ஊதிய உயர்வு, சங்க அங்கீகாரம், தாங்கள் விரும்பும் சங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஆகியவற்றுக்காக திருப்பெரும்புதூர் பாக்ஸ்கான் நிறுவனத் தொழிலாளர்களும், பணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம் ஆகியவற்றுக்காக நெய்வேலி நிலக்கரித் தொழிலாளர்களும் கடந்த ஒரு மாத காலமாகத் தொடர்ந்து போராடி வருகிறார்கள். உறுதிமிக்க இந்த எழுச்சி இன்று தமிழகத்தின் கவனத்தையே ஈர்த்துள்ளது. இந்தப் போராட்டம் பாட்டாளிகளின் புதிய விழிப்பு.

நியாயமான கோரிக்கைகளுக்காக ஆர்த்தெழுந்துள்ள தொழிலாளர்கள் மீதும் அவர்களது தலைவர்கள் மீதும் திமுக அரசின் அடக்குமுறை பாய்கிறது. “தமிழர்களே...தமிழர்களே...” என்று முதல்வர் கலைஞர் கரும்பாய்ப் பேசினாலும் அவரது ஆட்சியில் வெளிப்படுவது பாட்டாளித் தமிழர்களுக்கு எதிரான இரும்புக்கரம்தான். பாக்ஸ்கான் பன்னாட்டு முதலாளியிடம் காட்டும் பரிவு சொந்த நாட்டுப் பாட்டாளித் தமிழன் மீது இல்லை.

“ஜனநாயகத்தில் யாரும் எந்தப் பொருள் பற்றியும் பேசலாம்; எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருப்பவர்களைப் பற்றியும் குறை கூறலாம்; குற்றம் சாட்டலாம். அதுதான் ஜனநாயகம்”- இது தமது கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலைஞர் சொன்னது. (முரசொலி. 21.10.10).

“ஒரு வேளை ஆட்சிக்கே வரமுடியாவிட்டால் தெருவிலே நின்று போராடுவோம்” - இதுவும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலைஞர் சொன்னதுதான். ஜனநாயகம் - போராட்டம் குறித்தெல்லாம் இவர்களுக்கு உள்ள உரிமை தொழிலாளர்களுக்கு இல்லையா?

ஜனநாயகம் என்பது கட்சிக்குள் ஒரு வடிவமென்றால், வெளியே உழைப்புக் களத்தில் நியாயங்களை முன் வைத்துப் போராடும் தொழிலாளர்களுக்கு மற்றொரு வடிவம் போராட்டம்தான்.

ஆட்சியில் இருந்தால் மக்களின் போராட்டத்திற்கு எதிர்ப்பு; ஆட்சியில் இல்லையென்றால் இவர்களே தெருவில் நின்று போராடுவார்கள்! என்ன, விசித்திர நிலை! திமுக அகராதியில் போராட்டத்திற்கு இதுதான் பொருளா?

இப்போது போராடுகிறவர்கள் ஆட்சியில் இல்லாதவர்கள்தான். அவர்கள் போராடுவது கலைஞரின் கூற்றுப்படியேகூட நியாயம்தானே? பிறகு ஏன் அவர்கள் மீது அடக்குமுறை?

பொய் வழக்குப் போட்டு கைது செய்யப்பட்ட சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசனுக்கும், மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமாருக்கும் கிரிமினல் குற்றவாளிகளுக்கு போல் கையில் விலங்கு மாட்டிய போலீசின் அநாகரிக அராஜகம் நிகழ்ந்துள்ளது. இது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தையும், காங்கிரஸின் அடக்குமுறை ஆட்சிக்காலத்தையும் நினைவூட்டுகிறது. மதிப்புமிக்க அரசியல் தலைவர்கள் - தொழிலாளர் தலைவர்கள் எப்படி நடத்தப்பட வேண்டுமென்கிற நடத்தைப் பண்பாடு இந்த ஆட்சியில், காவல்துறை நடவடிக்கையில் இல்லை. இதனை எதிர்த்து உழைக்கும் மக்களின் ஆர்ப்பாட்டக் குரல்கள் மாநிலமெங்கும் எதிரொலித்தன.

தீரமுடன் போராடும் தொழிலாளர்களுக்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் இடதுசாரிக்கட்சிகள் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் ஆதரவுக் கரம் உயர்த்தியுள்ளன. பாராட்டுக்குரிய சிஐடியுவின் தலைமைப் பாத்திரம் இப் போராட்டத்திற்கு நல்ல வழிகாட்டலோடு வலுவும் சேர்த்துள்ளது.

இது நவம்பர்!

பாட்டாளி வர்க்கத்தின் முதலாவது சோஷலிஸப் புரட்சி மாதமாகிய இந்த நவம்பரில் போராடும் தமிழகப் பாட்டாளி வர்க்கத்திற்கு வாழ்த்துக் கூறுவோம்!

Pin It