. இவ்வாறேதான் இதர வகை ஆற்றல்களிலிருந்தும் அணுக்கரு ஆற்றல் அடிப்படையில் மாறுபட்டு விளங்குகிறது.

அணுக்கரு அறிவியல்

இதுவரை அணு பற்றியும் ஆற்றல் பற்றியும் தனித்தனியே பார்த்து, பின் இரண்டையும் ஒன்றிணைத்து அணு ஆற்றல் குறித்து ஆராயப்போய், அணு ஆற்றல் என்பது நிஜத்தில் அணு ஆற்றல் அல்ல, மாறாக அது அணுக் கரு ஆற்றல்தான் என்பதையும், இது மற்ற ஆற்றல்களிலிருந்து எவ்வாறு வேறுபட்டு நிலவுகிறது என்பதையும் பார்த்தோம்.

இப்படிப்பட்ட அணுக் கரு பற்றி ஆராய்வதே “அணுக் கரு அறிவியல்” எனப்படுகிறது. இன்று இந்த விஞ்ஞானம் பெருமளவு வளர்ந்து, அணுக் கரு பற்றி மேலும் மேலும் பல ஆழமான உண்மைகள் தெரிய வந்திருக்கின்றன. இதுபற்றி கனம் கனமான பல பெரிய புத்தகங்கள் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. அந்த எல்லா விவரங்களையும் இங்கே நாம் ஆராயப் போவதில்லை. ஆராய்வதும் முடியாது என்பதோடு அவ்வளவு விவரங்களும் இங்கு இப்போது நமக்குத் தேவையு மில்லை. என்பதால் நமக்குத் தேவையான மிக அவசியமான சில தகவல்களை மட்டும் புரிந்து கொண்டு மேலே செல்வோம்.

முதலாவதாக, அணுவின் நிலவுகைக்கு எப்படி நிலையற்ற தன்மை, நிலைப்புத் தன்மை என இருவகைத் தன்மை இருக்கிறதோ... அதேபோல அணுக்கருவுக்கும் நிலைப்புத் தன்மை, நிலையற்ற தன்மை என்பது உண்டு. ஆனால், இந்தத் தன்மை அணுவின் எலக்ட்ரான் மட்டங்களில் தீர்மானிக்கப்படாமல், அணுவின் அடிப்படையா யுள்ள, அணுவின் நிறையை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு ஆற்றுகிற அணுக்கருவில் உள்ள புரோட்டான், நியூட்ரான் துகள்களால் தீர்மானிக்கப்படுகிறது.

சாதாரணமாக அணுக்கருவின் பிணைப்பு ஆற்றலைப் பொறுத்தமட்டில் அணுவின் நிறை எண். 1ல் தொடங்கி, நிறை எண் 4 வரை இந்தப் பிணைப்பு ஆற்றல் கூடுதலாகிக் கொண்டே போய் 4க்கும் 8க்கும் இடைப்பட்ட நிறை எண் கொண்ட அணுக்களில் இறங்குமுகமாகிப் பின் நிறை எண் 60வரை உள்ள அணுக்களில் ஏறுமுகமாகவே உள்ளது. அதிலிருந்து நிறை எண் 230 மற்றும் அதைத் தாண்டியுள்ள வரை கிட்டத் தட்ட சம நிலையிலேயே உள்ளன. எனவேதான், பிணைப்பு ஆற்றல் அதிகமாயுள்ள தனிமங்களுள் ஒன்றான யுரேனியம் 235ஐ அணுசக்தி உற்பத்திக்கு எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.

அடுத்து, அணுக்கருவின் நிலைப்புத் தன்மையை இரண்டு வகையாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்று, அணுக்கருவில் புரோட்டான்களோ, நியுட்ரான் களோ இரட்டைப்படையான எண்ணிக்கை கொண்ட துகள் களாய் இருப்பின் அதன் நிலைப்புத் தன்மை கூடுதலாகவும், இத்துகள்கள் ஒற்றைப்படை எண்ணிக்கை கொண்டவைகளாக இருப்பின் நிலைப்புத் தன்மை குறைவாகவும் இருக்கிறது.

