வெறுங்கண்ணால் பார்க்கும்போது, உள்ளங்கை அளவு வானத்தில் ஏதுமில்லாதது போலத்தான் இருக்கிறது, பைனாக்குலர் அல்லது குட்டி டெலஸ்கோப்பின் மூலம் பார்த்தால், அடேங்கப்பா..! எத்தனை நட்சத்திரங்கள் அதே இடத்தில்! ஜுபிட்டரின் சுழலும் சிவப்பு புயல் திட்டும், சனிக்கோளின் வெள்ளி மோதிர வளையமும் ஒரு முறை பார்த்துவிட்டால் அடுத்து இதைவிட பெரிய டெலஸ்கோப்பில் கட்டாயம் பார்த்தே தீர வேண்டும் என்ற ஆசை ஏற்படும்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு கலிலியோ, அவராகவே தயாரித்துக் கொண்ட சிறிய பித்தளைக் குழாய் டெலஸ்கோப்பின் உதவியால் ஒரியன் (திருவாதிரை) நட்சத்திரக்கூட்டத்தை முதலில் கவனித்தார். அதற்கு இடையிடையே தென்படும் நட்சத்திரங்களை எண்ணி கணக்கிட்டு மேப் செய்ய முயன்றார். எண்ண எண்ண மாளவில்லை. எண்ணிக்கை விரிந்து கொண்டேயிருந்தது. “அடப் போங்கப்பா.. இதை யாரால் எண்ண முடியும்?” என்று கலிலியோ விட்டுவிட்டார்.

மொழுமொழு வென்றிருக்கும் நிலாவின் மேல்பரப்பில் நிறைய மலைகள் இருப்பதை கலிலியோதான் முதலில் கண்டார். ஜுபிட்டர் (வியாழன்-குரு) கோளைச் சுற்றியபடி நான்கு நிலாக்கள் இருப்பதைப் பார்த்து வியந்து போனார். ஒரு கோளுக்கு நான்கு நிலாக்கள் இருக்கிறது என்று அவர் சொன்னதை யாரும் நம்பவில்லை. பெளதீக விதிப்படி இது சாத்தியமேயில்லை என்று கலிலியோவைக் கேலி செய்தனர். சிறிய வானத்தில் பெரிய பூமி என்ற கருத்தை மறுத்து பெரிய வானத்தில் மிகச்சிறிய பூமி என்ற புதுக்கருத்தை கலிலியோ கொண்டுவந்ததற்கு அவரது டெலஸ்கோப்தான் காரணம். வானம் தோண்டத் தோண்ட போய்க் கொண்டேயிருக்கும் முடிவிலாத வெளி என்பதைப் புரிந்து கொண்டனர்.

ஆரமபகால டெலஸ்கோப்புகளில் அகலத்தைவிட நீளம்தான் அதிகமாக இருந்தது. எவ்வளவுக்கெவ்வளவு முன் லென்ஸை பெரிதாக்குகிறோமோ அந்த அளவுக்கு ஓளியை அதிகம் கிரகித்து நிறைய பொருள்களைத் துல்லியமாகப் பார்க்க முடியும். ஆனால் முன் லென்ஸைப் பெரிதாக்குவதற்குப் பதிலாக, கண் லென்ஸை அதிக தூரத்திற்கு கொண்டு சென்றனர். விளைவு டெலஸ்கோப்பின் நீளம் நீண்டுகொண்டே போனது. இதற்கு இன்னொடு காரணமும் இருக்கிறது. முன் லென்ஸை கனமாக மாற்றினால் டெலஸ்கோப்பைத் தூக்கிப் பிடிக்க முடியாது.

ஜொஹன்ன்ஸ் ஹெவெல்லியஸ் என்பவர் மிக நீளமான டெலஸ்கோப்பை தயாரித்தார். அதன் நீளம் 150 அடி. அந்த டெல்ஸ்கோப்பை ஊஞ்சல் போல, கனமான இரும்புக் கம்பிகளில் தொங்கவிட்டுதான் உபயோகிக்க முடியும். கொஞ்சம் காற்றடித்தால் கூட ஊஞ்சலாகிவிடும்.

