உத்திரபிரதேசத்தில் செயல்பட்டு வரும், அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்துக்குள் புகுந்து, துப்பாக்கி, தடி, கத்தி போன்ற ஆயுதங்களைக் கொண்டு மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

edward prabhkar 450அறுபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். இந்த கொடூரமான தாக்குதலுக்கு பல கல்வியாளர்களும், மாணவர் அமைப்புகளும் கடும் கண்டனங்களை போராட்டங்களின் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியது “ஹிந்து யுவவாஹினி” என்ற சங்பரிவார் அமைப்பாகும்

தாக்குதலின் பின்னணி

ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்கள் என்பது, ஹிந்துத்துவ வெறியர்களை உருவாக்குவதற்கு நடத்தப்படும் பயிற்சிகளாகும். இந்தியாவில் பல பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்கள் நடைபெற்று வருகின்றன. ஷாகா பயிற்சிகளால், பல வன்முறைகள் நாட்டில் நடந்துள்ளன. பனாரஸ் பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அலுவலகம், 1976– ஆம் ஆண்டு, நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, அடித்து நொறுக்கப்பட்டது. இத்தகைய மதவெறி யூட்டும் ஷாகாக்களை, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடத்த, பல்கலைக் கழக துணைவேந்தர் தாரிக் மன்சூரிடம் அனுமதி கோரப்பட்டது. அனுமதி கோரியவர், ஆர்.எஸ்.எஸ்.ஸின் இஸ்லாமிய அணியான “முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்சை” சேர்ந்த மொஹம்மத் அமீர்ரஷித் ஆவார். ஆனால், ஆர். எஸ். எஸ்ஸின் இந்த விஷம பிரச்சாரங்களுக்கு அனுமதி அளிக்க துணைவேந்தர் மறுத்து விட்டார்.

இதனால் விரக்தியடைந்த அலிகர் தொகுதி பா.ஜ.க. எம்.பி. சதீஷ் கவுதம், ஒரு புதிய சிக்கலைக் கிளப்பிவிட்டார்.

“அலிகர் பல்கலைக் கழக மாணவர் சங்க அலுவலகத்தில், இந்தியாவை பிரித்து பாகிஸ்தானை உருவாக்கிய மொஹம்மது அலி ஜின்னாவின் படம், எண்பது ஆண்டுகளாக எப்படி இருக்கலாம்?” என்று கேள்வி கேட்டு சலசலப்பை ஏற்படுத்தினார். இதற்கு பதிலளித்த பல்கலைக் கழகச் செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் ஷக்வேகிட்வை, “ஜின்னா எங்கள் பல்கலைக் கழகத்தை உருவாக்கியவர்களுள் ஒருவர்; ஆயுட்கால உறுப்பினருங்கூட. ஆயுட் கால உறுப்பினர்களின் படங்கள், மாணவர் சங்க அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. எனவே, ஜின்னா படமும் உள்ளது” என்று விளக்கினார். இந்த நியாயமான விளக்கத்தை ஏற்க மறுத்த சங்பரிவார்அமைப்புகள், “ஓடுமீன் ஓட, உறுமீன் வரும்வரை காத்திருந்ததாம் கொக்கு” என்பதை போல நேரம் பார்த்து காத்திருந்தன.