இதில் புரோட்டான், நியூட்ரான் துகள்கள் தனித்தனியே ஒற்றைப்படையாயிருந்தாலும், இவற்றின் கூடுதல் இரட்டைப் படையாகும்போது, ஓரளவு நிலைப்புத் தன்மை கூடுகிறது. அதேபோல இவ்விரண்டில் ஒன்றின் எண்ணிக்கை இரட்டைப் படையாகவும், மற்றொன்றின் எண்ணிக்கை ஒற்றைப் படையாகவும் இருந்து, இவற்றின் கூடுதல் ஒற்றைப்படை எண்ணிக்கையாக வரும்போது நிலைப்புத் தன்மை குறைகிறது. அதேபோல ஓர் அணுக்கருவில் புரோட்டான்களின் எண்ணிக்கையைவிட, நியூட்ரான்களின் எண்ணிக்கை கூடுத லாகும்போதும், அணுக்கருவின் நிலைப்புத்தன்மை குறைகிறது.

இதையெல்லாம் இங்குச் சொல்வதன் காரணம், அணுக் கருப் பிளவு என்பது, ஏதோ விறகு பிளப்பது மாதிரியோ, கல் லுடைப்பது மாதிரியோ வெகு எளிதில் நிறைவேறிவிடுகிற ஒரு செயல் நிகழ்வல்ல. அணுவே மிகமிகச் சிறிய, மிகமிக நுண்ணிய ஒரு துகள். அத்துகளுக்கும் சிறியது அணுக்கரு. சாதாரண மாகவே பொருள் சிறியது ஆக ஆக அதைப் பிளப்பது கடினம் என்பது நமக்குத் தெரியும். இப்படி இருக்க, கண்ணுக்கே தெரியாத மிகச் சிறியதான இந்தத் துகளைப் பிளப்பது எப்படிப்பட்ட அரிய சாதனையாக இருக்கும் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இந்தச் சாதனையை ஓரள வாவது நாம் உணர்ந்தால்தான், அணுக்கருவின் நிலைப்புத் தன்மை, நிலையற்ற தன்மைபற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை ஓரளவாவது புரிந்துகொள்ள முடியும்.

காரணம், நாம் மேலே குறிப்பிட்டுள்ளவாறு அணுக்கருப் பிளவு என்பது அவ்வளவு எளிதில் நிகழ்ந்துவிடுவதில்லை. அணுவைப் பிளக்கவே முடியாது என்றே நீண்ட காலமாக நம்பி வந்தார்கள். பின் அணுவில் அடங்கியுள்ள பல்வேறு துகள்கள் அறியப்பட்ட பிறகு, இத்துகள்களையே பாய்ச்சி அணுக்கருவைப் பிளக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இம்முயற்சியில், எதிர்மின்னூட்டமுடைய எலக்ட்ரான் துகள்களை அதிவேகத் தோடு பிற அணுக்கருக்களின் மீது ஏவியபோது, அது அவ்வணுக் கருவைச்சுற்றியுள்ள எதிர்மின்னூட்டமுடைய எலக்ட்ரான் துகள்களால் தூக்கி எறியப்பட்டு விலக்கம் அடைந்தது. நேர்மின்னூட்டமுயுடைய புரோட்ரான் துகள்களை ஏவியபோது அது எதிர்மின்னூட்டமுடைய எலக்ட்ரான் துகள்களால் ஈர்க்கப்பட்டதே ஒழிய அவை அணுவின் கருவையே எட்டவில்லை. அதன்பிறகு சம மின்னூட்டமுடைய அதாவது மின் நடு நிலைத் தன்மையுடைய நியூட்ரான் துகள்களை ஏவியபோது அவையே அணுவின் கருவை அடைந்து, கருவைப் பிளந்தன.

இப்படிப்பட்ட பிளப்பிலும் நிலைப்புத்தன்மை மிகுதியாக உள்ள அணுக்கருக்களைப் பிளப்பது மிகவும் சிரமமானதாக, சாத்தியமற்றதாகவே இருந்தது. நிலைப்புத் தன்மை குறைவாயுள்ள அணுக்கருவைப் பிளப்பதே சாத்தியமுள்ள தாகவும், சற்று எளிதாகவும் இருந்தது. இப்படிப்பட்ட சற்று எளிமையான அதாவது ஒப்பு நோக்கில் சற்று எளிமையான பிளப்பிற்கே நியூட்ரான் துகள்களை ஒரு குறிப்பிட்ட பாய்ச்சல் வேகத்தில் செலுத்த வேண்டியிருந்தது. இதற்கே இப்படி என்றால் நிலைப்புத் தன்மை கூடுதலாயுள்ள அணுக்கருக் களைப் பிளக்க எப்படிப்பட்ட அசுர வேகத்தில் நியூட்ரான் துகள்களைச் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை நாம் ஓரளவு புரிந்து கொள்ளலாம்.