நெதர்லாந்தைச் சேர்ந்த ஹயூஜென் குழாய் இல்லாத திறந்தவெளி டெலஸ்கோப்பை உருவாக்கினார். உயரமான மேடை மீது முன் லென்ஸை நிறுத்தி வைத்துவிட்டு, 200 அடி தூரம் பின்னால் சென்று சிறிய கண் லென்ஸ் மூலம் முன்லென்ஸ் வழியாக ஆகாயத்தை கவனிப்பார். இரண்டு லென்ஸிற்கிடையில் குறுக்கே நடந்து போய் வரலாம்.. அப்படி ஒரு டெலஸ்கோப்!

சர் ஐசக் நியூட்டன் வந்த பிறகுதான் கண்ணாடியால் செய்த குழி ஆடிகளை டெலஸ்கோப்புகளுக்குப் பயன்படுத்தும் வழக்கம் பிறந்தது. தடிமனான லென்சுக்குப் பதில் குழியாடிகளை நியூட்டன் பயன்படுத்தினார். பிரதிபலிப்பு மூலம் ஆகாய ஒளியை குழியாடி சேகரித்துத் தரும் பிரதிபலன் டெலஸ்கோப்பை முதலில் பயன்படுத்தியவரும் இவரே.

பிரதிபலன் டெலஸ்கோப்புகளில் குழியாடிதான் முக்கியம். இதில் ஒளி ப்ட்டு பிரதிபலித்து ஆடியின் முன்பாகக் குவியும். அவ்வாறு குவியும் பிம்பத்தை இன்னொரு லென்சு மூலம் பார்ப்பது இந்த தொலைநோக்கிகளில் விசேஷம். இதுமாதிரி டெலஸ்கோப்பின் பின்னால் இருப்பது ஒருவகையில் வசதியாகப் போய்விட்டது. முன்புறம் கனமாக இருந்தால் தூக்குவது கஷ்டம், தாங்கியில் நிறுத்துவதும் கஷ்டம். மேலும் லென்சுகளால் ஒளியை நிறப்பிரிகை செய்யாமல் அனுப்பமுடியாது. இதனால் பார்க்கும் பொருளைச் சுற்றிலும் வானவில் நிறங்கள் தெரியும். பிரதிபலன டெலஸ்கோப்புகளில் இம்மாதிரியான காட்சித் திரிபுகள் எதுவும் இருக்காது.

வில்லியம் ஹெர்ஷெல் கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டு பார்க்கக்கூடிய பிரதிபலன் தொலைநோக்கியின் உதவியால்தான் யுரேனஸ் கோளை கண்டுபிடித்தார், நியூட்டன் மாதிரி ஹெர்ஷெல் தனக்கு வேண்டிய டெலஸ்கோப்புக்கான ஆடியை அவராகவே தயாரித்துக் கொள்வார்.

குதிரை சாணத்தைப் பிசைந்து குழியான ‘மோல்டு’ செய்து காயவைத்துவிடுவார். பின்னர் உலோகத்தை உருக்கி அதில் ஊற்றி குழிவான ‘கடாய்’ போல் ஆடியை வார்ப்பு செய்து, பாலீஷ் கொடுத்து குழியாடியாகப் பயன்படுத்துவார். சிலசமயங்களில் குதிரைச் சாண மோல்டு உடைந்து, உருகிய உலோகம் வழிந்து தரையில் ஓடும். தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஹெர்ஷெல் ஓடுவாராம்.

ஆடிகளின் அளவு பெரிதாகிக் கொண்டே போய் கிட்டத்தட்ட ஆறடி அகலத்திற்குப் பெரிதானது. அய்ர்லாந்தைச் சார்ந்த லார்டு ரோஸ்தான் முதன் முதலில் கேலக்ஸியைக் (நட்சத்திரத் திரட்சி) கண்டார்.

