கேள்வி : என் கணவருக்கு வயது 36. இரண்டு வருடங்களுக்கு முன் அவருக்கு உடல் பரிசோதனை செய்தபோது கொழுப்பு அதிகமாக இருப்பது தெரியவந்தது. அதன்பிறகும் உணவில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? கொழுப்பு இல்லா எண்ணெய் என்று சொல்லப்படுவதை பயமின்றி உபயோகிக்கலாமா...? என்ன உடல் பயிற்சி செய்யலாம்? என்ன சாப்பிடலாம்..?

பதில் : கொழுப்பு கூடுதலாக இருப்பது சிலருக்குப் பரம்பரையாக இருக்கலாம். அளவுக்கு மீறிய சாப்பாடு, கொழுப்பு அதிகம் சாப்பிடுவது இவையும் ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும். அளவாகச் சாப்பிட்டு உடல் பயிற்சி செய்யாவிட்டாலும் கொழுப்பு கூடும். நார்ச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டியது அவசியம். தயிர், நெய் மற்றும் இனிப்பு வகைகளைக் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. வாரம் ஒரு முறை சிக்கன், அடிக்கடி மீன் சாப்பிடலாம்.

எண்ணெயை அறவே தவிர்ப்பது நல்லது. முடியவில்லையெனில், மிகக் குறைவாக சேர்க்கலாம். கொழுப்பைக் குறைக்க மருந்துண்டு. அவருடைய கொழுப்பின் அளவைப் பொறுத்து மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை எடுக்கவேண்டும். பொதுவான உடற்பயிற்சி, யோகா செய்யலாம். நடைபோகலாம். ஏனோதானோ என்றல்ல. 45 நிமிடங்களில் குறைந்தது நான்கரை கிலோ மீட்டர் தூரமாவது தினசரி நடக்க வேண்டும். அப்போது தான் பலன் இருக்கும். எல்லாவற்றையும் விட மிக முக்கியம் புகை பிடிப்பதோ மது அருந்துவதோ கண்டிப்பாகக் கூடாது.