மாணவர்கள் மீது தாக்குதல்

2018 மே 2ஆம்நாள், பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் “ஆயுட்காலஉறுப்பினர் ஆவதற்காக, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீத்அன்சாரி, கல்லூரி வளாகத்துக்கு வந்திருந்தார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட, ஹிந்து யுவவாஹினி குண்டர்கள், துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களோடு கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்தனர். எதிர்த்து நின்ற மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர். மாணவர்களை “வந்தே மாதரம், ஜெய் ஸ்ரீராம்” என்றெல்லாம் சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்தினர். காவல்துறையோ வேடிக்கைப் பார்த்தது. ஆயுதகும்பலின் குறி, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி மீதே இருந்தது. அவர் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையை நோக்கியே சுட்டபடி நகர்ந் துள்ளனர். ஏற்கனவே, இந்தியாவில் இஸ்லாமியர்களின் பாதுகாப்பை குறித்து கேள்வி எழுப்பியவர் ஹமீத் அன்சாரி. இதனால் பல எதிர்ப்புகளையும் பலகாலமாக சந்தித்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆயுதம் தாங்கி, விருந்தினர் மாளிகையை நோக்கி முன்னேறிய மதவெறி கும்பலில் ஆறு பேர், மாணவர்களிடம் பிடிபட்டனர். காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த ஆறு பேரில், ஒருவர் மீதுகூட எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை. காவல்துறையின் இந்த செயல், மாணவர்களை கொதிப்படையச் செய்தது. இதன் விளைவாக, ஆயிரக்கணக்கான மாணவர்கள், காவல் நிலையத்தை முற்றுகை யிட்டனர். காவல்துறையோ, ஹிந்துவாஹினி ரவுடிகளோடு இணைந்து, மாணவர்கள் மீது தடியடி நடத்தியது: கல் வீச்சும் நடந்தது. இதனால், பல மாணவர்கள் படுகாயமடைந்தனர். மாணவர் சங்கதலைவர் மஷ்கூர்அஹ்மத் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதால், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவிகளின் வெறியாட்டத்தின் விளைவாக, பல்கலைக் கழக நிகழ்ச்சியும் நிறுத்தப்பட்டது. செமஸ்டர் தேர்வுகளும், வகுப்புகளும் 5 நாட்களுக்கு நிறுத்தப்பட்டன. மாவட்ட நீதிபதி பி. சிங் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். போராட்டத் தீ பரவுவதை தடுக்க நினைத்த மாவட்ட நிர்வாகம், இணைய சேவையையும் முடக்கியது. மாணவர்களைக் காக்க வேண்டிய உ.பி. முதலைமைச்சர் யோகி ஆதித்யனாத்தோ, “ஜின்னா இந்த நாட்டை துண்டாடியவர். அவருடைய சாதனைகளை எப்படி கொண்டாட முடியும்?” என்று கருத்து தெரிவித்து பிரச்சனைகளை திசை திருப்ப முயன்றார். மாணவர்கள் ஜின்னாவின் சாதனைகள் எதையும் கொண்டாட முயற்சிக்காத போதே, இப்படிப்பட்ட அவதூறுகளை ஒரு முதலமைச்சரே பரப்பினார். வட இந்திய மக்களிடம் இருக்கும் கண்மூடித்தனமான இஸ்லாமிய எதிர்ப்பை, மேலும் கூர்தீட்டும் விதமாக, இத்தகைய திசை திருப்பல்களை, சங்பரிவார் அமைப்பினர் காலங்காலமாக செய்து வருகின்றனர்.

அலிகர் பல்கலைக் கழக மாணவர்கள் தாக்கப்பட்டதையடுத்து, அரசின் அடக்கு முறையையும் எதிர்த்து, பல்வேறு மாணவர் அமைப்புகள் வடஇந்தியா முழுவதும் போராட்டகளத்தில் இறங்கின. தங்களிடம் இருக்கும் அதிகாரத்தை வைத்து, பல கல்வி நிலையங்களை காவி மயமாக்கிய பாஜகவினர், தங்களுக்கு அடிபணியாத கல்லூரிகள் மீது ஆயுத தாக்குதலை ஏவிவிட ஆரம்பித்திருப்பது மிக மோசமான முன்னுதாரணமாகும்.

இத்தகைய ஆயுத கலாச்சாரத்தை, கல்வி நிலையங்களில் பரவவிடாமல் தடுக்க, முற்போக்கு மாணவர் அமைப்புகளை, அனைத்து கல்வி நிலையங்களிலும் பலப்படுத்த வேண்டியது நம்முன் உள்ள சவாலாகும்.

கட்டுரையாளர்: பெரியாரிஸ்ட்