இப்போது ஆறடி அகல ஆடியென்பது சாதரணம். பத்து மீட்டர் அதாவது 33 அடி அகல ஆடிகள் பயன்படுத்துவதுதான் மதிப்பு. ரொம்ப காலமாக பாலோமர் மலையில் வைக்கப்பட்டிருக்கும் ஹேல் தொலைநோக்கியைத்தான் உலகிலேயே மிகப்பெரியது என்று வினாடி வினாக்களில் கேட்பார்கள். அதன் குறுக்களவு வெறும் 5 மீட்டர்தான் ஆனால், சும்மா சொல்லக்கூடாது அது முழுக்க முழுக்க ஆட்டோமேட்டிக் டெலஸ்கோப், அதில் பயன்படுத்தப்படும் நிறமாலைக் கருவிகள், கேமராக்கள், பதிவு கருவிகள் ஓவ்வொன்றும் பெரிய

‘கார்’ மாதிரி இருக்கும். வெங்காய வடிவில் கட்டப்பட்ட கோபுரத்துக்குள் டெலஸ்கோப் இருக்கும். கோபுரம் திறப்பதும், ஆடிகளைத் துடைப்பதும், கருவிகளை இணைப்பதும் ஆட்டோமேட்டிக்தான். ஓய்வு ஒழிசலில்லாமல் ஹேல் தொலைநோக்கி இன்றும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு மணிநேரம் அதைப் பயன்படுத்த நீங்கள் கட்ட வேண்டிய கட்டணம் 100,000 டாலர்கள்.

ஹாவய்த் திவீல் மவுனா கீ என்றொரு செத்துப்போன எரிமலை இருக்கிறது. இதன் உச்சி தட்டையாக வெட்டப்பட்ட பீடம் போல இருக்கிறது. தரையிலிருந்து 14000 அடி உயரத்திலிருப்பதால், அங்கே காற்று மண்டலம் வெறும் 40 விழுக்காடுதான்.

டெலஸ்கோப்புகளை வைப்பதற்கு சிறந்த இடம். காற்றுமண்டல சலனம் இங்கே குறைவாக இருக்கும். நகரத்தின் ஒளியும், சந்தடியும், தூசியும் இருக்காது.

ஜெமினி நார்த், சுபரூ, கெக் என்று பல பெரிய பெரிய தொலைநோக்கிகள் அங்கேதான் உள்ளன். கடுமையான குளிர், ஆக்ஸிஜன் இல்லாத மூச்சு முட்டும் வறட்டுக்காற்று, இராத்திரியில் கண்விழித்துச் செய்ய வேண்டிய வேலை. உண்மையிலேயே மனமும், உடம்பும் திடமாக இருந்தால்தான் அஸ்ட்ரானமராக இருக்க முடியும்.

முகத்தில் ஆக்ஸிஜன் குழாய்களைப் பொருத்திக்கொண்டு குளிருக்கு உல்லன் ஆடைகளை உடுத்திக் கொண்டு வேலை செய்ய் வேண்டும். ஒரு விஷயத்தை சொல்ல நான் மறந்துவிட்டேன் . குறிப்பிட்ட நேரங்களுக்குள் அங்கே சென்று டெலஸ்கோப்பை செட் செய்வதுடன் நிறுத்திக் கொண்டு மிச்ச வேலையை வீட்டிலிருந்தே செய்துகொள்ளும் வானசாஸ்த்திரிகளும் உண்டு. முழுக்க முழுக்க கம்ப்யூட்டரின் உதவியுடன் டெலஸ்கோப் இயக்கப்படுவதால், பலர் வேலையை மின் அஞ்சல் மூலம் அனுப்பி கம்ப்யூட்டரிடம் வேலை வாங்கிக் கொள்கின்றனர்.

அல்ட்ரா கூல் குள்ள நட்சத்திரங்களின் காந்தவிசைகளை கவனிக்கும் ஒரு வானியல் நிபுணர் தனது விண்ணப்பத்தை டெலஸ்கோப்புக்கு அனுப்பிவிடுவார். அவருக்குத் தொடர்ந்து ரிசல்ட் வீடு வந்து சேருகிறது. ஜியோ மார்சி பற்றி நிறைய பேர்களுக்குத் தெரியும். இவர் கிட்டத்தட்ட 150 நட்சத்திரங்களில் கோள்கள் சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்தார். இன்னமும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். ஒரு முறை டெலஸ்கோப் செட் செய்துவிட்டால் அதன்பிறகு உதவி எதிர்பார்க்காமல் அடிமை போல அது வேலை செய்யும். மார்சி வரிசையாக ஆகாயம் முழுக்க சர்வே எடுத்துக் கொண்டிருக்கிறார்.

பெரும்பாலான வேலைகளை வீட்டிலிருந்தபடியே செய்து விடுவதால் பெண்டாட்டிப் பிள்ளைகள் எங்களை கோவிச்சுக் கொள்வதில்லை என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் பெர்க்ளி என்பவர்.

