உங்களுக்கு  இரண்டு சூரியன் உள்ள சூரிய மண்டலம் தெரியுமா? இப்போது கெப்ளர் விண் தொலைநோக்கியின் உதவியுடன் இரண்டு சூரியன்களை மையமாகக் கொண்டு சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு சூரிய குடும்பத்தை செப்டம்பர், 2011ல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள‌னர். அதன் பெயர் கெப்ளர் 16b (Kepler-16b).

ஒரு கோளும்..இரு சூரியன்களும்..!

நாசா வானவியல் ஆய்வு மையம் கெப்ளர் விண் தொலைநோக்கியை விண் ஆராய்ச்சி நிலையத்தில் வைத்து அனுப்பி உள்ளது. நம் பால்வழி மண்டலம் பற்றி ஆராயவும் அதனைத் தாண்டி, நீண்ட தொலைவு சென்று பிரபஞ்ச ரகசியம் பற்றி அறியவும்தான் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த கெப்ளர் விண் தொலைநோக்கிதான், இரட்டை சூரியன்கள் உள்ள சூரிய குடும்பத்தைக் கண்டுபிடித்துள்ளது. ஒன்றல்ல, இப்படி இரட்டை சூரியன்கள் உள்ள இரு சூரிய குடும்பம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தகவலை 2012 ஜனவரி 12ம் நாள், சான் டியாகோ மாகாண பல்கலைக் கழகத்தைச் (San Diego State University) சேர்ந்த விஞ்ஞானி வில்லிய வெல்ஷ் (William Welsh ) அமெரிக்க வானவியல் கழகத்தில் இயற்கை (journal Nature)என்ற பத்திரிக்கைக்காக பேட்டி கொடுத்து வெளியிட்டார். 
 
இரண்டு சூரியன்கள் ஒரே மையத்தில்..!

sunsஅது என்ன இரட்டைச் சூரியன்கள்? நம் சூரிய குடும்பத்துக்கு மைய நாயகன் சூரியன். ஓர் ஒற்றைச் சூரியன் மட்டுமே. ஆனால், இப்போது கண்டுபிடித்துள்ள சூரியகுடும்பத்துக்கு இரண்டு சூரியன்கள். அதாவது, சூரியகுடும்பத்தின் மைய நாயகர்கள் இரு சூரியன்களாக இருப்பார்கள். இரண்டு சூரியன்களை மையமாகக் கொண்டு அதன் கோள்கள் அவற்றை சுற்றி வருகின்றன என்ற தகவல் கிடைத்துள்ளது.

இன்று புதிதாய் பிறந்தோம்..?

அதோடு இரண்டு புதிய கோள்களையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். கண்டுபிடித்த இரண்டு புதிய கோள்களின் பெயர்கள்: கெப்ளர் 34b,கெப்ளர் 35b (Kepler-34b and Kepler-35b). இந்த கெப்ளர் 34b கோள், நமது வியாழனின் நிறையில் 22% மும், அதன் விட்டத்தில் 76%மும் கொண்டது. இது, தனது இரண்டு சூரியன்களை 289 நாட்களில் வட்டமிடுகிறது. அந்த இரண்டு சூரியன்களும் என்ன செய்கின்றன தெரியுமா?அவை ஒன்றையொன்று சுற்றி முடிக்க 28 நாட்கள் ஆகின்றன. அடுத்து உள்ள 35b கோள் நம் வியாழனில் 13% நிறையும், 73% விட்டமும் உடையது. அது அதன் மையத்தில் உள்ள இரு சின்ன சூரியன்களை 131 நாட்களில் சுற்றி வருகிறது. அந்த சின்ன சூரியன்கள் நம் சூரியன் அளவில் ஒன்று 80% நிறையும், இன்னொன்று 89% நிறையும் கொண்டிருக்கிறது.. இந்த 35b கோளுக்கான இரண்டு சூரியன்களும் ஒன்றையொன்று 21 நாட்களில் சுற்றுகின்றன.
 
எங்கே.. காண்பது..?

நாம் இரவில் வானிலுள்ள விண்மீன்களைப் பார்க்கிறோம். அவற்றில் சிலவற்றை நாம் அறிகிறோம். அந்த சில விண்மீன் படலங்களில் ஒன்று வடக்கு வானில் உள்ளது. மேகமற்ற, நிலா ஒளி இல்லாத/குறைவான வானை வடக்கில் அண்ணாந்து பார்த்தால், சிலுவை போன்ற அமைப்பில் ஒரு விண்மீன் படலம் தெரியும். இதனை அன்னம்/ வடக்குச் சிலுவை (Cygnus/Swan) என்று அழைக்கின்றனர். அந்த தொகுதியில்தான் நமது கெப்ளர் விண் தொலைநோக்கி கண்டுபிடித்த இரட்டைச் சூரியன்கள் உள்ள சூரிய மண்டலங்கள் உள்ளன. இது எவ்வளவு தொலைவில் உள்ளது தெரியுமா? 34b கோள் உள்ள சூரிய குடும்பம் பூமியிலிருந்து சுமார் 4,900 ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது. 35b கோள் உள்ள சூரிய குடும்பம் 5,400 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது.

இதில் இரண்டு சூரியன்களும் ஒன்றையொன்று மறைத்து கிரகண விளையாட்டை அவற்றின் கோள்களுடன் இணைந்து அவ்வப்போது இரட்டைச் சூரிய மண்டலத்திலும் நடத்துகின்றன.

இரண்டு சூரியன்கள் ஒன்றையொன்று தட்டாமாலை போல் சுற்றுவதால், கோள்கள் பெறும் ஆற்றலின் அளவு பெரிதும் மாறுபடுகிறது. மாறுபட்ட ஆற்றலின் வேகத்தால், அங்கு அதீத மாற்றம் கொண்ட காலநிலைகளும் உலவுகின்றன என்ற உண்மையும் தெரிய வ்ந்துள்ளது. நிறைய வெப்பநிலை மாற்றங்களும், ஓர் ஆண்டில் நிறைய முறை 4 பருவ காலங்களும் உண்டாகின்றன.

இந்த சூறாவளி வளிமண்டல மாற்றம் என்பது அங்கு புதிதாக உயிர்கள் வாழும் சூழல், இரட்டைச் சூரிய சுற்றுக்கோள்களில் உருவாக வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. இது ஒரு சுவையான, தேடல் நிறைந்த தகவலாகும்.