இங்கிலாந்து கெண்ட் (Kent) பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தேவாலயங்களின் கூரை மேல் ஏறி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து விண்கற்கள், வால் நட்சத்திரங்களில் இருந்து பூமிக்கு வந்த காஸ்மிக் தூசுக்களை சேகரிக்கின்றனர். இவை யாராலும் சேதப்படுத்தப்படாமல் இருப்பவை. வான்வெளிச் செயல்களின் வரலாற்றை அறிய இவை பற்றிய ஆய்வுகள் விஞ்ஞானிகளுக்கு உதவும்.

விண்வெளியில் இருந்து பூமிக்கு வந்த துகள்களின் அளவை அறிவதன் மூலம் புவியின் வளிமண்டலத்தில் இவற்றின் அளவு பற்றி அறிய முடியும். டாக்டர் பென்னி வாஸ்னி அக்குயிக்ஸ் (Dr Penny Wozniakiewicz) மற்றும் டாக்டர் மத்தாயா ஸ்வேன் ஜினக்கன் (Dr Matthias van Ginneken) ஆகியோர் இங்கிலாந்தில் உள்ள எல்லா பழமையான தேவாலயங்களின் கூரைகளிலும் இது பற்றி ஆராயத் திட்டமிட்டுள்ளனர்.

இவற்றின் மிகச் சிறிய அளவு மற்றும் தேவாலயங்களின் கூரைகள் சாதாரணமாக பொதுமக்களால் சென்றடைய முடியாத இடம் என்பதால் காஸ்மிக் துகள்களைத் தேட இந்த இடங்கள் மிகப் பொருத்தமானவை என்று கருதப்படுகிறது. இந்த துகள்கள் எல்லா இடங்களில் இருந்தும் வருகின்றன. ஆனால் கூரைகள் இவற்றை ஒன்றுதிரட்ட சரியான இடங்கள். கூரைகள் மேலேறி இவற்றை யாரும் சேதப்படுத்துவதில்லை.Canterbury Cathedralவானத்தில் இருந்து பூமிக்கு வந்து விழும் நுண் துகள்கள்

விண்கற்கள், வால் நட்சத்திரங்களில் இருந்து இவை பல ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் இருந்து வருகின்றன. இவற்றில் பல துகள்கள் புவியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது உருவாகும் வெப்பத்தால் எரிந்து சாம்பலாகி விடுகின்றன. ஆனால் சில துகள்கள் உருகி, குளிர்ந்து மறுபடியும் திட நிலையை அடைந்து நுண்ணிய, தனிச்சிறப்பு மிக்க வட்ட வடிவப் பொருட்களாக மாறுகின்றன. இவை பூமியின் தரைப்பரப்பில் சிதறிக் கிடக்கின்றன. விண்ணில் இருந்து வரும் பிற நுண் பொருட்கள் பற்றி அறிய இத்துகள்கள் உதவுகின்றன.

பூமிக்கு வரும் இத்துகள்களைப் பயன்படுத்தி வளிமண்டலத்தின் மேற்பகுதிக்கு வரும் துகள்களின் எண்ணிக்கையை தொடர்புபடுத்திப் பார்க்க முடியும். இதன் மூலம் பூமியின் உருவாக்கத்தில் இத்துகள்களின் பங்கு பற்றி அறிய முடியும். அதனால் காஸ்மிக் துகள்களைப் பற்றிய தீவிர ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

கேண்ட்டபரி (Canterbury) தேவாலயத்தின் பழமையான பரந்த பரப்புள்ள கூரை மீது படிந்துள்ள துகள்களை சேகரிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதன் பிறகு ராச்செஸ்ட்டர் (Rochester) மற்றும் இங்கிலாந்தில் உள்ள மற்ற பழமையான தேவாலயங்களின் கூரைகளை ஆராயும் திட்டம் உள்ளது.

கூரைகளில் இருந்து காற்று மற்றும் மழை இத்துகள்களை அடித்துச் சென்றாலும் மிச்சமிருப்பவை ஆராயப் போதுமானதாக உள்ளன. வெவ்வேறு காலகட்டங்களில் கட்டப்படும் இடங்களின் கூரைகள் பல்வேறு சமயங்களில் பூமியில் வந்து விழுந்த துகள்களை சேகரித்து ஆராய உதவுகின்றன. மேற்பகுதியின் பல இடங்கள் பழுது பார்க்கப்படும்போது அந்தந்த காலத்திற்குரிய துகள்கள் பற்றிய விவரம் கிடைக்கிறது.

கெண்ட் விஞ்ஞானிகளின் இந்த புதிய முயற்சி காஸ்மிக் துகள் பற்றி பல புதிய தகவல்களைத் தரும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/science/2023/jul/30/the-kent-scientists-who-collect-cosmic-dust-from-cathedral-roofs?

சிதம்பரம் இரவிச்சந்திரன்