ஆக, இதிலிருந்து நாம் அறிய வேண்டியது, அணுக்கரு விலிருந்து நமக்கு அதிகமான ஆற்றலும் கிடைக்க வேண்டும். அதேசமயம் அந்த அணுக்கரு ஒப்பு நோக்கில் சற்று எளிதில் பிளக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இப்படி இருந்தால்தான் ஓரளவு இலகுவான முயற்சியில் பெருமளவு அதிகமான ஆற்றலைப் பெறமுடியும் என்பதுதான்.

ஆகவேதான் அணுசக்தி உற்பத்திக்கு யுரேனியம் தாதுவை எரிபொருளாகத் தேர்ந்தெடுத்தார்கள். இயற்கையில் கிடைக்கும் தனிமங்களில் மிக அதிகமான பொருண்மை எண் கொண்ட அணு இதுவே. இந்த அணுக்கருவிலுள்ள புரோட்டான்கள் 92, நியூட்ரான்கள் 146 ஆகவே பொருண்மை எண் 238. எனவே யுரேனியம் 238ஐ 92U238 என்கிறார்கள்.

இது அதிகமான நிறை எண் கொண்டது என்பதால் இதிலிருந்து அதிகமான ஆற்றலை வெளிப்படுத்த முடியும் என்பது உண்மைதான். ஆனால் இதில் உள்ள சிக்கல் புரோட்டான்களின் எண்ணிக்கை இரட்டைப்படை, நியூட்ரான் களின் எண்ணிக்கையும் இரட்டைப்படை. ஆகவே கூடுதலும் இரட்டைப்படை. எனவே இது எண்ணிக்கை அடிப்படையிலான நோக்கில் அதிக நிலைப்புத்தன்மை கொண்டதாக இருக்கிறது. எனவே இவ்வணுக்கருவைப் பிளப்பதும் சிரமமானது. அதாவது மிகமிக அசாதாரண வேகம் கொண்ட நியூட்ரான் துகள்களைக் கொண்டே இதைப் பிளக்க முடியும்.

இன்னொரு யுரேனியம் இருக்கிறது. இது யுரேனியத்தின் ஐசோடோப். அணுக்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை மாறாது. ஆகவே அது 92 தான். நியூட்ரான்களின் எண்ணிக்கை 143. ஆகவே இதன் நிறை எண் 235. ஆகவே இந்த யுரேனியம் 235ஐ 92U235 என்கிறார்கள். இதில் ஒரு சௌகர்யம், இதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கையும் ஒற்றைப்படை,நிறை எண்ணும் ஒற்றைப் படை. ஆகவே ஒப்பு நோக்கில் யுரேனியம் 238ஐ விட 235ஐப் பிளப்பது சற்று எளிதானது.

ஆனால், இயற்கையில் கிடைக்கும் யுரேனியம் தாது பெருமளவில் யுரேனியம் 238 ஆகவே இருக்கிறது. அதாவது இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் 99.28 பங்கு யுரேனியம் 238ம், 0.72 பங்குதான் யுரேனியம் 235 ம் கிடைக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. இதில் யுரேனியம் 238 ஐ அப்படியே எரிபொருளாகப் பயன்படுத்த முடியாது ஆகவே அணுசக்தி உற்பத்திக்குத் தேவையான இந்த U235 ஐப் பெறுவதற்கு இயற்கையில் கிடைக்கும் U238 ஐ எடுத்துச் செறிவூட்டி, அதாவது அதைச் சற்று எளிதாகப் பிளக்கும் வகையில் U235 ஆக மாற்றிக் கொள்கிறார்கள். இதுவே செறிவூட்டப்பட்ட யுரேனியம் (Enriched Uranium) எனப்படுகிறது. இந்த யுரேனியமே அணுசக்தி உற்பத்திக்கும் எரிபொருளாகப் பயன்படுத்தப் படுகிறது.

