இது வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினத்தை சேர்ந்தது ஆகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் தன்மைஉடையது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என தமிழர் பெயரிட்டு அழைத்தனர். பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர்.

தொன்றுதொட்டே தமிழர் மருத்துவத்தில், மஞ்சள்காமாலை நோய்க்கு இம்மூலிகையை பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதனை இன்றும் கிராமத்து மக்களின் வாய்ச் சொல்லிலும், பயன்படுத்துதலிலுமிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுகூடங்களில் இம்மூலிகை பல்வேறு விதங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

தாவரவியல் பெயர்: பைலாந்தஸ் அமாரஸ்
குடும்பம்: யூஃபோர்பியேசியே

கீழாநெல்லியானது ஒவ்வொரு மொழியிலும் கீழ்கண்டவாறு அழைக்கப்படுகிறது.

இந்தி: ஜராமலா, நிரூர், ஜங்லி யாம்பலி
வங்காளம்: புய்யாம்லா, சதாஹஸிர்மனி
குஜராத்தி: போன்யா அன்மலி
கன்னடம்: கிலநெல்லிக்கிடா, நெலநெல்லி
தமிழ்: கீழாநெல்லி, கீழ்க்காய்நெல்லி
மலையாளர்: கீழாநெல்லி, கீர்க்காநெல்லி
தெலுங்கு: நெல உசிரிகா
பீகார்: முய்யாரா, முலிகோஆ, காந்தாரா
ஓரியா: புய் ஆவோலா, பேடியான்லா.

சமஸ்கிருதம்: பூமியாம்லகி, தாமலகீ

இதன் முழுப்பகுதியும் நேரடியாகவே மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

இதன் பயன்கள்:

மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற் றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற பல நோய்களுக்கும் கீழாநெல்லியானது சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

கீழ்காய்நெல்லியில் பைல் நிரூலின், நார் செக்குரினின், 4-methoxy secyrinine, நிர் பைலின், தேலிக் ஆஸிட், எல்லாஜிக் ஆசிட், ஹேலிக் ஆஸிட் போன்ற 50-க்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள் இருப்பதனை அறிவியல் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.

நவீன மருந்தியல் ஆய்வுகளின் மூலம், கீழாநெல்லியானது காளான் நோய்கள், புற்றுநோய்கள், இறுக்க நோய்கள் போன்றவைகளுக்கு எதிராக செயல்படுவதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இம்மூலிகைக்கு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மையுடையதெனவும் கல்லீரலை பாதுகாக்கும் தன்மையுடையதெனவும் பல்வேறு ஆய்வுகள் மூலம் தெளிவுபடுத்தி உள்ளனர்.

கீழாநெல்லியில் காணப்படும் ஹைப்போ பைலாந்தின், பைலாந்தின் போன்ற வேதிப் பொருட்கள் மீனுக்கும் தவளைக்கும் மட்டும் நச்சுதன்மையை யூட்டுவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், இவ்வேதிப் பொருளானது, மனிதர்களுக்கும மற்ற விலங்குகளுக்கும எந்தவித நச்சுத்தன்மையையும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவது இல்லை எனவும் வெளிப்படுத்தி உள்ளனர்.

உண்ணும் அளவு: சாறு 10-20 மி.லி. ஒரு நேரத்துக்கு பயன்படுத்தலாம். தூள் : 3-6 கிராம்.

பயன்படுத்தும் முறைகள்

1. கீழாநெல்லி சமூலம் - கரிசலாங்கண்ணி, தும்பை - சீரகம் - பொன்னாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து காய்ச்சிய பசும்பால் அல்லது தேங்காய்ப்பால் விட்டு நன்றாக அரைத்து புன்னைக்காய் அளவு காலை மாலை மேற்கண்ட பாலில் ஏதாவது ஒன்றில் 7 நாட்கள் கொடுக்க மஞ்சள் காமாலை நோய் தீரும்.

வயதிற்கேற்ப மருந்தின் அளவை குறைத்து சிறுபிள்ளைகளுக்கும் கொடுக்கலாம். மருந்து சாப்பிடும் காலங்களில் புளி, புகை, புகையிலை, காரம், கொழுப்பு நீக்கிய மோர்சாதம், பால் சாதம், சாப்பிடுவது நல்லது. உப்பு வறுத்து சேர்க்கவும்.