டிவிங்கிள் கூடாது

நட்சத்திரம் என்றாலே ஜொலிப்பது கண் சிமிட்டுவதும்தான் நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு நட்சத்திரமும் கற்பனைக் கெட்டாத தொலைவிலிருக்கிறது. அவற்றிலிருந்து புறப்பட்ட ஒளி பூமியை வந்தடைய ஒன்று ரெண்டல்ல பல பில்லியன் ஆண்டுகள்கூட எடுத்துக் கொள்கின்றன. அத்தனை தொலைவும் அத்தனை காலமும் கழிந்து சிந்தாமல் சிதறாமல் வெட்டவெளி வழியாக வரும் ஒளி ரேகைகள் பூமியின் காற்று மண்டலத்தில் நுழைந்த உடன் அதன் சலனத்தால் நடுக்குறு அடைந்து, மின்னுவதுபோல தோன்றுகிறது. விண்வெளியில் பயணம் செய்யும் அஸ்ட்ராநாட்களுக்கு அல்லது நிலாவில் இருந்து பார்ப்பவர்களுக்கு நட்சத்திரங்கள் கண் சிமிட்டாமல் ஊசி முனை மாதிரி ‘கருக்’கென்று தெரியும்.

டெலஸ்கோப்புக்கு மேலே இருக்கும் காற்று மண்டலத்தின் சலனம் பிம்பங்களை கலைத்துவிடாதபடி இருக்க.. காற்றை நிறுத்த முடியாது. ஆனால் லென்சுகளைத் தக்கபடி அசைத்து அட்ஜஸ்ட் செய்து கொள்ளமுடியும்.

டெலஸ்கோப்பின் நாலா பக்கத்திலிருந்தும் கத்தி செருகியது போல நாலைந்து லேசர் கீற்றுகள் வானை நோக்கிப் பாய்கின்றன. காற்று வெளியின் 78 கிமீ தொலைவில் நிறைய சோடிய அயனிகள் இருக்கிறபடியால் அங்கே லேசர் கதிர்கள் மோதி அவற்றை பல்புகள் போல ஒளிரச்செய்கின்றன.

இரவில் லேசர் மோதி ஒளிரும் சோடியப் பிரகாசம் செயற்கை நட்சத்திரங்கள் போலிருக்கும். காற்று மண்டல அசைவில் அவை நடுங்கும். அதனடிப்படையில் எவ்வளவு அட்ஜஸ்ட் செய்யவேண்டும் என்பதை கம்ப்யூட்டர் தீர்மானித்து லென்சுகளை அட்ஜஸ்ட் செய்யும். அப்படி அட்ஜஸ்ட் செய்தபின் விண்வெளி வஸ்த்துக்கள் பளீரென்று கத்தரித்ததுபோலத் தோன்றும். வினாடிக்கு 1000 முறை லென்ஸ் அட்ஜஸ்ட் செய்யப்படுகிறது என்பது கொசுறு செய்தி.

லேஸர் கதிர்களுக்கிடையே சில நேரங்களில் விமானம் குறுக்கே செல்ல வேண்டிவரலாம். அதை முன்கூட்டியே பார்த்து எச்சரிக்கை செய்ய இரண்டு கல்லூரி மாணவர்கள் ‘பார்ட் டைம்’ வேலை செய்கிறார்கள். மணிக்கு 1000 ரூபாய் சம்பளம் அவர்களுக்கு.

புள்ளிப்பார்வை - அகலப்பார்வை

வான மண்டலம் நமக்கு நீலநிறக் கிண்ணம் கவிழ்ந்ததுபோலத் தோன்றுகிறது அல்லவா, நம்மால் வானமுழுவதையும் ஒரே சமயத்தில் பார்க்க முடியாது. பாதியைத்தான் பார்க்கிறோம். தொலைநோக்கிகள் எவ்வளவு வானப்பரப்பைப் பார்க்கின்றன என்று நினைக்கிறீர்கள்? வட்டத்தின் ஒரு பாகையில் 3600 இல் ஒரு பகுதியைத்தான் கவனிக்கின்றன. ஒரு சமயத்தில் ஒரு கேலக்ஸியை மட்டுமே கவனிக்க வேண்டியிருப்பதால் இத்தனை நுணுக்கம்.