இங்கே யுரேனியம் பற்றி இன்னொரு செய்தியையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது, அண்டவெளியில் நாம் வாழும் பூமி தோன்றி 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்கிறார்கள். இந்த 50 கோடி ஆண்டுகளில் பூமியில் இயற்கையில் நிலவிய எந்தப் பொருளும் அது அது அப்படி அப்படியே இருந்த மாதிரியே இருந்து கொண்டிருக்கவில்லை. இதுவும் இயற்கையாகவே பல்வேறு வித மாற்றங்களுக்கு உள்ளாகியே வந்திருக்கிறது. இப்படி ஏற்படுகிற மாற்றம் அணுக்கட்டமைப்பில் மற்றும், மூலக்கூறு களில் ஏற்படும் மாற்றமே என்பது நமக்குத் தெரியும். எனவே சில தனிம அணு இயற்கையிலேயே தன் கட்டமைப்பில் மாற்றம் பெறுகிறது. இம்மாற்றம் பல லட்சக்கணக்கான, கோடிக் கணக்கான ஆண்டுகளில் நிகழ்கிறது.

அதாவது ஒரு தனிம அணு, தன் அணுக்கருவிலுள்ள புரோட்டான், நியூட்ரான் துகள்களில் சிலவற்றை இலட்சக் கணக்கான, கோடிக்கணக்கான ஆண்டுகளில் படிப்படியாக இழந்து அணு எண்ணிலும், நிறை எண்ணிலும் மாறுபட்டு, வேறொரு தனிமத்தின் அணுவாக மாறிவிடுகிறது. எடுத்துக் காட்டாக, யுரேனியம் பல இலட்சக்கணக்கான ஆண்டுகளில் காரீயமாக (82Pb) மாறிவிடுகிறது என்கிறார்கள். இப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழும்போது, இவ்வணுக்களின் கருக்களிலிருந்து இடைவிடாத கதிரியக்கமும் ஏற்படுகிறது.

இயற்கையில் காணக்கிடைக்கும் தனிமங்களின் தனிம வரிசை அட்டவணையில் அணு எண் 84 உடைய பொலோனியமும், அதற்கு அடுத்தடுத்த எண்களை உடைய தனிமங்களும் மேற்கண்டவாறு இயற்கையிலேயே கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் கதிரியக்கத் தனிமங்களாக இருக்கின்றன.

இக்கதிரியக்கம் இல்லாமல் அணுக்கருக்களில் மாற்றம் நிகழ்வதில்லை. ஆகவே அணுக்கருவைப் பிளந்து அதிலிருந்து ஆற்றலைப் பெறும் முயற்சியில் இக்கதிரியக்கம் தவிர்க்க முடியாதபடி மிகையாகிறது. தீவிரப்படுத்தப்படுகிறது. அதாவது அண்டம் முழுவதும் இயற்கையாகவும், ஒரே சீராகவும், பரவலாகவும், பெருமளவு ஆபத்தின்றியும் நிகழ்ந்து கொண்டிருக்கிற இக்கதிரியக்கம் அணுக்கருப் பிளப்பின்போது செயற்கையான நடவடிக்கைகளால் மொத்தமாக ஒரு மையத்தில் குவிக்கப்பட்டு மிகவும் தீவிரமாக்கப்பட்டு, மிகமிக, மிகையான அளவில் வெளிப்படுத்தப்படுகிறது.

இக்கதிரியக்கமே இன்று அணுக்கரு விஞ்ஞானத்துக்கும், மனித குலத்துக்கும் பெரும் பிரச்சனையாயுள்ளது. காரணம், இக்கதிரியக்கம் மிகவும் அபாயகரமானது. உயிர்ச் செல்களையே தீய்த்துப் பொசுக்கி அழித்துவிடும் தன்மை மிக்கது.மனித குலததையே மரணத்துக்குள்ளாக்குவது இப்படிப்பட்ட அபாயமிக்க கதிரியக்கம் இல்லாமல் அணுக் கருப் பிளப்பு இல்லை. இந்த அணுக்கருப் பிளப்பு இல்லாமல் அணுக்கருச் சக்தியும் இல்லை. இதுதான் அணுக்கருச் சக்தியில் உள்ள மிகப் பெரிய பிரச்சனையும், அச்சக்தியைப் பயன் படுத்துவதில் உள்ள மிகப் பெரிய அபாயமும் . எனவே இந்த அபாயம் பற்றிப் புரிந்து கொண்டு மேலே செல்வோம்.

- இராசேந்திர சோழன்