2. கீழ்காய் நெல்லி சமூலம் - சீரகம், மஞ்சள் காரைவேர்பட்டை மூன்றும் சமஅளவு எடுத்து நன்றாக அரைத்து பசும்பால் அல்லது தேங்காய் பால் 300 மி.லி. கலக்கி தினம் காலை மாலை குடிக்க மஞ்சள்காமாலை நோய் குணமாகும்.

3. கீழா நெல்லி சமூலம், பேரம்மான் பச்சரிசி, சிற்றம்மான் பச்சரிசி, கரிசலாங்கண்ணி, வல்லாரை, பொன்னாங்கண்ணி இவைகளை சமஅளவு எடுத்து நன்றாக அரைத்து 3 நாள் 6 நேரம் எருமைத் தயிரில் கலந்து கொடுக்க இரத்தக்காமாலை உடனே குணமாகும்.

4. கீழா நெல்லியும் - கரிசலாங்கண்ணியும் சமஅளவு சேர்த்து நெல்லிக்காயளவு பாலில் சாப்பிட்டுவர பாண்டு, சோகை, இரத்தக் குறைவு மாறும்.

5. மாதவிடாய் அளவுக்கு மீறி போய்க்கொண்டிருந்தால் கீழ்க்காய் நெல்லி, அத்திப் பட்டை, அசோகப்பட்டை, அரசம் பட்டை, நாவல் பட்டை இவைகளை சமஅளவாக எடுத்து நன்றாக தூள்செய்து வைத்துக் கொண்டு தினம் ஒரு கரண்டி வீதம் தேன், வெந்நீர், பால் ஏதாவது ஒன்றில் மாறிமாறி சாப்பிட்டு வர கர்ப்பசாய நோய்கள் அனைத்தும் மாறி வெள்ளைப்பாடும் தீரும்.

6. கீழ்காய் நெல்லியை நன்றாக அரைத்து சொறி சிரங்கு படைகளில் போட உடனே மாறும்.

7. கீழாநெல்லியும் மஞ்சளும் சேர்த்து உடலில் தேய்த்து சில நிமிடம் ஊறவிட்டு குளித்து வர தோல் நோய்கள் வராமல் தடுப்பதோடு வந்தநோய்கள் அனைத்தும் தீரும்.

8. கீழ்க்காய் நெல்லியை நன்றாக மென்று பல்துலக்கி வர பல்வலி என்பது பக்கத்திலும் அண்டாது.

9. கீழாநெல்லிப்பொடி, நெல்லிக்காய்பொடி, கரிசாலைப் பொடி மூன்றையும் சமஅளவு எடுத்து தேனில் உண்டுவர அடிக்கடி வரும் சளித் தொல்லை, இரத்தக்குறைவு, இரத்தசோகை மாறி எதிர்ப் பாற்றல் பெருகும்.

10. கீழ்க்காய்நெல்லிச்சாறு, இளநீர், நெல்லிக்காய் சாறு, கரிசலாங் கண்ணி சாறு, பொன்னாங்கண்ணி சாறு இவைகள் ஒருலிட்டர் வீதமும், எலுமிச்சம்பழச்சாறு அரை லிட்டரும், பசும்பால் 5லிட்டரும், தூய நல்லெண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய் 5 லிட்டரும், மதுரம், கொட்டம், நற்சீரகம், மாயக்காய், கிராம்பு, ஏலம், நற்சந்தனம், வலம்புரி, சடமாஞ்சில் ஆகியவை வகைக்கு 40 கிராம் வீதம் வாங்கி, நன்றாக இடித்து பசும்பால் விட்டு அரைத்து சாறுகள், எண்ணெய், பால் எல்லாவற்றையும் எண்ணெய்ச் சட்டியில் விட்டு அரைத்த மருந்தையும் சேர்த்து, சிறுதீயாக எரித்து மருந்து முதிர் மெழுகு பருவம் வந்ததும் எண்ணெயை வடித்து கொள்ளவும்.

தினமும் இதை தலையில் தேய்த்து தண்ணீரில் குளித்து வந்தால் கண்நோய்கள், பித்த நோய்கள், மேக நோய்கள், மேக உஷ்ணம், வறட்சை, கணை, பெரும்பாடு, காமாலை நோய்கள் தீரும். மஞ்சள் காமாலை நோயாளிக்கு இது சிறந்த மருந்தாகும்.

(நன்றி : புதிய தென்றல் ஆகஸ்ட் 2007)