ஆனால் சில வான்வெளி ஆய்வுகளில் வானத்தின் பெரிய பகுதியைக் கவனித்தால்தான் நிறைய நிகழ்ச்சிகளை தவறவிடாமல் அறியமுடியும். எந்த இடத்தில் எப்போது வால்நட்சத்திரம் வரும், புதிய சூப்பர்நோவா வெடிக்கும் என்று தெரியாததால், ஒத்தைக் கண்ணால் ஒரு புள்ளியைப் பார்ப்பதைவிட பெரிய பரப்பை அடிக்கடி பார்ப்பது நல்லது. பெரிய பரப்பை படம் பிடிக்கும்போது குறைந்த நேர கேமரா ‘எக்ஸ்போஷர்’ கொடுத்தாலே போதும். சிறிய புள்ளிகளை படம்பிடிக்கும் போது நீண்ட நேரம் எக்ஸ்போஸ் செய்ய வேண்டியிருக்கும்

ஸ்லோவான் டிஜிட்டல் ஸ்கைமேப் எனும் புராஜெக்ட் 1999 முதல் 2008 வரை ஆகாயம் முழுக்க படம்பிடித்து மேப் செய்தது. ஆண்ட்ரீ காஸ் தொடர்ந்து 14 ஆண்டுகளாக வானத்தைப் படம்பிடித்து ஒரு தொடர் சினிமா செய்திருக்கிறது. வானில் நிகழும் நிதானமான நிகழ்ச்சிகளெல்லாம் அதில் வேகமாக ஓடுகின்றன. பேரண்டத்தின் நத்தைவேக மாற்றத்தை குதிரைரேஸ் பார்ப்பதுபோல பண்ணியிருக்கிறார்.

ஆகாயத்தில் 7 நட்சத்திரங்கள் கண்ணுக்குத் தென்படாத ஏதோ ஒன்றை மையமாக வைத்துக்கொண்டு சுற்றி வருவதை ஆண்ட்ரீதான் கவனித்தார். மையத்திலிருந்து கருந்துளை என்று அவர் கூறுகிறார்.

லார்ஜ் சைகாப்டிக் சர்வே டெலஸ்கோப் (Lrge cynoptic survey Telescope) 8.2 மீட்டர் குறுக்களவு ஆடியைக் கொண்டது. அரிஸோனாவில், டாக்ஸான் என்ற இடத்தில்தான் இதற்கான குழியாடியை செய்தார்கள். உருகிய கண்ணாடியை சுழலும் கிண்ணத்தில் விட்டதும் அதுவும் கிண்ணம் போல் ஆகி, குளிர்ந்ததும் குழி ஆடிபோல மாறிவிடும். பிறகு அதைத் தேய்த்து பாலீஷ் செய்து, உலோகப் பூச்சிட்டு பளபளப்பாக்கி விடுவார்கள். டெலஸ்கோப் ஆடி செய்வது ஒரு கலை மட்டுமல்ல, தொழில்நுட்பமும் கூட! LCST தொலைநோக்கியின் பார்வை அகலம் நிலாவின் வட்டம் அளவுக்கு இருக்கும். இருட்பொருள், இருள்சக்தி ஆகிய நூதன விஷயங்களை நேரடியாக ஆராய LCST உதவும்.

இந்தியாவின் மிகப்பெரிய டெலஸ்கோப் தமிழகத்தில் வாணியம்பாடி அருகே உள்ள ஜவ்வாது மலையில் வைக்கப்பட்டுள்ளது. வைனு பாப்பு ஆப்சர்வேட்டரி என்று அதற்குப் பெயர். 3.8 மீட்டர் அகல ஆடி அதில் உள்ளது. வியாழனில் நிலாவான கனிமீடுவுக்கு காற்றுமண்டலம் இருப்பதை இதுதான் கண்டுபிடித்தது.

எதிகாலத்தில் தொலைநோக்கிகள் எப்படியெல்லாம் வடிவெடுக்கும் என்று சொல்ல முடியாது. நிச்சயமாக நிலாவில் ஒன்று நிறுவப்படலாம், இங்கிருந்து அதை இயக்கி பேரண்ட எழிலை இங்கிருந்தே காணலாம்.

- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)